22.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை எவ்வாறானவர், அவர் யார் என அவரை மிகச்சரியாக இனங்கண்டு, நினைவு செய்யுங்கள். இதற்கு, உங்கள் புத்தியைப் பரந்ததாக ஆக்குங்கள்.

கேள்வி:
தந்தை, ஏன் ஏழைகளின் பிரபு என அழைக்கப்படுகிறார்?

பதில்:
இந்நேரத்தில் முழு உலகமும் ஏழையாகவும், சந்தோஷம் இழந்தும் இருக்கும் பொழுது அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்குத் தந்தை வர வேண்டும் என்பதாலாகும். ஒருவருக்கு உணவையும், உடைகளையும் கொடுத்துக் கருணை காட்டுவது ஒரு பெரிய விடயமல்ல. அவர்கள் அதன் மூலம் செல்வந்தர்கள் ஆகுவதில்லை. சுதேசிகளுக்குப் பணத்தைக் கொடுப்பதனால், நான் ஏழைகளின் பிரபு என அழைக்கப்படுகின்றேன் என்றில்லை. நான் ஏழை ஆத்மாக்களை, அதாவது, ஞானமில்லாத, தூய்மையற்ற ஆத்மாக்களை, ஞானத்தைக் கொடுப்பதனால், தூய்மை ஆக்குகிறேன்.

பாடல்:
இதுவே உலகத்தை மறப்பதற்கான பருவ காலம்!

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இப்பாடல் லௌகீக மக்களால் இயற்றப்பட்டது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதன் வார்த்தைகள் மிகவும் சிறந்தவை: நீங்கள் இப்பழைய உலகை மறக்க வேண்டும். முன்னர், நீங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை. தாங்கள் புதிய உலகத்துக்குச் செல்ல விரும்பினால், நிச்சயமாகக் கலியுகத்தை மறக்க வேண்டும் என்பதைக் கலியுக மக்கள் புரிந்து கொள்வதில்லை. தாங்கள் பழைய உலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டாலும், இன்னமும் அதிக காலம் எஞ்சியிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். நிச்சயமாகப் புதியது பழையதாக ஆகுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், அதற்கு ஒரு நீண்ட கால எல்லையைக் கொடுப்பதனால், அவர்கள் இதனை மறந்து விட்டார்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதால், பழைய உலகம் மறக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மறப்பதனால் என்ன நடக்கும்? நாங்கள் எங்களுடைய சரீரங்களை நீக்கி விட்டு, புதிய உலகத்துக்குச் செல்வோம். எவ்வாறாயினும், அறியாமைப் பாதையில், மக்களின் கவனம் இவ்விடயங்களின் அர்த்தத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. தந்தை விளங்கப்படுத்தும் முறையில் எவராலும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை மிகவும் சாதாரணமானவர் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மிகச்சிறந்த விசேடமான குழந்தைகளும் இதனை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. சிவபாபா இவரில் பிரவேசிக்கிறார் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். ஒரு வழிகாட்டல் கொடுக்கப்படும் பொழுது, அது சிவபாபாவின் வழிகாட்டல் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அது அவர்கள் நாள் முழுவதும் சிவபாபாவை மறந்து விட்டார்கள் என்பதைப் போன்றுள்ளது. முழுமையாகப் புரிந்து கொள்ளாததனால், அவர்கள் பணியைச் செய்வதில்லை. அவர்கள் நினைவு செய்வதை மாயை அனுமதிப்பதில்லை. அந்த நிலையான நினைவு இருப்பதில்லை. தொடர்ந்தும் முயற்சி செய்வதனால், நீங்கள் நிச்சயமாக இறுதியில் அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில் கர்மாதீத ஸ்திதியை அடையக்கூடிய எவரும் இருக்க முடியாது. உண்மையான தந்தையையும், அவர் எவ்வாறானவர் என்பதையும் அறிவதற்கு ஒரு பரந்த புத்தி உங்களுக்குத் தேவை. சிலர் உங்களை வினவுகிறார்கள்: பாப்தாதா குளிர்கால ஆடைகளை அணிகிறாரா? நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்: அவர்கள் இருவரும் அவற்றை அணிகிறார்கள். சிவபாபா கூறுவார்: நான் குளிர்கால ஆடைகளை அணியத் தேவையில்லை. நான் குளிரை உணர்வதில்லை. எவ்வாறாயினும், நான் பிரவேசித்துள்ளவர் குளிரை உணர்கிறார். நான் பசியையோ அல்லது தாகத்தையோ உணர்வதில்லை. நான் அவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். நான் சேவை செய்யும் பொழுதும், அவை அனைத்தில் இருந்தும் அப்பாற்பட்டு இருக்கிறேன். நான் உண்பதோ அல்லது பருகுவதோ இல்லை. தான் உண்டதோ அல்லது பருகியதோ கிடையாது எனக் கூறிய ஒரு சாது இருந்தார்; அவர் ஒரு செயற்கையான தோற்றத்தைக் கொண்டிருந்தார். பலருக்குத் தேவர்களுக்குரிய பெயர்கள் உள்ளன. வேறெந்தச் சமயத்திலும் எவரும் ஒரு தேவராக ஆகுவதில்லை. இங்கு பல்வேறு ஆலயங்கள் உள்ளன. எங்கும் அவர்கள் ஒரு சிவபாபாவில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரு தந்தை மாத்திரமே இருக்க முடியும் எனப் புத்தியும் கூறுகிறது. உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்த அதிமேன்மையான சங்கமயுகத்திலேயே பாபாவிடமிருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களில் புத்தியில் உள்ளது. நாங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்லும் பொழுது, ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். உங்கள் மத்தியிலும், இது வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஞானத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களால் இயல்பாகவே அதைப் பற்றிப் பேச இயலும். நீங்கள் பாபாவின் மூலம் ரூப்பும், பசான்ட்டும் (ஞானத்தைப் பொழியும் யோக சொரூபங்கள்) ஆகுகிறீர்கள். நீங்கள் ரூப்பும் பசான்ட்டும் ஆவீர்கள். தாங்கள் ரூப்பும், பசான்ட்டும் என உலகிலுள்ள எவராலும் கூற முடியாது. நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். நீங்கள், உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இறுதிவரையில் அதைத் தொடர்வீர்கள். சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். நீங்கள் உங்கள் இதயத்தில் இதனை உணர்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் இதனை உங்களின் இதயத்தில் உணர்வதில்லை. இங்கு, நீங்கள் அவர் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை மீண்டும் இந்நேரத்தில் மாத்திரமே வருவார் என்பதையும், அவர் மீண்டும் வேறெந்த நேரத்திலும் வரவேண்டிய அவசியமில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சத்திய, திரேதா யுகங்களின் இடையிலோ அல்லது துவாபர, கலியுகங்களின் இடையிலோ அவர் வருவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. அவர் சக்கரங்களின் சங்கமத்திலேயே வருகிறார். தந்தையே, ஏழைகளின் பிரபு. அதாவது, அவரே ஏழையாகவும் வேதனையிலும் இருக்கின்ற இம் முழு உலகினதும் தந்தை ஆவார். அவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது? நானே ஏழைகளின் பிரபு; அனைவருடைய துன்பம், வறுமை அனைத்தும் முடிவடைய வேண்டும். இந்த ஞானத்தின் மூலமன்றித் துன்பமும், வறுமையும் குறைவடைய மாட்டாது. உடைகளும், உணவும் கொடுப்பதனால், எவரும் செல்வந்தராக முடியாது. எவ்வாறாயினும், நான் ஏழைகளின் பிரபு என்பதை நினைவு செய்வதனால், ஒருவேளை ஏழைகளைப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கு உடைகளைக் கொடுக்க வேண்டும் போல் உணர்வேன். எவ்வாறாயினும், அதேநேரம், நான் அவர்களுக்கு, இந்த ஏழைகளின் பிரபு மாத்திரமல்ல, முற்றிலும் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற ஏழைகளின் பிரபு என்பதையும் புரிந்து கொள்கின்றேன். நானே தூய்மையாக்குபவர். நான் இதைப் பற்றிச் சிந்திக்கிறேன். நான் ஏழைகளின் பிரபுவாக இருப்பினும், நான் எவ்வாறு பணத்தைக் கொடுக்க முடியும்? பணத்தைக் கொடுக்கக்கூடிய பலர் இவ்வுலகில் இருக்கிறார்கள். அவர்கள் அதிகளவு நிதியை வசூலித்து, அவற்றை அநாதை மடங்களுக்குத் தானம் செய்கிறார்கள். ஓர் அநாதை என்றால் தனக்கென ஒரு பிரபுவோ அல்லது அதிபதியோ இல்லாதவர் என்றே அர்த்தம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஓர் அனாதை என்றால் ஏழையான ஒருவர் என்று அர்த்தமாகும். உங்களுக்கும் ஒரு பிரபு இருக்கவில்லை, அதாவது, உங்களுக்கென ஒரு தந்தை இருக்கவில்லை. நீங்கள் ஏழையாக இருந்தீர்கள், ஏனெனில் உங்களுக்கு இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. ரூப்பும், பசான்ட்டும் அல்லாதவர்கள் ஏழைகளும், “அனாத்” களும் (அநாதைகளும், ஏதுமற்றவர்களும்) ஆவார்கள். ரூப்பும், பசான்ட்டுமாக உள்ளவர்கள் “சனாத்” கள் (அனைத்தும் உள்ளவர்) ஆவார்கள். செல்வந்தர்கள் “சனாத்” தும், ஏழைகள் “அனாத்” தும் ஆவர். அனைவரும் ஏழைகள், நாங்கள் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தையே ஏழைகளின் பிரபு ஆதலால், அவர் கூறுகிறார்: அவர்களுக்கு எதையாவது கொடுங்கள், அதன் மூலம் அவர்களால் எக்காலத்துக்குமாகச் செல்வந்தர் ஆகமுடியும். இல்லாவிட்டால், துணிகள் போன்றவற்றைக் கொடுப்பது ஒரு பொதுவான விடயமாகும். நாங்கள் ஏன் அதில் சம்பந்தப்பட வேண்டும்? நாங்கள் அவர்களை அநாதைகளில் இருந்து செல்வந்தராக மாற்ற வேண்டும். ஒருவர் பல்கோடீஸ்வரராக இருப்பினும், அவை அனைத்தும் தற்காலிகமானவை. இது அனாதைகளின் உலகம். செல்வந்தர்கள் இருந்த போதிலும் அவை அனைத்தும் தற்காலிகமானவை. அங்கு, அவர்கள் பிரபுவுக்கும், அதிபதிக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அங்கு, அவர்களில் எவரும் தங்கள் செயல்களுக்காக வருந்துவதில்லை. இங்கு, பல ஏழைகள் இருக்கிறார்கள். செல்வந்தர்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைத்துப் போதையுடன் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வேளையில் மனிதர்கள் எவரும் “சனாத்” (பிரபுவிற்கும் அதிபதிக்கும் உரியவர்) அல்ல் அனைவரும் அநாதைகள் ஆவர். பணம் போன்ற அனைத்தும் தூசாகப் போகின்றது. தங்களிடம் அதிகப் பணம் இருப்பதாகவும், தங்களின் கொள்ளுப்பேரர்கள் அதனைப் பயன்படுத்துவார்கள் எனவும், அது பல தலைமுறைகளுக்குத் தொடரும் எனவும் மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இருக்கப் போவதில்லை. அவை அனைத்தும் அழிக்கப்படும். இதனாலேயே நீங்கள் இப்பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். புதிய உலகம் சுவர்க்கம் எனவும், பழைய உலகம் நரகம் எனவும் அழைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். புதிய உலகத்துக்காக, பாபா எங்களைச் செல்வந்தர்கள் ஆக்குகிறார். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. தந்தை எங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்குகிறார். எவ்வாறு இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் மிகுந்த செல்வந்தராக ஆகினார்கள்? அவர்கள் அதற்கெனச் சண்டை செய்தார்களா அல்லது அவர்கள் ஒரு செல்வந்தரிடம் இருந்து அதை ஆஸ்தியாகப் பெற்றார்களா? ஏனைய அரசர்கள் தங்கள் சிம்மாசனத்தைப் பெறுவதைப்போல், அவர்கள் சிம்மாசனத்தைப் பெற்றார்களா? அல்லது, அவர்கள் தங்கள் செயல்களின் அடிப்படையில் இந்தச் செல்வத்தைப் பெற்றார்களா? செயல்களைப் பற்றித் தந்தை எங்களுக்குக் கற்பிக்கும் வழி தனித்துவமானது. ‘செயல்கள்’, ‘நடுநிலைச் செயல்கள்’, ‘பாவச்செயல்கள்’ என்னும் பதங்கள் முழுமையாகவே தெளிவானவை. சமயநூல்களிலுள்ள சில வார்த்தைகள் சரியானவை, ஆனால் அவை ஒரு மூடை மாவில் உள்ள ஒரு துளி உப்புப் போன்றவை. இங்கு, மில்லியன் கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், அங்கோ 900,000 மாத்திரமே இருக்கிறார்கள். அது ஒரு காற் பங்கு சதவீதமானதும் இல்லை. இது ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பு என அழைக்கப்படுகிறது. முழு உலகமும் அழிக்கப்படவுள்ளது. சங்கமயுகத்தில் மிகச் சிலரே இருக்கிறார்கள். சகோதரி முக்லி மிகச் சிறந்தவராக இருந்தமையால், அவர் ஒரு சிறந்த வீட்டில் பிறந்திருப்பார். அதேபோல், சிலர் முன்னதாகவே தங்கள் சரீரங்களை விட்டுச் செல்கிறார்கள், பின்னர் அவர்கள் மற்றவர்களை வரவேற்பார்கள். அவர்கள் வரிசைக்கிரமமாக, சந்தோஷத்தில் பிறப்பெடுக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்தையும், சிறிதளவு துன்பத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். எவரும் கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. அவர்கள் மிகவும் சந்தோஷமான வீடுகளில் பிறவி எடுப்பார்கள். இங்கு சந்தோஷமான குடும்பங்கள் இல்லை என நினைக்க வேண்டாம். இங்கு பல மிகச் சிறந்த குடும்பங்கள் இருக்கின்றன, கேட்கவும் வேண்டாம்! பாபா சிலவற்றைப் பார்த்துள்ளார். மருமகள்மார் அனைவரும் மிகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் ஒன்றாக வாழ்ந்து, தங்களின் பக்தியைச் செய்து, ஒன்றாகக் கீதையை வாசிக்கிறார்கள். பாபா வினவினார்: நீங்கள் அனைவரும் ஒன்றாகத் தங்கி இருக்கிறீர்கள், இருப்பினும் சண்டை போடுவதில்லையா? அவர்கள் பதில் அளித்தார்கள்: நாங்கள் சுவர்க்கத்தில் இருக்கிறோம்; நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, அமைதியாக இருக்கிறோம், ஒருபொழுதும் சண்டை போடுவதில்லை. அது சுவர்க்கத்தில் இருப்பதைப் போன்றுள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். இங்கு நிச்சயமாகவே சுவர்க்கம் இருந்தது என்பதே அதன் அர்த்தம், இதனாலேயே அது இவ்விதம் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், சுவர்க்கவாசிகளாக இருக்கின்ற சுபாவத்தைக் கொண்டிராத பலர் இங்கு உள்ளனர்; பணிப்பெண்களும், வேலையாட்களும் உருவாக்கப்பட வேண்டும். இராச்சியம் உருவாக்கப்படுகிறது. பிராமணர்கள் ஆகுபவர்களே தேவ இராச்சியத்திற்குச் செல்வார்கள். ஆனால் அது வரிசைக்கிரமமானது. சிலர் மிகவும் இனிமையானவர்கள், அத்துடன் அனைவருடனும் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்கள் என்றுமே எவருடனும் கோபம் அடைவதில்லை. நீங்கள் கோபப்படுவதால், துன்பத்தை அனுபவம் செய்கிறீர்கள். தங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் ஏனையோருக்குத் தொடர்ந்தும் துன்பத்தை விளைவிப்பவர்கள், துன்பம் மிக்க ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். புண்ணியாத்மாக்களும், பாவாத்மாக்களும் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரீரங்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்களா? உண்மையில், ஆத்மாக்களே அவ்வாறு ஆகுகிறார்கள். பாவாத்மாக்கள் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. புண்ணியாத்மாக்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமானவர்கள். தங்கள் நடத்தையும், ஸ்திதியும் எதைப் போன்று உள்ளன எனவும், எவ்வாறு தாங்கள் ஏனையோருடன் தொடர்பு கொள்கிறார்கள் எனவும் மாணவர்கள் தாங்களே புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் அனைவருடனும் இனிமையாகப் பேசுகிறோமா? சிலர் எதையாவது கூறும்பொழுது, நான் பண்பற்ற விதத்தில் பதில் அளிக்கிறேனா? தங்களுடைய குழந்தைகளுடன் தாங்கள் கோபப்படுவதாகச் சில குழந்தைகள் பாபாவுக்குக் கூறுகிறார்கள். பாபா கூறுகிறார்: இயன்றவரை, அனைத்துச் சூழ்நிலைகளையும் அன்புடன் கையாளுங்கள். சில குழந்தைகள் பெருமளவு பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள். நீங்களும் பற்றிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் இலக்ஷ்மியையும், நாராயணனையும் போலாக விரும்புவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. அது அத்தகையதோர் உயர்ந்த இலக்கும் குறிக்கோளும் ஆகும்! உங்களுக்குக் கற்பிப்பவரும் அதியுயர்வானவர். அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர் எனவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர் எனவும் அவர்கள், ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பெருமளவு பாடுகிறார்கள். இப்பொழுது, நாங்கள் அவ்வாறு ஆகுகிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவ்வாறு ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். சத்திய நாராயணன் ஆகுகின்ற உங்களின் கதையானது, ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற கதையாகும். அமரத்துவ தாமத்துக்குச் செல்வதற்கே அமரத்துவக் கதை உள்ளது. சந்நியாசிகள் போன்ற எவரும் இவ்விடயங்களில் எதனையும் அறிந்திருக்கவில்லை. ஞானக்கடல் அல்லது தூய்மையாக்குபவர் என மனிதர் எவரும் அழைக்கப்பட முடியாது. முழு உலகமும் தூய்மையற்று உள்ளபொழுது, யாரை நாங்கள் தூய்மையாக்குபவர் என அழைக்க முடியும்? இங்குள்ள எவரும் புண்ணியாத்மாவாக இருக்க முடியாது. இவ்வுலகம் தூய்மை அற்றுள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஸ்ரீகிருஷ்ணரே முதலாம் இலக்கத்தவர். அவரைக் கடவுள் என அழைக்க முடியாது. ஒரேயொரு அசரீரியான தந்தை மாத்திரமே பிறப்பு, மறுபிறப்பிலிருந்து விடுபட்டவர். பாடப்பட்டுள்ளது: பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள், சிவன் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். ஆகவே, சிவன் ஏனைய அனைவருக்கும் மேலே இருக்கிறார். அவரே அனைவருடைய தந்தையும் ஆவார். (பரலோக) தந்தையிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. அவரைச் சர்வவியாபி எனக் கூறுவதால், உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். ஆகவே, அவர் நிச்சயமாக உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பார். இலக்ஷ்மியும் நாராயணனும் முதல் இலக்கத்தவர்கள். அவர்கள் இக்கல்வியின் மூலம் அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். மனிதர்களை உலக அதிபதிகளாக ஆக்குகின்ற, பாரதத்தின் புராதன யோகம் ஏன் பிரசித்தி பெறவில்லை? இது இலகு யோகம் எனவும், இலகு ஞானம் எனவும் அழைக்கப்படுகிறது. அது உண்மையிலேயே மிகவும் இலகுவானது. ஒரு பிறவியில் முயற்சி செய்வதனால், நீங்கள் அதிகளவைப் பெறுகின்றீர்கள். பக்திமார்க்கத்தில் நீங்கள் பிறவிபிறவியாகத் தடுமாறித் திரிந்ததுடன், எதையும் பெறவில்லை. இங்கு, நீங்கள் ஒரு பிறவியில் அதிகளவைப் பெறுகிறீர்கள். அதனாலேயே, அது இலகுவானது என்று அழைக்கப்படுகிறது. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” எனக் கூறப்படுகின்றது. இந்நாட்களில், அவர்கள் வியப்படையத்தக்க விடயங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் அற்புதமாகும். மௌனத்தின் அற்புதம் என்ன என்பதைப் பாருங்கள். உங்களால் அதில் அதிகளவைப் பார்க்க முடியும். ஆனால், இங்கோ எதுவுமே இல்லை. நீங்கள் மௌனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் வேலைக்கும் செல்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்கள் கரங்கள் வேலை செய்யும்பொழுது, உங்கள் இதயம் உங்கள் அன்பிற்கினியவருடன் இருக்கிறது. ஒரு காதலியும், காதலனும் நினைவு கூரப்படுகிறார்கள். அவர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தால் கவரப்படுகிறார்கள்; அங்கு விகாரத்தின் கேள்வியே கிடையாது. அவர்கள் எங்கே அமர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் நினைவு செய்கிறார்கள். ஒரு சப்பாத்தியை உண்ணும் பொழுதும், அவர்கள் தொடர்ந்தும் தங்கள் முன்னிலையில் மற்றவரைப் பார்ப்பார்கள். இறுதியில், உங்கள் ஸ்திதி அவ்வாறிருக்கும். நீங்கள் தொடர்ந்தும் தந்தையை மாத்திரம் நினைவு செய்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ரூப்பும், பசான்ட்டும் ஆகித் தொடர்ந்தும் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற வார்த்தைகளைப் பேசுங்கள். பிறருக்குத் துன்பம் விளைவிக்காதீர்கள். இந்த ஞானத்தைப் பற்றிச் சிந்தித்தவாறு இருப்பதுடன், உங்கள் வாயிலிருந்து இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்படட்டும்.

2. பற்றிலிருந்து விடுபட்டிருங்கள். அனைவருடனும் அன்புடன் பழகுங்கள், கோபப்படாதீர்கள். அநாதைகளை, பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்கள் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் முக்தியை அருள்பவராகவும் சற்கதியை அருள்பவராகவும் ஆகி, உங்கள் தேவதை வடிவத்தினால் முக்தி மற்றும் சற்கதி என்ற புனித பிரசாதத்தை வழங்குவீர்களாக.

தற்காலத்தில், பாதகமான சூழ்நிலைகளினால், உலக ஆத்மாக்கள் அனைவரும் அழுகிறார்கள். சிலர் அனைத்தும் விலையேறி உள்ளதால் இதனைச் செய்கிறார்கள், சிலர் தமது வாயினால் பௌதீகமாகவே அழுகிறார்கள். சிலரோ சரீர நோயினாலும், சிலர் மன அமைதி அற்றிருப்பதாலும் அழுகிறார்கள். அனைவரது பார்வையும் அமைதி கோபுரத்தை நோக்கியுள்ளது. அனைவரும் எப்பொழுது அழுகுரல் ஓய்ந்து, வெற்றி முரசு கொட்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். எனவே, இப்பொழுது பௌதீக, தேவதை வடிவத்தினால் உலகின் துன்பத்தை அகற்றுங்கள். மாஸ்டர் முக்தியையும், சற்கதியையும் அருள்பவர் ஆகி, முக்தியும் சற்கதியும் என்ற புனித பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குங்கள்.

சுலோகம்:
எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் உங்கள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்த முடியாதளவிற்கு உங்கள் மனதை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

இப்பொழுது சேவையின் போது எந்தவொரு செயல்களின் பந்தனத்தையும் கொண்டிருக்காதீர்கள். எனது இடம், எனது சேவை, எனது மாணவர்கள், எனது ஒத்துழைக்கும் ஆத்மாக்கள். இவையும் சேவையின் கர்ம பந்தனமே. இந்தக் கர்ம பந்தனங்களில் இருந்தும் கர்மாதீத் ஆகுங்கள். இதுவே கர்மாதீத் ஆகுவதாகும். இவரே அவர், அதாவது இவரே அனைத்தும் என அவர்களை உணரச் செய்து, அந்த ஆத்மாக்களை அவர்களின் இலக்கிற்கு நெருக்கமாகக் கொண்டு வாருங்கள்.