23.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் உதடுகளில் இருந்து சதா ஞான இரத்தினங்களே வெளிப்பட வேண்டும். எப்பொழுதும் உங்கள் முகங்கள் மலர்ச்சி நிறைந்தவையாக இருக்க வேண்டும்.

கேள்வி:
தங்கள் பிராமண வாழ்வில் இந்த ஞானத்தைக் கிரகித்துள்ள குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:
1. அவர்களின் செயற்பாடுகள் தேவர்களைப் போன்றிருக்கும். அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறார்கள். அவர்கள் இந்த ஞானக்கடலைக் கடைகின்ற பயிற்சியைச் செய்கின்றார்கள். அவர்கள் ஒருபொழுதும் அசுரத்தனமான விடயங்களை, அதாவது, குப்பையைக் கடைவதில்லை. 3. அவர்கள் பிறரை அவதூறு செய்வதோ அல்லது அவமதிப்பதோ இல்லை. 4. அவர்களின் முகங்கள் எப்பொழுதும் மலர்ச்சி நிறைந்தவையாக இருக்கின்றன.

ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து பக்தியையும், இந்த ஞானத்தையும் பற்றி விளங்கப்படுத்துகிறார். பக்தியின் மூலம் சற்கதி இருக்க முடியாது என்பதையும், சத்திய யுகத்தில் பக்தி செய்யப்படுவதில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெறவும் மாட்டீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் எவரையும் வழிபடுவதோ, ஞான புல்லாங்குழலை வாசிப்பதோ இல்லை. புல்லாங்குழலை (முரளி) வாசிப்பது என்றால், இந்த ஞானத்தைக் கொடுப்பதாகும். புல்லாங்குழலில் மந்திரவித்தை இருக்கிறது என்பது நினைவுகூரப்பட்டுள்ளதால், நிச்சயமாகவே ஏதோவொரு மந்திரவித்தை இருக்க வேண்டும். புல்லாங்குழலை வாசிப்பது பொதுவானது. அலைந்து திரியும் பிச்சைக்காரர்களும் தொடர்ந்தும் புல்லாங்குழலை வாசிக்கிறார்கள். இப்புல்லாங்குழல் ஞானம் என்னும் மந்திரவித்தையைக் கொண்டுள்ளது. அறியாமையை மந்திரவித்தை என அழைக்க முடியாது. முரளியே மந்திரவித்தை என அழைக்கப்படுகிறது. இந்த ஞானத்தின் மூலம் சாதாரண மனிதர்கள் தேவர்கள் ஆக்கப்படுகிறார்கள். சத்திய யுகத்தில் உங்களிடம் ஞானத்தின் ஆஸ்தி உள்ளது. அங்கு பக்தி செய்யப்படுவதில்லை. நீங்கள் தேவர்களிலிருந்து மனிதர்களாக மாறுகின்ற, துவாபர யுகத்துடன் பக்தி ஆரம்பிக்கிறது. மனிதர்கள் விகாரம் உடையவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தேவர்களோ விகாரம் அற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவர்களின் உலகம் தூய உலகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது தேவர்களாக ஆகுகிறீர்கள். ஞானம் என்பதன் அர்த்தம் என்ன? முதலில் இந்த ஞானமானது சுயத்தையும், தந்தையையும் பற்றிய இனங்கண்டு கொள்ளுதல் ஆகும். இரண்டாவதாக, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமாகும். இந்த ஞானத்தின் மூலம் சற்கதி பெறப்படுகிறது. பின்னர், பக்தி ஆரம்பிக்கிறது. அப்பொழுது அது கீழிறங்கும் ஸ்திதி என அழைக்கப்படுகிறது, ஏனெனில் பக்தியானது இரவும், ஞானம் பகலும் ஆகும். இந்த ஞானம் எவருடைய புத்தியிலும் இருக்க முடியும், ஆனால் அனைவரும் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறார்கள் என்பதல்ல. ஒருவருக்குத் தெய்வீகக் குணங்கள் இருந்தால், அவர் இந்த ஞானத்தைக் கிரகித்துள்ளார் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. இந்த ஞானத்தைக் கிரகிப்பவர்களின் செயற்பாடுகள், தேவர்களைப் போன்று ஆகுகின்றன. குறைவாகக் கிரகிப்பவர்களின் செயற்பாடுகள், கலப்படமாக இருக்கின்றன. அவர்கள் எதையுமே கிரகிக்காது விட்டால், அவர்கள் (பாபாவின்) குழந்தைகள் அல்ல என்பதே அதன் அர்த்தம். மனிதர்கள் தந்தையை அதிகளவுக்கு அவதூறு செய்கிறார்கள். நீங்கள் பிராமண குலத்துக்குள் வரும்பொழுது, ஒருவரையொருவர் அவமதிப்பதையும், அவதூறு செய்வதையும் நிறுத்துகிறீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள்; பின்னர், ஞானக்கடலைக் கடைவதனால், நீங்கள் அமிர்தத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஞானக்கடலைக் கடையாதுவிடின், வேறு எதைக் கடைவீர்கள்? அசுர எண்ணங்களையே ஆகும். அதிலிருந்து குப்பை மாத்திரமே வெளிப்படும். நீங்கள் இப்பொழுது இறை மாணவர்கள். சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வியை நீங்கள் கற்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தேவர்கள் இக்கல்வியைக் கற்பிப்பதில்லை. தேவர்களை ஒருபொழுதும் ஞானக்கடல்கள் என அழைக்க முடியாது. அவரை மாத்திரமே ஞானக்கடல் என அழைக்க முடியும். இந்த ஞானத்தின் மூலம் மாத்திரமே தெய்வீகக் குணங்கள் கிரகிக்கப்பட முடியும். இந்நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் இதைச் சத்திய யுகத்தில் பெறுவதில்லை. அத்தேவர்களுக்குத் தெய்வீகக் குணங்கள் உள்ளன. நீங்களும் தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிறைந்தவர்கள் என அவர்களைப் புகழ்கிறீர்கள். ஆகவே, இப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் உங்களையே வினவ வேண்டும்: என்னிடம் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் உள்ளனவா அல்லது என்னுடைய செயற்பாடுகள் அசுரத்தனமானவையா? உங்களிடம் அசுரச் செயற்பாடுகள் இருந்தால், நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஒரு தேவர் என்று அழைக்கப்படுவீர்கள். இல்லாது விட்டால், நீங்கள் ஒரு குறைந்த அந்தஸ்தையே அடைவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறீர்கள். நீங்கள் மிகச்சிறந்த பல விடயங்களைக் கூறுகிறீர்கள். நீங்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்ற, அதிமேன்மையான சங்கமயுகம் என இது அழைக்கப்படுகிறது. ஆகவே, சூழலும் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். உங்கள் உதடுகளில் இருந்து தீய வார்த்தைகள் வெளிப்படக்கூடாது. இல்லாவிட்டால், நீங்கள் ஒரு குறைந்த அந்தஸ்தையே கோரப் போகின்றீர்கள் எனக் கூறப்படும். இது உங்கள் நடத்தையில் இருந்தும், சூழலில் இருந்தும் மிகவும் இலகுவாக அறிந்து கொள்ளப்படும். உங்கள் முகங்கள் சதா மலர்ச்சியாக இருக்கட்டும். இல்லாவிட்டால், உங்களுக்கு எந்த ஞானமும் கிடையாது எனக் கூறப்படும். இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரமே சதா உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்பட வேண்டும். இலக்ஷ்மியையும் நாராயணனையும் பாருங்கள், அவர்களின் முகங்கள் எவ்வளவு மலர்ச்சி நிறைந்தவையாக இருக்கின்றன எனப் பாருங்கள். அந்த ஆத்மாக்கள் ஞான இரத்தினங்களைக் கிரகித்துள்ளார்கள். அவர்களுடைய வாய்களில் இருந்து சதா ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்பட்டன. ஞான இரத்தினங்களைக் கூறுவதிலும், செவிமடுப்பதிலும் அதிகளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் இப்பொழுது பெறுகின்ற ஞான இரத்தினங்களே பின்னர் வைரங்களாகவும், இரத்தினங்களாகவும் மாறும். நவ இரத்தினங்களின் மாலையானது வைரங்களாலும், இரத்தினங்களாலும் ஆனதல்ல. அது ஞான இரத்தினங்களின் மாலையாகும். அது அப்பௌதீக மாணிக்கங்களால் ஆக்கப்பட்டுள்ளது என மக்கள் நம்பி, அவற்றினாலான ஒரு மோதிரத்தை அணிந்து கொள்கிறார்கள். ஞான இரத்தினங்களின் மாலையானது அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினங்களே உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கு உங்களைச் செழிப்பாக்கும். இவற்றை உங்களிடமிருந்து எவராலும் கொள்ளையிட முடியாது. இங்கு, நீங்கள் வைரங்களையும், இரத்தினங்களையும் அணிய வேண்டியிருப்பின், யாராவது மிக விரைவாக உங்களிடமிருந்து அவற்றைக் கொள்ளை அடித்து விடுவார். ஆகவே, நீங்கள் மிகவும் விவேகிகளாகி, அசுர குணங்களை அகற்ற வேண்டும். அசுர குணத்தின் காரணமாக, முகம் மிகவும் தீங்கானதாக மாறுகிறது. கோபத்தில் இருக்கின்ற ஒருவரின் முகம் செப்பைப் போன்று சிவப்பாக ஆகுகிறது. காம விகாரத்தை உடையவர்கள் அவலட்சணமானவர்கள் ஆகுகிறார்கள். ஆகவே, குழந்தைகளான நீங்கள் அனைத்தையும் பற்றிய ஞானக்கடலைக் கடைய வேண்டும். இக்கல்வி பெருமளவு செல்வத்தைப் பெறுவதற்கானது. ஏனைய கல்விகள் இரத்தினங்களின் பெறுமதி வாய்ந்தவை அல்ல. ஆம், மக்களால் அந்த அறிவைக் கற்று, ஓர் உயர் தராதரத்தைக் கோர முடியும். ஆகவே, செல்வமல்ல, கல்வியே பயனுள்ளது. கல்வியே செல்வமாகும். அச்செல்வம் எல்லைக்கு உட்பட்டதும், இந்தச் செல்வமோ எல்லையற்றதும் ஆகும். ஆம், இரண்டும் கல்வியே ஆகும். தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அக்கல்விகள் தற்காலிகமானவையும், ஒரு பிறவிக்கு மாத்திரமே சிறிது பெறுமதி வாய்ந்தவையும் ஆகும். பின்னர், உங்கள் மறுபிறவியில், நீங்கள் புதிதாகக் கற்க வேண்டும். அங்கு, செல்வத்துக்காகக் கற்கத் தேவையில்லை. நீங்கள் இந்நேரத்தில் செய்யும் முயற்சிகளின் அடிப்படையில், அங்கே அபரிமிதமான செல்வத்தைப் பெறுகிறீர்கள். இச்செல்வம் அழிவற்றதாக ஆகுகிறது. தேவர்களிடம் பெருமளவு செல்வம் இருந்தது. அவர்கள் பக்திமார்க்கத்திற்கு, அதாவது இராவண இராச்சியத்திற்குள் சென்ற போது, எவ்வளவை வைத்திருந்தார்கள்? அவர்கள் பல்வேறு ஆலயங்களைக் கட்டினார்கள். பின்னர் முஸ்லீம்கள் வந்து, அவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்தார்கள். அவர்கள் (தேவர்கள்) மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள்! எவராலும் தற்காலத்தின் கல்வி மூலம் அவ்வளவு செல்வந்தராக முடியாது. உங்களைத் தேவர்கள் ஆக்குகின்ற, அத்தகையதொரு மேன்மையான கல்வியை நீங்கள் கற்கிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். கற்பதனால், மனிதர்கள் என்னவாக ஆகுகிறார்கள் எனப் பாருங்கள்: ஏழைகளில் இருந்து செல்வந்தராக ஆகுகிறார்கள். இப்பொழுது பாரதமும் மிகவும் ஏழ்மையாக உள்ளது. செல்வந்தர்களுக்கு முற்றாகவே நேரம் இருப்பதில்லை. இன்ன இன்னாராக இருக்கின்ற அவர்களுடைய தற்பெருமை அவர்களுக்கு உள்ளது. இங்கு, பெருமை அனைத்தும் அகற்றப்பட வேண்டும். நான் ஓர் ஆத்மா, ஓர் ஆத்மாவுக்குச் செல்வமோ அல்லது செழிப்போ, அல்லது வைரங்களோ அல்லது இரத்தினங்களோ இல்லை. தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து விடுங்கள்! ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டுச் செல்லும் பொழுது, அவர் மீண்டும் கற்று, தனது செல்வத்தைச் சம்பாதிக்கும் வரையில், செழிப்பு போன்றவை அனைத்தும் முடிவடைகின்றன. அல்லது, அவர் தனது முன்னைய பிறவியில் மிகச் சிறந்த தானங்களை அளித்திருந்தால், ஒரு செல்வந்த வீட்டில் பிறவி எடுப்பார். அவர்கள் கூறுகிறார்கள்: அது அவருடைய கடந்த காலச் செயல்களின் பலனாகும். ஒருவர் ஏனையோருக்குக் கல்வி அளித்திருந்தால், ஒரு கல்லூரியைக் கட்டியிருந்தால் அல்லது யாத்திரீகர்களுக்கான தங்குமடத்தைக் கட்டியிருந்தால், அவர் அதன் பலனை ஒரு தற்காலிகமான காலத்துக்கு மாத்திரம் பெறுகிறார். இங்கேயே நீங்கள் தானங்களை அளித்துப் புண்ணியத்தைச் செய்கிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் அதைச் செய்வதில்லை. சத்தியயுகத்தில் நல்ல செயல்கள் மாத்திரமே செய்யப்படுகின்றன, ஏனெனில் இந்த நேரத்தின் ஆஸ்தியை அங்கு அனுபவம் செய்கிறீர்கள். அங்கு, எவரும் பாவச் செயல்களைச் செய்வதில்லை, ஏனெனில் அங்கு இராவணன் இருப்பதில்லை. ஏழை மக்களும் அங்கு பாவச் செயல்களைச் செய்வதில்லை. இங்கு, செல்வந்தர்கள் கூடப் பாவச்செயல்களைச் செய்கிறார்கள். இதனாலேயே அத்தகைய நோய், துன்பம் போன்றவை இங்கே இருக்கின்றன. அங்கு, அவர்கள் விகாரத்தில் ஈடுபடுவதில்லை, ஆகவே எவ்வாறு பாவங்கள் செய்யப்பட முடியும்? அனைத்தும் கர்மாவில் தங்கியுள்ளது. இதுவே மனிதர்கள் விகாரம் உடையவர்கள் ஆகுகின்ற, இராவணனாகிய, மாயையின் இராச்சியம் ஆகும். தந்தை வந்து குழந்தைகளான உங்களை விகாரம்ம அற்றவர்கள் ஆக்குவதற்குக் கற்பிக்கிறார். தந்தை உங்களை விகாரம் அற்றவர்கள் ஆக்குகிறார், பின்னர் மாயை உங்களை விகாரம் உடையவர்கள் ஆக்குகிறாள். இராமரின் வம்சத்துக்கும் இராவணனின் வம்சத்துக்கும் இடையில் ஒரு யுத்தம் உள்ளது. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள், அவர்களோ இராவணனின் குழந்தைகள் ஆவார்கள். பல மிகச்சிறந்த குழந்தைகள் மாயையினால் தோற்கடிக்கப்படுகிறார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அப்படியிருந்தும் நம்பிக்கை உள்ளது. முழுமையாகச் சீரழிந்தவர்களும் ஈடேற்றப்பட வேண்டும். தந்தை முழு உலகையும் ஈடேற்ற வேண்டும். பலர் வீழ்கிறார்கள். அவர்கள் முழுமையாகச் சீரழிந்தவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் ஆகுகிறார்கள். தந்தை அத்தகைய குழந்தைகளையும் ஈடேற்றுகிறார். இராவண இராச்சியத்தில் அனைவரும் சீரழிந்துள்ளார்கள். எவ்வாறாயினும், தந்தை உங்களைக் காப்பாற்றுகிறார். அப்படியிருந்தும், நீங்கள் தொடர்ந்தும் வீழ்வதால், அனைவரிலும் மிகக் கீழானவர்களாக ஆகுகிறீர்கள், பின்னர் உங்களால் மேலே ஏற முடியாதிருக்கும். நீங்கள் மிகத் தாழ்ந்த அந்தஸ்தை அடைந்து விட்டீர்கள் என உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தும். கூறப்பட்டுள்ளது: “நீங்கள் உங்களுடைய இறுதிக் கணங்களில் நினைவு செய்பவை அனைத்தும்…” அவரின் புத்தியில் அந்தத் தாழ்ந்த அந்தஸ்தே இருக்கும். ஆகவே, தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்களே ஒவ்வொரு கல்பத்திலும் தேவர்களாக ஆகுபவர்கள். மிருகங்கள் அவ்வாறு ஆகுமா? மனிதர்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொண்டு, அவ்வாறு ஆகுகிறார்கள். இலக்ஷ்மி நாராயணன் போன்றவர்களுக்கும் மூக்குகள், காதுகள் போன்றவை இருக்கின்றன. ஏனெனில், அவர்களும் மனிதர்கள் ஆவார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்குத் தெய்வீகக் குணங்கள் இருப்பதனால், தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எவ்வாறு அத்தகைய அழகான தேவர்களாக ஆகினார்கள்? பின்னர் எவ்வாறு அவர்கள் வீழ்ந்தார்கள்? இப்பொழுது நீங்கள் இச்சக்கரத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த ஞானக்கடலைக் கடையும் அனைவரும் இதை மிகவும் நன்றாகக் கிரகிப்பார்கள். இந்த ஞானக்கடலைக் கடையாதவர்கள், மூடர்கள் (புத்துகள்) ஆகுகிறார்கள். முரளியை வாசிப்பவர்கள் ஞானக்கடலைக் கடைந்து, தாங்கள் விளங்கப்படுத்த வேண்டிய தலைப்புக்களைப் பற்றிச் சிந்திப்பார்கள். அவர்கள் இயல்பாகவே ஞானக்கடலைக் கடைவார்கள். வித்தியாசமான மனிதர்கள் வர இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் அவர்களுக்கு உற்சாகத்துடன் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் எதையாவது புரிந்து கொள்வது சாத்தியமாகும். அனைத்தும் அவர்களின் பாக்கியத்திலேயே தங்கியுள்ளது. சிலருக்கு உடனடியாகவே நம்பிக்கை ஏற்படும், ஏனையோருக்கு ஏற்படாது. அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படுகின்றது. இப்பொழுது இல்லாவிடின், பின்னர் அவர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள். ஒருவர் நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் நம்பிக்கையைக் கொண்டிருப்பது என்றால், அவர்களுக்குச் சேவை செய்வதில் ஓர் ஆர்வத்தைக் கொண்டிருப்பதாகும். நீங்கள் களைப்படையக் கூடாது. ஒருவர் கற்று, பின்னர் சீரழிந்துள்ளவர் ஆகினால், அவர் வரும்பொழுது, வரவேற்பறையில் அமர வைக்கப்படுவார். அல்லது, நீங்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறுவீர்களா? அவர் ஏன் பல நாட்களாக வரவில்லை என நீங்கள் நிச்சயமாக அவரை வினவுவீர்கள். தான் மாயையினால் தோற்கடிக்கப்பட்டதாக அவர் அநேகமாகக் கூறுவார். அத்தகைய பலர் இங்கு வருகிறார்கள். இந்த ஞானம் மிகவும் சிறந்தது என அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் மாயை அவர்களைத் தோற்கடிக்கிறாள். குறைந்தபட்சம் அவர்கள் அனைத்தையும் நினைவு செய்கிறார்கள்! பக்தியில், அவர்கள் வெற்றி அடைவதற்கான அல்லது தோல்வி அடைவதற்கான கேள்வியே கிடையாது. இந்த ஞானம் கிரகிக்கப்பட வேண்டும். உங்களைத் தேவர்கள் ஆக்குகின்ற, உண்மையான கீதையை நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து செவிமடுக்கிறீர்கள். பிராமணர்கள் ஆகாமல் உங்களால் தேவர்களாக முடியாது. கிறிஸ்தவர்கள், பார்சிகள், முஸ்லீம்களின் மத்தியில் பிராமணர்கள் (என்ற சாதி) கிடையாது. நீங்கள் இந்நேரத்தில் இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அல்பாவை நினைவு செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அல்பாவை நினைவு செய்வதால் மாத்திரமே, நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எவரையாவது சந்திக்கும் பொழுது, அவருக்குக் கூறுங்கள்: அல்லாவான, அல்பாவை நினைவு செய்யுங்கள். அல்பாவே அதியுயர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அல்பாவைக் குறிப்பிடுவதற்கு மக்கள் தங்கள் விரலை மேல்நோக்கிச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரேயொருவரே அல்பா எனவும் கூறப்படுகிறார். ஒரு கடவுளே இருக்கிறார், ஏனைய அனைவரும் குழந்தைகள். தந்தை எப்பொழுதும் அல்பாவே. அவர் இராச்சியத்தை ஆட்சிசெய்வதில்லை. அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் தனது குழந்தைகளாகவும் ஆக்குகிறார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா எங்களுக்கு அதிகளவு சேவை செய்கிறார். அவர் எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவர் அப்புதிய தூய உலகத்துக்குச் செல்வதில்லை. எவரும் அவரைத் தூய உலகத்தினுள் அழைப்பதில்லை. தூய்மை அற்றவர்கள் மாத்திரமே அவரை அழைக்கின்றார்கள். அவர் தூய உலகத்தினுள் என்ன செய்வார்? அவருடைய பெயரே தூய்மையாக்குபவர், ஆகவே அவருடைய கடமையானது, பழைய உலகைப் புதியதாக்குவதாகும். தந்தையின் பெயர் சிவன், குழந்தைகள் சாலிகிராம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர் வழிபாடு செய்யப்படுகிறார். அனைவரும் அவரைச் சிவபாபா என நினைவு செய்கிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் பிரம்மாவை இன்னமும் ‘பாபா’ என்றே அழைக்கிறார்கள். பலர் பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் எவருக்கும் அவரை மிகச்சரியாகத் தெரியாது. பிரம்மா யாருடைய குழந்தை? பரமாத்மாவாகிய பரமதந்தை சிவன் இவரைத் தத்தெடுத்துள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள். இவர் ஒரு சரீரதாரி ஆவார். ஆத்மாக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர்களின் சொந்தச் சரீரங்கள் உள்ளன. தாங்கள் நடிக்க வேண்டிய தங்கள் சொந்தப் பாகங்களை அவர்கள் அனைவரும் பெற்றுள்ளார்கள். இது தொன்றுதொட்ட காலத்திருந்தே தொடர்ந்து வருகிறது. அநாதியான என்றால் அதற்கு ஓர் ஆரம்பம், மத்தி, இறுதி கிடையாது என்றே அர்த்தம். மக்கள் இறுதியைப் பற்றிச் செவிமடுக்கும் பொழுது, அது எவ்வாறு மீண்டும் உருவாக்கப்படும் எனக் குழப்பம் அடைகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது அநாதியானது. அது எப்பொழுது உருவாக்கப்பட்டது என்னும் கேள்வியே கிடையாது. என்றுமே பிரளயம் இடம்பெறுவதில்லை. அது அவர்களுக்குக் கூறப்பட்டுள்ள ஒரு கட்டுக்கதையே ஆகும். மிகச் சொற்ப மனிதர்கள் மாத்திரமே எஞ்சியிருந்ததால், பிரளயம் இடம்பெற்றதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்நேரத்தில் மாத்திரமே பாபாவிடமுள்ள ஞானம் வெளிப்படுகிறது. அவரையிட்டே கூறப்படுகிறது: கடல் முழுவதையும் மையாக்கினாலும், காடுகளை எழுதுகோல்கள் ஆக்கினாலும், பூமியைக் கடதாசி ஆக்கினாலும் இந்த ஞானத்துக்கு முடிவேயில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மலர்ச்சியான முகத்தின் மூலம் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்யுங்கள். இந்த ஞான இரத்தினங்களை மாத்திரம் செவிமடுத்து, கூறுங்கள். உங்கள் கழுத்தைச் சுற்றி இந்த ஞான இரத்தினங்களின் மாலை இருக்க வேண்டும். அசுர குணங்களை அகற்றுங்கள்.

2. ஒருபொழுதும் சேவை செய்வதில் களைப்பு அடையாதீர்கள். நம்பிக்கையைப் பேணி, பெரும் ஆர்வத்துடன் சேவை செய்யுங்கள். ஞானக்கடலைக் கடைந்து, உற்சாகத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
குழப்பம் அடைவதற்குப் பதிலாக, உங்கள் தளர்வான இணைப்பை இறுக்கமாக்கி, சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்களாக.

அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், தளர்வான இணைப்பை கொண்டிருப்பதே ஆகும். இணைப்பைச் சீராக்கினால் சகல சக்திகளும் உங்களை வட்டமிடும். இணைப்பை இணைப்பதற்கு ஓரிரு நிமிடங்கள் எடுத்தாலும், தைரியத்தை கைவிட்டு குழப்பம் அடையாதீர்கள். உங்கள் நம்பிக்கையின் அத்திவாரத்தை அசைத்து விடாதீர்கள். நான் பாபாவிற்கு உரியவன், பாபா என்னுடையவர்! இதன் அடிப்படையில் உங்கள் அத்திவாரத்தைப் பலப்படுத்தினால், நீங்கள் அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

சுலோகம்:
விதை-ரூப ஸ்திதியில் நிலைத்திருப்பதே, உங்கள் பழைய சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான வழியாகும்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் செய்கின்ற சேவையிலோ அல்லது உங்கள் பழைய சம்ஸ்காரங்களை மாற்றுவதிலோ நீங்கள் வெற்றி ஈட்டாது விட்டால், நீங்கள் ஏதாவது ஒரு தடையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்கள். அதன் பின்னர் அதிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள். எவ்வாறாயினும், சக்தி இல்லாமல், அந்த ஆசையை நிறைவேற்ற முடியாது. ஆகையால், சகல அணிகலன்களையும் வைத்திருப்பவர் ஆகுங்கள். அந்தச் சக்திகளைக் கிரகியுங்கள், நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபடுவீர்கள்.