27.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இல்லாவிடில் மாயை உங்களைக் கடனாளி ஆக்கி விடுவாள். உங்களின் கண்கள் உங்களைப் பெருமளவில் ஏமாற்றுகின்றன. எனவே, அவற்றையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
கேள்வி:
எக்குழந்தைகள் மாயையால் பாவச் செயல்கள் செய்ய வைக்கப்படுகின்றனர்? எக்குழந்தைகள் யக்ஞத்தில் தடைகளாக உள்ளனர்?பதில்:
சுய அகங்காரம் கொண்டிருக்கின்ற குழந்தைகள் மாயையால் பல பாவச் செயல்கள் செய்ய வைக்கப்படுகின்றனர். அத்தகைய அகங்காரத்தைக் கொண்டிருப்பவர்கள் முரளியைக் கற்கவேனும் மாட்டார்கள். அவர்களை அத்தகைய தவறுகள் செய்ய வைப்பதன் மூலம் மாயை அவர்களை அறைந்து, ஒரு சதத்திற்கும் பெறுமதி அற்றவர்கள் ஆக்குகின்றாள். அரட்டையடித்து, தங்கள் புத்தியில் குப்பைகளைக் கொண்டிருப்பவர்கள் யக்ஞத்திற்குத் தடைகள் ஆகின்றனர். அவை மிகவும் தீய பழக்கங்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக அந்த ஒருவரே தந்தையும், ஆசிரியரும், பரம குருவும் என்ற எண்ணத்துடன் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் எனத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகி, பின்னர் அந்தத் தூய உலகிற்குச் செல்வீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தூய உலகில் இருந்தே கீழிறங்கி வந்தீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து சென்றீர்கள். நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் ஏனைய அனைத்தில் இருந்தும் விலகியிருப்பதுடன், சிவபாபாவின் நினைவில் இருப்பதால், சிவபூமி தொலைவில் இல்லை என்பதையும் இந்த ஞானத்தின் மூலமாக நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யாவிட்டால், சிவபூமி வெகு தொலைவிலேயே இருக்கும். பின்னர் தண்டனை அனுபவிக்க நேரிடுவதுடன், நீங்கள் மிகவும் தூரத்திற்குச் சென்று விடுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சிரமமும் கொடுப்பதில்லை. முதலில், நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக வேண்டும் என அவர் மீண்டும் மீண்டும் கூறுகின்றார். இக்கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. நீங்கள் முன்னேறிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திரான்ஸும், யோகமும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டவை என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். யோகம் என்றால் நினைவு ஆகும். நீங்கள் திறந்த கண்களுடன் நினைவு செய்யலாம். யோகம் என திரான்ஸ் அழைக்கப்படுவதில்லை. ஒருவர் திரான்ஸில் செல்லும்போது, அது ஞானம் என்றோ, யோகம் என்றோ அழைக்கப்படுவதில்லை. திரான்ஸில் செல்பவர்களை மாயை அதிகளவில் தாக்குகின்றாள். எனவே, நீங்கள் அதனையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தையின் நினைவு மிகவும் ஒழுங்குமுறைப்படி இருக்க வேண்டும். நீங்கள் சட்டத்திற்கு முரணான செயல்கள் எதையாவது செய்தால், மாயை உங்களைக் கீழே வீழ்த்தி விடுவாள். நீங்கள் திரான்ஸ் பற்றிய எந்த ஆசையையும் ஒருபோதும் கொண்டிருக்கக் கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர் ஆகுங்கள். நீங்கள் எந்த ஆசையையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் கேட்காமலே தந்தை உங்களின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றார், ஆனால் நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றினால் மாத்திரமே அது சாத்தியம். நீங்கள் அவரது வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படியாமல் தவறான பாதையைப் பின்பற்றினால், சுவர்க்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நரகத்தினுள் வீழ்வது சாத்தியமாகும். பெரிய முதலை யானையை விழுங்கியதாகப் பாடப்படுகின்றது. பலருக்கு ஞானத்தைக் கொடுத்தவர்களும், போக் படைத்தவர்களும் இன்று இங்கே இல்லை. அவர்கள் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படியாததால் சென்று, முழுமையாக மாயைக்கு உரியவர்கள் ஆகினார்கள். தேவர்கள் ஆகுகையில், அவர்கள் அசுரர்கள் ஆகினர். இதனாலேயே நீங்கள் இப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்களே உங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார். ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இராதீர்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றியதாலேயே நீங்கள் கீழிறங்கும் நிலைக்குச் சென்றீர்கள். அதியுயர்ந்த நிலையில் இருந்த நீங்கள் இப்பொழுது என்ன நிலையை அடைந்து விட்டீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள் அடி மட்டத்தை அடைந்து விட்டீர்கள்! இப்பொழுதும் நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாமல், கவனயீனமாக இருந்தால், உங்களின் அந்தஸ்து அழிக்கப்படும். பாபா நேற்றும் விளங்கப்படுத்தினார்: நீங்கள் ஸ்ரீமத் இல்லாமல் எதையாவது செய்யும்போது, பெருமளவு அவச்சேவை செய்யப்படுகின்றது. நீங்கள் ஸ்ரீமத் இல்லாமல் எதையாவது செய்தால், தொடர்ந்தும் வீழ்வீர்கள். ஆரம்பத்தில் இருந்தே பாபா தாய்மாரைக் கருவிகள் ஆக்கியுள்ளார். ஏனெனில் தாய்மாருக்கே கலசம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘தாய்மாருக்கு வந்தனங்கள்!’ எனப் பாடப்படுகின்றது. பாபா தாய்மாரின் செயற்குழு ஒன்றை உருவாக்கி, அனைத்தையும் அவர்களிடம் கையளித்தார். புதல்விகள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். பொதுவாக ஆண்களே கடனாளிகள் ஆகின்றனர். எனவே தாய்மார் மீதே தந்தை கலசத்தை வைக்கின்றார். இந்த ஞானத்தின் பாதையில், தாய்மார் கூட கடனாளிகள் ஆகின்றனர். பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகவேண்டியவர்கள் கூட மாயையால் தோற்கடிக்கப்பட்டு கடனாளிகள் ஆகக்கூடும். இங்கு, ஆண்கள், பெண்கள் இருசாராரும் கடனாளிகள் ஆகலாம். வெளியில், ஆண்களே கடனாளிகள் ஆகுகின்றனர். இங்கு, எத்தனை பேர் தோற்கடிக்கப்பட்டு, விட்டுச் சென்று விட்டார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் கடனாளிகளாகி விட்டதையே இது குறிக்கின்றது. பாரத மக்கள் முழுமையாகக் கடனாளிகள் ஆகிவிட்டனர் எனத் தந்தை இங்கிருந்து, விளங்கப்படுத்துகின்றார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்! தாங்கள் எவ்வாறிருந்தார்கள் எனவும், எங்கிருந்து முழுமையாக வீழ்ந்தார்கள் எனவும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இங்கும், அவர்கள் மேலேறும்போது, ஸ்ரீமத்தை மறந்து தங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால் கடனாளிகள் ஆகின்றனர். எனவே, அவர்களின் நிலைமை என்னவாக இருக்கும்? வெளியில், அவர்கள் கடனாளிகளாகி, பின்னர் ஐந்து அல்லது ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கின்றனர். இங்கு, அவர்கள் 84 பிறவிகளுக்குக் கடனாளிகள் ஆகுவதால் அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. அவர்கள் தொடர்ந்தும் கடனாளிகள் ஆகுகின்றனர். மகாராத்திகள் பலரும், பலரையும் ஈடேற்றினர், எனினும் அவர்களே இன்று இங்கே இல்லை. அவர்கள் கடனாளிகள் ஆகிவிட்டனர். இங்கு, அந்தஸ்து மிக உயர்வானது. இருந்த போதிலும், நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அதி உச்சியிலிருந்து கீழே வீழ்ந்து விடுவீர்கள். மாயை முழுமையாகவே உங்களை விழுங்கி விடுகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிர்வாகக் குழுக்களை உருவாக்குவதாலோ, உங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதாலோ எதையும் அடைய முடியாது. உங்களின் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணையுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தைக்குச் சொந்தமாகிய பின்னர், நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படியாமல், அவரது ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் முற்றாகவே வீழ்ந்து விடுவீர்கள். பின்னர், தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். தொடர்பு துண்டிக்கப்பட்டால், மாயை ஏன் உங்களை அதிகளவில் தொந்தரவு செய்கின்றாள் என உங்களையே நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் தந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். வேறு எவ்வாறு உங்கள் மின்கலம் சக்தியூட்டப்பட முடியும்? நீங்கள் பாவச் செயல்கள் செய்யும்போது உங்களின் மின்கலம் சக்தி இழக்கின்றது. நீங்கள் மேலே ஏறுகையிலே வீழ்ந்து விடுகின்றீர்கள். அத்தகைய பலர் இருப்பதை பாபா அறிவார். ஆரம்பத்தில் பலர் வந்து பாபாவிற்குச் சொந்தமாகினர். அவர்கள் பத்திக்கு வந்தனர், எனினும் இன்று அவர்கள் எங்கே? அவர்கள் பழைய உலகை நினைத்ததால், வீழ்ந்து விட்டனர். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கத் தூண்டுகின்றேன். உங்களின் இதயத்தை இப்பழைய, தூய்மையற்ற உலகில் பற்றுவைக்க அனுமதிக்காதீர்கள். உங்களின் இதயத்தை சுவர்க்கத்துடன் இணையுங்கள். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆக விரும்பினால், ஏதாவது முயற்சி செய்தாக வேண்டும்! உங்களின் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். நீங்கள் பழைய உலகை மறப்பது நல்லது. எவ்வாறாயினும், நீங்கள் எதை நினைவு செய்ய வேண்டும்? அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் ஆகும். நடக்கும்போதும், அமர்ந்திருக்கும் போதும், உலாவித் திரியும்போதும் இயன்றவரை தந்தையை நினைவு செய்யுங்கள். எல்லையற்ற சந்தோஷம் நிறைந்த சுவர்க்கத்தை நினைவு செய்யுங்கள். இது மிக இலகுவானது. நீங்கள் இவ்விரு அறிவுறுத்தல்களையும் மீறி எதிர்த்திசையில் செல்வீர்களாயின், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் ஒரு சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். இது திரும்பிச் செல்லவேண்டிய பயணம் என்பதால், அனைவரும் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும் என நீங்கள் அவர்களுக்குக் கூறுகின்றீர்கள். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்றால், சுவர்க்கம் நரகம் ஆகுகின்றது, பின்னர் அந்த நரகம் மீண்டும் சுவர்க்கம் ஆகுகின்றது என்று அர்த்தம். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. உங்களைச் சுயதரிசன சக்கரதாரிகளாக இங்கு அமர்ந்திருக்குமாறு தந்தை கூறியுள்ளார். இந்நினைவில் அமர்ந்திருங்கள். நாங்கள் பல தடவைகள் இச்சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். நாங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆகுகின்றோம். உலகிலுள்ள எவருமே இந்த இரகசியத்தை அறிய மாட்டார்கள். தேவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே தூய்மையாக உள்ளனர். சங்கு ஊதுவதற்கு, அவர்களிடம் அத்தகைய ஞானம் இல்லை. அவர்கள் ஏற்கனவே தூய்மையாக உள்ளதால், இதற்கான அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இருவரும் சேர்ந்து நான்கு கரங்களை உடைய உருவம் ஆகும்போதே அந்த அடையாளம் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் இன்று தேவர்கள் ஆகினாலும், நாளையே நீங்கள் வீழ்ந்து விடுவதால் உங்களுக்கு அந்த அடையாளம் கொடுக்கப்படுவதில்லை. மாயை உங்களை விழச் செய்கின்றாள். தந்தை உங்களை தேவர்கள் ஆக்குகின்றார், மாயையோ உங்களை அசுரர்கள் ஆக்குகின்றாள். மாயை உங்களைப் பல வழிகளில் பரீட்சிக்கின்றாள். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்தும்போதே நீங்கள் உங்களின் ஸ்திதியில் இருந்து உண்மையிலேயே வீழ்ந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து கொள்கின்றீர்கள். ஆதரவற்ற, அப்பாவி ஆத்மாக்கள் பலர் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் தாங்கள் பெற்றதை எல்லாம் சேமித்து வைத்தனர். அவ்வாறிருந்தும்கூட, அவர்கள் சில சமயங்களில் மாயையால் தோற்கடிக்கடுகின்றனர். நீங்கள் ஒரு தடவை சிவபாபாவிற்குச் சொந்தமாகி விட்டால், ஏன் அவரை மறக்கின்றீர்கள்? நினைவு யாத்திரையே இதில் பிரதான விடயம். யோகம் செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாக முடியும். இந்த ஞானத்துடன் கூடவே தூய்மையும் தேவைப்படுகின்றது. நீங்கள் அழைத்தீர்கள்: பாபா, வந்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள், அப்பொழுதே நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! நீங்கள் தூய்மையாகி, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கே நினைவு யாத்திரை உள்ளது. இங்கிருந்து விலகிச் சென்றவர்களும் சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்திருப்பதால் நிச்சயமாகச் சிவபூமிக்குச் செல்வார்கள். அவர்களின் அந்தஸ்து எதுவாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் தந்தையை ஒரு தடவையே நினைவு செய்திருந்தாலும் கூட சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஆனால், அவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற மாட்டார்கள். சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டு வெறுமனே சந்தோஷப்படாதீர்கள். நீங்கள் தோல்வி அடைந்த பின்னர், சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவதில் சந்தோஷம் அடையக்கூடாது. அது சுவர்க்கமாக இருந்தாலும், அந்தஸ்தில் பல்வேறு மட்டங்கள் உள்ளன. நீங்கள் ஒரு வேலைக்காரர் அல்லது சுத்தம் செய்பவர் என்ற உணர்வு இருக்கவே செய்யும். இறுதியில், நீங்கள் எவ்வாறு ஆகுவீர்கள் என்ற காட்சியைப் பெறுவீர்கள். நான் இந்த நிலைமையை அடைவதற்கு என்ன பாவங்கள் செய்தேன்? நான் ஏன் ஒரு சக்கரவர்த்தினி ஆகவில்லை? நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல்கோடீஸ்வரர் ஆகலாம். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களால் பல்கோடீஸ்வரர் ஆகமுடியாது. ஆலயங்களில் தேவர்கள் தாமரைச் சின்னத்துடன் காண்பிக்கப்பட்டுள்ளனர். வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்தஸ்தில் அதிக வேறுபாடு உள்ளது. இப்பொழுதும் கூட, அந்தஸ்தில் எத்தனை மட்டங்கள் உள்ளன எனப் பாருங்கள். அவர்களிடம் பெருமளவு பகட்டு காணப்படுகிறது. அவையனைத்தும் தற்காலிகச் சந்தோஷமே. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக உங்கள் கைகளை உயர்த்துகின்றீர்கள். எனவே, நிச்சயமாக அதற்காக முயற்சி செய்யப்பட வேண்டும். தங்களின் கைகளை உயர்த்திய சிலர் கூட இப்பொழுது இங்கு இல்லை. பின்னர் மற்றவர்கள் கேட்கின்றனர்: இவர்களா தேவர்களாகப் போகின்றார்கள்? முயற்சி செய்கையில் அவர்களின் கதை முடிந்து விட்டது! உங்களின் கையை உயர்த்துவதும், பலருக்கு விளங்கப்படுத்துவதும் இலகுவானது. எவ்வாறாயினும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகையில் சில மகாராத்திகளும்கூட காணாமல் போய்விடுகின்றனர். மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வேளையில் அவர்கள் தங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அகநோக்கு உடையவராகி, தந்தையை நினைவு செய்யுங்கள். எவ்வாறு? பாபா எங்களின் தந்தையும், எங்களின் ஆசிரியரும், எங்களின் குருவும் ஆவார். நாங்கள் எங்களின் இனிய வீட்டிற்குச் செல்கின்றோம். உங்களுக்குள் இந்த ஞானம் முழுவதும் இருக்க வேண்டும். தந்தையிடம் இந்த ஞானம், யோகம் இரண்டும் உள்ளன, நீங்களும் இவ்விரண்டையும் கொண்டிருக்க வேண்டும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அது ஞானமும், அத்துடன் நினைவும் ஆகும். இந்த ஞானம், யோகம் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தை மறந்து சிவபாபாவின் நினைவில் மாத்திரம் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். தந்தை உங்களுக்கு யோகம் கற்பிக்கும்போது, அவர் இந்த ஞானத்தை மறக்கின்றாரா? இந்த ஞானம் முழுவதும் அவரில் உள்ளது. குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் இருக்க வேண்டும். நீங்கள் அதைக் கற்க வேண்டும். நான் என்ன செயல்களைச் செய்தாலும், என்னைப் பார்ப்பவர்களும் அதையே செய்வார்கள். நான் முரளியைக் கற்காவிட்டால், மற்றவர்களும் அதைக் கற்க மாட்டார்கள். நான் சீரழிவுக்குச் சென்றால், மற்றவர்களும் அதையே செய்வதால், மற்றவர்களை விழச் செய்வதில் நான் ஒரு கருவி ஆகின்றேன். பல குழந்தைகள் முரளியைக் கற்காமல் பொய்யான அகங்காரத்தைக் கொண்டுள்ளனர். மாயை விரைவாக அவர்களைத் தாக்குகின்றாள். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் அவசியம். இல்லாவிடில் ஏதோவொரு பாவச் செயல் செய்யப்படுகின்றது. பல குழந்தைகள் பல தவறுகளைச் செய்கின்றார்கள். பின்னர் அனைத்துமே அழிக்கப்படுகின்றன. நீங்கள் தவறுகள் செய்யும்போது, மாயை உங்களை அறைந்து, ஒரு சதத்திற்கும் பெறுமதி அற்றவர்கள் ஆக்குகின்றாள். இதற்குப் பெருமளவு புரிந்துணர்வு தேவை. நீங்கள் அகங்காரம் உடையவர் ஆகும்போது மாயை உங்களைப் பல பாவச் செயல்களைப் புரிய வைக்கின்றாள். நீங்கள் ஒரு குழுவை உருவாக்கும்போது, ஓரிரு பெண்கள் நிச்சயமாகத் தலைமை வகிக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைகளுடன் அனைத்தும் செய்து முடிக்கப்பட முடியும். கலசம் இலக்ஷ்மிக்கே வழங்கப்பட்டுள்ளது. அமிர்தம் வழங்கப்பட்ட போது, அதைப் பருகுவதற்காக அசுரர்களும்கூட வந்ததாக நினைவு கூரப்படுகின்றது. யக்ஞத்திற்குத் தடைகள் விளைவிப்பவர்களும் உள்ளனர். பல்வேறு தடைகளை உருவாக்குபவர்களும் உள்ளனர். நாள் முழுவதும் அரட்டை அடிப்பவையே அவர்களின் புத்திகளில் இருக்கும். அது மிகவும் தீங்கானது. நடப்பவை அனைத்தையும் தந்தைக்கு முறையிடுங்கள். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே உங்களைச் சீர்திருத்த முடியும். நீங்கள் சட்டத்தை உங்களின் கைகளில் எடுக்கக்கூடாது. தந்தையின் நினைவில் இருந்து அனைவருக்கும் அவரது அறிமுகத்தைக் கொடுங்கள். அப்பொழுதே உங்களால் அவர்களைப் போன்று (இலக்ஷ்மி நாராயணன்) ஆகமுடியும். மாயை மிகவும் பலசாலி. அவள் எவரையும் விட்டு வைப்பதில்லை. எப்பொழுதும் உங்களின் செய்தியைத் தந்தைக்கு எழுதுங்கள். தொடர்ந்தும் அவரிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெறுங்கள். நீங்கள் எப்படியோ அனைத்திற்கும் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். பாபா குறித்த ஒரு நபரைப் பற்றி எதையாவது விளங்கப்படுத்துவதால் அவர் அந்தர்யாமி (ஒவ்வொருவருக்கும் உள்ளே இருப்பதை அறிந்தவர்) எனக் குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: இல்லை, நான் உங்களுக்கு இந்த ஞானத்தையே கற்பிக்கின்றேன். இதில் அந்தர்யாமியாக இருத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம், நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பதை நான் அறிவேன். ஒவ்வொருவரிலும் இருக்கின்ற ஆத்மா, எனது குழந்தை ஆவார். தந்தை ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கின்றார் என்றில்லை. மக்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்றும், அவர் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றார் என்றும் நான் அறிவேன். இவை அத்தகைய இலகுவான விடயங்கள்! அவ்வாறிருந்தும் அவர்கள் இதை மறந்து, கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுகின்றார்கள். இந்த ஒரு தவறாலேயே அனைவரும் அதிகளவில் வீழ்ந்து விட்டனர்! உங்களை உலக அதிபதிகள் ஆக்குபவரை நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: பாரதத்தில் அதர்மம் உச்சக்கட்டத்தில் உள்ளபோதே நான் வருகின்றேன். தந்தை இங்கு வந்து விட்டார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானக்கடலை மிக நன்றாகக் கடைய வேண்டும். இந்த ஞானத்தை மிக நன்றாகக் கடைவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுதே உங்களுக்கு நன்மை ஏற்படுத்த உங்களால் முடியும். இதில் பணம் என்ற கேள்வி இல்லை. எவரும் பட்டினியால் இறந்து விட மாட்டார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையிடம் இருந்து சேமிப்பதற்கேற்ப, உங்களின் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். இந்த ஞானத்திற்கும், பக்திக்கும் பின்னர் விருப்பமின்மை எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். விருப்பமின்மை என்றால் அனைத்தையும் மறப்பதாகும். நீங்கள் விலகியிருக்க வேண்டும்: ஆத்மாவாகிய நான், இச்சரீரத்தை விட்டு நீங்குகின்றேன். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை நீங்கள் மிகவும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் ஒருபோதும் கவனயீனமாக இராதீர்கள். மிக மிக எச்சரிக்கையாக இருங்கள். ஒருபோதும் எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள்.2. அகநோக்கு உடையவராகி, உங்களின் புத்தியை ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள். தூய்மையற்ற, இப்பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். நீங்கள் செய்கின்ற செயல்களைப் பார்த்து, மற்றவர்களும் அதையே செய்வார்கள் என்பதை உங்களின் புத்தியில் வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு நாளும், இந்த ஞானக் கருத்துக்களை மீட்டல் செய்வதனால், தீர்வுகளின் சொரூபங்களாகவும் துன்பத்திலிருந்து விடுபட்டிருக்கின்ற இடத்தின் சக்கரவர்த்திகளாகவும் ஆகுவீர்களாக.ஒவ்வொரு நாளும், உங்கள் நாட்குறிப்பேட்டிலும், உங்கள் புத்தியிலும் உள்ள இந்த ஞானக் கருத்துக்களை மீட்டல் செய்து, அவற்றை உங்கள் நடைமுறை அனுபவமாக ஆக்குங்கள். அப்பொழுது உங்களால் எவ்வகையான பிரச்சனைக்கும் இலகுவில் தீர்வைக் காண முடியும். என்றுமே வீணான எண்ணங்கள் எனும் சுத்தியலால் பிரச்சனைகள் எனும் பாறையை உடைப்பதற்கு முயற்சிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். “நாடகம்” எனும் வார்த்தையின் விழிப்புணர்வு மூலம் உயரே பாய்ந்து, முன்னேறிச் செல்லுங்கள். இப்பழைய சம்ஸ்காரங்கள் பின்னர் உங்கள் வேலையாட்கள் ஆகும், ஆனால் நீங்கள் முதலில் உங்களுடைய சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்ற ஒரு சக்கரவரத்தியாக வேண்டும்.
சுலோகம்:
அனைவருக்கும் மரியாதையைக் கொடுப்பதே மரியாதையைப் பெறுவதாகும்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
பந்தன வாழ்வை அனுபவம் செய்தனால் மட்டுமே, நீங்கள் ஜீவன்முக்தியை அனுபவம் செய்ய முடியும். ஆகவே, சத்தியயுகத்தில் பந்தன வாழ்வு எனும் கேள்வியே இல்லை. அங்கே நீங்கள் உங்களுடைய வெகுமதியின் நிலையில் மட்டுமே இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அனுபவம் செய்கின்ற முக்தி தாமத்தின் முக்தியை உங்களால் அனுபவம் செய்ய இயலாதிருக்கும். ஆகவே, இச்சங்கம யுகத்திலேயே முக்தியையும், ஜீவன்முக்தியையும் உங்களால் அனுபவம் செய்ய முடியும். இப்பொழுது உங்கள் ஆஸ்திக்கான உரிமையை நீங்கள் கோரி விட்டதனால், இப்பொழுது அதனை உங்கள் வாழ்வில் கிரகித்து, அதன் முழு நன்மையையும் பெறுங்கள்.