27.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களுடைய துன்ப நாட்கள் இப்பொழுது முடிவடைகின்றன. அங்கு அடைய முடியாதவை எதுவுமில்லை என்கின்ற உலகிற்கு நீங்கள் இப்பொழுது செல்கின்றீர்கள்.
கேள்வி:
எந்த இரு வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருப்பதன் மூலம் பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பது சாத்தியமாகும்?பதில்:
உங்கள் புத்தியில் கீழிறங்குகின்ற ஸ்திதி, மேலேறுகின்ற ஸ்திதி இரண்டினதும் முக்கியத்துவத்தை வைத்திருப்பதால் ஆகும். அரைக்கல்பமாக நாங்கள் கீழிறங்கினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்; இப்பொழுது இது மேலேறுகின்ற நேரம். தந்தை எங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக ஆக்குவதற்காக உண்மையான ஞானத்தை எங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளார். இப்பொழுது எங்களுக்குக் கலியுகம் முடிவுக்கு வந்துள்ளது, நாங்கள் புதிய உலகிற்குச் செல்கின்றோம். இதனாலேயே நாங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றோம்.பாடல்:
ஓ மனமே! பொறுமையாக இரு, உனது சந்தோஷ நாட்கள் வரவுள்ளன.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இது மாத்திரமே ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்ற மேன்மையான சங்கமயுகம் ஆகும். அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: ஓ மனிதர்களே, அதாவது, ஓ ஆத்மாக்களே பொறுமையாக இருங்கள்! அவர் ஆத்மாக்களுடன் பேசுகின்றார். ஆத்மாவே இந்தச் சரீரத்தின் அதிபதி ஆவார். ஆத்மா கூறுகின்றார்: நான் ஓர் அழிவற்ற ஆத்மா, எனது இந்தச் சரீரம் அழியக்கூடியது. ஆன்மீகத் தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்தில் ஒருமுறை மாத்திரமே குழந்தைகளாகிய உங்கள் சந்தோஷ நாட்கள் இப்பொழுது வருகின்றன என்று அறிந்து கொள்கின்ற பொறுமையைக் கொடுப்பதற்கு வருகின்றேன். நீங்கள் இப்பொழுது துன்ப பூமியில் ஆழ்நரகத்தில் இருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அல்லாது முழு உலகமுமே ஆழ்நரகத்தில் உள்ளது. எனது குழந்தைகள் ஆகியுள்ளவர்கள் ஆழ்நரகத்தில் இருந்து வெளிப்பட்டு சுவர்க்கத்திற்குச் செல்கின்றார்கள். சத்திய, திரேதா, துவாபர யுகங்கள் கடந்து விட்டன. உங்களுக்குக் கலியுகமும் கடந்து விட்டது. உங்களுக்கு இது இப்போது நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்ற மேன்மையான சங்கமயுகம் ஆகும். ஆத்மா சதோபிரதான் ஆகுகின்ற பொழுது சரீரத்தை விட்டுச் செல்வார். சத்தியயுகத்தில் சதோபிரதான் ஆத்மாவுக்கு ஒரு புதிய சரீரம் தேவை. அங்கே அனைத்துமே புதியதாக உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது துன்ப தாமத்திலிருந்து சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆகையினால் அதற்காக முயற்சி செய்யுங்கள். சந்தோஷ தாமத்தில் அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இதுவே சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான உண்மையான ஞானமாகும். பக்தி மார்க்கத்திலே பௌர்ணமி இரவில் அவர்கள் சமயநூல்களில் இருந்து கதைகளைச் செவிமடுக்கின்றார்கள். எவ்வாறாயினும்இ அது பக்தி மார்க்கம். அதை நீங்கள் உண்மையான பாதை என அழைக்க முடியாது; ஞானப் பாதையே உண்மையான பாதையாகும். ஏணியில் கீழிறங்கியதால் நீங்கள் பொய்யான பூமிக்கு வந்தீர்கள். சத்தியமான தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெற்றதனால் நாங்கள் 21 பிறவிகளுக்குத் தேவர்கள் ஆகுவோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நாங்கள் அவ்வாறு இருந்தோம், பின்னர் நாங்கள் ஏணியில் கீழிறங்கினோம். கீழிறங்குகின்ற, மேலேறுகின்ற ஸ்திதிகளின் முக்கியத்துவம் உங்கள் புத்தியில் உள்ளது. ‘ஓ பாபா வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என அவர்கள் அழைக்கின்றனர். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே எங்களைத் தூய்மையாக்க முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சத்திய யுகத்தில் நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் மிகவும் செல்வந்தர்களாகவும் சந்தோஷமாகவும் இருந்தீர்கள். இப்பொழுது சிறிதளவு நேரமே மீதமுள்ளது. பழைய உலகின் விநாசம் உங்கள் முன் உள்ளது. புதிய உலகில் ஓர் இராச்சியமும் ஒரு மொழியுமே இருக்கின்றன. அது பிரிவினையற்ற இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. தற்பொழுது பல பிரிவுகளும் பல மொழிகளும் உள்ளன. மனித உலக விருட்சம் வளர்வதைப் போன்று மொழிகளின் விருட்சமும் தொடர்ந்தும் வளர்கின்றது. பின்னர் ஒரு மொழி மாத்திரமே இருக்கும். நினைவு கூரப்படுகின்றது: உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. இது மனிதர்களின் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. தந்தையே பழைய துன்ப உலகை மாற்றி புதிய சந்தோஷ உலகை ஸ்தாபிப்பவர். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தேவ தர்மம் ஸ்தாபிக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. இது இராஜயோகக் கல்வியாகும். தந்தை உங்களுடன் நேருக்கு நேர் பேசிய இந்த ஞானமே கீதையிலே எழுதப்பட்டுள்ளது. மக்கள் பின்னர் பக்தி மார்க்கத்துக்காக அதை மீள எழுதினார்கள், இதுவே உங்களைக் கீழிறங்குகின்ற ஸ்திதிக்கு இட்டுச் சென்றது. கடவுள் இப்பொழுது மேலே ஏறுவதற்காக உங்களுக்குக் கற்பிக்கின்றார். பக்தி கீழே இறங்குவதற்கான பாதை என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஞானம் மேலே ஏறுவதற்கான பாதையாகும். இதை விளங்கப்படுத்துவதற்குப் பயப்பட வேண்டாம். சிலர் எதையும் புரிந்து கொள்ளாததால் உங்களை எதிர்த்து வாதாடலாம், ஆனால் நீங்கள் எவருடனும் வாதாடக்கூடாது. சமயநூல்கள், வேதங்கள், உபநிடதங்கள், கங்கையில் நீராடுதல், யாத்திரை செல்லுதல் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை என அவர்களிடம் கூறுங்கள். இராவணன் உண்மையில் பாரதத்திலேயே இருக்கின்றான், அதனாலேயே அவர்கள் அவனது கொடும்பாவியை எரிக்கின்றார்கள். பொதுவாக ஓர் எதிரியின் கொடும்பாவி தற்காலிகமாகவே எரிக்கப்படுகின்றது. ஆனால் இராவணனின் கொடும்பாவி மாத்திரமே வருடா வருடம் எரிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தி சத்தியயுகத்திற்கு உரியதிலிருந்து கலியுகத்திற்கு உரியதாகி விட்டது. நீங்கள் மிகவும் சந்தோஷமானவர்களாக இருந்தீர்கள். தந்தை சந்தோஷ பூமியை ஸ்தாபிக்க வந்துள்ளார். பின்னர் பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகுகின்ற பொழுது நீங்கள் துன்பத்தை அனுபவஞ் செய்கின்றீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரை நினைவு செய்கின்றீர்கள். ஆனால் அதுவும் பெயரளவிற்கே, ஏனெனில் நீங்கள் அவரை அறிய மாட்டீர்கள். அவர்கள் கீதையில் பெயரை மாற்றி உள்ளார்கள். முதலில் அதிமேலான ஒரேயொரு கடவுள் மாத்திரமே இருக்கின்றார் எனவும் அவரே நினைவு செய்யப்பட வேண்டும் எனவும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்வதே கலப்படமற்ற நினைவும் கலப்படமற்ற ஞானமும் என்று அறியப்படுகின்றது. நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளதால் எந்தப் பக்தியையும் நீங்கள் இப்பொழுது செய்வதில்லை; உங்களிடம் இந்த ஞானமுள்ளது. தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்ற கல்வியின் மூலம் நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். தெய்வீகக் குணங்களும் கிரகிக்கப்பட வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை வைத்திருங்கள், அதனால் உங்களில் ஏதாவது அசுர குணங்கள் இருக்கின்றனவா என நீங்கள் அறிந்து கொள்ள முடியும். சரீர உணர்வே முதலாவது குறைபாடாகும். அடுத்த எதிரி காமமாகும். காமத்தை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இதுவே உங்கள் இலக்காகும். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் எண்ணற்ற சமயங்கள் இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் மாத்திரமே இருக்கின்றது. மனிதர்கள் கலியுகத்திலேயே இருக்கின்றார்கள். அவர்களும் (தேவர்கள்) மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்கள். இந்நேரத்தில் சகல மனிதர்களும் அசுர குணங்கள் கொண்டவர்கள். சத்தியயுகத்தில் காமம் எனும் கொடிய எதிரி இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: காமம் எனும் இக் கொடிய எதிரியை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இராவணன் அங்கு இருக்க மாட்டான். இதனைக் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சத்தியயுகத்தில் இருந்து கீழிறங்கி வரும்பொழுது புத்தி தமோபிரதான் ஆகிவிட்டது. நீங்கள் இப்பொழுது மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் இதற்காக ஒரு மருந்தை மாத்திரமே பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் உங்கள் பாவங்களை அழிப்பதற்காக இங்கே அமர்ந்திருப்பதால் மேலும் பாவம் செய்யக்கூடாது. இல்லையெனில் அது நூறு மடங்காகி விடும். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் நூறு மடங்கு தண்டனை பெற்று, அரிதாகவே உங்களால் மேலேற முடியும். முதல் இலக்க எதிரி காமமாகும். நீங்கள் ஐந்தாவது மாடியிலிருந்து வீழ்ந்தால் உங்கள் எலும்புகள் முற்றாக நொருங்கி விடும். நீங்கள் ஒருவேளை மரணிக்கவும் நேரிடலாம். நீங்கள் மேலிருந்து கீழே விழுகின்ற பொழுது முற்றாகவே நொருக்கப்படுகிறீர்கள். தந்தைக்கான உங்கள் சத்தியத்தை நீங்கள் மீறினால், அவலட்சணமாகி, அசுர உலகிற்குத் திரும்பிச் செல்கிறீர்கள். அதற்கு நீங்கள் இங்கே மரணித்துள்ளீர்கள் என்றே அர்த்தம். அவ்வாறான ஆத்மாவை ஒரு பிராமணர் என அழைக்க முடியாது, அவர் சூத்திரர் என்றே அழைக்கப்படுவார். பாபா அத்தகையதோர் இலகுவான வழியில் விளங்கப்படுத்துகின்றார். முதலில் நீங்கள் இந்தப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, கிருஷ்ணரினால் பேசப்பட்ட வாசகங்கள் இருந்திருந்தால் அவர் மற்றவர்களுக்கும் கற்பித்து, அவர்களையும் தன்னைப் போன்று ஆக்கியிருப்பார். எவ்வாறாயினும் கிருஷ்ணர் கடவுளாக இருக்க முடியாது. அவர் மறுபிறவி எடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே மறுபிறவியில் இருந்து விடுபட்டவர். நீங்கள் இராதையும் கிருஷ்ணரும் என்றோ இலக்ஷ்மியும் நாராயணனும் என்றோ அல்லது விஷ்ணு என்றோ கூறினாலும் அவை அனைத்தும் ஒன்றே. இலக்ஷ்மியும் நாராயணனுமே விஷ்ணுவினுடைய இரட்டை ரூபம், அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் அவர்கள் இராதையும் கிருஷ்ணரும் ஆவார்கள். பிரம்மாவின் இரகசியமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாவும் சரஸ்வதியுமே நாராயணனும் இலக்ஷ்மியும் ஆகுகின்றார்கள். அவர்கள் இப்பொழுது இடம்மாற்றம் செய்யப்படவுள்ளார்கள். இறுதியில் இவரது பெயர் பிரம்மா எனப்படுகின்றது. ஆனால் பிரம்மா எவ்வாறு இப்பொழுது முழுமையாகக் கலியுகத்தில் நிற்கின்றார் எனப் பாருங்கள். அவர் கிருஷ்ணராக அல்லது ஸ்ரீ நாராயணனாக ஆகுவதற்காக இங்கே தபஸ்யா செய்கின்றார். நீங்கள் விஷ்ணு என்று கூறும்பொழுது இருவருமே அதற்குள் அடங்குகின்றனர். சரஸ்வதி பிரம்மாவின் புத்திரியாவார். எவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. பிரம்மா நான்கு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளார், ஏனெனில் இது இல்லறப் பாதையாகும். துறவறப் பாதையில் உள்ளவர்களால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தாங்கள் புராதன இராஜயோகம் கற்பிப்பதாகக் கூறுவதால், அவர்கள் பல வெளிநாட்டவர்களைச் சிக்க வைத்துள்ளார்கள். எவ்வாறாயினும் சந்நியாசிகளால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. கடவுள் இப்பொழுது வந்துள்ளார். அவரது குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கடவுளின் சமூகத்தினர் ஆகியுள்ளீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர் அசரீரியானவர். அவர் பிரம்மாவின் மூலம் உங்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் அவரை “பாபா பாபா” என்று அழைக்கின்றீர்கள். பிரம்மா இடையிலுள்ள மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரே “பாக்கிய இரதம்”. பாபா இவர் மூலம் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்களும் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்குக் கற்பிக்கின்றார். இப்பொழுது இது அசுர சமுதாயமாகிய, இராவண இராச்சியமாகும். நீங்கள் இப்பொழுது கடவுளின் சமுதாயத்திற்கு உரியவர்கள், பின்னர் நீங்கள் தேவ சமுதாயத்திற்கு உரியவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது மேன்மையான சங்கமயுகத்தில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். சந்நியாசிகள் தங்களுடைய இல்லறங்களை விட்டுச் செல்கின்றார்கள். இங்கே தந்தை கூறுகின்றார்: கணவனும் மனைவியும் ஒன்றாக வீட்டில் இருக்கலாம். பெண் ஒரு பாம்பு என்றும் அவளை விட்டு நீங்குவதால் நீங்கள் விடுதலை ஆகுவீர்கள் எனவும் சிந்திக்காதீர்கள். நீங்கள் அப்படி ஓடி விடக்கூடாது. அவர்கள் அப்படி ஓடுவது எல்லைக்கு உட்பட்ட துறவாகும். நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள், ஆனால் நீங்கள் இவ் விகார உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். அவற்றைக் குறித்து வைப்பதுடன் முன்னெச்சரிக்கைகளையும் எடுங்கள். தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகக் குணங்களின் புகழ் உள்ளது. அதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். தந்தை அவ்வாறு ஆகுவதில்லை, ஆனால் அவர் உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். அரைக்கல்பத்தின் பின்னர், நீங்கள் கீழிறங்கி தமோபிரதான் ஆகுகின்றீர்கள். நான் தமோபிரதான் ஆகுவதில்லை, ஆனால் இவர் அவ்வாறு ஆகுகின்றார். இவர் 84 பிறவிகள் எடுத்துள்ளார். இவரும் இப்பொழுது சதோபிரதானாக வேண்டும்; இவரும் ஒரு முயற்சியாளரே. புதிய உலகமே சதோபிரதான் உலகம் எனக் கூறப்படுகின்றது. முதலில் அனைத்துமே சதோபிரதானாக இருந்து, பின்னர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றது. ஒரு சிறு குழந்தையும் மகாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவரிடம் எந்த விகாரமும் இருப்பதில்லை, அதனால் அவர் ஒரு மலர் என அழைக்கப்படுகின்றார். ஒரு சிறு குழந்தை சந்நியாசியிலும் மேன்மையானவர் எனக் கூறப்படுகின்றார். ஏனெனில் ஒரு சந்நியாசி ஏற்கனவே வாழ்க்கையை அனுபவித்துள்ளார். அவர்களுக்கு ஐந்து விகாரங்களின் அனுபவம் உள்ளது. ஒரு குழந்தை விகாரங்களை அறிய மாட்டார். இதனாலேயே உயிர்வாழும் மலர் போன்ற ஒரு குழந்தையைப் பார்க்கையில் சந்தோஷம் ஏற்படுகின்றது. நாங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இப் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அனைவரும் அமரத்துவ பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் மரண பூமியிலிருந்து இடம் மாற்றப்படுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள். நீங்கள் சகோதர, சகோதரிகளாக இருந்தீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளிடையே உள்ள உறவுமுறை என்ன? பிரஜாபிதா பிரம்மா நினைவு கூரப்படுகின்றார். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகும் வரை, எவ்வாறு உலகம் உருவாக்கப்பட முடியும்? அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் ஆன்மீகக் குழந்தைகள். அந்த பிராமணர்கள் பௌதீக யாத்திரையில் உள்ளனர், ஆனால் நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கின்றீர்கள். அவர்கள் தூய்மை அற்றவர்கள், நீங்கள் தூய்மையானவர்கள். அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் தங்களைச் சகோதர, சகோதரிகளாக கருதுகின்ற பொழுது மாத்திரமே விகாரத்தில் ஈடுபட மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: எனது குழந்தையாகிய பின்னர் எந்தக் குற்றச் செயல்களும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகுவீர்கள். இந்திரசபை பற்றிய ஒரு கதை உள்ளது. ஒரு தேவதை ஒரு சூத்திரரை ஒன்றுகூடலுக்குள் அழைத்து வந்ததால் அங்கே துர்நாற்றம் வீசியது. தூய்மையற்ற நபரை அவர் ஏன் அங்கு அழைத்து வந்தார் என அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பின்னர் சபிக்கப்பட்டார். உண்மையில் எந்தவொரு தூய்மையற்ற நபருமே இந்த ஒன்றுகூடலுக்கு வரமுடியாது. தந்தை அறிந்து கொள்கின்றாரோ, இல்லையோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றார்கள்; அவர்கள் நூறு மடங்கு தண்டனைக்கு ஆளாகுகின்றார்கள். தூய்மை அற்றவர்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு விருந்தினர் அறையே அவர்களுக்குப் பொருத்தமானது. அவர்கள் தூய்மை ஆகுவதற்கான சத்தியத்தைச் செய்து, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்ற பொழுது மாத்திரமே அவர்களை இங்கே அனுமதிக்க முடியும். தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்குக் காலம் எடுக்கின்றது. தூய்மை ஆகுதல் என்ற ஒரு சத்தியம் மாத்திரமே உள்ளது. பரமாத்மாவின் புகழ்ச்சியானது தேவர்களின் புகழ்ச்சியிலிருந்து வேறுபட்டது எனவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும் விடுதலையளிப்பவரும் வழிகாட்டியும் ஆவார். அவர் எங்களை அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுவித்து திரும்பவும் அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இச்சக்கரம் அமைதி தாமம், சந்தோஷ பூமி, துன்ப பூமி என்பனவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது துன்ப பூமியை மறக்க வேண்டும். வரிசைக்கிரமமாகச் சித்தி அடைபவர்களால் மாத்திரமே அமைதி தாமத்திலிருந்து சந்தோஷ பூமிக்குச் செல்ல முடியும். அவர்கள் தொடர்ந்தும் கீழே வருவார்கள்; சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. பல ஆத்மாக்கள் உள்ளனர், ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தை வரிசைக்கிரமமாகக் கொண்டுள்ளார். ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகவே திரும்புவார்கள். அது சிவபாபாவின் வம்சாவளி விருட்சம் அல்லது உருத்திர மாலை என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகத் திரும்பிச் சென்று வரிசைக்கிரமமாகத் திரும்பி வருவார்கள். மற்றைய சமயங்களும் இந்த முறையினூடாகவே செல்கின்றன. நீங்கள் தினமும் பாடசாலையில் கற்காதுவிடின் முரளியைச் செவிமடுக்காது விட்டால், நீங்கள் சமூகம் அளிக்கவில்லை என்றே பதியப்படும் எனக் குழந்தைகளுக்குத் தினமும் விளங்கப்படுத்தப்படுகின்றது. உங்களுக்கு நிச்சயமாகக் கல்வி எனும் உயர்த்தி தேவை. நீங்கள் இறை பல்கலைக் கழகத்திற்குச் சமூகம் அளிக்காமல் இருக்கக் கூடாது. உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதி ஆக்குகின்ற இக்கல்வி அதிமேன்மையானது. அங்கே தானியங்கள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றன, அதனால் எவ்விதச் செலவும் இல்லை. தற்பொழுது அவை மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன. நூறு வருட காலத்தினுள் அவை அதிகம் விலை உயர்ந்ததாகி விட்டன. அங்கே உங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய எதுவுமே இருக்காது. அது சந்தோஷ பூமியாகும். நீங்கள் அங்கே செல்லத் தயார் ஆகுகின்றீர்கள். நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். செல்வந்தர்கள் தங்களைப் பிச்சைக்காரர்களாகக் கருதுவதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் முழுமையாகத் தூய்மை ஆகுவீர்கள் எனத் தந்தைக்குச் செய்த சத்தியத்தை மீறக்கூடாது. நீங்கள் பெருமளவு முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும். உங்களிடம் ஏதாவது அசுர குணங்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்கு உங்கள் அட்டவணையைச் சோதியுங்கள்.2. நீங்கள் இறை பல்கலைக் கழகத்திற்குச் சமூகமளிக்காது இருக்கக்கூடாது. சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற இம் மேன்மையான கல்வியை ஒருநாள் கூட தவற விடக்கூடாது. நிச்சயமாகத் தினமும் முரளியைச் செவிமடுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதன் மூலம் உங்கள் புண்ணியக் கணக்கில் சேமித்து கோடானு கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.புண்ணியாத்மாக்களாகிய உங்கள் எண்ணங்களில் நீங்கள் மிக விசேடமான சக்தியை கொண்டிருக்கிறீர்கள். இச்சக்தியினால் உங்களால் அசாத்தியமானதையும் சாத்தியமாக்க முடியும். உதாரணமாக, இக்காலத்தில் விசேட உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களால் பாலைவனத்திலும் தாவரங்களை வளர்க்க முடிகின்றது, மலைகளிலும் பூச்செடிகளை வளர்க்க முடிகின்றது. அவ்வாறாகவே உங்களுடைய மேன்மையான எண்ணங்களினால் நம்பிக்கை இழந்திருக்கின்ற ஆத்மாக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும். ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் பெறுமதியை அறிந்து, ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் நீங்கள் அந்த விழிப்புணர்வுடன் பயன்படுத்தினால் உங்கள் புண்ணியக் கணக்கில் நீங்கள் சேமிப்பீர்கள். உங்கள் எண்ணங்களின் சக்தி மிகவும் மேன்மையானது. அதாவது ஓர் எண்ணமே உங்களைக் கோடானு கோடீஸ்வரர் ஆக்கிவிடுகிறது.
சுலோகம்:
சகல உரிமைகளையும் உடையவர் என்ற நம்பிக்கையுடனும் போதையுடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள், உங்கள் கடின உழைப்பு முடிவடைந்து விடும்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கு, குறிப்பாக ஆயத்தமாக இருக்கின்ற சக்தியும் உள்ளடக்கிக் கொள்கின்ற சக்தியும் அத்தியாவசியமாகும். ஏதாவது கர்ம பந்தனத்திலுள்ள ஓர் ஆத்மாவினால் அவர் இருக்கும் இடத்திலிருந்து மட்டுமே செயற்பட முடியும். ஆனால் ஒரு கர்மாதீத் ஆத்மாவினால் அவர் எங்கிருந்தாலும் அவர் கர்மாதீத் என்பதால் தனது பாகத்தை எங்கும் நடிக்க முடியும். அத்தகைய ஆத்மாவின் வேகம் மிக விரைவாக இருப்பதால், அவரால் ஒரு விநாடியில் அவர் விரும்பிய இடத்தைச் சென்றடைய முடியும். எனவே இந்த அனுபவத்தை அதிகரியுங்கள்.