29.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரு சரீரத்தினுள் ஓர் ஆத்மா இருக்கும் பொழுதே, அதற்குப் பெறுமதி உள்ளது. எனினும், ஆத்மாவன்றி, சரீரமே அலங்கரிக்கப்படுகின்றது.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் கடமை என்ன? நீங்கள் செய்ய வேண்டிய சேவை என்ன?பதில்:
உங்களுக்குச் சமமானவர்களுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து அல்லது ஆணிலிருந்து, இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவதற்கான வழியைக் காட்டுவதே உங்கள் கடமையாகும். இப்பொழுது நீங்கள் பாரதத்திற்கு உண்மையான ஆன்மீகச் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். எனவே, உங்களுடைய புத்தியும், நடத்தையும் மிகவும் சீர்திருந்தியதாக இருக்க வேண்டும். எவர் மீதும் சிறிதளவேனும் பற்று இருக்கக்கூடாது.பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களுக்கு வழியைக் காட்டுங்கள்!ஓம் சாந்தி.
இரட்டை ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் “ஓம் சாந்தி” எனப் பதிலளிக்க வேண்டும். எங்கள் ஆதிதர்மம் அமைதியாகும். அமைதியைக் கண்டறிவதற்கு நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. மனிதர்கள் மன அமைதியைப் பெறுவதற்காகச் சாதுக்கள், புனிதர்களிடம் செல்கின்றார்கள். எனினும் மனமும், புத்தியும் ஆத்மாவின் அங்கங்கள் ஆகும். இந்த அங்கங்கள் சரீரத்திற்கு உரியவையாக இருப்பதைப் போன்று மனமும், புத்தியும், இக்கண்ணும் ஆத்மாவின் அங்கங்களாகும். இந்தக் கண் பௌதீகக் கண்கள் போன்றதல்ல. மக்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே, குருடர்களுக்கு வழி காட்டுங்கள்! ஒருவர் “பிரபு” அல்லது “ஈஸ்வரர்” எனக் கூறுவதனால் தந்தையின் அன்பின் அனுபவம் இருப்பதில்லை. குழந்தைகள் தங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். நீங்கள் இங்கே தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். அத்துடன் நீங்கள் கற்கின்றீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? பரமாத்மாவோ அல்லது பிரபுவோ உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் கூறமாட்டீர்கள். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றே நீங்கள் கூறுவீர்கள். “பாபா” என்ற வார்த்தை மிகவும் எளிமையானது, இந்த வார்த்தை பாப்தாதா என்பதாகும். ஓர் ஆத்மா, ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார். அவ்வாறே, அவர் பரமாத்மா ஆவார். அவர் கூறுகின்றார்: நானே பரமாத்மா, அதாவது, உங்கள் தந்தையாகிய கடவுள் ஆவேன். பின்னர் நாடகத்திற்கேற்ப, பரமாத்மாவாகிய எனக்கு சிவன் என்ற பெயர் கொடுக்கப்படுகின்றது. நாடகத்திலுள்ள அனைவருக்கும் ஒரு பெயர் இருக்க வேண்டும். சிவாலயமும் உள்ளது. ஒரு பெயருக்குப் பதிலாக மக்கள் பக்தி மார்க்கத்தில் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் பல ஆலயங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் அவர் ஒருவரே. சோமநாதர் ஆலயம் மிகப்பெரியது. அது அதிகளவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாளிகைகள் போன்றனவும் அதிகளவு அலங்கரிக்கப்படுகின்றன. ஆத்மாக்களை அலங்கரிக்க முடியாததைப் போன்றே, பரமாத்மாவையும் அலங்கரிக்க முடியாது. அவர் ஒரு புள்ளியாவார். அலங்காரங்கள் அனைத்தும் சரீரத்திற்கு மாத்திரமே ஆகும். தந்தை கூறுகின்றார்: நானும் அலங்கரிக்கப்படுவதில்லை, ஆத்மாக்களும் அலங்கரிக்கப்படுவதில்லை. ஆத்மாக்கள் புள்ளிகளே. அத்தகைய ஒரு சின்னஞ்சிறிய புள்ளியால் ஒரு பாகத்தை நடிக்க முடியாது. சின்னஞ்சிறிய ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும் பொழுது, அச்சரீரம் பல்வேறு வழிகளில் அலங்கரிக்கப்படுகின்றது. மனிதர்களுக்குப் பல பெயர்கள் உள்ளன. அரசர்களும், அரசிகளும் அதிகளவில் அலங்கரிக்கப்படுகின்றனர். ஆத்மாக்கள் எளிமையான, சிறு புள்ளிகள். ஆத்மாக்களே ஞானத்தைக் கிரகிக்கின்றனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: என்னிடம் ஞானம் உள்ளது. சரீரம் ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. ஆத்மாவாகிய நானே ஞானத்தைக் கொண்டுள்ளேன். உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுவதற்காக, நான் ஒரு சரீரத்தை எடுக்க வேண்டும். ஒரு சரீரமில்லாது உங்களால் அதனைச் செவிமடுக்க முடியாது. “அன்பான கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்” என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது. சரீரங்களிற்கா பாதை காட்டப்பட வேண்டும்? இல்லை. ஆத்மாக்களிற்கே பாதை காட்டப்பட வேண்டும். ஆத்மாக்களே அழைக்கின்றனர். சரீரத்திற்கு இரண்டு கண்கள் உள்ளன் அதற்கு மூன்று கண்கள் இருக்க முடியாது. நெற்றியில் இடப்படும் திலகத்தினால் மூன்றாவது கண் குறிக்கப்படுகின்றது. சிலர் புள்ளி இடுகின்றார்கள். ஏனையோர் கோடு கீறுகின்றார்கள். புள்ளி ஆத்மாவை அடையாளப்படுத்துகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். முன்னர் ஆத்மாக்களாகிய உங்கள் எவரிடமும் மூன்றாவது ஞானக் கண் இருக்கவில்லை. மனிதர்கள் எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இதனாலேயே அவர்களிடம் ஞானக்கண் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அனைவரிடமும் பௌதீகக் கண்கள் உள்ள பொழுதிலும், முழு உலகிலுமுள்ள எவரிடமும் மூன்றாவது கண் இல்லை. நீங்களே அதிமேன்மையான பிராமண குலத்தவர்கள். பக்தி மார்க்கத்திற்கும், இந்த ஞான மார்க்கத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் அறிந்து கொள்வதால், நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். ஐ.சி.எஸ். (இந்தியன் சிவில் சேவை) இற்குக் கற்பவர்கள் மிக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். எனினும், இங்கே கற்பதன் மூலம், நீங்கள் ஒரு எம்.பி. (பாராளுமன்ற உறுப்பினர்) ஆகிவிட முடியாது. அங்கே, எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றார்கள். அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். வேறெவராலும் கூற முடியாது: நான் ஆத்மாக்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றேன். அவர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். தந்தையே வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குவதற்குக் கற்பிக்கின்றார். அனைவரும் சரீர உணர்வு உடையவர்களே. மனிதர்கள் தங்கள் சரீரத்தையிட்டு அதிகளவு பெருமை கொள்கின்றார்கள். இங்கு, தந்தை ஆத்மாக்களையே பார்க்கின்றார். சரீரங்கள் அழியக்கூடியன, அவற்றிற்கு ஒரு சதப் பெறுமதியும் இல்லை! குறைந்தபட்சம், மிருகங்களின் தோலை விற்கவேனும் முடியும். மனிதர்களின் சரீரங்கள் எவ்விதப் பயனுமற்றவை. தந்தை இப்பொழுது வந்து எங்களைப் பவுண்ட் பெறுமதி மிக்கவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆதலால் உங்களுக்கு அந்தப் போதை இருக்க வேண்டும். எனினும் உங்கள் போதை, நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக நிலைத்திருக்கின்றது. மக்கள் செல்வத்தின் போதையையும் கொண்டுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள்; நீங்கள் பெரியதொரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். நீங்கள் பல வழிகளில் புகழப்படுகின்றீர்கள். நீங்கள் பூந்தோட்டத்தை உருவாக்குகின்றீர்கள். சத்தியயுகம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகின்றது. அந்த மரக்கன்று எப்பொழுது நாட்டப்படுகின்றது என எவருக்கும் தெரியாது. தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ பூந்தோட்டத்தின் அதிபதியே, வாருங்கள்! அவரைப் பூந்தோட்டக்காரர் என அழைக்க முடியாது. நிலையங்களைப் பராமரிக்கின்ற குழந்தைகளாகிய நீங்களே தோட்டக்காரர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். பல்வேறு தோட்டக்காரர்கள் உள்ளனர். ஒரேயொரு பூந்தோட்டத்தின் அதிபதியே உள்ளார். முகலாய தோட்டத்தின் தோட்டக்காரர் மிக உயர்ந்த சம்பளத்தைப் பெற வேண்டும். அனைவரும் பார்வையிடுவதற்காக அங்கு செல்லும் வகையில், அத்தகைய அழகான தோட்டங்களை அவர் உருவாக்கி உள்ளார். முகலாயர்களுக்கு அத்தகைய விடயங்களில் பெரும் விருப்பம் இருந்தது. ஷாஜகானின் மனைவி இறந்த பொழுது, அவர் தாஜ்மகாலை அவளின் ஞாபகார்த்தமாகக் கட்டினார். அவர்களின் பெயர்கள் இன்னமும் நினைவுகூரப்படுகின்றன. அவர்கள் அத்தகைய அழகான ஞாபகார்த்தங்களை உருவாக்கி உள்ளார்கள். எனவே மனிதர்கள் பெருமளவில் புகழப்படுகிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். மனிதர்கள் மனிதர்களே. பல மனிதர்கள் யுத்தத்தில் மரணிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன செய்யப்படுகின்றது? சரீரங்கள் எரிக்கப்படுவதற்காக, அனைத்தின் மீதும் பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றப்படுகின்றன. சில அப்படியே கிடக்கின்றன. அவை புதைக்கப்படுவதில்லை. எவ்வித மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நாராயணன் ஆகுவதற்கான போதை இருக்க வேண்டும். இதுவே உலகின் அதிபதி ஆகுகின்ற போதையாகும். இதுவே சத்திய நாராயணனின் கதையும் ஆகும். ஆகவே நீங்கள் நிச்சயமாக நாராயணன் ஆகுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெறுகின்றீர்கள். அதனைத் தந்தையே உங்களுக்குக் கொடுக்கின்றார். மூன்றாவது கண்ணின் கதையும் உள்ளது. தந்தை இங்கே அமர்ந்திருந்து இக்கதைகள் அனைத்தினதும் அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார். இக்கதைகளைக் கூறுபவர்களுக்கு முற்றிலுமே எதுவும் தெரியாது. அவர்கள் அமரத்துவக் கதையையும் கூறுகிறார்கள். அவர்கள் தொலைவிலுள்ள அமர்நாத்திற்குச் செல்கிறார்கள். தந்தை இங்கே வந்து உங்களுக்கு இக்கதையைக் கூறுகிறார். அவர் மேலிருந்தவாறு இக்கதையைக் கூறுவதில்லை. அவர் மேலே இருந்தவாறு பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறவில்லை. உருவாக்கப்பட்ட பக்திக் கதைகள் அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை. அது மீண்டும் இடம்பெறும். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்திற்கும், பக்திக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுகின்றார். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்! அவர்கள் பக்தி மார்க்கத்தில் அழைக்கின்றார்கள். தந்தை வந்து இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றார். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது பற்றித் தெரியாது. இந்த ஞானத்தின் கண்ணான மூன்றாவது ஞானக்கண் இல்லாத ஒருவர், ஒற்றைக் கண்ணுடையவர் என்றோ அல்லது அரைக் குருடர் என்றோ அழைக்கப்படுகிறார். மக்களின் கண்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவை. சிலரின் கண்கள் மிகவும் அழகானவை. அவற்றின் அழகுக்காக அவர்களுக்குப் பரிசும் வழங்கப்படுகின்றது. அவர்கள் ‘மிஸ். இந்தியா’ என்றோ, அல்லது ‘மிஸ் இன்னார்’ என்றோ அழைக்கப்படுகின்றார்கள். எவ்வாறிருந்த குழந்தைகளாகிய உங்களைத் தந்தை இப்பொழுது என்னவாக்கி உள்ளார் எனப் பாருங்கள். அங்கே இயற்கை அழகு உள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் ஏன் அதிகளவு புகழப்படுகின்றார்? ஏனென்றால், அவர் அனைவரையும் விட மிகவும் அழகானவர் ஆகுகின்றார் என்பதால் ஆகும். அவர் முதலாம் இலக்க கர்மாதீத ஸ்திதியைக் கோருகிறார். இதனாலேயே அவருடைய புகழ் முதலாம் இலக்கத்தில் உள்ளது. தந்தை இங்கே அமர்ந்திருந்து, இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை மீண்டும், மீண்டும் கூறுகின்றார்: குழந்தைகளே, “மன்மனாபவ”! ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள்! குழந்தைகளாகிய உங்களுக்கு இடையேயும், இது வரிசைக்கிரமம் ஆகும். உதாரணமாக, ஒரு தந்தைக்கு ஐந்து குழந்தைகள் இருக்கும் பொழுது ஒரு குழந்தை மிக விவேகியாக இருந்தால், அவரே முதலாம் இலக்கத்தைக் கொண்டிருப்பார். அவர்கள் ஒரு மாலையின் மணிகளைப் போன்றிருப்பார்கள். அவர் கூறுவார்: இவர் இரண்டாம் இலக்கத்தவர், இவர் மூன்றாம் இலக்கத்தவர். அவர்கள் அனைவரும் என்றுமே ஒரேமாதிரியாக இருக்க முடியாது. அவர்களிடம் அவர்களின் தந்தை வைத்திருக்கும் அன்பும் வரிசைக்கிரமம் ஆகவே இருக்கும். அது எல்லைக்கு உட்பட்ட விடயம். இங்கு இது ஓர் எல்லையற்ற விடயம். இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ள குழந்தைகளின் நடத்தையும், புத்தியும் மிகவும் சீர்திருந்தியவையாக இருக்கும். இராஜ மலர் உள்ளது. அதேபோன்று இந்த பிரம்மாவும், சரஸ்வதியும் இராஜா, இராணி மலர்கள் ஆவார்கள். அவர்கள் இந்த ஞானம், யோகம் ஆகிய இரண்டிலும் திறமைசாலிகள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். பிரதானமான எட்டுப்பேரும், எட்டு இரத்தினங்கள் ஆகுகின்றார்கள். எல்லாவற்றிற்கும் முதலில், குஞ்சமான மலர் உள்ளார். அதன்பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும், சரஸ்வதியும் உள்ளனர். மக்கள் மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். உண்மையில் நீங்கள் பூஜிக்கப்படுவதில்லை; நீங்கள் நினைவு கூரப்படுகிறீர்கள். உங்களுக்கு மலர்கள் அர்ப்பணிக்கப்படக் கூடாது. சரீரங்கள் தூய்மையாக இருக்கும் பொழுதே, மலர்கள் அர்ப்பணிக்கப்பட முடியும். இங்கு, எவரது சரீரமும் தூய்மையாக இருப்பதில்லை. அனைவரும் விகாரம் எனும் நஞ்சின் மூலமே பிறப்பு எடுக்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் முற்றிலும் விகாரமற்றவர்கள் எனப்படுகிறார்கள். அங்கும் குழந்தைகள் பிறப்பார்கள்; குழந்தைகள் குழாய்கள் மூலம் பிறப்பெடுப்பார்கள் என்றில்லை. இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இங்கே குழந்தைகளாகிய நீங்கள் ஏழு நாட்களுக்குப் பத்தியில் அமர்த்தப்படுகின்றீர்கள். சூளையில் சில செங்கற்கள் மிக உறுதியானவையாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏனையவை பலவீனமாகவே உள்ளன. சூளையின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. சூளையில் உள்ள செங்கற்கள் எவ்வாறு சமயநூல்களில் குறிப்பிடப்பட முடியும்? பின்னர் பூனைக் குட்டிகளின் கதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூனையைப் பற்றிக் குறிப்பிடுகின்ற குலேபகாவலியின் கதையும் உள்ளது. பூனை விளக்கை அணைக்கின்றது. அதேபோன்றே உங்களுக்கும் நிகழ்கின்றது. பூனையாகிய மாயை தடைகளை விளைவிக்கிறாள். அவள் உங்கள் ஸ்திதியை விழச் செய்கிறாள். சரீர உணர்வே முதலாவது விகாரமாகும். பின்னர் ஏனைய விகாரங்கள் வருகின்றன. பெருமளவு பற்றும் உள்ளது. ஒரு புதல்வி கூறுவார்: நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்காக ஆன்மீகச் சேவை செய்வேன். எனினும் தங்கள் பற்றினால் பெற்றோர் கூறுவார்கள்: நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். பற்று அதிகளவில் உள்ளது. நீங்கள் பற்று வைத்திருக்கின்ற பூனை ஆகக்கூடாது. தந்தை வந்து உங்களை ஒரு சாதாரண மனிதரிலிருந்து தேவராக, அதாவது ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். இதுவே உங்கள் இலக்கும், குறிக்கோளும் ஆகும். உங்களுக்குச் சமமானவர்களுக்கும், பாரதத்திற்கும் சேவை செய்வதே உங்கள் கடமை. நீங்கள் எவ்வாறாக இருந்தீர்கள், இப்பொழுது எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது மீண்டும் ஒருமுறை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. விநாசம் இடம்பெறுகின்ற விதமும் நாடகத்திலே உருவாக்கப்பட்டுள்ளது, முன்பும் ஏவுகணைகளுடனான யுத்தம் இடம்பெற்றது. உங்கள் முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து முடிந்து, நீங்கள் அனைவரும் மலர்கள் ஆகியதும், விநாசம் இடம்பெறும். ஒருவர் இராஜ மலராகவும், ஏனையோர் ரோஜாக்களும், மல்லிகை மலர்களும் ஆவார்கள். நீங்கள் எருக்கலம்பூவா அல்லது வேறு ஏதாவது மலரா என நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். பலர் எந்த விதமான ஞானத்தையும் கிரகிக்க முடியாதவர்களாக உள்ளனர். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள்: அவர்கள் முழுமையாக உயர்ந்தவர்களாக இருப்பதில் இருந்து முற்றிலும் தாழ்ந்தவர்கள் ஆகுவார்கள். இராச்சியம் இங்கே உருவாக்கப்படுகிறது. சமயநூல்களில் பாண்டவர்கள் உருகி விடுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்ன நடந்தது என எதுவுமே குறிப்பிடவில்லை. பல கதைகள் எழுதப்பட்ட பொழுதிலும் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்திகள் மிகவும் சுத்தம் ஆகுகின்றன. பாபா தொடர்ந்தும் உங்களுக்குப் பல்வேறு வழிகளில் விளங்கப்படுத்துகின்றார். அது மிக இலகுவானது! தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்கள் இரண்டுமே தூய்மை அற்றுள்ளன. இப்பொழுது நீங்கள் தூய்மையாக வேண்டும். ஓர் ஆத்மா தூய்மையாகும் பொழுது, சரீரமும் தூய்மை ஆகுகின்றது. நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: சில குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தந்தையை நினைவு செய்ய மறந்து விடுகிறார்கள். பாபா தனது சொந்த அனுபவத்தைக் கூறுகின்றார்: நான் உணவு உண்ணும் பொழுது, சிவபாபா எனக்கு உணவூட்டுவதாக நினைவு செய்கிறேன். பின்னர் மறந்துவிடுவேன், பின்னர் சடுதியாக மீண்டும் நினைவு செய்கிறேன். நீங்களும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். சிலர் பந்தனங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். ஆனால் பின்னர் அவர்கள் சிக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுக்கும் தந்தையைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கண்டடைந்து உள்ளீர்கள். அவர்கள் இதனை மூன்றாவது கண்ணைப் பெறும் கதையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் நாஸ்திகர்களில் இருந்து ஆஸ்திகர்கள் ஆகுகிறீர்கள். தந்தை ஒரு புள்ளி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஞானக்கடல். அவர் பெயருக்கும், வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என மக்கள் கூறுகின்றார்கள். ஆம், ஆனால் அவர் ஞானக்கடலாக இருப்பதனால், அவர் நிச்சயமாக இந்த ஞானத்தைப் பேசும் ஒருவராகவே இருக்க வேண்டும். அவருடைய உருவமும் நீள்கோள வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே அவர் எவ்வாறு பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்க முடியும்? அவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்திகளில் மிக நன்றாக இருக்க வேண்டும். கடவுள் ஞானக்கடல் எனக் கூறப்பட்டுள்ளது. முழுக் காடுகளுமே எழுதுகோல்கள் ஆக்கப்பட்டு, கடல் மையாக ஆக்கப்பட்டாலும் இந்த ஞானத்திற்கு எல்லையே இருக்காது. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது நீங்கள் தந்தையினால் பவுண்ட் பெறுமதியானவர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகப்போகின்றீர்கள். எனவே, நாராயணன் போன்று ஆகுவதற்கான போதையைப் பேணுங்கள். பந்தனங்களில் இருந்து விடுபட்டுச் சேவை செய்யுங்கள். எந்தப் பந்தனத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.2. இந்த ஞானத்திலும் யோகத்திலும் திறமைசாலிகளாகி, தாயையும், தந்தையையும் போன்று இராஜ மலர்கள் ஆகுங்கள். அத்துடன் உங்களுக்குச் சமமானவர்களுக்குச் சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் ஆத்மாக்கள் எல்லோருக்கும் சேவை செய்வதற்குப் பயன்படுத்துவதன் மூலம் ஒத்துழைப்பவராகி, அதனால் இலகு யோகி ஆகுவீர்களாக.இலகு யோகி ஆகுவதற்கான வழிமுறை, உங்களை ஒரு சேவையாளராகக் கருதியவண்ணம் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் அனைத்தாலும் சேவை செய்வதுடன் எல்லாவற்றையும் சேவைக்காகப் பயன்படுத்துவதே ஆகும். இந்த பிராமண வாழ்க்கையில் மேன்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதற்கெனத் தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்றுள்ள சக்திகள், நற்குணங்கள், இந்த ஞானம், காலம் என்ற பொக்கிஷங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தையும் சேவை செய்வதற்காகப் பயன்படுத்துங்கள். அதாவது, ஒத்துழைப்பவர் ஆகுங்கள். நீங்கள் ஓர் இலகு யோகி ஆகுவீர்கள். எவ்வாறாயினும், நிறைந்திருப்பவர்களால் மட்டுமே ஒத்துழைக்க முடியும். எனவே, ஒத்துழைப்பவர் என்றால், மகாதானி ஆகுதல் என்று அர்த்தம்.
சுலோகம்:
எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் ஆகுங்கள். அப்போது, கவர்கின்ற சம்ஸ்காரங்கள் அனைத்தும் இலகுவாக முடிவடைந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
எப்படி நீங்கள் உங்களின் நாளாந்த நேர அட்டவணையின்படி பௌதீகமான வேலைகளைச் செய்வதற்கு உங்களின் நிகழ்ச்சிகளைத் திட்டம் இடுகிறீர்களோ, அவ்வாறே, உங்களின் மனதின் சக்திவாய்ந்த ஸ்திதிக்கும் ஒரு நிகழ்ச்சியை உருவாக்குங்கள். அப்போது உங்களால் எண்ணங்களின் சக்தியைச் சேமிக்க முடியும். எந்தளவிற்கு நீங்கள் உங்களின் மனதைச் சக்திவாய்ந்த எண்ணங்களால் மும்முரமாக வைத்திருக்கிறீர்களோ, அதற்கேற்ப, உங்களின் மனதிற்குக் குழப்பம் அடைவதற்கான நேரம் இருக்காது. உங்களின் மனம் சதா நிலையாக இருக்கும்போது, அதாவது, அது ஒருமுகப்பட்டு இருக்கும்போது, நல்ல அதிர்வலைகள் இயல்பாகவே பரவும். அத்துடன் சேவையும் இடம்பெறும்.