29.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்கள் சொந்தப் பாதுகாப்புக்காக விகாரங்களாகிய மாயையின் பிடிகளிலிருந்து எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஒருபொழுதும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகாதீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் புண்ணியாத்மாக்கள் ஆகும் வகையில் தந்தை கொடுக்கும் பிரதான கற்பித்தல்கள் எவை?

பதில்:
பாபா கூறுகிறார்: குழந்தைகளே புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்கு: 1) சதா தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நினைவு யாத்திரையையிட்டு ஒருபொழுதும் கவனயீனமானவர் ஆகாதீர்கள். 2) ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகி கொடிய எதிரியாகிய காமத்தை வெற்றி கொள்வதற்கு முழு முயற்சி செய்யுங்கள். இதுவே ஒரு புண்ணியாத்மா ஆகி இத்துன்ப தாமத்தை நீங்கி சந்தோஷ தாமம் செல்வதற்கான நேரம் ஆகும்.

ஓம் சாந்தி.
தந்தையே குழந்தைகளாகிய உங்களிடம் தினமும் வினவுபவர் ஆவார். சிவபாபாவுக்குச் சிறிய குழந்தைகள் உள்ளார்கள் என நீங்கள் கூற மாட்டீர்கள். ஆத்மாக்கள் அநாதியாக இருக்கிறார்கள். தந்தையும் அநாதியாக இருக்கிறார். இவ்வேளையில் மாத்திரமே பாப், தாதா இருவரும் இருக்கும் பொழுது குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. பராமரிக்கப்பட வேண்டிய பல குழந்தைகள் உள்ளீர்கள். அவர் ஒவ்வொருவரின் கணக்கையும் வைத்திருக்க வேண்டும். ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தையும் இப்பிராமண குலத்தில் ஒருவராகி இருப்பின் நன்றாக இருக்கும் என அக்கறைப்பட்டு உணர்வதைப் போன்றே எனது குழந்தைகள் தூய்மையாகித் தூய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என நானும் உணர்கிறேன். நான் எனது குழந்தைகள் மாயையின் பழைய சாக்கடையினுள் அடித்துத் தள்ளப்படுவதை விரும்பவில்லை. எல்லையற்ற தந்தை தனது குழந்தைகளைப் பற்றி அக்கறைப்படுகிறார். பல்வேறு நிலையங்கள் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக எக்குழந்தைகளை எங்கே அனுப்ப வேண்டும் என்பதை அவர் அறிவார். இந்நாட்களில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் சிரமமாகும். உலகில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. சுவர்க்கத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கே எவரும் பாதுகாப்பாக இல்லை. எங்கோ ஓரிடத்தில் அவர்கள் விகாரங்களாகிய மாயையின் பிடிகளினுள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு இக்கற்பித்தல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இங்கேயே உங்களுக்குச் சத்தியத்தின் சகவாசம் உள்ளது. நீங்கள் இத்துன்ப தாமத்தை நீக்கி விட்டு சந்தோஷ தாமத்துக்குச் செல்ல வேண்டும். துன்ப தாமம் என்றால் என்ன எனவும் சந்தோஷ தாமம் என்றால் என்ன எனவும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவ்வேளையில் இது உண்மையிலேயே துன்ப தாமமாக உள்ளது. இங்கு நாங்கள் பெருமளவுக்குப் பாவங்களைச் செய்துள்ளோம். ஆனால் அங்கு நாங்கள் இருக்கும் பொழுது நாங்கள் புண்ணியாத்மாக்களாக இருப்போம். நாங்கள் இப்பொழுது புண்ணியாத்மாக்கள் ஆக வேண்டும். உங்கள் 84 பிறவிகளின் வரலாற்றையும் புவியியலையும் இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். 84 பிறவிகளின் வரலாற்றையும் புவியியலையும் உலகில் உள்ள எவரும் அறியார். தந்தை இப்பொழுது வந்து உங்கள் சுயசரிதையை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால் நீங்கள் முழுமையான புண்ணியாத்மாக்களாக ஆகவேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இதில் கவனக் குறைவாக இருப்பதாலேயே நீங்கள் பெருமளவுக்கு ஏமாற்றப்படுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: இவ்வேளையில் கவனக் குறைவாக இருப்பது நல்லதல்ல. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். அதிலும் பாபா கூறுகின்ற பிரதான விடயம்: முதலில் நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இரண்டாவதாக கொடிய எதிரியாகிய காமத்தை வெற்றி கொள்ளுங்கள். அனைவரும் தந்தையை அழைக்கிறார்கள். ஏனெனில் அவரிடமிருந்தே ஆத்மாக்கள் தங்கள் ஆஸ்தியாகிய அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகிறார்கள். முன்னர் நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாக இருந்த பொழுது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்களாக ஆக்கப்பட்டு வருகிறீர்கள். புதியவர்களுக்கு முதலில் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட தந்தையரைப் பற்றியும் இரண்டாவதாக எல்லையற்ற தந்தையைப் பற்றியும் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். எல்லையற்ற தந்தையிடம் இருந்து நீங்கள் உங்கள் பாக்கியமாக சுவர்க்கத்தைப் பெறுகிறீர்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையிடம் இருந்து உங்கள் பாக்கியமாக நரகத்தைப் பெறுகிறீர்கள். ஒரு குழந்தை வளரும் பொழுது அவருக்குச் சொத்துக்கான ஓர் உரிமை உள்ளது. அவர் புரிந்துணர்வை விருத்தி செய்யும் பொழுது அவர் படிப்படியாக மாயையின் செல்வாக்குக்கு உட்படுகிறார். இச்சம்பிரதாயங்கள் அனைத்தும் விகார உலகாகிய இராவண இராச்சியத்துக்கு உரியதாகும். இப்பொழுது இவ்வுலகம் மாறவுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. கீதையில் மாத்திரம் விநாசம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்தச் சமயநூலிலும் மகா யுத்தமாகிய மகாபாரத யுத்தம் பற்றிய குறிப்பு இல்லை. இதுவே கீதையின் அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். கீதையின் யுகம் என்றால் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகும். கீதையே தேவ தர்மத்தின் சமயநூல் ஆகும். ஆகவே இந்தக் கீதையின் யுகத்தில் தான் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. மனிதர்கள் மாற வேண்டும். அவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். தெய்வீகக் குணங்களுடைய மனிதர்களே நிச்சயமாகப் புதிய உலகத்துக்குத் தேவைப்படுகிறார்கள். இவ்விடயங்களை உலகில் எவரும் அறியார். அவர்கள் கல்பத்தின் கால எல்லையை மிகவும் நீண்டதாக்கி விட்டார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உண்மையிலேயே பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரை ஒருபொழுதும் தந்தை, ஆசிரியர் அல்லது குரு என அழைக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் ஆசிரியராக இருந்திருப்பின் அவர் யாரிடமிருந்து கற்றார்? அவரை ஞானக்கடல் என அழைக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முக்கியஸ்தர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஒன்றுகூடி எவ்வாறு சேவையை விரிவாக்க முடியும் எனக் கலந்துரையாடுங்கள். எவ்வாறு சேவையைத் துரிதமாக்க முடியும்? அப்போது தங்களால் அதிகளவு குழப்பங்களுக்கு உள்ளான பிரம்மாகுமாரிகளே உண்மையிலே சரியானவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். உலகின் மிகுதிப் பேர்கள் போலியானவர்கள். இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் சத்தியப் படகை ஆட்டுகிறார்கள். புயல்கள் வரவே செய்கின்றன இல்லையா? நீங்களே அக்கரை செல்லும் படகுகள் ஆவீர்கள். நீங்கள் இம்மாயையின் உலகிலிருந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும் எனப் புரிந்து கொள்கிறீர்கள். சரீர உணர்வே முதல் புயல் ஆகும். அதுவே அனைத்திலும் கொடிய விகாரமாகும். அவ்விகாரமே அனைவரையும் தூய்மை அற்றவர்கள் ஆக்கியுள்ளது. அதனாலேயே பாபா கூறுகிறார்: காமமே கொடிய எதிரியாகும். அது ஒரு விசைமிக்க புயல் ஆகும். இருப்பினும் சிலர் அதை வென்றுள்ளார்கள். தங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வசிக்கும் ஏனையோர் அதிலிருந்து தங்களைப் பாதுகாக்க இன்னமும் முயற்சிக்கிறார்கள். இது குமார்களுக்கும் குமாரிகளுக்கும் மிகவும் இலகுவானது. இதனாலேயே “கன்னையா” (குமாரிகளின் பிரபு) என்னும் பெயர் நினைவு கூரப்படுகிறது. நிச்சயமாகச் சிவபாபாவுக்குப் பற்பல குமாரிகள் உரியவர்களாக இருக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சரீரதாரியாக இருந்தார். அவர் பற்பல குமாரிகளைக் கொண்டிருந்திருக்க முடியாது. இக்கல்வியின் மூலம் நீங்கள் இப்பொழுது அரசிகள் ஆக்கப்பட்டு வருகிறீர்கள். தூய்மையே இதற்குத் தேவையான பிரதான விடயம் ஆகும். உங்களையே பார்த்து உங்கள் நினைவு அட்டவணை சிறந்ததா எனச் சோதியுங்கள். பாபா குழந்தைகளின் அட்டவணைகளைப் பெறுகிறார். சிலர் இரண்டு முதல் மூன்று மணித்தியாலங்கள் வரையான நினைவையும் சிலர் ஐந்து மணித்தியால நினைவையும் கொண்டிருக்கிறார்கள். சிலர் முற்றாகவே அதை எழுதுவதில்லை. அவர்கள் அவரை மிகச் சொற்பளவே நினைவு செய்கிறார்கள். அனைவருடைய யாத்திரையும் ஒன்றுபோல இருக்க முடியாது. மேலும் பல குழந்தைகள் வரவுள்ளார்கள். எந்தளவுக்கு உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோர இயலும் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு உங்களிடம் அதன் சந்தோஷம் உள்ளது? நீங்கள் இப்பொழுது அதிமேன்மையான தந்தைக்கு உரியவர்கள் ஆதலால் நீங்கள் ஏன் சதா சந்தோஷமாக இருக்கக்கூடாது? நாடகத்துக்கேற்ப நீங்கள் பெருமளவு பக்தி செய்துள்ளீர்கள். பக்தர்களுக்கு அவர்களுடைய பலனைக் கொடுப்பதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். இராவண இராச்சியத்தில் தொடர்ந்தும் பாவச்செயல்கள் செய்யப்படும். நீங்கள் சதோபிரதான் உலகத்துக்குச் செல்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். முழு முயற்சி செய்யாதவர்கள் சதோ ஸ்திதிக்குள் செல்வார்கள். அனைவரும் அந்தளவுக்கு இந்த ஞானத்தைப் பெறுவார்கள் என்பதில்லை. அவர்கள் எங்கிருப்பினும் அனைவரும் நிச்சயமாகச் செய்தியைப் பெற வேண்டும். இதனாலேயே நீங்கள் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல வேண்டும். இந்த இறை பணியகமும் வெளிநாடு செல்ல வேண்டும். இங்கு ஏனைய சமயத்தவர்களைத் தங்கள் சமயத்துக்கு மாற்ற வந்துள்ள பௌத்தர்களினதும் கிறிஸ்தவர்களினதும் பணியகங்கள் உள்ளன. நாங்கள் உண்மையிலேயே தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தோம் எனவும் நாங்கள் இப்பொழுது இந்து சமயத்துக்கு உரியவர்களாக இருக்கிறோம் எனவும் நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். பொதுவாக இந்து சமயத்துக்கு உரியவர்கள் உங்களிடம் வருவார்கள். அவர்களின் மத்தியிலும் சிவனை வழிபடுபவர்களும் தேவர்களை வழிபடுபவர்களும் வருவார்கள். அரசர்களுக்குச் சேவை செய்யுமாறு பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். பெரும்பாலும் அவர்கள் தேவர்களை வழிபடுபவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் ஆலயங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். தந்தையுடன் தொலைதூர தேசத்திலிருந்து இங்கு வந்திருப்பவர்களாக உங்களைக் கருதுங்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். நீங்களும் அதைச் செய்கிறீர்கள். அதை ஸ்தாபிப்பவர்கள் அதைப் பராமரிக்கவும் செய்வார்கள். தேவ இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கும் முழு உலகையும் சுவர்க்கம் ஆக்குவதற்கும் நீங்கள் இங்கு சிவபாபாவுடன் வந்துள்ளீர்கள் எனும் போதை உங்களுக்குள்ளே இருக்க வேண்டும். மக்கள் தொடர்ந்தும் இவ்வுலகில் என்ன செய்கிறார்கள் என ஒருவர் அதிசயிக்கிறார்! அவர்கள் எவ்வாறு வழிபடுகிறார்கள் எனப் பாருங்கள்! தேவியர்களின் நவராத்திரி விழாவின் பொழுது அவர்கள் தேவியர்களை வழிபடுகிறார்கள். இரவு உள்ளதால் பகலும் இருக்க வேண்டும். “நீங்கள் பார்த்த அற்புதம் என்ன?” என்னும் பாடல் உங்களிடம் உள்ளது. அவர்கள் களிமண் சிலைகளைச் செய்து அவற்றை அலங்கரித்து அவற்றை வழிபடுகிறார்கள். அவர்களின் இதயங்கள் அந்தச் சிலைகளில் அதிகளவு பற்று வைத்துள்ளதால் அவற்றை மூழ்கடிக்கும் பொழுது அவர்கள் அழுகிறார்கள். ஒரு நபர் இறக்கும் பொழுது அவர்கள் அந்தச் சரீரத்தை ஆற்றுக்கு எடுத்துச் சென்று கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டே அதை மூழ்கடிக்கிறார்கள். பலர் அங்கு செல்கிறார்கள். அந்த ஆறுகள் அநாதியாகவே இருக்கின்றன. அந்த ஆடல்கள் போன்றன யமுனை ஆற்றங்கரையில் இடம்பெறுவது வழக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே பெரிய மாளிகைகள் இருக்கும். நீங்கள் சென்று அங்கே அவற்றைக் கட்டுவீர்கள். ஒருவர் ஒரு முக்கியமான பரீட்சையில் சித்தி எய்தவுள்ள பொழுது தனது பரீட்சையில் சித்தியெய்திய பின்னர் எவ்வாறு அவர் ஒரு வீடு போன்றவற்றைக் கட்டுவார் என அவரது புத்தி திட்டம் தீட்டுகிறது. நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள் எனவும் நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டுக்குச் செல்லவுள்ளீர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்களும் அறிந்திருக்க வேண்டும். உங்கள் வீட்டை நினைவு செய்யும் பொழுது நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒருவர் தனது பயணத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது தான் பிறந்த வீட்டுக்கு இப்பொழுது செல்கிறார் என மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆத்மாக்களாகிய உங்களின் வீடு அசரீரி உலகமாகும். அதிகளவு சந்தோஷம் உள்ளது! முக்தி அடைவதற்காக மனிதர்கள் அதிகளவு பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும் எவராவது வீடு திரும்ப முடிகின்ற அத்தகையதொரு நாடகப் பாகத்தை எவரும் கொண்டிருக்கவில்லை. அரைக்கல்பத்துக்கு அவர்கள் நிச்சயமாகத் தங்கள் பாகங்களை நடிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் 84 பிறவிகள் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன. நாங்கள் இப்பொழுது வீடு திரும்பிப் பின்னர் எங்கள் இராச்சியத்துள் பிரவேசிப்போம். உங்கள் வீட்டையும் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். இங்கே அமர்ந்திருக்கும் பொழுது சிலர் தங்கள் தொழிற்சாலைகளை நினைவு செய்கிறார்கள். உதாரணமாக பிர்லாவைப் பாருங்கள்! அவரிடம் பல தொழிற்சாலைகள் உள்ளன. நாள் முழுவதும் அவர் அவை அனைத்தையும் பற்றியே அக்கறை கொண்டிருப்பார். நீங்கள் அவரிடம் பாபாவை நினைவுசெய்யுமாறு கூறியிருப்பின் அவருக்குப் பல்வேறு தடைகள் ஏற்பட்டிருக்கும். அவர் மீண்டும் மீண்டும் தனது வியாபாரத்தையே நினைவு செய்வார். இது தாய்மார்களுக்கு மிகவும் இலகுவானது, குமாரிகளுக்கு மேலும் அதிகம் இலகுவாக இருக்கும். மரணித்து வாழ்ந்து முழு உலகையும் மறந்து விடுங்கள்! நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிச் சிவபாபாவுக்கு உரியவராகும் பொழுது அது மரணித்து வாழ்தல் என அழைக்கப்படுகிறது. சரீரத்தையும் சரீர உறவுகள் அனைத்தையும் துறவுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிச் சிவபாபாவுக்கு உரியவர் ஆகுங்கள்! தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள், ஏனெனில் உங்கள் தலை மீது பெரும் பாவச்சுமை உள்ளது. மரணித்து வாழ்ந்து சிவபாபாவுக்கு உரியவர் ஆகும் விருப்பம் அனைவருக்கும் உள்ளது. சரீர உணர்வு இருக்கக்கூடாது. நாங்கள் சரீரமற்று வந்தோம், நாங்கள் சரீரமற்றே திரும்ப வேண்டும். நாங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள். ஆகவே நாங்கள் தந்தையைத் தவிர எவரையும் நினைவு செய்யக்கூடாது. அது விரைவில் நடைபெற வேண்டியிருப்பின் யுத்தமும் விரைவில் நடைபெறும். நாங்கள் சிவபாபாவுக்கு உரியவர்கள் ஆதலால் சிவபாபா எங்களுக்கு அதிகளவில் கூறுகிறார். நாங்கள் அந்த இடத்தில் வசிப்பவர்களே. இங்கு அதிகளவு துன்பம் உள்ளது. இது இப்பொழுது இறுதிப்பிறவி ஆகும். நீங்கள் சதோபிரதானாக இருந்த பொழுது வேறெவரும் இருக்கவில்லை எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். இவ்வேளையில் பணம் சிப்பிகளைப் போன்றதாகும். அது சிப்பிகளைப் போன்று பெறுமதி ஏதுமற்றதாகும். அவை அனைத்தும் தற்காலிகச் சந்தோஷத்துக்கு உரியதாகும். நீங்கள் கடந்த காலத்தில் பெருமளவுக்குத் தானம் அளித்து புண்ணியத்தைச் செய்தபொழுது நீங்கள் பெருமளவு செல்வத்தைப் பெற்று அதையும் தானம் அளித்தீர்கள் எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அது ஒரு பிறவிக்கு மாத்திரம் உரியதாக இருந்தது. இங்கு நீங்கள் பல பிறவிகளுக்குச் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். இங்கே ஒருவர் எவ்வளவுக்கு முக்கியமானவராக இருக்கிறாரோ அந்தளவுக்குத் துன்பம் இருக்கின்றது. பெருமளவுக்குச் செல்வம் உள்ளவர்கள் அதிகளவு சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் ஒருபொழுதும் இங்கு வந்து தங்க முடியாது. சாதாரணமான ஏழைகள் மாத்திரமே தங்களை அர்ப்பணிக்கிறார்கள். செல்வந்தர்கள் ஒருபொழுதும் அதைச் செய்வதில்லை. அவர்கள் சம்பாதிக்கும் பணம் தங்கள் குலம் தொடர்வதற்கான அவர்களுடைய பேரக் குழந்தைகளுக்கு உரியதாகும். அவர்களே அதே வீட்டில் பிறக்க மாட்டார்கள். பல தானங்களைச் செய்பவர்கள் அரசர்கள் ஆகுவதைப் போன்றே முன்னர் நல்ல செயல்களைச் செய்துள்ள பேரக் குழந்தைகளே வருவார்கள். எவ்வாறாயினும் அவர்கள் சதா ஆரோக்கியமானவர்களாக இருப்பதில்லை. ஆகவே அவர்கள் ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்தாலென்ன! இன்னமும் அவர்களுக்கு அழிவற்ற சந்தோஷம் இருப்பதில்லை. இங்கு ஒவ்வோர் அடியிலும் பல வகையான துன்பங்கள் உள்ளன. அங்கு இத்துன்பம்; அனைத்தும் அகற்றப்பட்டிருக்கும். மக்கள் தந்தையை அழைக்கிறார்கள்: “எங்கள் துன்பத்தை அகற்றுங்கள்!” உங்கள் துன்பம் அனைத்தும் அகலவுள்ளது என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர எவரிடமிருந்தும் உங்களால் இந்த ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தை முழு உலகிலிருந்தும் துன்பம் அனைத்தையும் அகற்றுகிறார். இவ்வேளையில் மிருகங்கள் கூட அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றன. இதுவே துன்ப உலகமாகும். துன்பம் தொடர்ந்தும் அதிகரிப்பதுடன் ஆத்மாக்களும் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகிறார்கள். நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறோம், ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். பாபா எங்களை அதிமேன்மையான மனிதர்களாக ஆக்குகிறார். இந்தளவையேனும் நினைவு செய்வதால் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். கடவுள் எங்களுக்குக் கற்பித்து எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். குறைந்தபட்சம் இந்தளவையேனும் நினைவு செய்யுங்கள்! அவருடைய கற்பித்தல்களைக் கற்பதால் அவருடைய குழந்தைகள் தேவர்களும் தேவியர்களுமாக ஆகவேண்டும். கடவுளே சந்தோஷத்தை அளிப்பவர் ஆவார். ஆகவே நீங்கள் எவ்வாறு துன்பத்தைப் பெறுகிறீர்கள்? தந்தை இங்கே அமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகிறார். ஏன் கடவுளின் குழந்தைகள் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள்? கடவுளே துன்பத்தை அகற்றுபவரும் சந்தோஷத்தை அளிப்பவரும் ஆவார். நிச்சயமாக மக்கள் துன்பத்தை அனுபவம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர்கள் இப்புகழைப் பாடுகிறார்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இதைப் பற்றி எச்சந்தேகமும் இருக்க முடியாது. பிரம்மா குமார்களும் குமாரிகளுமாகிய நீங்களே இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். நீங்கள் பொய்கள் கூறுவதில்லை. ஒருவருக்குச் சந்தேகங்கள் இருக்கும் பொழுது இது ஒரு கல்வி என அவருக்கு விளங்கப்படுத்துங்கள். விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது. நாங்களே சங்கமயுகத்தின் உச்சிக் குடுமிகளாகிய பிராமணர்கள் ஆவோம். இங்கு பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார். ஆகவே இங்கு நிச்சயமாகப் பிராமணர்களும் இருக்க வேண்டும். இதுவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும் நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும் இதிலேயே தடைகள் உள்ளன. நீங்கள் எந்தளவுக்கு பாபாவை நினைவு செய்கிறீர்கள் எனவும் எந்தளவுக்கு உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்கிறது எனவும் உங்கள் அட்டவணையைத் தொடர்ந்தும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக்குபவராகிய பூந்தோட்ட அதிபதியின் கையைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்னும் சந்தோஷம் உங்களுக்கு உள்ளுர இருக்க வேண்டும். நீங்கள் பிரம்ம பாபாவினூடாக சிவபாபாவுடன் கைகுலுக்குகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வீட்டையும் இராச்சியத்தையும் நினைவுசெய்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். இப்பொழுது உங்கள் பயணம் முடிவுக்கு வருகிறது என்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். நாங்கள் இப்பொழுது வீடு சென்று பின்னர் எங்கள் இராச்சியத்துக்குத் திரும்பிச் செல்லவுள்ளோம்.

2. பிரம்ம பாபாவினூடாக நீங்கள் சிவபாபாவுடன் கைகுலுக்குகிறீர்கள். அந்தப் பூந்தோட்ட அதிபதியே உங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குகிறார். இக்கல்வியின் மூலம் நீங்கள் சுவர்க்கத்தின் அரசிகள் ஆகுகிறீர்கள். இச்சந்தோஷத்தை உங்களினுள்ளே வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா வெற்றியாளராகி, மூன்று வெற்றிப் பதங்களைப் பெறுவீர்களாக.

வெற்றிமாலையில் ஓர் இலக்கத்தைப் பெறுவதற்கு எல்லாவற்றுக்கும் முதலில் உங்களின் மீது வெற்றி கொள்ளுங்கள். பின்னர் ஏனையவர்களை வெற்றி கொள்ளுங்கள். பின்னர் சடப்பொருளை வெற்றி கொள்ளுங்கள். இந்த மூன்று பதக்கங்களையும் நீங்கள் பெறும்போது உங்களால் வெற்றி மாலையில் ஒரு மணி ஆக முடியும். உங்களின் மீது வெற்றி கொள்வது என்றால் உங்களின் வீணான நோக்கங்களையும் சுபாவத்தையும் உங்களின் மேன்மையான நோக்கங்களாலும் நல்லாசிகளாலும் மாற்றுதல் என்று அர்த்தம். இந்த முறையில் தங்களை வெற்றி கொள்பவர்களால் மற்றவர்களையும் வெற்றி கொள்ள முடியும். சடப்பொருளை வெற்றி கொள்வது என்றால் சூழல், அதிர்வலைகள் மற்றும் பௌதீக சடப்பொருளால் வருகின்ற பிரச்சனைகளையும் வெற்றி கொள்ளுதல் என்று அர்த்தம்.

சுலோகம்:
தமது பௌதீக அங்கங்களை முற்றாக ஆள்பவர்களே உண்மையான இராஜயோகிகள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

இந்த ஞானத்துடன் கூடவே குழந்தைகளான உங்களுக்கு உண்மையான ஆன்மீக அன்பும் இருக்க வேண்டும். இந்த ஆன்மீக அன்பே உங்களை இறைவனுக்குச் சொந்தம் ஆக்கியது. ஒவ்வொரு குழந்தையும் இரட்டை அன்பைப் பெறுகிறார்கள்: முதலில் தந்தையிடம் இருந்து. இரண்டாவதாக தெய்வீகக் குடும்பத்திடம் இருந்து. அன்பின் அனுபவம் உங்களை உண்மையான விட்டில் பூச்சிகள் ஆக்கியுள்ளன. இந்த அன்பானது ஆத்மாக்களைக் கேட்பதற்கும் இறப்பதற்கும் தயார் ஆக்குகின்ற ஒரு காந்தம் போல் தொழிற்படும். சங்கமயுகத்தில் மரணித்து வாழ்கின்ற குழந்தைகளே சுவர்க்கத்திற்குப் போவார்கள்.