29.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தை ஏழைக் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுப்பதற்காகவே, இந்த எல்லையற்ற ஒன்றுகூடலுக்குள் வந்துள்ளார். அவர் தேவர்களின் ஒன்றுகூடலுக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:
நீங்கள் எந்தத் தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும்?பதில்:
நீங்கள் தந்தையின் மீது நம்பிக்கை வைத்து, மரணித்து வாழ ஆரம்பித்த தினத்தையே ஆகும். அந்தத் தினத்தை மிகவும் கோலாகலத்துடன் கொண்டாட வேண்டும். அந்தத் தினமே குழந்தைகளாகிய உங்களுடைய ஜனமாஸ்தமி(பிறந்தநாள்) ஆகும். நீங்கள் மரணித்து வாழ ஆரம்பித்த பிறந்ததினத்தைக் கொண்டாடினால், நீங்கள் பழைய உலகத்தில் இருந்து வெளியேறி விட்டீர்கள் என்பதையும், நீங்கள் இப்பொழுது பாபாவிற்கு உரியவர்கள் ஆகி விட்டீர்கள் என்பதையும், அதாவது, நீங்கள் ஆஸ்திக்கான உரிமையைக் கோரியுள்ளீர்கள் என்பதையும் உங்கள் புத்திகள் நினைவு செய்யும்.பாடல்:
விட்டில் பூச்சிகளின் மத்தியில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது....ஓம் சாந்தி.
பாரதக் குழந்தைகளாகிய நீங்கள் பல பாடல்கள், கவிகள், வேதங்கள், சமயநூல்கள், உபநிடதங்கள், தேவர்களின் புகழ் போன்றவற்றைச் செவிமடுத்திருக்கிறீர்கள். இவ்வுலகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்து சுழல்கிறது என்பதன் புரிந்துணர்வை இப்பொழுது நீங்கள் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கடந்த காலம் தெரியும். நீங்கள் இப்போதைய உலகத்தையும் காண்கிறீர்கள். இதை நீங்கள் நடைமுறைரீதியாக அனுபவம் செய்கிறீர்கள். இருப்பினும், இனி நடக்க இருப்பனவற்றை இன்னும் நீங்கள் நடைமுறைரீதியாக அனுபவம் செய்யவில்லை. நீங்கள் கடந்த காலத்தில் நடந்தவற்றையே அனுபவம் செய்திருக்கிறீர்கள். தந்தை இவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தையைத் தவிர வேறு எவராலுமே இவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. பல மனிதர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்குப் படைப்பவரையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. இது கலியுக இறுதி என்பது கூட மக்களுக்குத் தெரியாது. ஆம், நீங்கள் முன்னேறிச் செல்லும்போது அது அவர்களுக்குத் தெரிய வரும். அவர்கள் சாராம்சத்தைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களிடம் இந்த முழு ஞானமும் இருக்காது. இதனைக் கற்கின்ற மாணவர்களுக்கே இதைத் தெரிந்து கொள்ள முடியும். இது மனிதர்களில் இருந்து அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுவதற்கான கல்வியாகும். அதுவும் தூய்மையற்ற அரசர்கள் ஆகுவதற்கு அல்ல. ஆனால் தூய்மையற்ற அரசர்களால் பூஜிக்கப்படும் தெய்வீகமான அரசர்கள் ஆகுவதற்காகும். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இவை யாவும் தெரியும். கல்விமான்களுக்கும் பண்டிதர்களுக்கும் எதுவுமே தெரியாது. அவர்கள் ஜோதி என்றழைக்கும் கடவுளை அவர்களுக்கே தெரியாது. பாடகர்களுக்கும் தெரியாது. அவர்கள் புகழை மாத்திரமே பாடுகிறார்கள். கடவுள் நிச்சயமாக இவ்வுலக ஒன்றுகூடலுக்குள் வந்திருக்க வேண்டும். ஒன்றுகூடல் என்பது பலர் ஒன்று சேருகின்ற இடமாகும். அவர்கள் உண்டும், மதுபானம் அருந்தியும் கொண்டாடுகின்ற இடமே சந்தோஷ ஒன்றுகூடல் (வைபவம்) எனப்படுகிறது. இந்த ஒன்றுகூடலில் இருந்து அழியாத இந்த ஞான இரத்தினங்களின் பொக்கிஷத்தை இப்பொழுது நீங்கள் பெறுகிறீர்கள். அதாவது தந்தையிடம் இருந்து நீங்கள் வைகுந்த ஆட்சியைப் பெறுகிறீர்கள் என்றும் கூறலாம். இம் முழு ஒன்றுகூடலிலும் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தந்தையையும் அவர் ஒரு பரிசைக் கொடுப்பதற்கே வந்திருப்பதையும் அறிந்துள்ளீர்கள். தந்தை ஓர் ஒன்றுகூடலில் எதைத் தருவார்? ஒன்றுகூடலின்போது, மக்கள் ஒருவருக்கொருவர் எதைக் கொடுப்பார்கள்? இதில் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. தந்தை உங்களுக்கு அல்வாவை ஊட்டுகிறார். அவர்களோ அனைத்திலும் மலிவான கொண்டைக் கடலையையே ஊட்டுகிறார்கள். அல்வாவுக்கும் கொண்டைக் கடலைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது! அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டைக் கடலையையே ஊட்டுகிறார்கள். ஒருவர் வருமானத்தை சம்பாதிக்காதபோது பின்வருமாறு கூறப்படுகிறது: அவர் கொண்டைக் கடலையை மென்று கொண்டிருக்கிறார். சுவர்க்க ஆஸ்திக்கான ஆசீர்வாதத்தை எல்லையற்ற தந்தையே கொடுக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். சிவபாபா இந்த ஒன்றுகூடலுக்கு வருகிறார், அப்படித்தானே? சிவனுடைய பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், அவர் வரும்போது என்ன செய்கிறார் என்பது எவருக்குமே தெரியாது. அவர் தந்தை என்பதால் நிச்சயமாக அவர் உங்களைப் பராமரிப்பதுடன் உங்களுக்கு எதையாவது கொடுப்பார். உங்களின் தாயும் தந்தையும் வாழ்க்கையில் உங்களைப் பராமரிக்கிறார்கள். அந்தத் தாயும் தந்தையும் ஆனவர் வந்து உங்களைப் பராமரிக்கிறார், அதாவது, அவர் உங்களைத் தத்தெடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளே கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களுடைய 10 நாள் குழந்தை ஆவேன். அதாவது நான் பத்து நாட்களாக உங்களுக்கு உரியவராகி உள்ளேன். ஆகவே, நீங்கள் அவரால் தத்து எடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதால் சுவர்க்க ஆட்சி உரிமையை நீங்கள் கோரிக் கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழும்போதே ஒருவர் தத்தெடுக்கப்படுகிறார். அது குருட்டு நம்பிக்கையுடன் அல்ல. ஒரு தாயும் தந்தையும் தங்கள் குழந்தைகளைத் தத்துக் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை அவர்கள் பேரன்புடன் பேணிக் காப்பார்கள் என்பதால் அந்தப் பெற்றோருடன் தங்கள் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றே இவர்கள் உணர்கிறார்கள். லௌகீகத் தந்தைமாரின் குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வந்து எல்லையற்ற தந்தையால் தத்து எடுக்கப்பட்டிருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை உங்களை மிகுந்த ஆர்வத்துடன் தத்தெடுத்திருக்கிறார். குழந்தைகளும் எழுதுகிறார்கள்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன் ஆவேன். இதனை நீங்கள் தொலைவில் இருந்து கொண்டு கூற மாட்டீர்கள். ஒரு குழந்தை நடைமுறை ரீதியாகவே தத்தெடுக்கப்படுகிறார். ஆகையாலேயே ஒரு விழாவும் எடுக்கப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடப்படுவதைப் போலவே, நீங்களும் அவரது குழந்தைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் இப்போது உங்களுக்கு உரியவன் ஆவேன். ஆறு, ஏழு நாட்களின் பின்னர் பெயர் சூட்டு விழா இடம்பெற வேண்டும். ஆனால், இதனை எவருமே கொண்டாடுவதில்லை. நீங்கள் உங்கள் ஜனமாஸ்தமியை (பிறந்த தினத்தை) மிகவும் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். ஆனால் உங்களில் எவருமே இதனைக் கொண்டாடுவதில்லை. நீங்கள் ஒரு பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற அறிவு கூட அற்றவர்களாக இருக்கிறீர்கள். பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னரே அதனை நீங்கள் கொண்டாடுகிறீர்கள். எவ்வாறாயினும்;, ஆரம்பத்தில் நீங்கள் அதனைக் கொண்டாடாது விட்டால் 12 மாதங்களின் பின்னர் ஏன் கொண்டாடுகிறீர்கள்? ஒருவேளை அதற்கான ஞானமோ, நம்பிக்கையோ இல்லாதிருக்கலாம். நீங்கள் ஒருமுறை உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடி, உங்களின் நம்பிக்கையில் உறுதியாகி, பிறந்த நாள் கொண்டாடிய பின்னரும் நீங்கள் ஓடி விட்டால், நீங்கள் மரணித்து விட்டீர்கள் என்றே புரிந்து கொள்ளப்படும். சிலர் தங்கள் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஏழைகளால் வெல்லக்கட்டியையும் கொண்டைக் கடலையையும் தவிர பெரிதாக வேறு எதையும் பரிமாற முடியாது. குழந்தைகள் முற்றாகப் புரிந்து கொள்ளாததால், அவர்களுக்கு அந்தளவு சந்தோஷம் இல்லை. நீங்கள் உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் பொழுது இதனை உங்களால் உறுதியாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். ஆனால் உங்களுக்கு அந்தப் புத்தி இல்லை. இன்று புதிதாக வந்துள்ள குழந்தைகளுக்குத் தந்தை மீண்டும் ஒருமுறை விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின், உங்கள் பிறந்ததினத்தைக் கொண்டாடுங்கள். ‘இந்தத் தினத்திலேயே நான் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். எனவே இதுவே எனது ஜனமாஸ்தமி (பிறந்ததினம்) ஆகும்’. ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையினதும் உங்கள் ஆஸ்தியினதும் முழுமையான நினைவில் இருக்க வேண்டும். தாங்கள் இன்னார் இன்னாரின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகள் ஒருபோதும் மறப்பதில்லை. இங்கே, சில குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, என்னால் உங்களை நினைவு செய்ய முடியவில்லை. இவ்வாறு, நீங்கள் அஞ்ஞானப் பாதையில் கூறுவதில்லை. நினைவு செய்வதில்லை என்ற கேள்வியே எழுவதில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். அவர் நிச்சயமாக அனைவரையும் நினைவு செய்கின்றார். எனது குழந்தைகள் அனைவரும் காமச்சிதையில் எரிந்து, முற்றாக மரணித்து விட்டார்கள். ஒரு குருவோ மகாத்மாவோ இவ்வாறு கூறமாட்டார். கடவுள் பேசுகிறார்: நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். அனைவருமே கடவுளின் குழந்தைகள் ஆவார்கள். ஆத்மாக்கள் அனைவருமே தந்தையான கடவுளின் குழந்தைகள் ஆவார்கள். தந்தை ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்போது, அவர் கூறுகிறார்: இந்த ஆத்மாக்கள் அனைவரும் எனது குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் காமச்சிதையில் ஏறித் தங்களை முற்றாக எரித்துக் கொண்டதால் மரணித்தும் தமோபிரதானாகவும் ஆகிவிட்டார்கள். பாரத மக்கள் கலியுகவாசிகள் ஆகிவிட்டார்கள். காமச்சிதையில் அமர்ந்ததன் மூலம், அவர்கள் அனைவரும் அவலட்சணம் ஆகிவிட்டார்கள். முதற்தரமான பூஜிக்கத் தகுதியான, அழகிய ஆத்மா இப்போது பூஜிப்பவராகவும் அவலட்சணமாகவும் ஆகிவிட்டார். அழகானவர் அவலட்சணமானவராக ஆகிவிட்டார். காமச்சிதையில் அமர்வது என்பது, பாம்பின் மீது அமர்வது போன்றதாகும். சுவர்க்கத்தில் எவரையேனும் தீண்டுவதற்கு அங்கு பாம்புகள் எதுவும் இருக்க மாட்டாது. அத்தகைய விடயங்கள் அங்கே நிகழாது. தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்கள் உங்களுக்குள் பிரவேசிக்கும்போது நீங்கள் காட்டு முட்கள் போல் ஆகுகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, இது முட்காடு என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்தும் கடித்து, எரிந்து சாம்பலாகி விட்டார்கள். கடவுள் பேசுகிறார்: ஞானக்கடலான நான், முன்னைய கல்பத்தில் சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்கிய, எனது குழந்தைகள் இப்பொழுது தூய்மை அற்றவர்களாகவும், அவலட்சணமாகவும் ஆகிவிட்டார்கள். நீங்கள் அழகியவர்களில் இருந்து, எவ்வாறு அவலட்சணம் ஆகுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். 84 பிறவிகளின் முழு வரலாறும் புவியியலும் உங்களின் புத்தியில் இரத்தினச் சுருக்கமாக உள்ளது. இந்த நேரத்திலேயே அது உங்களுக்குத் தெரியும். சிலருக்குத் தங்களுடைய வாழ்க்கை வரலாறு 5 அல்லது 6 வயதில் இருந்தே அவர்களின் புத்திக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகத் தெரியும். அனைவருக்கும் தங்களின் கடந்த வாழ்க்கை வரலாறும், தாங்கள் செய்த தீய செயல்களும் தெரியும். பொதுவாக அவர்கள் செய்த பெரிய விடயங்களைப் பற்றியே பேசுவார்கள். தங்களின் முன்னைய பிறவியில் என்ன செய்தோம் என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. எவராலும் பிறவி பிறவியாகத் தனது வாழ்க்கை வரலாறு என்ன என்பதைக் கூறமுடியாது. எவ்வாறாயினும், நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகிறார். 84 பிறவிகளையும் முழுமையாக எடுத்தவர்களுக்கே இவை ஞாபகத்தில் இருக்கும். நான் வீடு திரும்புவதற்கான வழிக்காட்டல்களையே உங்களுக்குக் கொடுக்கின்றேன். இதனாலேயே, தந்தை கூறுகிறார்: இந்த ஞானம் எல்லா சமயத்தவர்களுக்கும் உரியது. உங்களுக்கு உங்கள் வீடாகிய முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டுமாயின் தந்தையால் மாத்திரமே உங்களை அங்கே அழைத்துச் செல்ல முடியும். தந்தை இல்லாது, எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தையை, இந்த வகையில் நினைவு செய்து, அங்கு செல்ல எவருக்குமே தெரியாது. அனைவருமே மறுபிறவி எடுக்க வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியாது. நீங்கள் அநாதியான முக்தி அடைவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாது. அது சாத்தியமில்லை. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதிலிருந்து எவருமே விலக முடியாது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் விடுதலை அளிப்பவரும் வழிகாட்டியும் ஆவார். அவர் மாத்திரமே வந்து, அவரை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழியும் என்ற வழியைக் கூறுகிறார். அவ்வாறு இல்லாவிட்டால், தண்டனை பெற வேண்டும். நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், நீங்கள் இவ்விடத்திற்கு உரியவர் இல்லை எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு வரிசைக்கிரமமாக, நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான வழி தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த வேகத்திற்கேற்ப விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் இவ்வாறும் கூறலாம்: இந்த நேரத்தில் உலகம் தூய்மையற்றது. அதிகளவு வன்முறைகள் போன்றனவும் இடம்பெறுகின்றன. அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இடம்பெற மாட்டாது. இப்பொழுது இது கலியுகமாகும். மனிதர்கள் அனைவருமே இதனை ஏற்றுக் கொள்வார்கள். சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் உள்ளன. அவற்றிற்கு ஏனைய மொழிகளிலும் வேறு பெயர்கள் இருக்கலாம். அனைவருக்கும் ஆங்கில மொழி தெரியும். அத்துடன் ஹிந்தியில் இருந்து ஆங்கிலச் சொற்களுக்கான அகராதியும் உள்ளது. பிரித்தானியர்கள் இங்கே நீண்ட காலம் ஆட்சி செய்தார்கள். எனவே அவர்களின் ஆங்கிலம் வழக்கத்தில் உள்ளது. இந்த நேரத்தில், மக்கள் தங்களிடம் எந்த தெய்வீகக் குணங்களும் இல்லை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். 'பாபா எங்கள் மீது கருணை காட்டுங்கள்! நாங்கள் தூய்மை அற்றவர்கள், எனவே மீண்டும் ஒருமுறை வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!" எந்தவொரு தூய்மையற்ற ஆத்மாவினாலும் வீடு திரும்ப முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அனைவருமே சதோ, இரஜோ, தமோ நிலையைக் கடக்க வேண்டும். தந்தை இந்தத் தூய்மை அற்றவர்களின் ஒன்றுகூடலுக்குள் வருகிறார். இது மிகப் பெரிய ஒன்றுகூடலாகும். நான் என்றுமே தேவர்களின் ஒன்றுகூடலுக்குள் செல்வதில்லை. நீங்கள் 36 வகையான அதி போஷாக்கான உணவைப் பெறுகின்ற இடத்திற்கு, நான் செல்வதில்லை. சப்பாத்திகள் கூடக் கிடைக்காத குழந்தைகளிடமே நான் செல்கின்றேன். நான் அவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். நான் செல்வந்தர்களைத் தத்தெடுப்பதில்லை. அவர்கள் தங்கள் சொந்த செல்வத்தின் போதையில் மூழ்கி இருக்கிறார்கள். இதுவே தங்களின் சுவர்க்கம் என அவர்களே கூறுகிறார்கள். ஒருவர் மரணித்தால் அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என மக்கள் கூறுகிறார்கள். எனவே இது நிச்சயமாக நரகமே ஆகும். நீங்கள் ஏன் விளங்கப்படுத்துவதில்லை? செய்தித் தாளில் இதனை எழுதுவதற்குரிய விவேகம் எவரிடமும் இல்லை. நாடகம் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். முயற்சி செய்தல் அவசியமாகும். நீங்கள் வெறுமனே நாடகத்தில் தங்கியிருக்கக் கூடாது. அனைத்திற்குமே முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். நீங்கள் கர்மயோகிகளும் இராஜயோகிகளும் ஆவீர்கள். அவர்கள் கர்மத்தைத் துறந்த ஹத்த யோகிகள் ஆவார்கள். நீங்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டு குழந்தைகளைக் கவனித்துக் கொண்டே அனைத்தையும் செய்கின்றீர்கள். அவர்களோ வீட்டை விட்டு ஓடிவிடுகின்றார்கள். ஏனெனில் அவர்களுக்கு வீட்டில் அதனைச் செய்ய விருப்பம் இல்லை. எவ்வாறாயினும் அவர்களின் தூய்மை பாரதத்திற்குத் தேவையாகும். அது நல்லது. இக்காலத்தில் சிலர் தூய்மையாகவும் இருப்பதில்லை. யார் வேண்டும் என்றாலும் தூய்மையான உலகிற்குச் செல்ல முடியும் என்று இல்லை. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியாது. சாந்தி தாமமே உங்களின் வீடு என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். ஆயினும், எவ்வாறு நீங்கள் அங்கு செல்வது? பல பாவங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கடவுளைச் சர்வவியாபகர் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு கூறுவதால் எவரின் கௌரவம் பாதிக்கப்படுகின்றது? சிவபாபாவின் கௌரவமே. கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும், பூனையிலும், நாய்களிலும் இருக்கின்றார் எனக் கூறுகின்றார்கள்! இப்போது இதனை நான் யாரிடம் சென்று முறையிடுவது? தந்தை கூறுகின்றார்: நானே சக்திவாய்ந்தவர் ஆவேன். என்னுடன் தர்மராஜையும் நான் வைத்திருக்கின்றேன். இதுவே அனைவரதும் கணக்குகளைத் தீர்ப்பதற்குரிய காலமாகும். அனைவரும் தண்டனையைப் பெற்ற பின்னர், வீடு திரும்புவார்கள். நாடகம் இவ்வாறாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தண்டனை நிச்சயமாக அனுபவம் செய்யப்பட வேண்டும். காட்சிகளும் உள்ளன. கருப்பை என்ற சிறையிலும் காட்சிகள் கிடைக்கும்: “நீங்கள் இதையும் அதையும் செய்தீர்கள். எனவே நீங்கள் செய்தவற்றின் தண்டனை இதுவே ஆகும்”. எனவே, நீங்கள் அவலக்குரல் எழுப்புகிறீர்கள்: என்னை இந்த சிறையில் இருந்து விடுவியுங்கள். நான் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யமாட்டேன். தந்தை உங்கள் முன்னிலையில் நேரடியாகவே வந்து, இவ்விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் கருப்பையில் தண்டனையை அனுபவம் செய்கிறீர்கள். அதுவும் ஒரு சிறையே ஆகும். அங்கே நீங்கள் வேதனையை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி அங்கு எவ்விதமான சிறையும் இருப்பதில்லை. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இப்பொழுது என்னை நினைவு செய்தால், கலப்படம் அகற்றப்படும். உங்கள் வார்த்தைகளைப் பலரும் ஏற்றுக் கொள்வார்கள். கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டதால் அவர்கள் ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தந்தை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் செவிமடுக்கும் அனைத்தையும் செய்தித்தாளில் அச்சிடுங்கள். இந்நேரத்தில், சிவபாபா அனைவருக்கும் கூறுகிறார்: நீங்கள் 84 பிறவிகள் எடுத்ததன் மூலம் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் முக்தி தாமத்திற்கும், ஜீவன்முக்தி தாமத்திற்கும் செல்வீர்கள். 'என்னை நினைவு செய்தால், கலப்படம் அகற்றப்படும்" என்பதே தந்தையின் கட்டளையாகும். நல்லது. குழந்தைகளே, நான் அதிகளவு விளங்கப்படுத்தி உள்ளேன். இதைவிட அதிகமாக என்னால் எதனை விளங்கப்படுத்த முடியும்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நிச்சயமாக அனைத்திற்கும் முயற்சி செய்யுங்கள். இது நாடகத்தில் உள்ளது என நினைத்தவாறு அமர்ந்திருக்காதீர்கள். ஒரு கர்மயோகியாகவும், ஒரு இராஜயோகியாகவும் ஆகுங்கள். கர்மத்தைத் துறந்தவராகவோ அல்லது ஹத்த யோகியாகவோ ஆகாதீர்கள்.2. தண்டனையை அனுபவிக்காமல் தந்தையுடன் வீடு திரும்பிச் செல்வதற்கு, அவரை நினைவு செய்வதன் மூலம் உங்களை சதோபிரதான் ஆத்மா ஆக்குங்கள். அவலட்சணமானவரில் இருந்து அழகானவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான அன்பு உடையவராகி, சகல ரூபங்களிலும் சகல உறவுமுறைகளிலும் உள்ள உங்களுடையவை அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணிப்பீர்களாக.நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, அந்த அன்பிற்காக ஏனைய அனைவரையும் ஒதுக்கிவிட்டு, உங்களுடைய அனைத்தையும் அந்த நபரிடம் அர்ப்பணிப்பீர்கள். அதேபோல், தந்தை குழந்தைகளான உங்கள்மீது அன்பு வைத்திருக்கிறார். எனவே, அன்பான குழந்தைகளான நீங்கள் அனைவரும் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சந்தோஷப் பேறைப் பெறச் செய்கிறார், அத்துடன் ஏனைய அனைவரையும் முக்தி தாமத்திற்கு அனுப்புகிறார். இத்தகைய குழந்தைகளின் அன்பின் அத்தாட்சி, அவர்கள் சகல ரூபங்களிலும் சகல உறவுமுறைகளிலும் தங்களிடம் உள்ள அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணிப்பதே ஆகும். எங்கே அன்பு உள்ளதோ, அங்கே யோகம் இருக்கும். எங்கே யோகம் உள்ளதோ, அங்கே ஒத்துழைப்பு இருக்கும். அப்போது உங்களால் உங்களின் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு பொக்கிஷத்தையேனும் வீணாக்க முடியாது.
சுலோகம்:
பௌதீக ரூபத்தில் தந்தை பிரம்மாவை அவரின் செயல்களில் பின்பற்றுங்கள். சரீரமற்றவர் ஆகுவதில் அசரீரியான தந்தையைப் பின்பற்றுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
அனுபவப் பொக்கிஷங்களால் நிரம்பியுள்ள முழுமையான விக்கிரகங்கள், இயல்பாகவே மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகுவார்கள். அருள்பவர்கள் சேவையாளர்கள் ஆவார்கள். அருள்பவர்களால் மற்றவர்களுக்குச் சேவை செய்யாமல் இருக்க முடியாது. கருணை நிறைந்தவராக இருக்கும் அவர்களின் நற்குணத்தால் அவர்கள் சில ஆத்மாக்களுக்குத் தைரியத்தையும் பலவீனமாக உள்ள ஏனைய ஆத்மாக்களுக்கு சக்தியையும் வழங்குவார்கள். அவர்கள் மாஸ்ரர் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆவார்கள்.