30.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களை அதிமேன்மையான மனிதர்களாக ஆக்குவதற்காக உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது அதிதாழ்ந்த மனிதர்களில் இருந்து அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களே அதி மேன்மையான மனிதர்கள் ஆவார்கள்.
கேள்வி:
சத்தியயுகத்தில் நீங்கள் செய்யாத எந்த ஒரு முயற்சியைக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே செய்கிறீர்கள்?பதில்:
இங்கே, நீங்கள் சரீரங்கள் என்ற உணர்வையும் சரீர உறவினர்களையும் மறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கும் உங்கள் சரீரத்தைத் துறப்பதற்கும் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். சத்தியயுகத்தில், நீங்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போது, எவ்வித முயற்சியும் இல்லாமல் உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள். இந்த நேரத்தில், “நான் ஓர் ஆத்மா” எனப் பயிற்சி செய்யும் முயற்சியில் இருக்கிறீர்கள். நீங்கள் இந்தச் சரீரத்தையும், உங்கள் பழைய சரீரங்களையும் துறந்து புதியவற்றை எடுக்க வேண்டும். சத்தியயுகத்தில், இதனைப் பயிற்சி செய்ய வேண்டியதில்லை.பாடல்:
தொலைதூர வாசி மீண்டும் ஒருமுறை அந்நிய தேசத்திற்கு வந்திருக்கின்றார்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளாகிய நீங்கள் “மீண்டும் ஒருமுறை” என்றால் ஒரு கல்பத்தின் பின்னர் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இதுவே தொலைதூரவாசி, அந்நிய தேசத்திற்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்பதாகும். இது அவரைப் பற்றிய நினைவே ஆகும். அவரையே அனைவரும் நினைவு செய்கின்றார்கள். அவருக்கெனச் சரீரம் இல்லை: அவருக்கென்று ஒரு சரீர வடிவம் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். “கடவுள் சிவன் பேசுகின்றார்” என்று கூறப்படுகின்றது. அவர் பரந்தாமத்தில் வசிக்கின்றார். சந்தோஷ உலகிற்கு வாருங்கள் என அவர் என்றுமே அழைக்கப்படுவதில்லை. துன்ப உலகத்திற்கே வரும்படி அவர் அழைக்கப்படுகின்றார். அவர் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். உலகிலேயே அதிமேன்மையானவர்கள் சத்திய யுகத்திலேயே வசிக்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே மத்திமமான அல்லது தாழ்ந்தவர்கள் இருப்பதில்லை. ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணனே மனிதர்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆவார்கள். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவே அவர்களை அவ்வாறு ஆக்கினார் என நீங்கள் கூறுவீர்கள். சிவபாபா மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்பட முடியும். இக்காலத்தில், சந்நியாசிகள் போன்றோரும், தம்மை ஸ்ரீ ஸ்ரீ என்று அழைத்துக் கொள்கிறார்கள். தந்தை இப்பொழுது வந்து இந்த உலகை அதிமேன்மையாக ஆக்குகின்றார். உலகிலுள்ள அதிமேன்மையான மனிதர்கள் சத்திய யுகத்திலேயே வசிக்கிறார்கள். அதிமேன்மை ஆனவர்களுக்கும் அதி தாழ்ந்தவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நீங்கள் இந்த நேரத்திலேயே புரிந்து கொள்கிறீர்கள். தாழ்ந்த மனிதர்கள் தமது சீரழிவைக் காட்டுவார்கள். நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை அதிமேன்மையான சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள். இது சங்கமயுகம். இந்தப் பழைய உலகம் நிச்சயமாகப் புதியதாகும் என்ற உத்தரவாதம் உங்களுக்கு உள்ளது. பழைய உலகம் நிச்சயமாகப் புதியதாகவும் புதிய உலகம் பழையதாகவும் ஆகும். புதிய உலகம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது, பழைய உலகம் கலியுகம் என அழைக்கப்படுகின்றது. தந்தை சத்தியத்தைப் பேசுகின்ற, உண்மையான தங்கம் ஆவார். அவர் சத்தியம் என அழைக்கப்படுகின்றார். அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் உண்மையே. கடவுள் சர்வவியாபி எனக் கூறுவது பொய்யாகும். தந்தை கூறுகின்றார்: பொய்யானவற்றைக் கேட்காதீர்கள். தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! உலகக் கல்வி வேறு விடயம். அதன் மூலம் பெறப்படும் சந்தோஷம் தற்காலிகமானது. ஆத்மா தனது அடுத்த பிறவியை எடுக்கும்போது, அவர் மீண்டும் கற்க வேண்டும். அந்தச் சந்தோஷம் தற்காலிகமானது. இந்தச் சந்தோஷம் 21 பிறவிகளுக்கும், 21 சந்ததிகளுக்கும் நீடிக்கும். ஒரு சந்ததி என்றால் ஆயுட்காலத்தை முழுமையாக வாழ்வது என்று அர்த்தம். அங்கே என்றுமே அகால மரணம் இடம்பெற மாட்டாது. இங்கே அகால மரணம் இடம்பெறுவதைப் பாருங்கள்! இந்த ஞான மார்க்கத்திலும் அவர்கள் மரணிக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது மரணத்தை வெற்றி கொள்கிறீர்கள். அது அமரத்துவ உலகம் என்றும், இது மரண உலகம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அங்கே அவர்கள் முதியவர்கள் ஆகும்பொழுது, தாம் ஒரு குழந்தையாக பிறக்கப் போகின்ற காட்சியைப் பெற்ற பின்னர், தமது சரீரங்களை நீங்கிச் செல்வார்கள். முதுமை ஒரு முடிவிற்கு வரும்போது, சரீரம் துறக்கப்படுகின்றது. ஒரு புதிய சரீரம் எடுப்பது நல்லது. அவர்கள் ஓர் இடத்தில் இருக்கும்போதே, தமது சரீரங்களைச் சந்தோஷமாகத் துறக்கின்றார்கள். இங்கே, அந்த நிலையில் சரீரத்தை நீங்கிச் செல்வதற்கு முயற்சி தேவை. இங்கே, அதற்கு முயற்சி தேவை, அங்கேயோ அது சாதாரணமான ஒன்றாகும். இங்கே, உங்கள் சரீர உணர்வு உட்பட, அனைத்தையும் நீங்கள் மறக்க வேண்டும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, இப்பழைய உலகைத் துறக்க வேண்டும். நீங்கள் புதியதொரு சரீரத்தைப் பெறப் போகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, அழகான சரீரங்களைப் பெற்றீர்கள். அதன் பின்னர் காமச்சிதையில் அமர்ந்ததன் மூலம் நீங்கள் தமோபிரதானும் அவலட்சணமும் ஆகி, அவலட்சணமான சரீரங்களைப் பெற்றீர்கள். நீங்கள் அழகானவர்களில் இருந்து அவலட்சணமானவர் ஆகினீர்கள். கிருஷ்ணரின் பெயர் கிருஷ்ணரே. இருப்பினும், அவர் ஏன் சியாம்சுந்தர் (அவலட்சணமும், அழகானவரும்) என அழைக்கப்பட்டார்? கிருஷ்ணரின் நிறம் அவருடைய படங்களில் கருநீலமாகக் காட்டப்படுகின்றது. ஆனால் எவருக்குமே அதன் அர்த்தம் புரியவில்லை. நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, நீங்களும் அழகாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகவும் அவலட்சணமாகவும் ஆகிவிட்டீர்கள். அந்தச் சதோபிரதான் ஆனவர்களே அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். தமோபிரதான் ஆனவர்கள் சீரழிந்தவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். தந்தை என்றென்றும் தூய்மையானவர். அவர் உங்களை அழகானவர் ஆக்குவதற்கே வருகின்றார். அவர் ஒரு பயணி. அவர் கல்பம் கல்பமாக வருகின்றார். அவ்வாறு இல்லாவிடின் யாரால் இந்தப் பழைய உலகை அந்தப் புதிய உலகாக மாற்ற முடியும்? இந்த உலகம் இப்போது தூய்மையற்றதும், அழுக்கானதும் ஆகும். உலகிலுள்ள வேறு எவருக்கும் இவை தெரியாது. நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காகவே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகியிருக்கின்றீர்கள், மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சங்கம யுகப் பிராமணர்கள் ஆவீர்கள். இது சங்கமயுகம் என்பதை உலகில் உள்ள எவரும் அறிய மாட்டார்கள். சக்கரத்தின் கால எல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகளென சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் கலியுகம் இன்னமும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என அவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் அதி மேன்மை ஆனவர்களாகவும், கலியுகத்துத் தூய்மை அற்றவர்களில் இருந்து சத்திய யுகத்துத் தூய்மை ஆனவர்களாகவும், மனிதர்களில் இருந்து தேவர்களாகவும் மாறுவதற்கே வந்திருக்கின்றீர்கள் என்பதை உங்கள் இதயம் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றது. கிரந்தில் (சீக்கியரின் சமயநூல்) கடவுள் அழுக்கான ஆடைகளைக் கழுவுகிறார் என எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும். கிரந்தைக் கற்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. தந்தை இப்பொழுது வந்து, உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரையும் சுத்தம் செய்கிறார். நீங்கள் இப்பொழுது அந்தத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். வேறு எவரிடமும் படைப்பவரதும் அல்லது அவரின் படைப்பினதும் ஞானம் இல்லை. தந்தை ஞானக் கடல். அவரே சத்தியமும், உயிருள்ளவரும் அமரத்துவமானவரும் ஆவார். அவர் பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் அப்பாற்பட்டவர். அவர் அமைதிக்கடலும் சந்தோஷக்கடலும் தூய்மைக்கடலும் ஆவார். தமக்கான ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வாருங்கள் என அவர் அவர்களால் வரவழைக்கப்படுகின்றார். தந்தை இப்பொழுது 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். இது ஓர் அழியாத கல்வி, அதனை உங்களுக்குக் கற்பிப்பவர் அநாதியான தந்தை ஆவார். அரைக்கல்பத்திற்கு நீங்கள் இராச்சியத்தை அடைகிறீர்கள். அதன் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. அரைக்கல்பத்திற்கு, இராம இராச்சியமும் அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. தந்தையே உயிருக்கும் மேலாக நேசிக்கப்படுகின்றார். ஏனெனில் அவர் மாத்திரமே உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, உங்களை அளவற்ற சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அவரே நீங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற பரலோகத் தந்தை என நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள். அந்த ஆத்மா உயிர் (உயிருள்ளவர்) எனப்படுகின்றார். மனிதர்கள் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். ஏனெனில் அவரே அரைக்கல்பத்திற்கு அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்குச் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்கின்றார். ஆகையால், அவர் உயிருக்கும் மேலாக நேசிக்கப்படுகின்றார். சத்தியயுகத்தில் நீங்கள் சதா சந்தோஷமாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஏனைய அனைவரும் அமைதிதாமத்திற்குத் திரும்பிச் செல்கின்றார்கள். அதன்பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகும்போது, துன்பமும் ஆரம்பம் ஆகுகின்றது. இது சந்தோஷமும் துன்பமும் பற்றிய நாடகமாகும். இங்கே ஒரு நிமிடம் சந்தோஷம் உள்ளது என்றும், மறு நிமிடம் துன்பம் உள்ளது என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சுவர்க்கம் நரகத்தில் இருந்து வேறுபட்டது என நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இராமரான தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். இராவணன் நரகத்தை ஸ்தாபிக்கின்றான். அவனின் கொடும்பாவி வருடாவருடம் எரிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர்கள் ஏன் அவனை எரிக்கின்றார்கள்? அவன் யார்? அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதனைச் செய்வதற்கு அவர்கள் அதிகளவு செலவு செய்கின்றார்கள். அவர்கள் அமர்ந்திருந்து பல கதைகள் சொல்கிறார்கள். இராமரின் மனைவியான சீதா தேவி இராவணனால் கடத்தப்பட்டார் என அவர்கள் கூறுகின்றார்கள். அது உண்மையில் நடந்தது என மக்கள் நம்புகிறார்கள். உங்களுக்கு இப்பொழுது அனைவரது தொழிலும் தெரியும். இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. எந்த மனிதருக்கும் முழு உலகினதும் வரலாறும் புவியியலும் தெரியாது. தந்தைக்கு மாத்திரமே அது தெரியும். அவரை உலகைப் படைப்பவர் என அழைக்க முடியாது. உலகம் என்றென்றும் இருக்கிறது. ஆனால் தந்தை வந்து சக்கரம் எப்படிச் சுழல்கிறது என்ற இந்த ஞானத்தை மட்டுமே கூறுகிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் அவர்களுடைய பாரத இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது? தேவர்கள் எவருடனாவது போர் தொடுத்தார்களா? நிச்சயமாக இல்லை! அரைக்கல்பத்தின் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பமானபோது, தேவர்கள் பாவப் பாதையில் வீழ்ந்தார்கள். எவ்வாறாயினும், அதன் அர்த்தம் அவர்கள் ஒரு யுத்தத்தில் தோல்வி அடைந்தார்கள் என்பதல்ல. இராணுவம் போன்ற எப்படையையும் கொண்டிருந்தார்கள் என்றோ அல்லது அவர்கள் யுத்தம் புரிந்து தமது இராச்சியத்தை வென்றார்கள் அல்லது தோற்றார்கள் என்றோ இல்லை. நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்து, தூய்மையாகி, உங்கள் தூய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். உங்கள் கைகளில் நீங்கள் எதனையும் ஏந்திக் கொண்டிருப்பதில்லை. இது இரட்டை அகிம்சையாகும். முதலில், தூய்மை என்ற அகிம்சை உங்களிடம் உள்ளது. இரண்டாவதாக நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. காம வாளைப் பயன்படுத்துவதே அனைத்திலும் அதிமோசமான வன்முறையாகும். அது ஆரம்பம், மத்தி, இறுதி வரை துன்பத்தை விளைவிக்கிறது. இராவண இராச்சியம் ஆரம்பமாகும்போது, துன்பமும் ஆரம்பம் ஆகுகின்றது, நோய்களும் ஆரம்பம் ஆகுகின்றன. இப்பொழுது அதிகளவு நோய்களும் உள்ளதால், பல மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மக்கள் நோயாளிகளாகி விட்டார்கள். நீங்கள் யோகசக்தியினூடாக 21 பிறவிகளுக்கு நோயற்றவர்கள் ஆகுகிறீர்கள். அங்கே எந்தத் துன்பத்தின் அல்லது நோய்களின் சுவடோ இருக்க மாட்டாது. நீங்கள் அதற்கே கற்கிறீர்கள். உங்களைப் பெண்தெய்வங்களாகவும் ஆண்தெய்வங்களாகவும் ஆக்குவதற்காகவே கடவுள் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. அவர் முழுச் சக்கரத்தின் இந்த ஞானத்தை அரை அல்லது முக்கால் மணித்தியாலத்தில் விளங்கப்படுத்துகின்றார். யார் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் அசரீரியானவர். அவருடைய உண்மையான பெயர் சிவன் என்பதாகும். அவரே அனைவரதும் உபகாரியும், அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும் ஆவார். அவரே அதிமேன்மையான தந்தை என்பதால், அவர் உங்களை அதிமேன்மையான மனிதர்களாக ஆக்குகிறார். தந்தை உங்களுக்குக் கற்பித்து உங்களைத் திறமைசாலிகளாக ஆக்கி, கூறுகின்றார்: சென்று, பிறருக்குக் கற்பியுங்கள்! சிவபாபாவே பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் பிரம்மாவினூடாக அவரால் தத்து எடுக்கப்பட்டிருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வருகின்றார்? மக்கள் இதனையிட்டுக் குழப்பம் அடைகின்றார்கள். இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவர் தத்தெடுக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் பல பிறவிகளை எடுத்தவர் யார்? இலக்ஷ்மியும் நாராயணனுமே முழுமையான 84 பிறவிகளை எடுத்தவர்கள். ஆகையாலேயே கிருஷ்ணரே அவலட்சணமானவரும் அழகானவரும் எனக் கூறப்படுகின்றது. நான் அழகாக இருந்தேன், அதன்பின்னர் (தூய்மையின்) இரு கலைகளை இழந்தேன். கலைகள் முற்றிலும் அற்றுப் போகும்வரை தொடர்ந்தும் இழக்கப்படுகின்றன. மீண்டும் ஒருமுறை தமோபிரதான் இலிருந்து சதோபிரதானாக எவ்வாறு நீங்கள் மாறுகிறீர்கள்? தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இந்த யாகமே, உருத்திர ஞான யாகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு யாகத்திற்குப் பிராமணர்கள் தேவை. குழந்தைகளாகிய நீங்களே உண்மையான கீதையை உரைக்கின்ற, உண்மையான பிராமணர்கள் ஆவீர்கள். ஆகையாலே நீங்கள் இதுவே உண்மையான கீதைப் பாடசாலை (கீதைக்கான கல்விக் கூடம்) என எழுதுகிறீர்கள். அந்தக் கீதையில், அவர்கள் கீதையைப் பேசுபவரின் பெயரை மாற்றி உள்ளார்கள். ஆம், சென்ற கல்பத்தில் ஆஸ்தியைப் பெற்றவர்கள் வந்து இந்த ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை பெறுவார்கள். உங்கள் இதயத்திடம் கேளுங்கள்: என்னால் முழு ஆஸ்தியையும் பெற முடியுமா? மக்கள் தமது சரீரத்தை நீங்கிச் செல்லும்போது, வெறுங்கையுடனேயே செல்கிறார்கள். அழிகின்ற அந்த வருமானத்தை அவர்களால் தம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும், உங்கள் சரீரங்களை விட்டு நீங்கள் நீங்கிச் செல்லும்போது, கைநிறைய எடுத்துச் செல்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் 21 பிறவிகளுக்கு வருமானத்தைச் சேமிக்கிறீர்கள். மனிதர்களின் செல்வம் முழுவதும் தூசாகப் போகின்றது. ஆகையால், பாபாவிடம் அதனைக் கொடுத்து, ஏன் நீங்கள் அனைத்தையும் மாற்றிக் கொள்ளக்கூடாது? அதிகளவு தானம் செய்பவர்கள், அதனை மாற்றியதால், தமது அடுத்த பிறவியில் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்கான, 21 பிறவிகளுக்கு அனைத்தையும் மாற்றுகிறீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான பிரதிபலனைப் பெறுகிறீர்கள். அவர்கள் மாற்றுகின்ற அனைத்தும் தற்காலிகமாக ஒரு பிறவிக்கு மாத்திரமே. நீங்கள் அனைத்தையும் 21 பிறவிகளுக்கு மாற்றுகிறீர்கள். தந்தையே அருள்பவர். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. அனைவருமே தாம் செய்வதற்கேற்ப பிரதிபலனைப் பெறுகிறார்கள். அவர்கள் தான தர்மங்களை மறைமுகமாகச் செய்து, அதற்கான பிரதிபலனைத் தற்காலிகமாகப் பெறுகின்றார்கள். இது நேரடியானது. நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அந்தப் புதிய உலகிற்கு மாற்ற வேண்டும். இந்த பிரம்மாவைப் பாருங்கள். அவர் அதிகளவு தைரியத்தைக் கொண்டிருந்தார். நீங்கள் கூறுகிறீர்கள்: அனைத்தும் கடவுளாலேயே கொடுக்கப்பட்டன. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அனைத்தையும் மீண்டும் எனக்கு திருப்பிக் கொடுத்தால், உலக இராச்சியத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்! பாபா அனைத்தையும் உடனடியாகவே கொடுத்தார். அவர் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. அவர் சிவபாபாவிற்கு அனைத்திற்குமான முழு உரிமையையும் கொடுத்தார். தான் உலக இராச்சியத்தைப் பெறுவேன் என்ற போதையை மாத்திரமே கொண்டிருந்தார். அவர் தனது குழந்தைகள் போன்றோரைப் பற்றிச் சிந்திக்கவில்லை. கடவுளே கொடுப்பவர். ஆகையால், நான் எவருக்கும் பொறுப்பில்லை. தந்தை பிரம்மா 21 பிறவிகளுக்கு அனைத்தையும் எவ்வாறு மாற்றினார் எனப் பாருங்கள். தந்தையைப் பின்பற்றுங்கள்! பிரஜாபிதா பிரம்மா அதனைச் செய்தார். கடவுளே அருள்பவர். அவர் இவரைத் தூண்டினார். நீங்களும் தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சியத்தைப் பெறவே வந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாளுக்கு நாள், நேரம் குறுகிக் கொண்டிருக்கின்றது. அத்தகைய அனர்த்தங்கள் வரும், கேட்கவும் வேண்டாம். யமதர்மன் வந்து விடுவானோ என வியாபாரிகள் தமது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் (மரணத்தைப் பற்றிய பயம்). ஓர் உத்தியோகத்தரின் முகத்தைப் பார்த்தவுடனேயே சிலர் மயங்கி விழுகிறார்கள். காலம் செல்ல, அவர்கள் அதிகளவு விரக்தியை விளைவிப்பார்கள். மக்கள் தங்கம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களிடம் என்ன எஞ்சியிருக்கும்? எதனையுமே வாங்குவதற்கும் உங்களிடம் பணம் இருக்காது. வங்கித் தாள்கள் போன்ற எவையும் இருக்க மாட்டாது. முழு இராச்சியமும் மாற உள்ளது. மக்கள் இறுதி நேரத்தில் பெருந் துன்பத்தில் மரணிப்பார்கள். பெருந் துன்பத்தின் பின்னர் சந்தோஷம் இருக்கும். இதுவே “காரணம் இல்லாமல் இரத்தம் சிந்துதல்” என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை அழிவுகளும் இடம்பெறும். அவை அனைத்தும் இடம்பெறுவதற்கு முன்னர், தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளுங்கள். எது எவ்வாறாயினும், நீங்கள் நடந்தும், சுற்றிப் பயணிக்கும் போதெல்லாம், தந்தையை மாத்திரம் தொடர்ந்தும் நினைவுசெய்தால், தூய்மை ஆகுவீர்கள். அதிகளவு அனர்த்தங்கள் இடம்பெறும், மக்கள் விரக்தியினால் அவலக்குரல் எழுப்புவார்கள். இறுதியில் சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்யும் வகையில், குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு நினைவு செய்வதற்குப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கும்போது, தந்தையின் நினைவில் மாத்திரமே நிலைத்திருப்பீர்கள். நண்பர்களோ அல்லது உறவினர்கள் போன்ற எவருமோ நினைவுசெய்யப்படல் ஆகாது. இதனை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். தந்தையை மாத்திரம் நினைவுசெய்து நாராயணன் ஆகுங்கள். இதனை நீங்கள் அதிகளவு பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு வருத்தப்பட நேரிடும். நீங்கள் வேறு எவரையும் நினைவுசெய்தால், தோல்வி அடைகிறீர்கள். சித்தி அடைபவர்கள் மாத்திரமே வெற்றிமாலையில் கோர்க்கப்படுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடம் கேளுங்கள்: நான் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றேன்? உங்கள் கைகளில் எதனையாவது வைத்திருந்தால், இறுதியில் அதனையே நினைவுசெய்வீர்கள். உங்கள் கைகளில் எதுவும் இல்லாதிருந்தால், நீங்கள் எதனையும் நினைவுசெய்ய மாட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னிடம் எதுவும் இல்லை. இது என்னுடையது அல்ல. அதற்குப் பதிலாக இந்த ஞானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இல்லாவிடின், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை இழப்பீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியை பெறுவதற்கே இங்கே வருகிறீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இல்லாவிட்டால், கர்மக் கணக்கைத் தண்டனையினால் தீர்க்க வேண்டி ஏற்படுவதுடன் நீங்கள் ஓர் அந்தஸ்தையும் பெற மாட்டீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நீங்கள் கிருஷ்ணரை உங்கள் மடியில் வைத்திருப்பீர்கள். அவர்கள் தமக்கு ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற ஒரு கணவர் அல்லது ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் எனக் கூறுகிறார்கள். சிலர் மிக நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள், சிலரோ பிழையான விடயங்களைக் கூறுகிறார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பிரம்மாபாபா அனைத்தையும் மாற்றி, எதைப் பற்றியும் சிந்திக்காது, சிவபாபாவிற்கு அவற்றிற்கான முழு உரிமையையும் கொடுத்ததைப் போன்று, தந்தையைப் பின்பற்றி, 21 பிறவிகளுக்கு வருமானத்தைச் சேமியுங்கள்.2. இறுதி நேரத்தில் தந்தையைத் தவிர வேறு எதனையும் பற்றிச் சிந்திக்காத வகையில் நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யுங்கள். எதுவுமே எங்களுக்குச் சொந்தமல்ல. அனைத்துமே சிவபாபாவுடையது. அல்ஃபாவையும் பீற்றாவையும் மாத்திரம் நினைவு செய்யுங்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதால், நீங்கள் சித்தியடைந்து, வெற்றிமாலையில் ஒருவர் ஆகுவீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மனதில் முழுக் கவனம் செலுத்தி, ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்யும் உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.இப்போது, இந்த இறுதிக் கணங்களில், நீங்கள் உங்களின் மனதால் உலகை மாற்றுவதற்குக் கருவி ஆகியுள்ளீர்கள். ஆகவே, உங்களின் மனதால் ஓர் எண்ணத்தையேனும் நீங்கள் வீணாக்கினால், நீங்கள் அதிகமானவற்றை இழக்க நேரிடும். ஓர் எண்ணத்தையேனும் சாதாரணமானதாகக் கருதாதீர்கள். தற்சமயம், எந்தவொரு குழப்பமான எண்ணமும் பாரியதொரு குழப்பமாகவே கருதப்படும். ஏனென்றால், காலம் இப்போது மாறிவிட்டது. முயற்சியின் வேகமும் மாறவேண்டும். ஆகவே, உங்களின் எண்ணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களின் எண்ணங்களில் இந்தளவு கவனத்தைச் செலுத்தினால், உங்களால் உங்களின் ஏறுகின்ற ஸ்திதியால் உலகை மாற்றுபவர் ஆகமுடியும்.
சுலோகம்:
செயல்களைச் செய்யும்போது யோகத்தை அனுபவம் செய்தல் என்றால் ஒரு கர்மயோகியாக இருத்தல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
நீங்களும் தந்தையும்: உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்தவண்ணம், உங்களின் நல்லாசிகள், மேன்மையான உணர்வுகள், மேன்மையான வார்த்தைகள், மேன்மையான பார்வை மற்றும் மேன்மையான செயல்களால் உலக உபகாரி ரூபத்தை சதா அனுபவம் செய்யுங்கள். அப்போது உங்களால் ஒரு விநாடியில் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வினைக் காண முடியும். சதா இந்த சுலோகனை நினைவில் வைத்திருங்கள்: நான் ஒரு பிரச்சனையாகவும் இருக்க மாட்டேன், எந்தவொரு பிரச்சனையைப் பார்த்தாலும் நான் தளம்பவும் மாட்டேன். நானே தீர்வின் சொரூபமாக இருந்து மற்றவர்களுக்கும் தீர்வினைக் கொடுப்பேன். இந்த விழிப்புணர்வானது உங்களைத் தீர்வுகளின் சொரூபம் ஆக்கும்.