30.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரங்களின் விழிப்புணர்வில் இருந்து மரணித்திருங்கள், அதாவது பழைய தூய்மையற்ற சரீரங்களிற்கான உங்களது அன்பைத் துண்டித்து, ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.
கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களிடமுள்ள இயற்கை அழகு என்ன?பதில்:
சதா இந்த ஞான இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதே உங்களது இயற்கையான அழகாகும். இந்த ஞான இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பவர்களது முகங்கள் சந்தோஷத்தில் மலர்களைப் போன்று மலர்ந்திருக்கும். சந்தோஷம் இல்லையென்றால் நிச்சயமாக ஏனைய விகாரங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஏதோ ஒரு சரீர உணர்வின் பழக்கம் உள்ளது.பாடல்:
விட்டில் பூச்சிகளுக்கு ஒன்றுகூடலிலே சுவாலை ஏற்றப்பட்டுள்ளது…ஓம் சாந்தி.
இந்தப் பாடலின் அர்த்தம் தனித்துவமானது. எதற்காக அன்பு உருவாக்கப்பட்டது? (மரணிப்பதற்கு). உங்களது அன்பு யாருக்கானது? கடவுளுக்கானது. ஏனெனில் நீங்கள் இந்த உலகிற்கு மரணித்து அவரிடம் செல்ல வேண்டும்! நீங்கள் எப்போதாவது எவர் மீதாவது இவ்வாறு அன்பு செலுத்தியிருக்கிறீர்களா அல்லது நீங்கள் (அன்பிற்காக) மரணிப்பீர்கள் என்ற எண்ணத்தையாவது கொண்டிருந்தீர்களா? இதன் பின்னரும் எவராவது அன்பு செலுத்த விரும்புவார்களா? இந்தப் பாடலின் அர்த்தம் மிகவும் அற்புதமானது! விட்டில் பூச்சிகள் சுவாலையை விரும்புகின்றன. அவை அதனைச் சுற்றி வட்டமிட்டு, பின்னர் மரணிக்கின்றன. நீங்களும் தந்தையிடம் வரும் போது, உங்கள் சரீரங்களை நீக்க வேண்டும், அதாவது நீங்கள் தந்தையின் நினைவில் உங்களது சரீரத்தை நீக்குகிறீர்கள். நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவருக்காக மரணிக்க நேரிட்டால், அந்நபர் கொடிய எதிரியை போல் ஆகுகின்றார். இதனாலேயே மக்கள் பயப்படுகின்றனர். அவர்கள் கடவுளிடம் செல்வதற்காக தான தர்மங்களையும் யாத்திரைகள் போன்றவற்றையும் மேற்கொள்கின்றனர். ஒருவர் மரணிக்க இருக்கும் தறுவாயில் கடவுளை நினைவு செய்யுமாறு மக்கள் அவரிடம் கூறுகின்றனர். கடவுள் மிகவும் பிரபல்யமானவர். அவர் வரும்போது, பழைய உலகம் முழுவதையும் அழிக்கிறார். பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கு செல்வதற்காகவே நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பழைய உலகம் நரகமாகிய தூய்மையற்ற உலகம் எனக் கூறப்படுகிறது. தந்தை புதிய உலகிற்கான வழியை உங்களுக்குக் காட்டுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நானே சுவர்க்கக் கடவுளாகிய தந்தை ஆவேன். புதல்வர்கள் தமது தந்தையிடம் இருந்து செல்வம், சொத்து, வீடு போன்றவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் புதல்விகள் ஆஸ்தி எதனையும் பெறுவதில்லை. அவர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர், அவர்கள் வாரிசுகள் அல்ல என்பதே அதன் அர்த்தமாகும். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அனைவரும் மரணித்தே அவரிடம் செல்ல வேண்டும். புதிய உலகில் வெகுசில மனிதர்களே இருக்கின்றார்கள் என்பதால் தந்தை ஏதோ ஒரு நேரத்தில் நிச்சயமாக வந்து அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். பழைய உலகில் பல மக்கள் இருக்கின்றனர். புதிய உலகில் வெகுசில மனிதர்களே இருக்கின்றனர், ஆனால் அங்கு அதிகளவு சந்தோஷம் இருக்கிறது. பழைய உலகில் பல மனிதர்கள் இருப்பதுடன் அதிகளவு துன்பமும் இருக்கிறது. இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் அழைக்கின்றனர். பாரதத்தின் தந்தை எனக் கருதப்பட்ட பாபு காந்தியும் கூறுவதுண்டு: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! அவர் அவரை அறிந்திருக்கவில்லை. பரமாத்மாவாகிய பரம தந்தையே தூய்மையாக்குபவர் என்றும் அவரே உலகிற்கு முக்தியளிப்பவர் என்றும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உலகிலுள்ள அனைவருமே இராமர், சீதையின் மீது நம்பிக்கை உடையவர்கள் என்றல்ல. இது ஒரு தவறு ஆகும் (சீதைக்கு சொந்தமான இராமரே தூய்மையாக்குபவர் என்று கூறுதல்). முழு உலகும் பரமாத்மாவாகிய பரம தந்தையையே முக்தியளிப்பவர் என்றும் வழிகாட்டி என்றும் கருதுகிறது. அவர் உங்களை துன்பத்தில் இருந்து விடுவிக்கிறார். நல்லது, உங்களுக்கு துன்பத்தை விளைவிப்பது யார்? தந்தை தூய்மையாக்குபவர் ஆகையால் அவரால் உங்களுக்குத் துன்பம் விளைவிக்க முடியாது. அவரே தூய உலகாகிய சந்தோஷ தாமத்திற்கு உங்களை அழைத்துச் செல்பவர் ஆவார். நீங்கள் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள். தந்தை எவ்வாறோ குழந்தைகளும் அவ்வாறே! ஒரு லௌகீகத் தந்தைக்கு லௌகீகக் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் ஆத்மாக்கள் என்றும், பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களுக்கான ஆஸ்தியைக் கொடுக்கவே வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மாணவர்கள் என்பதை மறக்கக் கூடாது. சிவபாபா மதுவனத்தில் முரளியை இசைக்கின்றார் என்பது குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளது. அவர் மூங்கிலாலான புல்லாங்குழலை (முரளி) இசைப்பதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் நடனம், அவர் புல்லாங்குழல் இசைத்தல் அனைத்தும் பக்திமார்க்கத்தைச் சார்ந்தவையாகும். ஸ்ரீகிருஷ்ணர் முரளியை இசைக்கிறார் என உங்களால் கூற முடியாது. சிவபாபாவே முரளியை இசைக்கிறார். பல சிறந்த பாடலாசிரியர்கள் உங்களிடம் வருவார்கள். பொதுவாக ஆண்களே பாடலாசிரியர்களாக இருக்கின்றனர். நீங்கள் பக்தி மார்க்கத்து பாடல்களைப் பாடக் கூடாது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: அல்பாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். சிவன் ஒரு புள்ளியாவார். வியாபாரிகள் பூச்சியத்தை இடும் போது ‘சிவனே” எனக் கூறுகின்றனர். அவர்கள் “1” ற்கு பின்னர் பூச்சியத்தை சேர்த்துக் கொண்டால் அது 10 ஆகின்றது. பின்னர் இன்னொரு பூச்சியத்தை சேர்த்தால் அது 100 ஆகின்றது. நீங்களும் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யும்; அளவிற்கு அரைக்கல்பத்திற்கு மிகவும் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். அங்கு ஏழைகளே இல்லை. அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அங்கு துன்பத்தின் பெயரோ சுவடோ இருப்பதில்லை. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள் மிகவும் செல்வந்தர்களும் ஆவீர்கள். இதுவே உண்மையான தந்தையிடம் இருந்து உண்மையான வருமானத்தை சம்பாதித்தல் எனப்படுகிறது அத்துடன், இதுவே உங்களுடனேயே செல்லக் கூடியதும். மனிதர்கள் அனைவரும் வெறுங்கையுடன் செல்கையில், நீங்கள் திரும்பிச் செல்லும் போது நிறைந்த கைகளுடன் செல்ல வேண்டும்;. தந்தையை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள். தூய்மையிருக்கும் போது அங்கு அமைதியும், செழிப்பும் இருக்கும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் முதலில் தூய்மையானவர்களாக இருந்து பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். சந்நியாசிகள் அரைவாசி தூய்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றனர். நீங்கள் முழுமையான துறவறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் எந்தளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் சொற்ப சந்தோஷத்தை பெற்றிருப்பதுடன் பின்னர் துன்பம் மாத்திரமே உள்ளது. அவை அனைத்தும் பக்திமார்க்கம் ஆகும். பக்திமார்க்கத்தில் அவர்கள் அனுமனை வழிபடும் போது, அவரின் காட்சியைப் பெறுகின்றனர். சண்டிகா தேவிக்கான (சுடலை தேவி) பல ஒன்றுகூடல்கள் இருக்கின்றன. அவருடைய விக்கிரகமும் இருக்கிறது. அவர்கள் யாரை நினைக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக அவர்களின் முன்னால் தோன்றுவார்கள். எவ்வாறாயினும், அதிலிருந்து அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? பலவகையான ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்றன, ஏனெனில் அவர்கள் அதிலிருந்தே தமது வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவை அனைத்தும் அவர்களது வியாபாரமாகும். நாராயணனாக மாறுகின்ற வியாபாரத்தைவிட ஏனைய அனைத்து வியாபாரங்களும் பெறுமதி அற்றவை என அவர்கள் கூறிய போதிலும், இந்த வியாபாரத்தை மிக அரிதாக சிலரே செய்கின்றனர். தந்தைக்கு உரியவர்களாகிய பின்னர் நீங்கள் உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் தந்தைக்கே கொடுக்க வேண்டும், ஏனெனில் ஒரு புதிய சரீரம் தேவை என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: உங்கள் ஆத்மா தமோபிரதானில் இருந்து சதோப்பிரதான் ஆகினாலேயே உங்களால் கிருஷ்ணதாமத்திற்குச் செல்ல முடியும். கிருஷ்ண தாமத்தில் இருக்கும் எவரும் அழைக்க மாட்டார்கள்: எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! இங்கு மனிதர்கள் அனைவரும் அழைக்கின்றனர்: ஓ முக்தியளிப்பவரே வாருங்கள்! பாவாத்மாக்களின் இந்த உலகிலிருந்து எங்களை விடுவியுங்கள். தந்தை உங்களைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அங்கு செல்வது சிறந்ததாகும். மக்கள் அமைதியை விரும்புகின்றனர். எவ்வாறாயினும் அவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்பது தெரியாது. செயல்களைச் செய்யாது எவராலும் இருக்க முடியாது. அமைதிதாமத்திலேயே அமைதி இருக்கிறது. பின்னர் நீங்கள் நிச்சயமாக ஒரு சரீரத்தை எடுத்து செயல்களைச் செய்ய வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் செயல்களைச் செய்யும் போதும் அமைதியிலேயே இருக்கிறீர்கள். அமைதி அற்றிருக்கும் போதே மக்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றனர். இதனாலேயே அவர்கள் அமைதியை வேண்டுகிறார்கள். அமைதிதாமமே உங்கள் வீடு என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். சத்தியயுகத்தில் நீங்கள் அமைதி, சந்தோஷம் போன்ற அனைத்தையும் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு அவை அனைத்தும் வேண்டுமா அல்லது அமைதி மாத்திரம் வேண்டுமா? நீங்கள் இங்கு துன்பத்தை அனுபவம் செய்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் தூய்மையாக்குபவராகிய தந்தையை இங்கு வருமாறு அழைக்கிறீர்கள். மக்கள் கடவுளை அடைவதற்காக பக்தி செய்கின்றனர். பக்தி முதலில் கலப்படம் அற்றிருந்தது, பின்னர் அது கலப்படமாகிறது. கலப்படம் ஆகியுள்ள பக்தியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்! ஏணிப்படத்தில் அது எவ்வளவு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! எவ்வாறாயினும் கடவுள் யார் என்பதை முதலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை அவ்வாறாக்குபவர் யார்? முன்னைய பிறவியில் அவர் யாராக இருந்தார்? நீங்கள் இவற்றை விளங்கப்படுத்தும் போது மிக சாதுரியமாக இருக்க வேண்டும். இதிலிருந்து சிறந்த சேவையை செய்பவர்களது இதயத்தைக் காணலாம். பல்கலைக்கழகத்தில் நன்றாகக் கற்பவர்கள் நிச்சயமாக முன்னேறிச் செல்வார்கள். அது வரிசைக்கிரமமானது. அங்கும் சிலர் மந்த புத்தியைக் கொண்டிருக்கின்றனர். ஆத்மா சிவபாபாவிடம் கூறுகின்றார்: எனது புத்தியின் பூட்டைத் திறவுங்கள்! தந்தை கூறுகிறார்: நான் உங்களது புத்தியின் பூட்டைத் திறக்கவே வந்துள்ளேன். ஆனால் பூட்டுத் திறபட முடியாத அளவிற்கு உங்களது செயல்கள் அத்தகையதாக இருக்கின்றன. ஆகவே பாபாவால் என்ன செய்ய முடியும்? நீங்கள் பல பாவங்களைச் செய்துள்ளீர்கள். அதனையிட்டு பாபாவால் என்ன செய்ய முடியும்? நீங்கள் கற்பதில்லை என ஆசிரியரிடம் கூறினால் ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? ஆசிரியர் விசேட கருணையைக் கொண்டிருக்க மாட்டார். அவர் உங்களுக்கு மேலதிக நேரத்தைக் கொடுப்பார், அதற்கு உங்களுக்குத் தடையில்லை. பயன்படாத பல கண்காட்சிகள் உள்ளன. ஆகவே அமர்ந்திருந்து பயிற்சி செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் சிலர் உங்களை மணிமாலையை உருட்டுமாறும், ஏனையவர்கள் ஒரு மந்திரத்தை உச்சரிக்குமாறும் கூறுகின்றனர். இங்கு தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். உங்களுக்கு ஆஸ்தியைப் கொடுக்கின்ற தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையிடம் இருந்து ஏற்கனவே ஆஸ்தியைப் பெற்றிருப்பீர்கள் என்பதால் அங்கு நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களது 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆகவே தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் கோரிக் கொள்ளுங்கள். தந்தை கூறுகிறார்: விகாரத்தில் ஒருபோதும் ஈடுபடாதீர்கள். விகாரத்திற்கான ஆசையை நீங்கள் சிறிதளவு வளர்த்துக் கொண்டாலும் அது அதிகரித்துவிடும். ஒருவர் ஒரு தடவை புகை பிடிப்பாராயின், பின்னர் அவர் அந்த சகவாசத்தின் வசப்படுகிறார். பின்பு அந்தப் பழக்கத்தை விடுவது கடினமாகிறது. அவர்கள் பல சாக்குப் போக்குகளைக் கூறுவார்கள். நீங்கள் எந்தப் பழக்கத்தையும் உருவாக்கக் கூடாது அத்துடன் ஏனைய அனைத்து தீய பழக்கங்களை நிச்சயமாக நிறுத்தவும் வேண்டும். தந்தை கூறுகிறார்: வாழும் போதே சரீரத்தின் விழிப்புணர்வைத் துறந்து என்னை நினைவு செய்யுங்கள். தேவர்களுக்கு தூய உணவே பிரசாதமாக எப்போதும் படைக்கப்படுகிறது. நீங்களும் தூய உணவையே உண்ண வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒரு மலரைப் போன்று முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒரு பெண் தனக்கு கணவனாகப் போகின்றவரைக் கண்டதும் அவளது முகம் மலர்கிறது. அவள் அழகிய ஆபரணங்களையும், சிறந்த ஆடைகளையும் அணிந்து பிரகாசிக்க ஆரம்பிகிறாள். நீங்கள் இப்பொழுது இந்த ஞான அலங்காரங்களை அணிந்துள்ளீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இயற்கை அழகைக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரும் சுந்தர் (அழகானவர்) என அழைக்கப்படுகிறார். அரசன், அரசி, இளவரசர், இளவரசி அனைவருமே அழகானவர்கள். அங்கு இயற்கையும் சதோப்பிரதானாகவே உள்ளது. இலக்ஷ்மி நாராயணனைப் போல் இயற்கை அழகை இங்கு எவராலும் உருவாக்க முடியாது. எவராலும் அவர்களை இந்தக் கண்களால் பார்க்கவும் முடியாது. ஆம், நீங்கள் காட்சிகளைப் பெறுகிறீர்கள், ஆனால் அந்தக் காட்சி மூலம் எவராலும் அதேபோல் மிகச் சரியான உருவத்தை உருவாக்க முடியாது. ஆம், ஓர் ஓவியர் அக்காட்சியைப் பெற்று, அக்கணமே அமர்ந்து அதனை அவர் வரைய ஆரம்பித்தால், அது சாத்தியம். ஆனால் அது கடினமாகும். ஆகவே பாபா உங்களை அழைத்துச் செல்வதற்காக இப்பொழுது வந்துள்ளார் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவில் கொண்டிருக்க வேண்டும். உங்களது சுவர்க்க ஆஸ்தியை நீங்கள் பாபாவிடம் இருந்து பெறுகின்றீர்கள். எங்களது 84 பிறவிகளும் இப்பொழுது முடிவடைந்துள்ளன. உங்களது புத்தியானது அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கும் போது நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சற்றேனும் விகாரமான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. அதனாலேயே திரௌபதி அழைத்தார். தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் செவிமடுப்பதுடன் இந்த எனது ஸ்ரீமத்தை ஏனையோருக்கும் கூறுங்கள். தந்தை மகனை வெளிப்படுத்துகிறார், மகன் தந்தையை வெளிப்படுத்துகிறார். தந்தை யார்? தந்தை சிவன் ஆவார். சிவனும் சாலிகிராம்களும் நினைவு கூரப்படுகின்றனர். சிவபாபா உங்களுக்குக் கூறும் அனைத்தையும் பின்பற்றுங்கள். “தந்தையைப் பின்பற்றுங்கள்!” இது அவரது புகழாகும். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, என்னைப் பின்பற்றி தூய்மை ஆகுங்கள். என்னைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். உங்கள் லௌகீகத் தந்தையைப் பின்பற்றும்போது, 63 பிறவிகளில் நீங்கள் ஏணியில் கீழிறங்குகிறீர்கள். இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையை நீங்கள் இப்பொழுது பின்பற்றி மேலேறுங்கள். நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: ஒவ்வோர் இரத்தினமும் பலநூறாயிரம் ரூபாய்கள் பெறுமதியானவை. ஒவ்வொரு நாளும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில் அனைவருக்கும் இரண்டு தந்தையரினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். லௌகீகத் தந்தை தூய்மை அற்றவர் ஆகுவதற்கான ஆஸ்தியையே கொடுக்கிறார், ஆனால் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தை தூய்மை ஆகுவதற்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். அதிகளவு வேறுபாடு உள்ளது! அப்பாலுள்ள தந்தை இப்பொழுது கூறுகிறார்: தூய்மை ஆகுங்கள்! விகாரத்தில் ஈடுபடுபவர்களே தூய்மையற்றவர்கள் எனப்படுகின்றனர். தூய்மை அற்றவர்களுக்குத் தூய்மையாகுவதற்கான வழியை காட்டுவதே உங்கள் பணியாகும். அப்பாலுள்ள தந்தையும் உங்களைத் தூய்மை ஆகுமாறு இப்பொழுது கூறுகின்றார். விநாசம் உங்களுக்கு சற்று முன்னால் இருப்பதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நிச்சயமாக அப்பாலுள்ள தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். கண்காட்சிகளில் இந்தச் சத்தியத்தை எழுதுமாறு நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்: அப்பாலுள்ள தந்தையை நீங்கள் பின்பற்றுவீர்களா? தூய்மை அற்றவர் ஆகுவதை நீங்கள் நிறுத்துவீர்களா? நீங்கள் எழுத வேண்டும்: தந்தை மாத்திரமே இந்த உத்தரவாதத்தை அளிக்கிறார். நீங்களும் இந்த உத்தரவாதத்தை அளிக்கலாம். தூய்மையாக்குபவரை வாருங்கள் என்று அழைக்கும் அளவிற்கு நீங்கள் ஏன் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றீர்கள்? அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. தந்தை உங்களுக்கு உங்களது சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதால் நாளுக்கு நாள் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷமானவர்களாக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தீய, கண்ணியமற்ற பழக்கங்களை ஆரம்பிக்காதீர்கள். வாழும் போதே சரீரம் என்ற விழிப்புணர்வைத் துறவுங்கள். ஒரு மலரைப் போன்று முகமலர்ச்சியுடன் இருங்கள்.2. இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையைப் பின்பற்றித் தூய்மை ஆகுங்கள். அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கான சத்தியத்தைச் செய்வதுடன் ஏனையவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகி, உங்களின் தேவதை ரூபத்தில் விகாரமற்றவராக இருப்பதை இலகுவாக அனுபவம் செய்வீர்களாக.ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும் குழந்தைகள் இலகுவாக விகாரம் அற்றவர்கள் ஆகுகிறார்கள். உங்களிடம் ஆத்ம உணர்வு ஸ்திதி இருக்கும்போது, உங்களால் உங்களின் எண்ணங்களிலேனும் உங்களின் விகாரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். இந்த அளவிற்கு விகாரம் அற்றவர்களால் எந்த வகையான தூய்மையின்மை அல்லது பஞ்சபூதங்களின் எந்த வகையான கவர்ச்சியாலும் கவரப்பட முடியாது. அவர்கள் தேவதைகள் எனப்படுகிறார்கள். இதற்கு, உங்களின் பௌதீக சரீரத்தில் இருக்கும்போதே, உங்களின் அசரீரியான, ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்.
சுலோகம்:
உங்களின் வாழ்க்கையில் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, குறிப்பாக அமிர்த வேளையில் ஏகாந்தத்திற்கான அன்பைக் கொண்டிருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
பிராமண ஆத்மாக்களுக்கு ஏற்கனவே இந்த ஞானம் உள்ளது. எனவே, நீங்கள் அவர்களுக்கு இரண்டு முறைகளில் அருள்பவர்கள் ஆகவேண்டும். முதலில், ஆத்மாக்களுக்கு என்ன சக்தி தேவைப்படுகிறதோ, அந்தச் சக்தியை அவர்களுக்குத் தானம் செய்வதற்கு, உங்களின் மனம், அதாவது, உங்களின் தூய மனோபாவத்தையும் அதிர்வலைகளையும் பயன்படுத்துங்கள். அதாவது, நீங்கள் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக, உங்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளில், சதா நற்குணங்களின் சொரூபமாக இருங்கள். ஒரு நடைமுறை உதாரணமாகி, மற்றவர்களுடன் ஒத்துழையுங்கள். அதனால் அவர்களால் இலகுவாக நற்குணங்களைக் கிரகிக்க முடியும். இதுவே நற்குணங்களைத் தானம் செய்தல் எனப்படுகிறது. தானம் செய்வது என்றால், ஒத்துழைத்தல் என்று அர்த்தம்.