02.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய இராச்சிய பாக்கியத்தை உருவாக்குவதற்கே இங்கே வந்திருக்கின்றீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, உங்கள் கல்வியில் கவனம் செலுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாக்கியம் தொடர்ந்தும் மேன்மை அடையும்.

கேள்வி:
சங்கம யுகத்தில் எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்குகின்றீர்கள்?

பதில்:
சங்கம யுகத்தில், தந்தையின் ஸ்ரீமத்: இனிய குழந்தைகளே, விகாரம் அற்றவர்கள் ஆகுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருபொழுதும் பாவச் செயல்கள் எதனையும் செய்யாது விட்டால், 21 பிறவிகளுக்கு உங்கள் பாக்கியம் மேன்மையானதாக ஆகுகின்றது.

பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறே வந்துள்ளேன்…

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இவ்விரு வரிகளினதும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள், தங்கள் கைகளை உயர்த்த வேண்டும். “எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறே நான் வந்துள்ளேன்” எனக் கூறியவர் யார்? ஓர் ஆத்மாவே ஆவார். உங்கள் ஒவ்வொருவரினதும் ஆத்மாவும் கூறுகிறார்: “எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறே நான் வந்துள்ளேன்”. ஆனால் எந்தப் பாக்கியத்தை? புதிய உலகிற்குச் செல்வதற்கான பாக்கியத்தை ஆகும். சுவர்க்கமே புதிய உலகம். நரகம் பழைய உலகம். சகல ஆத்மாக்களும் இவ்வாறு கூறுகின்றனர். ஓர் ஆத்மாவிற்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை, அப்பொழுதே அவரால் பேச முடியும். சரீரத்தில் உயிர்வாழும் ஆத்மா கூறுகிறார்: நான் எனது பாக்கியத்தை உருவாக்குவதற்காகவே பாடசாலைக்கு வந்திருக்கின்றேன். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? ஞானக்கடலான சிவபாபாவே ஆவார். ஒரேயொரு தந்தையே மனிதர்களைத் தேவர்களாகவும், தூய்மை அற்றவர்களைத் தூய்மையானவர்களாகவும், நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகளாகவும் மாற்றுகிறார். இந்த நரகம் தீக்கிரையாக்கப்பட வேண்டும். தாங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளோம் எனக் குழந்தைகள் கூறுகின்ற, வேறெந்தப் பாடசாலையும் உலகில் இருக்கவும் முடியாது, தந்தையும், ஆசிரியரும், குருவும் நானே எனக் கூறக்கூடிய வேறு எவரும் உலகில் இருக்கவும் முடியாது. இந்தப் பிரம்மாவால் கூட அவ்வாறு கூற முடியாது. சிவபாபா மாத்திரமே கூறுகிறார்: நானே அனைவரதும் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவேன். அவர் இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கிறார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாக்கியத்தை உருவாக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் எங்களது புதிய உலக இராச்சியம் எனும் பாக்கியத்தை உருவாக்க வந்துள்ளோம். இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். தந்தை வந்து, புதிய உலகை ஸ்தாபிக்கிறார். நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதற்குக் கற்கிறீர்கள். அதாவது, நீங்கள் உங்களுடைய இராச்சிய பாக்கியத்தை உருவாக்குவதற்கே இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கு இராஜயோகம் கற்கிறீர்கள். திரைப்படம் தயாரிப்பவர்களாலேயே இப்பாடல் இயற்றப்பட்டிருந்தாலும், தந்தை இங்கே அமர்ந்திருந்து வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துவதைப் போன்றே, இப்பாடலின் அர்த்தமும் இப்பொழுது மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. இந்நேரத்தில் முழு உலகிலும் பக்தி நிலவுகிறது. சத்திய யுகத்தில் பக்தியோ அல்லது ஆலயங்கள் போன்றவையோ இருப்பதில்லை. நீங்கள் அரைக் கல்பமாகப் பக்தி செய்து, இப்பொழுது கடவுளைக் கண்டுகொண்டீர்கள். ஆரம்பத்தில் பாரதத்திலே தேவர்களின் இராச்சியம் இருந்தது. பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்பொழுது, அவர்களின் பாக்கியம் சீரழிந்தது. இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்கள் பாக்கியம் உருவாக்கப்படுகிறது. தந்தை உங்கள் பாக்கியத்தை உருவாக்;குவதற்கு வந்துள்ளார். அவர் கூறுகிறார்: “குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்”. நீங்கள் மிகுந்த பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். ஆரம்பத்திலே சிவபாபாவிற்கான பக்தி மாத்திரமே இருக்கின்றது. அது கலப்படமற்ற பக்தி, ஆனால் பின்னர் பக்தியும் கலப்படம் நிறைந்ததாக ஆகுகின்றது. எனவே, கடவுள் என்று அழைக்கப்படுபவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் முதலில் கொண்டிருக்க வேண்டும். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்களுக்குள் பிரவேசித்ததும் பேச ஆரம்பிப்பதைப் போன்றே, அவரும் இந்தச் சரீரத்தில் அமர்ந்திருந்து, பேசுகின்றார். சிலவேளைகளில், ஒருவர் மரணித்;த பின்னர், அவரை மயானத்திற்கு எடுத்துச் செல்கையில், பாதி வழியில் அவர் அசைய ஆரம்பிக்கின்றார். அவருடைய ஆத்மா பிரிந்து சென்று, மீண்டும் திரும்பி வந்தாரா? இல்லை. ஆத்மா மிகவும் சூட்சுமமானவர், அவர் எங்கோ மறைந்திருந்தார். எனவே, அவர் உணர்வற்றிருந்தார் எனவும், எவருமே அதனை அறிந்திருக்கவில்லை எனவும் கூறப்படும். சிலவேளைகளில் அவ்வாறு நிகழ்வதுண்டு. சிலவேளைகளில் ஒருவர் சிதையில் இருந்தே எழுந்தும் விடுகின்றார். எனவே அவர் சிதையிலிருந்து கீழிறக்கப்படுகிறார். எனவே, அது என்ன? ஆத்மா வேறெங்கோ மறைந்திருந்து, மீண்டும் தனது சொந்த இடத்திற்குத் திரும்பவும் வந்திருக்கின்றார். ஒரு சரீரத்திலே ஆத்மா இல்லாத பொழுது, அது முழுமையான சடலமாக உள்ளது. பரந்தாமமே ஆத்மாக்களின் தாமம் ஆகும். நாங்கள் அவ்வுலக வாசிகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில், ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து சத்திய யுகத்திற்குக் கீழிறங்கி வந்தோம். தேவர்களாக இருந்த, பாரத மக்களே முதலில் கீழிறங்கி வந்திருக்க வேண்டும். உண்மையில், ஒரு சமயத்தை ஸ்தாபிப்பவர்கள் இறுதிவரை இருக்கிறார்கள். பௌத்த சமயமும், கிறிஸ்தவ சமயமும் (அவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர்) சதா காலமும் உள்ளன. இராச்சியத்தை ஆட்சி செய்த, தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் மாத்திரமே மறைந்து விட்டது. தாங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுபவர்கள் எவருமே இல்லை. பாரத மக்கள் தங்கள் தர்மத்தை மறந்து விட்டார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். எங்கள் இல்லற தர்மம் தூய்மையானதாக இருந்தது. அது சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளின் முற்றிலும் விகாரமற்ற இராச்சியமாக இருந்தது. அவர்கள் இலக்ஷ்மி தேவி என்றும், நாராயண தேவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். உண்மையில், ஒரேயொரு கடவுளே இருக்கிறார், அவர் மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். இலக்ஷ்மி, நாராயணனிடம் இந்த ஞானம் எதுவும் இல்லை. சிவபாபா மாத்திரமே ஞானக்கடல். அவர் இங்கிருந்தவாறு, குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள், ஆனால் அங்கே சென்றதும், இக்கல்வியை நீங்கள் மறந்திருப்பீர்கள். இப்பொழுது, ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவரிலும் 84 பிறவிகளின் பாகங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் சென்று, சத்திய யுகத்தில், உங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்றும், இப்பொழுது பாபாவிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தைக் கோருகின்றீர்கள் என்றும் கூறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பாட்டனாரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள், ஆனால் அது உங்கள் சொந்த முயற்சிக்கேற்பவே நிகழ்கிறது. இது உங்கள் மத்தியில் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை. அறியாமைப் பாதையில், அது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் வைகுந்தத்தை ஸ்தாபிக்கின்றேன். அதிலே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவது நீங்கள் செய்கின்ற முயற்சியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிவதுடன், நீங்களும் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தங்கமானது அதிலுள்ள கலப்படங்கள் அகற்றப்படுவதற்காக ஒரு சூளையினுள் இடப்படுகிறது, பின்னர் அது தங்கக் காசாக மாறுகிறது. இந்த ஆத்மாவும் நிஜத் தங்கமாக இருந்து, பின்னர் தனது பாகத்தை நடிப்பதற்காக இங்கே வந்தார். ஆரம்பத்திலே ஆத்மா தங்க யுகத்தினராக இருந்தார், பின்னர் அவரினுள் வெள்ளிக் கலப்படம் கலந்தது. ஓர் ஆத்மா சிறிது தூய்மை அற்றவர் ஆகுவதால், அவருடைய சக்தியும் படிப்படியாகக் குறைவடைகின்றது. ஒரு கட்டடமும் முதலில் புதியதாக இருந்து, பின்னர் படிப்படியாகத் தொடர்ந்தும் பழையதாக ஆகுகின்றது. நூறு வருடங்களுக்குப் பின்னர் அது பழையது என்றே நீங்கள் கூறுவீர்கள். உலகமும் பழையதாகவும், புதியதாகவும் ஆகுகின்றது. 5000 வருடங்களுக்கு முன்னர் அது புதியதாகியது. அந்த இராச்சியத்திலே இருந்த தேவர்கள் எங்கே சென்றார்கள்? 84 பிறவிகளை எடுத்ததும், அவர்கள் இப்பொழுது பழையவர்களாகி விட்டார்கள். ஆத்மா அசுத்தமாகி விட்டதால், சரீரமும் அசுத்தமாகி விட்டது. அவர் அழகானவரிலிருந்து அவலட்சணமானவர் ஆகிவிட்டார். ஸ்ரீகிருஷ்ணரும் அவலட்சணமானவராகவும், அழகானவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அவர் தனது பாதங்களை நரகத்தை நோக்கியும், முகத்தைச் சுவர்க்கத்தை நோக்கியும் வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறார். நீங்களும்; அதே குலத்தைச் சேர்ந்தவர்கள். உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், முகங்கள் சுவர்க்கத்தை நோக்கியும் இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் முதலில் சத்தத்திற்கு அப்பாற்பட்ட தாமத்திற்கும், பின்னர் சுவர்க்கத்திற்கும் செல்வீர்கள். கலியுகம் தீக்கிரையாக்கப்படும். அடைமழை, நெருப்பு, பூமியதிர்ச்சி போன்றவை ஏற்படும். தூய்மையற்ற ஆத்மாக்கள் தங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் முடித்து, வீடு திரும்புவார்கள், வெகு சிலரே எஞ்சியிருப்பார்கள். தூய ஆத்மாக்கள் தொடர்ந்தும் வருவார்கள். இப்பொழுது அனைவரும் முட்களாக உள்ளனர். காம வாளைப் பயன்படுத்துவது என்றால், ஒருவரைக் குத்துவதாகும். இங்கே தந்தை கூறுகிறார்: நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நான் உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைத் தருவேன், அத்துடன் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தபொழுது, உங்கள் இல்லறச் செயற்பாடும் தூய்மையாகவே இருந்தது. இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டதால், இல்லறச் செயற்பாடுகளும்; தூய்மை அற்றவையாகவும், விகாரமானவையாகவும் ஆகிவிட்டன. சத்திய யுகத்திலே உங்கள் வியாபாரச் செயற்பாடுகள் நேர்மையாக இருந்தன. அங்கே பொய் பேச வேண்டிய தேவையில்லை. பெருமளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருக்கும் பொழுதே, நீங்கள் பொய்; பேசுகிறீர்கள். அங்கே உங்களிடம் ஏராளமான செல்வம் இருக்கின்றது. தானியங்கள் போன்றவற்றிற்குச் செலவு ஏற்படவில்லை. அங்கே எவருமே ஏழைகள் இல்லை. நன்றாக முயற்சி செய்பவர்கள் சக்கரவர்த்திகளாகி, வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளைப் பெறுவார்கள். முழு முயற்சி செய்யாதவர்கள் பிரஜைகள் ஆகுவார்கள். அங்கே அரசர், அரசி, இளவரசர்கள், இளவரசிகள் என முழு வம்சமும் இருக்கின்றது. அதன்பின்னர் வரிசைக்கிரமமான செல்வந்தர்களில் இருந்து ஏழைகள் வரை பிரஜைகள் இருப்பார்கள். அங்கே அனைவரும் தூய்மையானவர்களாகவே இருப்பார்கள். அங்கே அரசரும், அரசியும், ஓர் ஆலோசகரும் இருப்பார்கள். அங்கே பல ஆலோசகர்கள் இருக்க மாட்டார்கள்; அரசனிடம் இராச்சியத்தை ஆட்சிசெய்வதற்கான விவேகத்தின் சக்தி இருக்கின்றது. எனவே தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற, அதே முறையிலேயே குழந்தைகளாகிய நீங்களும் விளங்கப்படுத்த வேண்டும்: பாரத மக்களாகிய நாங்கள் தேவர்களாக இருந்தோம். சத்திய யுகத்திலே இது எங்களின் இராச்சியமாக இருந்தது. நாங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தபொழுது, எங்கள் இல்லறச் செயற்பாடுகளில் தூய்மையானவர்களாக இருந்தோம். பின்னர் படிப்படியாகத் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, நாங்கள் நரகவாசிகள் ஆகினோம், இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆகுகின்றோம். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு ஒரு பிறவியும், நரகவாசிகள் ஆகுவதற்கு 84 பிறவிகளும் எடுக்கின்றன. ஏணிப் படத்திலே இது மிகத் தெளிவாகக் காட்டப்படுகிறது. நீங்கள் சென்று, சுவர்க்கத்தில் ஆட்சிபுரிவீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் பிரவேசித்துள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறி, உங்களை ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற்றுகிறார். சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கின்ற அம்மக்கள், உண்மையில் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவதில்லை. எனவே அக்கதை பொய்யானது. இங்கே நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணனாக மாறுவதற்கே அமர்ந்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களைத் தூய்மை ஆகுமாறும், ஒரேயொருவரை மாத்திரமே சதா நினைவு செய்யுமாறும் கூறுவதில்லை. அவர்கள் பௌர்ணமி தினத்தில் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகிறார்கள். இப்பொழுது, பூரண சந்திரன் இருக்கும் பொழுது, அது பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இறுதியிலே, சந்திரனின் மிகவும் மெல்லிய கீற்றே எஞ்சியிருக்கிறது, அவர்கள் அதைக் காரிருள் நிறைந்த இரவான, “அமாவாசை” என்று அழைக்கிறார்கள். சத்திய, திரேதா யுகங்கள் பகல் என்றும், துவாபர, கலியுகங்கள் இரவு என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் யாவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிவபாபா இங்கே அமர்ந்திருந்தவாறு உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அவர் இவரினுள் பிரவேசித்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை கூறுகிறார்: இவருடைய ஆத்மா நெற்றியின் மத்தியில் இருப்பதைப் போன்றே, நானும் வந்து, இங்கே அமர்ந்து கொள்கின்றேன். நான் அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். ஆரம்பத்திலே நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். இப்பொழுது தந்தையாகிய, என்னை நினைவு செய்யுங்கள். தூய்மை ஆகாமல் எவராலும் வீடு திரும்ப முடியாது. நீங்கள் தூய்மை ஆகும்பொழுது, பறந்து செல்வீர்கள். அனைவரும் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள், எனவே எங்களால் முக்தி தாமமான எங்கள் வீட்டிற்குப் பறந்து செல்ல முடியும்; அதுவே ஆத்மாக்களாகிய எங்கள் வீடாகும். தூய்மை அற்றவர்களால் வீடு திரும்பிச் செல்ல முடியாது. இந்தக் கற்பித்தல்களை மிக நன்றாகக் கிரகிப்பவர்களே, சுவர்க்கத்திற்கு மிக விரைவாகச் செல்வார்கள். இல்லாவிடில் அவர்கள் தாமதமாகவே வருவார்கள். ஒருவர் ஒரு புதிய வீட்டினுள் செல்ல வேண்டும். ஏனெனில் புதிய வீட்டிலே அதிக சந்தோஷம் இருக்கிறது. நீங்களே முதலாவதாகச் சத்திய யுகத்திற்குக் கீழிறங்கி வரவேண்டும். மம்மாவும், பாபாவும் சுவர்க்கத்திற்குச் செல்கிறார்கள். எனவே நீங்கள் ஏன் தாமதமாகச் செல்ல வேண்டும்? நீங்கள் பிரம்மாவையும் பின்பற்றலாம். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். எதைப் பற்றியேனும் ஏதாவது சிரமம் இருந்தால், நீங்கள் சிவபாபாவிடம் கேட்கலாம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே, நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். பழைய உலகில், நீங்கள் ஐந்து விகாரங்களான, இராவணனின் வழிகாட்டல்களையே தொடர்ந்தும் பின்பற்றினீர்கள். சரீர உணர்வே முதல் இலக்க விகாரம். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். ஆத்மாவாகிய நான், அமைதி தாமம் எனவும் அழைக்கப்படுகின்ற, பரந்தாமவாசி ஆவேன். வேறு எவராலும் அத்தகைய விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அங்கங்களினூடாக அவர் கூறுவதைச் செவிமடுக்கிறீர்கள். சத்திய யுகத்தில் எவருடைய சரீரமும் சீரழிந்து போவதில்லை. இங்கே எங்காவது அமர்ந்திருக்கும் பொழுது, அகால மரணம் இடம்பெறுகின்றது. அத்தகைய விடயங்கள் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அது சுவர்க்கம், வைகுந்தம் என அழைக்கப்படுகிறது. நாங்கள் மறுபிறவிகளை எடுத்துச் சக்கரத்தைச் சுற்றி வருகின்றோம், நாங்கள் இப்பொழுது எங்களின் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துவிட்டோம். பின்னர் பாபா வந்து, குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது இது நரகமாக உள்ளது. நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாறுவதற்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே நீங்கள் இப்பொழுது இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்காகவே சிவபாபாவிடம் வந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும், உங்கள் பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள்: ஒவ்வொரு 5000 வருடங்களும் நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றோம். பின்னர் அது இராவண இராச்சியம் ஆகியவுடன், நாங்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகுகின்றோம். இப்பொழுது அனைவரும் தூய்மை அற்றவர்களாகவும், விகாரமானவர்களாகவும் உள்ளனர். இப்பொழுது மாத்திரமே தந்தை வந்து, புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். புதிய உலகில் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். மேலே இருப்பது ஆத்மாக்களின் விருட்சம். பின்னர் அவர்கள் தங்களுக்கே உரிய நேரத்தில் கீழிறங்கி வருவார்கள். அது எங்கள் இராச்சியமாக இருக்கும்பொழுது, வேறெந்தச் சமயத்தவர்களும் இருக்க மாட்டார்கள். பின்னர் துவாபர யுகத்திலேயே இராவண இராச்சியம் ஆரம்பமாகும். இவ்விடயங்கள் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகியுங்கள். இங்கே நீங்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாற வேண்டும். நரகவாசிகளாக உள்ள மனிதர்கள் அசுரர்கள் என்றும், சுவர்க்கவாசிகளாக உள்ள மனிதர்கள் தேவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இப்பொழுது அனைவரும் அசுர சுபாவத்தைக் கொண்டுள்ளனர். தந்தை இப்பொழுது இங்கே அமர்ந்திருந்து, நீங்கள் முயற்சி செய்வதற்கு உதவி புரிகின்றார். அவர் கூறுகிறார்: தூய்மை ஆகுங்கள்! ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடர்ந்தும் பாபாவிடம் கேளுங்கள். சிலர் பாபாவிடம் கூறுகின்றனர்: ‘பாபா, நான் எனது வியாபாரத்திலே பொய் பேச வேண்டியுள்ளது; பொய்கள் கூறுவதால், நான் பாவத்தைச் சேமிப்பேனா?’ அவர்கள் தொடர்ச்சியாகத் தந்தையை நினைவு செய்தால், அவர்களின் பாவங்கள் அழிக்கப்படும். இன்றைய உலகில் அனைவரும் தொடர்ந்தும் பாவங்கள் செய்கிறார்கள். அவர்கள் பல்வேறு இலஞ்சங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். கண்காட்சிகளில் உள்ள படங்களே வரைபடங்கள் ஆகும். அத்தகைய வரைபடங்கள் வேறெங்கும் இல்லை. ஒருவர் அதைப் பார்த்துப் பிரதி செய்தாலும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மாட்டார். பலர் கண்காட்சிகளுக்கும், விழாக்களுக்கும் வருகிறார்கள். கூறப்படுகிறது: ஏழு நாட்களுக்கு வந்து, இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டால், நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் நரகவாசிகள். ஏணிப் படத்தில் இது மிகவும் தெளிவாக உள்ளது. இது தூய்மையற்ற உலகம், தூய உலகம் (படத்தில்) மேலே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சிவபாபாவிற்குச் சத்தியம் செய்கிறீர்கள்: பாபா, நான் நிச்சயமாக, ஒரு நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசி ஆகுவேன். நீங்கள் இப்பொழுது சிவாலயத்திற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. மாயையின் புயல்கள் பல வரும், ஆனால் நீங்கள் உங்களைத் துகிலுரிய (தூய்மை அற்றவராகுதல்) அனுமதிக்கக் கூடாது. நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினால், மாபெரும் தவறு செய்யப்படும், பின்னர் நீங்கள் தர்மராஜிடம் இருந்து கடுந் தண்டனையை அனுபவிக்க நேரிடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு மனிதனில் இருந்து தேவராக மாறுவதற்கு, உங்களின் அசுர சுபாவத்தையும், பொய் பேசும் பழக்கத்தையும் துறவுங்கள். தெய்வீக சுபாவத்தைக் கிரகியுங்கள்.

2. வீடு திரும்புவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். மாயையின் புயல்கள் வந்தாலும் கூட, உங்கள் பௌதீக அங்கங்களால் ஒருபொழுதும் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சகல உரிமைகளைக் கொண்டிருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதன் மூலம் தந்தையை உங்களின் சகபாடி ஆக்கி, சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்வதற்கான இலகுவான வழிமுறை, சகல உரிமைகளைக் கொண்டிருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதாகும். நீங்கள் சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, உங்களின் புத்தியானது வீணான அல்லது தூய்மையற்ற எண்ணங்களால் அல்லது ஏனைய பல இனிமையான விடயங்களால் தளம்பல் அடையாது. உங்களின் புத்தியை ஒருமுகப்படுத்துவதன் மூலம் நீங்கள் முகங்கொடுக்கும் சக்தி, வேறுபிரித்தறியும் சக்தி, தீர்மானிக்கும் சக்தி என்பவற்றை விருத்தி செய்து கொள்வீர்கள். இவை இலகுவாக மாயையின் பல வகையான தாக்குதல்களில் மீது உங்களை வெற்றி அடையச் செய்யும்.

சுலோகம்:
ஓர் இராஜயோகி என்பவர் சாரத்தில் இருந்து விரிவாக்கத்திற்கும் விரிவாக்கத்தில் இருந்து சாரத்திற்கும் செல்வதை ஒரு விநாடியில் பயிற்சி செய்பவர் ஆவார்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சம்பூரணம் ஆகுவதற்கு, தந்தை பிரம்மா தனது பொக்கிஷங்கள் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி நாள் வரை தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். அதன் நடைமுறைப் பெறுபேறாக அவர் சம்பூரணமான தேவதை ஆகியதை நீங்கள் கண்டீர்கள். எனவே, நிச்சயமாக தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுகின்ற இலட்சியத்தைக் கொண்டிருங்கள். நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டி இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக தந்தையைப் போல் ஆகவேண்டும் என்பது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.