04.01.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2008 Om Shanti Madhuban
ஒரு முற்றுப்புள்ளி வைத்து, சம்பூரணமான தூய்மையைக் கிரகியுங்கள். உங்களின் மனதால் சகாஷ் வழங்குவதன் மூலம், ஆத்மாக்களுக்கு சந்தோஷம் மற்றும் தூய்மையின் துளியை வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள மகத்தான குழந்தைகளைப் பார்க்கிறார். அவர் என்ன மகத்துவத்தைக் கண்டார்? உலகம் அசாத்தியம் என்று கருதுவதை நீங்கள் இலகுவாக சாத்தியம் என்று காட்டியுள்ளீர்கள். அதுதான் சத்தியத்திற்கான சத்தியம். நீங்கள் எல்லோரும் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? நீங்கள் மாற்றத்திற்காகத் திடசங்கற்பமான எண்ணத்துடன் பாப்தாதாவிற்கு ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். இந்தச் சத்தியத்தைச் (விரத்) செய்வது என்றால், உங்களின் மனோபாவத்தால் (விருத்தி) மாற்றத்தை ஏற்படுத்துதல் என்று அர்த்தம். நீங்கள் உங்களின் மனோபாவத்தை மாற்றிவிட்டீர்களா? நீங்கள் உங்களின் மனோபாவத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் சகோதரர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது. பக்தியிலும், அவர்கள் பல விடயங்களுக்காகச் சத்தியங்களைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், உங்கள் எல்லோருக்கும் தந்தையினூடாக இந்தத் திடசங்கற்பமான எண்ணம் ஏற்பட்டது. ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் அத்திவாரமே தூய்மை ஆகும். இந்தத் தூய்மையாலேயே உங்களுக்கு இறைவனின் அன்பும் இறை பேறுகள் அனைத்தும் கிடைத்துள்ளன. மகாத்மாக்கள் அதைக் கஷ்டமாக அல்லது அசாத்தியமானதாகக் கருதுகிறார்கள். ஆனால் நீங்கள் தூய்மையை உங்களின் ஆதி தர்மமாகக் கருதுகிறீர்கள். சில நல்ல குழந்தைகள் நடைமுறையில் அந்த மாற்றத்திற்காகத் திடசங்கற்பத்தைக் காட்டுவதையும் அதற்கான எண்ணத்தையும் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதா எங்கும் உள்ள இத்தகைய மகத்தான குழந்தைகளுக்குத் தனது இதயபூர்வமாகப் பற்பல ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.
நீங்கள் எல்லோரும் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், மனோபாவம், பார்வையில் தூய்மையை அனுபவம் செய்கிறீர்கள்தானே? தூய்மையின் மனோபாவம் என்றால், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். தூய்மைக்கான பார்வை என்றால், ஒவ்வோர் ஆத்மாவையும் அவர்களின் ஆத்ம உணர்வு ரூபத்தில் பார்ப்பதும் அத்துடன் சதா உங்களை இலகுவாக ஆத்ம உணர்வு ஸ்திதியில் அனுபவம் செய்வதும் என்று அர்த்தம். பிராமண வாழ்க்கையின் முக்கியத்துவம், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையைக் கொண்டிருப்பதாகும். தூய்மை இல்லாவிட்டால், பிராமண வாழ்க்கையின் புகழான, தூய்மை சக்தியால் உங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குதல் என்பதில், என்ன ஆசீர்வாதங்களை உங்களால் வழங்க முடியும்? தூய்மையால் நீங்களும் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் நீங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கிறீர்கள். தூய ஆத்மாக்கள் மூன்று விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். ஒன்று உங்களுக்கே ஆசீர்வாதங்களைக் கொடுத்தல், அதனால் நீங்கள் இலகுவாகத் தந்தையால் நேசிக்கப்படுவீர்கள். இரண்டாவதாக, ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையின் மிக நெருக்கமான, மிகவும் அன்பான குழந்தையாக நீங்கள் ஆகுவீர்கள். இதனாலேயே, நீங்கள் இலகுவாகத் தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். அத்துடன் எப்போதும் அவற்றைப் பெறுவீர்கள். மூன்றாவதாக, பிராமணக் குடும்பத்தின் விசேடமான கருவிகளிடம் இருந்தும் நீங்கள் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்தும் பெறுகிறீர்கள். இந்த மூவரிடம் இருந்தும் பெறப்படும் ஆசீர்வாதங்களால் நீங்கள் சதா தொடர்ந்து பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்கிறீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களையே கேட்பதுடன், சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் சதா தூய்மையின் சக்தியையும் தூய்மையின் பழத்தையும் அனுபவம் செய்கிறேனா? எனது இதயத்தில் எப்போதும் அந்த ஆன்மீக போதையும் பெருமையும் உள்ளதா? சிலவேளைகளில், சில குழந்தைகள் அமிர்த வேளையில் சந்திப்பைக் கொண்டாடும்போது, அவர்கள் இதயபூர்வமாக உரையாடும்போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தூய்மையைக் கொண்டிருப்பதனால் நீங்கள் பெறுகின்ற அதீந்திரிய சுகத்தின் பலனைத் தாம் எப்போதும் கொண்டிருப்பதில்லை எனக் கூறுகிறார்கள். அவர்களுக்கு அது சிலவேளைகளில் கிடைக்கிறது, ஆனால் ஏனைய வேளைகளில் கிடைப்பதில்லை. ஏனென்றால், அதீந்திரிய சுகம் என்பது தூய்மையின் பழம் ஆகும். எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் யார்? நீங்கள் சதா அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும் அதை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் உங்களை என்னவென்று அழைக்கிறீர்கள்? நீங்கள் உங்களின் பெயர்களை எழுதும்போது, என்னவென்று எழுதுகிறீர்கள்? பிகே. இன்னார். பிகே. இன்னார். அத்துடன் நீங்கள் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்றும் அழைக்கிறீர்கள். நீங்களே அத்தகையவர்கள், அப்படித்தானே? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்களா? உங்களை சிலவேளைகளில் மட்டுமன்றி, எல்லா வேளையும் மாஸ்ரர் சர்வசக்திவான்களாகக் கருதுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எல்லா வேளையும்? கவனமாக இருங்கள், இதைப் பற்றிச் சிந்தியுங்கள்! நீங்கள் எல்லா வேளையும் இப்படி இருக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. ஒரு சிலர் தமது கைகளை உயர்த்துகிறார்கள். ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் சதா இப்படி இருக்கிறீர்களா? வெறுமனே உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள். சதா இப்படி இருப்பவர்கள் மட்டுமே தமது கைகளை உயர்த்த வேண்டும். மிகச்சிலரே அப்படி இருக்கிறார்கள். பாண்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பின்னால் அமர்ந்திருப்பவர்கள், மிகச்சிலரே இருக்கிறார்கள். ஒன்றுகூடல் முழுவதும் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. ஓகே, நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்றால், அந்த வேளையில் சகல சக்திகளும் எங்கே செல்கின்றன? ஒரு மாஸ்ரர் என்றால், ஓர் அதிபதி என்று அர்த்தம். அத்துடன் ஒரு மாஸ்ரர் என்பவர் தந்தையை விட உயர்ந்தவர். எனவே, சோதித்துப் பாருங்கள்: தூய்மையின் அத்திவாரத்தில் நிச்சயமாக ஏதோ பலவீனம் உள்ளது. என்ன பலவீனம் உள்ளது? மனதில், அதாவது, உங்களின் எண்ணங்களில் பலவீனம் உள்ளதா? உங்களின் வார்த்தைகளில் அல்லது உங்களின் செயல்களில் பலவீனம் இருக்கிறதா? அல்லது, உங்களின் கனவுகளில் பலவீனம் உள்ளதா? ஏனென்றால், ஒரு தூய ஆத்மாவின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகள் மற்றும் கனவுகள் என்பவை இயல்பாகவே சக்திவாய்ந்தவை. உங்களின் மனோபாவத்தை மாற்றுகின்ற சத்தியத்தை நீங்கள் செய்திருப்பதனால், அது ஏன் ‘சிலவேளைகளில்’ என்று ஆக வேண்டும்? நீங்கள் காலத்தைப் பார்க்கிறீர்கள், காலத்தின் அழைப்பையும் பக்தர்களின் அழைப்பையும் ஆத்மாக்களின் அழைப்பையும் கேட்கிறீர்கள். அதனால், நீங்கள் அனைவரும் ‘சடுதியாக’ என்ற பாடத்தை உறுதியாக்கி உள்ளீர்கள். ஆகவே, அத்திவாரத்தில் பலவீனம் என்றால், தூய்மையில் பலவீனம் என்று அர்த்தம். உங்களின் வார்த்தைகளில் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இல்லை என்றால், அவர்கள் தூய்மையை எதிர்த்தால், உங்களால் அதீந்திரிய சுகத்தின் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. இதன் அர்த்தம், சம்பூரணமான தூய்மையின் சந்தோஷம் என்பதாகும். ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் இலட்சியமே, அசாத்தியத்தைச் சாத்தியம் ஆக்குவதே ஆகும். இத்தகைய ஆத்மாக்களுக்கு இந்த வார்த்தைகள் தெரியாது: எந்தளவிற்கு உங்களிடம் இது இருக்கிறதோ, அதற்கேற்ப, உங்களிடம் அது இருக்கும்... அல்லது, அவர்களிடம் இருக்க வேண்டிய அளவு இல்லை. (அவர்களிடம் இந்த மொழி இருக்காது). எனவே, நாளை அமிர்த வேளையில் உங்களையே சோதித்துப் பாருங்கள். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், மற்றவர்களைப் பார்க்காதீர்கள். ஆனால் உங்களைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். எத்தனை சதவீதத்திற்கு நீங்கள் தூய்மைக்கான சத்தியத்தை நிறைவேற்றுகிறீர்கள் என்று சோதித்துப் பாருங்கள். நான்கு விடயங்களைச் சோதித்துப் பாருங்கள். 1. மனோபாவம். 2. உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும். ‘இவர் எப்போதும் இப்படித்தான்’ என்று நினைக்காதீர்கள். ஆனால் அந்த ஆத்மாவிற்கும் தூய உணர்வுகளைக் கொண்டிருங்கள். நீங்கள் உங்களை உலகை மாற்றுபவர்களாகக் கருதுவதால் - நீங்கள் எல்லோரும் அத்தகையவர்களா? நீங்கள் உங்களை உலகை மாற்றுபவர்களாகக் கருதுகிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதற்கு நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். இதற்காக நீங்கள் உங்களின் கைகளை மிக நன்றாக உயர்த்தி உள்ளீர்கள். இதற்காகவும் பாராட்டுக்கள். எவ்வாறாயினும், பாப்தாதா உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்கிறார். பாபா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? நீங்கள் உலகை மாற்றுபவர்கள் ஆதலால், உலக மாற்றத்தில் இயற்கையின் பஞ்சபூதங்களும் அடங்குகின்றன. அவற்றை உங்களால் மாற்ற முடிகிறது. ஆனால் உங்களையும் உங்களின் சகபாடிகளையும் உங்களின் குடும்பத்தையும் உங்களால் மாற்ற முடியாதா? உலகை மாற்றுபவர் என்றால் அனைத்தையும் - ஆத்மாக்களும் இயற்கையும் - மாற்றுபவர் என்று அர்த்தம். எனவே, உங்களின் சத்தியத்தை ஞாபகப்படுத்துங்கள். நீங்கள் அனைவரும் பல தடவைகள் இதனைத் தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள். எவ்வாறாயினும், காலம் மிக வேகமாக ஓடுவதை பாப்தாதா பார்க்கிறார். அனைவரின் அழைப்பும் அதிகளவில் அதிகரிக்கின்றது. எனவே, அந்த அழைப்பைக் கேட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி, அனைவரையும் ஈடேற்றக்கூடிய ஆத்மாக்கள் யார்? நீங்கள்தான் அதே ஆத்மாக்கள், அப்படித்தானே?
பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் மற்றவர்களை ஈடேற்றுவதற்கும் உலகை ஈடேற்றுவதற்கும் மூன்று கூற்றுக்களை முடிக்க வேண்டும். உங்களுக்கு அவை என்னவென்று ஏற்கனவே தெரியும். அவற்றை அறிந்து கொள்வதில் நீங்கள் புத்திசாலிகள். நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள் என்பதை பாப்தாதா அறிவார். முதல் கூற்று, பர் சிந்தன் (மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்தல்). இரண்டாவது, பர் தர்ஷன் (மற்றவர்களைப் பார்த்தல்). மூன்றாவது, பர் மத் (மற்றவர்களின் கட்டளைகள்). இந்த மூன்று ‘பர்’ களையும் முடியுங்கள். உங்களால் பரோ- உபகாரி (மற்றவர்களை ஈடேற்றுபவர்) ஆக முடியும். இந்த மூன்று கூற்றுக்களுமே தடை ஆகுகின்றன. உங்களுக்கு அது நினைவிருக்கிறது, அல்லவா? இது எதுவும் புதியதல்ல. எனவே, நாளை அமிர்த வேளையில், இதைச் சோதித்துப் பாருங்கள். பாப்தாதாவும் சுற்றுலா செல்கிறார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் பார்ப்பார். இப்போது, காலத்திற்கு ஏற்பவும் அழைப்பிற்கு ஏற்பவும் ஒவ்வொரு துக்கத்தில் உள்ள ஆத்மாவிற்கும் உங்களின் மனங்களால் சகாஷ் வழங்குவதன் மூலம் ஒரு துளி சந்தோஷத்தையும் அமைதியையும் வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கான காரணம் என்ன? குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சட்டென்று பார்ப்பதற்காக பாப்தாதா சிலவேளைகளில் குழந்தைகளைப் பார்க்கிறார். ஏனென்றால், அவருக்குக் குழந்தைகளின் மீது அன்பு உள்ளது. அவர் குழந்தைகளுடன் திரும்பிச் செல்ல விரும்புகிறார். அவர் தனியே வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நீங்கள் பாபாவுடன் திரும்பிச் செல்வீர்கள்தானே? நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்களா? முன்னால் அமர்ந்திருப்பவர்கள், தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்ல மாட்டீர்களா? நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்லப் போகின்றீர்கள்தானே? குழந்தைகளான உங்கள் அனைவராலும்தான் பாப்தாதாவும் உங்களின் தாதிகளும் முன்னோடிக் குழுவின் உங்களின் விசேடமான பாண்டவர்களும் காத்திருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் வீட்டுக்கு ஒன்றாகத் திரும்பிச் செல்வோம் என்று அவர்களும் தமது இதயங்களில் உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளார்கள். எங்களில் வெகுசிலர் மட்டுமல்ல, ஆனால் நாம் அனைவரும் வீட்டுக்கு ஒன்றாகவே திரும்பிச் செல்வோம். எனவே, நாளை அமிர்த வேளையில், எது குறைகிறது என்பதைப் பார்ப்பதற்கு உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களில் ஏதாவது குறைகிறதா? பாப்தாதா ஒரு தடவை சகல நிலையங்களுக்கும் சுற்றுலா சென்றார். அவர் எதைக் கண்டார் என உங்களுக்குச் சொல்லட்டுமா? என்ன குறைவாக இருந்தது? ஒரு விநாடியில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் முற்றுப்புள்ளி வைப்பதும் இல்லாமல் இருப்பதை அவர் கண்டார். ஒரு முற்றுப்புள்ளி இடுவதற்கான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் கூற முடியாது. கடைசிக் காலகட்டத்தில், கடைசிக் கணத்தில், நீங்கள் நிச்சயமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாப்தாதா உங்களுக்கு ஏற்கனவே கூறிவிட்டார். எவ்வாறாயினும், அவர் எதைக் கண்டார்? நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு கொமா போடுகிறீர்கள். ‘இது ஏன் நடந்தது? என்ன நடந்தது?’ என்று சிந்தித்து, நீங்கள் மற்றவர்களின் விடயங்களை நினைவு செய்கிறீர்கள். அதனால் அதற்கு ஒரு வியப்புக்குறியை இடுகிறீர்கள். எனவே, உங்களால் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு கொமா, வியப்புக்குறி அல்லது கேள்விகளின் வரிசை காணப்படுகின்றன. எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்கு முற்றுப்புள்ளி இடும் பழக்கம் இல்லாவிட்டால், உங்களின் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் உங்களின் இறுதிக் கணங்கள் மேன்மையானவையாக இருக்காது. அவை உயர்ந்தவையாக இருக்காது. இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு வீட்டுவேலை கொடுக்கிறார்: நாளை, அமிர்தவேளையில் உங்களைச் சோதித்துப் பாருங்கள். அதன்பின்னர் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது, ஒரு விநாடியில் மீண்டும் மீண்டும் முற்றுப்புள்ளி இடும் பயிற்சியைச் செய்யுங்கள். ஜனவரி 18 இல் - அனைவருக்கும் தந்தைக்குச் சமமாக ஆகுவதற்கான அதிகளவு உற்சாகம் உள்ளது - எனவே, ஜனவரி 18 இல், அனைவரும் 18 ஆம் திகதி வரை உங்களின் பெறுபேறு என்னவென்று ஒரு சிறிய குறிப்பு எழுதி, ஒரு பெட்டியில் போட வேண்டும். உங்களால் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிகிறதா அல்லது வேறு ஏதாவது நிறுத்தற்குறிகள் பிரயோகிக்கப் பட்டதா? இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருந்தால், ஆமோதியுங்கள். குழந்தைகளான உங்களின் மீது பாப்தாதா அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். அவர் திரும்பித் தனியே போக விரும்பவில்லை, அதனால் அவர் என்ன செய்வார்? இப்போது, வேகமான, தீவிர முயற்சி செய்யுங்கள். இப்போது உங்களின் முயற்சியில் பின்தங்குவது, உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தாது.
தூய்மை என்பது ஆளுமை, நிஜம், இராஜரீகம் எனப்படுகிறது. எனவே, உங்களின் இராஜரீகத்தை நினைவு செய்யுங்கள். உங்களின் அநாதியான ரூபத்தில், ஆத்மாக்களான நீங்கள் உங்களின் தாமத்தில் தந்தையுடன் இருக்கும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். எப்படி விசேடமான நட்சத்திரங்கள் ஆகாயத்தில் பிரகாசிக்கின்றனவோ, அதேபோல், விசேட நட்சத்திரங்களான நீங்கள் உங்களின் அநாதியான ரூபத்தில் பிரகாசிக்கிறீர்கள். எனவே, ஆரம்ப காலத்திற்கான உங்களின் இராஜரீகத்தை நினைவு செய்யுங்கள். பின்னர், நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்லும்போது, தேவ ரூபத்தின் இராஜரீகத்தை நினைவு செய்யுங்கள். அனைவருக்கும் அவர்களின் தலையின் மீது அவர்களின் இராஜரீக ஒளிக்கிரீடம் உள்ளது. அநாதியாகவும் ஆரம்ப காலப்பகுதியிலும் அதிகளவு இராஜரீகம் இருந்தது. பின்னர், துவாபர யுகத்திற்கு வாருங்கள்: உங்களின் ரூபங்களில் இருந்தவாறான இராஜரீகம் வேறு எவரிடமும் இருக்கவில்லை. தலைவர்கள், நடிகர்கள், தர்மாத்மாக்களின் (புனித ஆத்மாக்கள்) உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் உங்களின் உருவங்களின் பூஜையும் சிறப்பியல்பும் மிகவும் இராஜரீகமானவை. அவர்கள் உங்களின் ரூபங்களைப் பார்க்கும்போது, அனைவருமே சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் அந்த விக்கிரகங்களிடம் இருந்து பல ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். எனவே, இவை அனைத்தும் தூய்மையின் இராஜரீகம் ஆகும். தூய்மையே பிராமண வாழ்க்கையின் பிறப்புரிமை ஆகும். தூய்மையில் எந்தவிதமான குறைவும் இப்போது முடிவடைய வேண்டும். அது நடக்கும், அந்த வேளையில் எனக்கு விருப்பமின்மை ஏற்படும், அதனால் அப்போது அது நடைபெறும் என நினைக்காதீர்கள். நீங்கள் பாபாவிற்கு மிக நல்ல பல விடயங்களைக் கூறுகிறீர்கள்: பாபா, கவலைப்படாதீர்கள், அது நடக்கும். எவ்வாறாயினும், இந்த ஜனவரியில், பாப்தாதா குறிப்பாக, அனைவரையும் சம்பூரணமான தூய்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தூய்மை என்பது பிரம்மச்சரியம் அல்ல. வீணான எண்ணங்களும் தூய்மை இன்மையே. வீணான வார்த்தைகள், அதிகாரத் தோரணை என்று அழைக்கப்படும் வீணான வார்த்தைகளின் வடிவமும் - கோபத்தின் சுவடு - தூய்மை இன்மையே ஆகும். உங்களின் சம்ஸ்காரங்களை எந்த முறையில் தூய்மையாக ஆக்குங்கள் என்றால், உங்களைத் தொலைவில் இருந்து பார்க்கும்போதே, மற்றவர்களால் உங்களின் தூய்மை அதிர்வலைகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் தூய்மையின் பெறுபேறு என்னவென்றால், ஆத்மாவும் தூய்மையாக இருப்பார், சரீரமும் தூய்மையாக இருக்கும். நீங்கள் இரட்டைத் தூய்மையைப் பெறுவீர்கள்.
இங்கே எந்தவொரு குழந்தை வரும்போதும், அவர் தந்தையிடம் இருந்து பெறுகின்ற முதலாவது ஆசீர்வாதம் என்ன? உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘நீங்கள் தூய்மை ஆகுவீர்களாக, யோகி ஆகுவீர்களாக!’ அதனால், இரண்டு விடயங்களையும் கிரகியுங்கள்: தூய்மை அத்துடன் ஒரு முற்றுப்புள்ளி, ஒரு யோகி. உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? அமிர்த வேளையில், பாப்தாதா சுற்றுலா செல்வார். அத்துடன் அவர் சகல நிலையங்களுக்கும் சுற்றுலா செல்வார். பாப்தாதாவால் ஒரு விநாடியில் எல்லா இடங்களையும் சுற்றிவர முடியும். அதனால், இந்த ஜனவரி, அவ்யக்த மாதத்திற்காக ஒரு புதிய திட்டத்தைச் செய்யுங்கள். உங்களின் மனங்களாலும் உங்களின் ஸ்திதியாலும் - அவ்யக்த செயல்களாலும் வார்த்தைகளாலும் - செய்யும் சேவையை அதிகரியுங்கள். எனவே, ஜனவரி 18 இல், பாப்தாதா அனைவரின் பெறுபேறுகளையும் பார்ப்பார். அவருக்கு உங்களின் மீது அன்பு இருக்கிறது, அல்லவா? ஜனவரி 18 ஆம் திகதி, அமிர்த வேளையில் இருந்து, நீங்கள் அன்பான விடயங்களை மட்டுமே பேசுகிறீர்கள். ‘பாபா ஏன் அவ்யக்த் ஆகினார்?’ எனக் கேட்டு நீங்கள் அனைவரும் முறைப்பாடு செய்கிறீர்கள். எனவே, தந்தையும் முறைப்பாடு செய்கிறார் - உங்களின் பௌதீக ரூபங்களில் இருந்தவண்ணம், எப்போது நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள்?
எனவே, இன்று, பாப்தாதா குறிப்பாக உங்களின் கவனத்தைச் சிறிதளவு ஈர்க்கிறார். பாப்தாதா உங்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, உங்களுக்கு அன்பையும் வழங்குகிறார். பாபாவிற்கு அன்பும் உள்ளது. ஏனென்றால், தனது ஒரு குழந்தைகூட விடுபடுவதை அவர் விரும்பவில்லை. ஒவ்வொரு செயலுக்கும் ஸ்ரீமத்தைச் சோதித்துப் பாருங்கள். அமிர்த வேளையில் இருந்து இரவுவரை ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு நீங்கள் பெற்றிருக்கும் ஸ்ரீமத்துடன் சோதித்துப் பாருங்கள். நீங்கள் பலமானவர்கள்தானே? நீங்கள் ஒன்றாகவே திரும்பிச் செல்லப் போகின்றீர்கள், அல்லவா? நீங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள்தானே? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா? ஆசிரியர்களே? பின்னால் அமர்ந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கதிரைகளில் அமர்ந்திருப்பவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாண்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எனவே, நீங்கள் சமமானவர் ஆகினால் மட்டுமே உங்களால் கையோடு கைகோர்த்துச் செல்ல முடியும். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அப்படி ஆகவேண்டும். இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். இந்தத் திடசங்கற்பம் 15 - 20 நாட்களுக்கு நீடிக்கிறது. பின்னர், படிப்படியாக, சிறிது கவனக்குறைவு உள்ளே நுழைகிறது. எனவே, அந்தக் கவனயீனத்தை முடித்துவிடுங்கள். முழுமையான உற்சாகமும் திடசங்கற்பமும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்கே நிலைத்து இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு மாதத்தின் பின்னர், சிறிது கவனயீனம் ஆரம்பிக்கிறது. எனவே, இந்த வருடம் முடியும்போது, நீங்கள் எதை முடிப்பீர்கள்? நீங்கள் வருடத்தை மட்டும் முடிவிற்குக் கொண்டு வருவீர்களா அல்லது, வருடத்துடன் கூடவே, உங்களின் எண்ணங்களிலும் உங்களின் தாரணையிலும் உள்ள பலவீனம் எதுவாயினும் அதையும் முடிவிற்குக் கொண்டு வருவீர்களா? நீங்கள் இதைச் செய்வீர்கள்தானே? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. நாங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும் (அபு கர் சல்னா ஹே) என்ற இந்தப் பாடல் இயல்பாகவே உங்களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும். நீங்கள் வெறுமனே வீட்டுக்கு மட்டும் திரும்பிச் செல்லப் போவதில்லை, ஆனால் நீங்கள் இராச்சியத்திற்கும் திரும்பி வரவேண்டும். அச்சா. பாப்தாதாவைச் சந்திப்பதற்காக இங்கே முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எழுந்து நில்லுங்கள்!
இங்கே முதல் தடவை வந்திருப்பவர்களுக்கு பாப்தாதா விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் பிந்தி வந்திருக்கிறீர்கள், ஆனால் மிகவும் தாமதமாக வரவில்லை. எவ்வாறாயினும், தீவிர முயற்சி செய்வதற்கான உங்களின் ஆசீர்வாதத்தை எப்போதும் நினைவு செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாகத் தீவிர முயற்சி செய்ய வேண்டும். ‘நான் அதைச் செய்வேன், அது நடக்கும்’ எனக் கூறாதீர்கள். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். பிந்தி வந்தவர்களும் வேகமாகச் சென்று முதலாவதாக வரவேண்டும். அச்சா.
எங்கும் உள்ள மகத்தான தூய ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் இதயபூர்வமான விசேடமான ஆசீர்வாதங்கள் உரித்தாகுக. இதயபூர்வமான அன்பும் அத்துடன் இதயத்தில் அமிழ்ந்திருப்பதற்காகப் பாராட்டுக்களும். பாப்தாதா எப்பொழுதெல்லாம் வருகிறாரோ, அப்போது எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும் ஈமெயில்கள், கடிதங்கள் மற்றும் ஏனைய பல வசதிகளின் மூலமும் தமது அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்கள் என்பதை பாப்தாதா அறிவார். யாராவது பாப்தாதாவிற்கு அந்தச் செய்திகளை வழங்க முன்னர், அனைவரின் அன்பும் நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைகின்றன. ஏனென்றால், பாபாவை நினைக்கும் நீண்ட காலம் தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் இணைப்பு பாபாவை மிக வேகமாக வந்தடைகின்றது. நீங்கள் பாபாவைத் தனிப்பட்ட முறையில் மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் சந்திக்கிறீர்கள். ஆனால், உண்மையான, தகுதிவாய்ந்த ஆத்மாக்களின் அன்பும் நினைவுகளும் அந்தக் கணமே பாப்தாதாவை வந்தடைகின்றன. பாபாவைத் தமது இதயங்களில் நினைவு செய்பவர்கள், இத்தகைய வசதிகளைக் கொண்டிராதவர்கள், அவர்களின் அன்பும் நினைவுகளும்கூட பாபாவை வந்தடைகின்றன. எனவே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் கோடானுகோடி அன்பும் நினைவுகளுடனும் பதில் அளிக்கிறார்.
இப்போது எங்கும் ஒரேயொரு அக்கறையே இருக்க வேண்டும்: பிராமணக் குடும்பம் முழுவதிலும் சம்பூரணமான தூய்மை பரவ வேண்டும். பலவீனமாக இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களைத் தூய்மை ஆக்குங்கள். இதுவே மகத்தான புண்ணியம் ஆகும். அவர்களைத் தனியே விட்டு, ‘அவர்கள் எப்படியும் அப்படித்தான், அவர்கள் ஒருபோதும் மாறப் போவதில்லை’ என்று நினைக்காதீர்கள். அந்த முறையில் அவர்களுக்கு சாபம் கொடுக்காதீர்கள். புண்ணிய காரியத்தைச் செய்யுங்கள். மாறுவதன் மூலம் நாங்கள் இதைச் செய்து காட்டுவோம். நாங்கள் நிச்சயமாக மாறுவோம். அவர்களின் நம்பிக்கைகளை அதிகரியுங்கள். ஏற்கனவே விழுந்தவர்களை மேலும் விழச் செய்யாதீர்கள். அவர்களுக்கு ஆதாரமாக இருங்கள், அவர்களுக்கு சக்தியைக் கொடுங்கள். சந்தோஷமாக இருந்து மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்தளிக்கும் சகல பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும் மிக மிக அதிகமான அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
உங்களின் ஆழமான சம்ஸ்காரத்தைச் சோதிக்கும் சிறப்பியல்பை உருவாக்கி, அதன் மூலம் மகாத்மா ஆகுவீர்களாக.நீங்கள் என்ன எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ, என்ன வார்த்தைகளைப் பேசுகிறீர்களோ, என்ன செயல்களைச் செய்கிறீர்களோ, என்ன தொடர்புகளையும் உறவுமுறைகளையும் ஏற்படுத்துகிறீர்களோ, இதைச் சோதித்துப் பாருங்கள்: இவை தந்தையினுடையதை ஒத்ததாக இருக்கின்றனவா? அனைத்திற்கும் முதலில், அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, பின்னர் அவற்றை நடைமுறையாக ஆக்குங்கள். பொதுவாக, சில ஆத்மாக்களுக்கு அனைத்திற்கும் முதலில் எல்லாவற்றையும் சோதித்துப் பின்னர், அதை ஏற்றுக் கொள்ளும் சம்ஸ்காரம் உள்ளது. அதேபோல், நீங்கள் தூய, மகான் ஆத்மாக்கள் ஆவீர்கள். அதனால் சோதிக்கும் பொறிமுறையைத் தீவிரம் ஆக்குங்கள். இதை உங்களின் ஆழமான சம்ஸ்காரம் ஆக்குங்கள். இதுவே மகத்துவம் ஆகும்.
சுலோகம்:
சம்பூரணமாகத் தூய்மையாகவும் யோகியாகவும் ஆகுவதே, அன்பின் பிரதிபலனைக் கொடுப்பதாகும்.அவ்யக்த சமிக்கை: அவ்யக்த மாதத்தில், பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இக்கட்டான சூழ்நிலைகள் அனைத்தும் வருகின்றன அல்லது வரப் போகின்றன. பஞ்ச பூதங்கள் அனைத்தும் உங்களை ஒவ்வொரு திசையிலும் அதிகளவில் அசைப்பதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்யும். எவ்வாறாயினும், வாழ்க்கையில் இருந்து விடுபட்டும் சரீரமற்ற ஸ்திதியையும் பயிற்சி செய்யும் ஓர் ஆத்மா ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பார். இத்தகையதோர் ஆத்மா எல்லாவற்றையும் இலகுவாகக் கடந்து சென்று, திறமைச் சித்தி எய்துவார். ஆகவே, இப்போது நீங்கள் சதா கர்மயோகி, சதா இலகுயோகி மற்றும் சதா விடுதலையாக உள்ள ஆத்மாவின் சம்ஸ்காரங்களை அனுபவம் செய்ய வேண்டும்.