05.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களை அழகான தேவர்கள் ஆக்குவதற்கே உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களுடைய அழகிற்கான அத்திவாரம் தூய்மையாகும்.
கேள்வி:
ஆன்மீகத் தீச்சுவாலைக்குத் தங்களை அர்ப்பணிக்கின்ற விட்டிற்பூச்சிகளின் அறிகுறி என்ன?பதில்:
1. தீச்சுவாலைக்குத் தங்களை அர்ப்பணிக்கின்ற விட்டிற்பூச்சிகள், அவர் எவ்வாறானவரோ, அவ்வாறே அவரை மிகச்சரியாக அறிந்துகொண்டு, அவரை மிகச்சரியாக நினைவு செய்கிறார்கள். 2. தன்னையே அர்ப்பணிப்பது என்றால் தந்தைக்குச் சமமாக ஆகுவதாகும். 3. தன்னையே அர்ப்பணித்தல் என்றால் தந்தையினுடையதை விட அதியுயர்ந்த இராச்சிய உரிமையைக் கோருவதாகும்.பாடல்:
விட்டிற்பூச்சிகளின் ஒன்றுகூடலில் தீச்சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். இதனை விளங்கப்படுத்துவது யார்? ஆன்மீகத் தந்தையே ஆவார். அவர் தீச்சுவாலை என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தந்தைக்குப் பெரும் புகழும் உள்ளது. இது பரமாத்மாவாகிய பரமதந்தையின் புகழ். விட்டிற்பூச்சிகளான உங்களுக்காக, தந்தை தீச்சுவாலையாக வந்துள்ளார். விட்டிற்பூச்சிகள் ஒரு தீச்சுவாலையைக் காணும் பொழுது, அவை தங்களையே அதற்கு அர்ப்பணித்து, தங்கள் சரீரங்களையும் நீக்குகின்றன. பல விட்டிற்பூச்சிகள் தங்கள் வாழ்வைத் தீச்சுவாலைக்கு அர்ப்பணித்து விடுகின்றன. குறிப்பாக, தீபாவளியன்று பல தீபங்கள் ஏற்றப்படுகின்றன. ஆதலால் இரவில் பல சின்னஞ்சிறிய பூச்சிகள் மரணிக்கின்றன. எங்களுடைய பாபாவே பரமாத்மா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். அவர் ஹுசைன் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் என்றென்றும் தூய்மையாக இருப்பதால், மிகுந்த அழகுடன் இருக்கின்றார். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது, தூய, இயற்கை அழகுடைய சரீரங்களைப் பெறுகிறார்கள். ஆத்மாக்கள் அமைதி தாமத்தில் இருக்கும் பொழுது, தூய்மையாக உள்ளனர். அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக முதலில் இங்கே வரும்பொழுது, சதோபிரதானாக உள்ளனர். பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றனர். அழகானவர்களில் இருந்து அவர்கள் அவலட்சணமானவர்கள் ஆகுகின்றனர். அதாவது, தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது, சத்திய யுகத்தவர்கள் எனக் கூறப்படுகின்றனர். பின்னர் அவர்கள் சத்தியயுகத்துச் சரீரங்களைப் பெறுகின்றனர். உலகம் பழையதாகவும், புதியதாகவும் ஆகுகின்றது. அழகான பரமாத்மாவாகிய பரமதந்தையையே பக்தி மார்க்கத்தில் “ஓ சிவபாபா!” என மக்கள் அழைக்கிறார்கள். அந்த அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை இப்பொழுது தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய ஆத்மாக்களாக மாற்றி, அவர்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளார். இந்நாட்களில் அழகான ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் என்றில்லை; இல்லை. ஒருவரின் சரீரம் அழகாக உள்ள பொழுதிலும், அந்த ஆத்மா தூய்மை அற்றவராகவே உள்ளார். வெளிநாட்டவர்கள் மிக அழகானவர்கள். இலக்ஷ்மி, நாராயணனிடம் சத்தியயுகத்து அழகு உள்ளது, ஆனால் இங்கோ மக்கள் நரகத்தின் அழகைக் கொண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் இவ்விடயங்களைப் பற்றி எதுவுமே அறியாமல் உள்ளனர். இங்குள்ள அழகு நரகத்திற்கானதே எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்கான இயற்கை அழகுடையவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் அந்த அழகுடன் 21 பிறவிகளுக்கு இருப்போம். மக்கள் இங்கு கொண்டிருக்கின்ற அழகு ஒரு பிறவிக்கு மாத்திரமே நிலைத்திருக்கிறது. பாபா இங்கு வரும்பொழுது, அவர் இவ்வுலகில் உள்ள மனிதர்களை அழகாக்குவது மாத்திரமல்ல, முழு உலகையும் அழகானதாக ஆக்குகின்றார். புதிய உலகான சத்திய யுகத்தில் அழகான தேவர்கள் மாத்திரமே உள்ளனர். அவர்களைப் போன்று ஆகுவதற்கே, நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். தந்தை தீச்சுவாலை எனவும் அழைக்கப்படுகின்றார். ஆனால் உண்மையில் அவர் பரமாத்மா ஆவார். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என அழைக்கப்படுவது போன்று, அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் புகழைப் பாடுகிறீர்கள். தந்தையும் குழந்தைகளாகிய உங்களைப் புகழ்கின்றார். உங்கள் அந்தஸ்து என்னை விடவும் மிக உயர்ந்ததாக ஆகுகின்ற வகையில், உங்களை மிக மேன்மையானவர்களாக நான் ஆக்குகிறேன். நான் எவ்வாறானவர் என்றோ, என்னவாக இருக்கிறேன் என்றோ அல்லது எனது பாகத்தை எவ்வாறு நடிக்கின்றேன் என்றோ எவருமே என்னை அறியார். எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக பரந்தாமத்தில் இருந்து வருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் சூத்திர குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பிராமணக் குலத்திற்குள் வந்துள்ளீர்கள். இதுவே உங்கள் குலம்; இந்தக் குலம் ஏனைய சமயத்தவர்களுக்கு உரியதல்ல. ஏனைய சமயத்தவர்களிடம் குலங்கள் இருப்பதில்லை. கிறிஸ்தவர்களிடம் ஒரு குலம் மாத்திரமே உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். ஆம், அவர்களும் சதோ, ரஜோ, தமோவாக ஆகுகிறார்கள். ஆனால் இக்குலங்கள் உங்களுக்கு மாத்திரமே உரியவை. உலகமும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறது. எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து உலகச் சக்கரத்தை விளங்கப்படுத்துகின்றார். ஞானக்கடலும், தூய்மைக்கடலுமான தந்தையே தான் மறுபிறவி எடுப்பதில்லை எனக் கூறுகின்றார். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற பொழுதிலும் அவர் எப்பொழுது வருகிறார் என அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அவரின் வாழ்க்கைச் சரித்திரமேனும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு சக்கரத்திலும் குழந்தைகளாகிய உங்களுக்கு நான் எப்படிப்பட்டவன், எவ்வாறானவன், எனக்குள் என்ன பாகத்தைக் கொண்டுள்ளேன், உலகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கிறது என்பவை பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கி வருகையில் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள் என உங்களுக்குத் தெரியும். நீங்களே 84 பிறவிகளையும் எடுப்பவர்கள். தாமதமாக வந்தவர்களும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்ல வேண்டும். நீங்கள் தமோபிரதான் ஆகும்பொழுது, முழு உலகமும் தமோபிரதான் ஆகுகின்றது. பின்னர் நீங்கள் நிச்சயமாகத் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டும்; இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இது இப்பொழுது கலியுகமாகும். பின்னர், சத்தியயுகம் வரும். கலியுகத்தின் இந்தக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகம் கற்பிப்பதற்காக, மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் நான் செய்ததைப் போன்று ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். இக்காலத்தில் பல யோகங்கள் உள்ளன: ஒரு சட்டநிபுணர் ஆகுவதற்கான யோகம், ஒரு பொறியியலாளர் ஆகுவதற்கான யோகம் போன்றவை. ஒரு சட்டநிபுணராக ஆகுவதற்குப் புத்தியின் யோகம் ஒரு சட்டநிபுணருடன் இணைக்கப்பட வேண்டும். நாங்கள் சட்ட நிபுணர்கள் ஆகுகின்றோம் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, நாங்கள் எங்களுக்குக் கற்பிப்பவரை நினைவு செய்கின்றோம். அவர்களுடைய தந்தைமார் வெவ்வேறானவர்கள். அவர்களுக்கு ஒரு குரு இருந்தால், அவர்கள் அவரை நினைவு செய்வார்கள். எனினும் அவர்களின் புத்தியின் யோகம் சட்ட நிபுணருடனேயே இருக்கும். ஆத்மாவே கற்கின்றார். ஆத்மாவே தனது சரீரத்தின் மூலம் ஒரு சட்டநிபுணராகவோ அல்லது நீதிபதியாகவோ ஆகுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு உங்களுக்குள்ளே சம்ஸ்காரங்களை உருவாக்குகின்றீர்கள். நீங்கள் அரைச் சக்கரமாகச் சரீர உணர்வுடனேயே இருந்தீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! கற்பதற்கான சம்ஸ்காரங்கள் ஆத்மாக்களிலேயே உள்ளன. ஒரு மனித ஆத்மாவே ஒரு நீதிபதி ஆகுகின்றார். இப்பொழுது நாங்கள் உலக அதிபதிகளான, தேவர்கள் ஆகுகின்றோம். பரமாத்மாவாகிய சிவபாபாவே எங்களுக்குக் கற்பிப்பவர். அவர் ஞானக்கடலும் அமைதிக் கடலும் செழிப்புக்கடலும் ஆவார். கடலிலிருந்து தட்டுக்கள் நிறைந்த இரத்தினங்கள் வெளித்தோன்றியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தை குறிப்பிடுகின்ற அந்த விடயங்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இவை அழியாத இந்த ஞான இரத்தினங்கள். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களால் பெரும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். அத்துடன் நீங்கள் பல வைரங்களையும், இரத்தினங்களையும் பெறுகின்றீர்கள். இந்த இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியானவை. அவை உங்களைப் பெரும் செல்வந்தர்கள் ஆக்குகின்றன. பாரதம் விகாரமற்ற உலகாக இருந்தது என நீங்கள் அறிவீர்கள். அங்கே தூய தேவர்கள் வசித்தார்கள். அவர்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களாகவும், அவலட்சணமாகவும் ஆகியுள்ளார்கள். இது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு ஆகும். ஆத்மாக்கள் சரீரத்தில் இருக்கும் பொழுதே அவர்களால் செவிமடுக்க முடியும். பரமாத்மாவும் ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் வீடு அமைதிதாமம் ஆகும். அங்கே சத்தமோ அல்லது அசைவோ இல்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை குழந்தைகளாகிய உங்களைச் சந்திப்பதற்காக இங்கே வருகின்றார். அவர் இச்சரீரத்தினூடாக உங்களைச் சந்திக்கிறார். அதுவே நீங்கள் ஓய்வெடுக்கின்ற வீடாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் உலகிலுள்ள ஏனையோர் கலியுகத்தில் உள்ளனர். தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர்களுக்குப் பக்தி மார்க்கத்தில் பெருமளவு செலவுகள் ஏற்பட்டன. அவர்கள் பல படங்களை உருவாக்கினார்கள், அவர்கள் மிகப்பெரிய ஆலயங்களையும் கட்டினார்கள். இல்லாவிடின், அவர்களால் வீட்டிலும் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரு படத்தை வைத்திருக்க முடியும். அந்தப் படங்களின் விலை மிகவும் மலிவானது. எனவே, ஆலயங்களுக்காக அவர்கள் ஏன் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டும்? அது பக்தி மார்க்கம். அவ்வாலயங்கள் போன்றவை சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அங்குள்ள மக்கள் பூஜிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்கள். கலியுகத்தில், அவர்கள் பூஜிப்பவர்கள். இப்பொழுது சங்கம யுகத்தில் நீங்கள் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். இந்நேரத்தில் இறுதி முயற்சி செய்கின்ற உங்கள் சரீரங்களே, உங்களின் அதி பெறுமதி வாய்ந்தவை. அதில் இருக்கும் பொழுதே நீங்கள் பெருமளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையுடனேயே உண்டு, பருகுகின்றீர்கள். நீங்களும் அவரை அழைத்தீர்கள். நீங்கள் கூறுவதில்லை: நான் ஸ்ரீகிருஷ்ணருடன் உண்கின்றேன். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். “நீங்களே தாயும் தந்தையும்” என நீங்கள் கூறுகின்றீர்கள். ஒரு குழந்தை தனது தந்தையுடன் தொடர்ந்தும் விளையாடுகிறார். நீங்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைகள் என நீங்கள் கூறமாட்டீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் பரமாத்மாவாகிய பரம தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்களே தங்கள் சரீரங்களினூடாகக் கூறுகின்றனர்: நீங்கள் வரும்பொழுது நாங்கள் உங்களுடன் உண்டு, உங்களுடன் விளையாடுவோம். நாங்கள் உங்களுடன் அனைத்தையும் செய்வோம். “பாப்தாதா” என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆதலால் இது ஒரு குடும்பம் போன்றது. பாபாவும், தாதாவும் மற்றும் குழந்தைகளாகிய நீங்களும் உள்ளீர்கள். இந்த பிரம்மா ஓர் எல்லையற்ற படைப்பவர். இவரினுள் தந்தை பிரவேசித்து, இவரைத் தத்தெடுக்கின்றார். அவர் இவருக்குக் கூறுகின்றார்: நீங்கள் என்னுடையவர். இதுவே வாய்வழித் தோன்றல் என்பதாகும். ஒரு மனைவியும் கூடத் தத்தெடுக்கப்படுகின்றாள். அவளும் வாய்வழித் தோன்றல் ஆவாள்;. “நீ என்னுடையவள்” என அவளது கணவனும் கூறுவார். பின் அவர் அவளுடன் ஒரு பௌதீகப் படைப்பைப் படைக்கின்றார். இந்தச் சம்பிரதாயம் எதிலிருந்து ஆரம்பித்தது? தந்தை கூறுகின்றார்: நான் இவரைத் தத்தெடுத்தேன். இவர் மூலம் நான் உங்களைத் தத்தெடுக்கிறேன். நீங்களே எனது குழந்தைகள். எனினும் இவர் ஓர் ஆண் ஆவார். ஆகவே உங்கள் அனைவரையும் பராமரிப்பதற்காக சரஸ்வதியும் தத்தெடுக்கப்பட்டார். அவருக்கு “அன்னை” என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. சரஸ்வதி ஆறு உள்ளது. இந்த ஆறு தாய் ஆகும், தந்தை கடல் ஆவார். இவர் கடலிலிருந்தே தோன்றி உள்ளார். பிரம்மபுத்திரா நதியும், கடலும் சந்திக்கின்ற இடத்தில் பெரும் கூட்டம் சேர்கிறது. அத்தகைய பெருங்கூட்டம் வேறெங்கும் இடம்பெறுவதில்லை. அது நதிகளின் கூட்டம் (மேலா). இது ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் ஒன்றுகூடல். இது ஒரு சரீரத்தினுள் அவர் பிரவேசிக்கும் பொழுதே இடம்பெறுகின்றது. தந்தை கூறுகிறார்: நானே ஹுசைன். ஒவ்வொரு சக்கரத்திலும் நான் இவரில் பிரவேசிக்கின்றேன். இது ஏற்கெனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. முழு உலகச் சக்கரமும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. அதன் கால எல்லை 5000 வருடங்கள். இந்த எல்லையற்ற படச்சுருளில் இருந்து அவர்கள் எல்லைக்கு உட்பட்ட படச்சுருளை உருவாக்குகிறார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்தவை, பின்பு நிகழ்காலம் ஆகுகின்றன. நிகழ்காலம் பின்னர் எதிர்காலம் ஆகுகின்றது. அதனையே பின்னர் கடந்த காலம் என அழைக்கின்றார்கள். அது கடந்த காலம் ஆகுவதற்கு அதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? நீங்கள் புதிய உலகிற்குள் வந்ததிலிருந்து எவ்வளவு காலம் கடந்து விட்டது? 5000 வருடங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் முதலில் பிராமணர்களாக இருந்தீர்கள் எனவும், பின்னர் தேவர்கள் ஆகினீர்கள் எனவும் விளங்கப்படுத்துகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியான அமைதிதாமத்தையும் சந்தோஷதாமத்தையும் பெறுகின்றீர்கள். தந்தை வந்து ஒரே நேரத்தில் மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார். பின்னர் அவர் ஏனைய சமயங்கள் அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுகிறார். நீங்கள் உங்களை மீண்டும் அழைத்துச் செல்கின்ற, தந்தையாகிய சற்குருவைக் கண்டுகொண்டீர்கள். நீங்கள் அழைக்கிறீர்கள்: ‘எங்களைச் சற்கதிக்குள் அழைத்துச் செல்லுங்கள்! இச்சரீரம் மரணிக்கட்டும்! எனது சரீரத்தை நீக்கி விட்டு அமைதி தாமத்திற்குச் செல்வதற்கான பாதையை எனக்குக் காட்டுங்கள்.’ இதனாலேயே மக்கள் குருமார்களிடம் செல்கிறார்கள். எனினும் அந்தக் குருமார்களால் உங்களை உங்கள் சரீரத்தை விட்டு நீங்கச்செய்து, உங்களைத் தங்களுடன் அழைத்துச் செல்ல இயலாது. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். ஆகவே அவர் வரும்பொழுது ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக்கப்பட வேண்டும். தந்தை மாத்திரமே மரணங்களுக்கு எல்லாம் மரணமாகிய, மகாகாலன் என அழைக்கப்படுகிறார். அவர் அனைவரையும் அவர்களது சரீரங்களை நீக்கச் செய்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அவரே பரம வழிகாட்டி. அவர் ஆத்மாக்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இச்சரீரங்கள் அழுக்கானவை, நாங்கள் அவற்றின் பந்தனத்தில் இருந்து விடுபட விரும்புகின்றோம். நாங்கள் எங்கள் சரீரங்களை நீக்கும்பொழுது, எங்களால் அவற்றின் பந்தனத்தில் இருந்து விடுபட முடியும். இப்பொழுது நீங்கள் அசுர பந்தனங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, தெய்வீக சந்தோஷ உறவுமுறைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றீர்கள். நீங்கள் அமைதி தாமத்தினூடாக, சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் துன்ப உலகிற்கு எவ்வாறு வருவீர்கள் என்பதையும் அறிவீர்கள். தந்தை உங்களை அழகற்றவர்களில் இருந்து அழகானவர்கள் ஆக்குவதற்கு வருகின்றார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுடைய உண்மையான, கீழ்ப்படிவான தந்தையும் ஆவேன். ஒரு தந்தை எப்பொழுதும் தனது குழந்தைகளுக்கு கீழ்ப்படிவானவர் ஆவார். அவர் அவர்களுக்கு அதிகளவு சேவை செய்கின்றார்! அவர் தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக அதிகளவு செலவு செய்கின்றார். பின்னர் அவர் தனது செல்வம், சொத்து அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு, புனிதர்களின் சகவாசத்திற்குச் செல்கின்றார். அவர் தனது குழந்தைகளைத் தன்னை விடவும் உயர்ந்தவர்கள் ஆக்குகின்றார். இந்தத் தந்தையும் கூறுகின்றார்: நான் உங்களை இரட்டை அதிபதிகள் ஆக்குகின்றேன். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதுடன், பிரம்மாந்தத்திற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இரண்டு விதத்தில் பூஜிக்கப்படுகின்றீர்கள்; நீங்கள் ஆத்மாக்களாகப் பூஜிக்கப்படுவதுடன், தேவ குலத்தவராகவும் பூஜிக்கப்படுகின்றீர்கள். நான் சிவலிங்க வடிவத்தில் ஒரேயொரு முறையிலேயே பூஜிக்கப்படுகின்றேன். நான் ஓர் அரசர் ஆகுவதில்லை. நான் உங்களுக்கு அதிகளவில் சேவை செய்கிறேன்! பின்னர் ஏன் அத்தகைய தந்தையை மறக்கிறீர்கள்? ஓ ஆத்மாக்களே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். யாரிடம் நீங்கள் வந்துள்ளீர்கள்? முதலில் தந்தையாகிய பாபாவிடமும், பின்னர் தாதாவிடமும் ஆகும். முதலில் தந்தையும், பின்னர் முப்பாட்டனாரான ஆதிதேவன், ஆதாமும் உள்ளார். ஏனெனில் பல தலைமுறைகள் உள்ளனர். சிவபாபாவை எவரேனும் முப்பாட்டனார் என அழைப்பார்களா? அவர் உங்களை அனைத்து வழிகளிலும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அத்தகைய ஒரு பாபாவைக் கண்டுள்ளீர்கள்! ஆகவே ஏன் அவரை மறக்கின்றீர்கள்? நீங்கள் அவரை மறந்தால் எப்படித் தூய்மை ஆகுவீர்கள்? தந்தை உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழிகளைக் காட்டுகிறார். இந்த நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்களிலிருந்து கலப்படம் அகற்றப்படும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும், இனிமையான, அன்பான குழந்தைகளே, சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் தூய்மையாகவும் வேண்டும். காமமே கொடிய எதிரி. எனக்காக இந்த ஒரு பிறவியில் தூய்மை ஆகுங்கள். ஒரு பௌதீகத் தந்தையும் கூறுவார்: ‘தூய்மையற்ற செயல்களைச் செய்யாதீர்கள். எனது தாடியின் கௌரவத்தைப் பேணுங்கள்.(எனது கௌரவத்தைப் பேணுங்கள்)’. பரலோகத் தந்தையும் கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளேன். ஆகவே உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் எனது கௌரவத்தை இழக்கச் செய்து விடுவீர்கள்; சகல பிராமணர்களினதும், தந்தையினதும் கௌரவம் இழக்கப்பட்டுவிடும். சிலர் எழுதுகிறார்கள்: ‘பாபா, நான் வீழ்ந்து எனது முகத்தை அழுக்காக்கி விட்டேன்’. தந்தை கூறுகிறார்: நான் உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளேன். ஆனால் நீங்களோ உங்கள் முகத்தை அழுக்காக்கி விட்டீர்கள்! என்றென்றும் அழகானவர்கள் ஆகுவதற்கு நீங்கள் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. முயற்சி செய்கின்ற உங்கள் இறுதிச் சரீரமே அதிபெறுமதி வாய்ந்தது. அச்சரீரத்தின் மூலம் நீங்கள் பெருமளவு வருமானத்தை ஈட்ட வேண்டும். எல்லையற்ற தந்தையுடன் உண்டு, பருகி அவருடன் சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்யுங்கள்.2. பிராமணக் குடும்பத்தின் கௌரவமும், தந்தையின் கௌரவமும் இழக்கப்படும் அளவிற்கு அத்தகைய எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள். ஆத்ம உணர்வு உடையவராகி, முற்றிலும் தூய்மை ஆகுங்கள். நினைவின் மூலம் ஆத்மாவான, உங்களிலிருந்து பழைய கலப்படம் அனைத்தையும் அகற்றி விடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள் மனதிற்குக் களிப்பூட்டி, நீங்கள் கேட்பவற்றின் சொரூபம் ஆகுவதன் மூலம் சதா சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.தினமும் உங்களின் மனதில் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எண்ணங்களை உருவாக்குங்கள். நீங்கள் அந்த எண்ணங்களின் சொரூபம் ஆகுவதுடன், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகவும் அவற்றைப் பயன்படுத்துங்கள். அப்போது உங்களின் வாழ்க்கை சதா உற்சாகம் நிறைந்தது ஆகிவிடும். அத்துடன் நீங்கள் மற்றவர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுப்பீர்கள். எப்படி நீங்கள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்களோ, அதேபோல், உங்களின் மனதிற்குக் களிப்பூட்டுவதற்கு தினமும் ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். அத்துடன் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதன் சொரூபம் ஆகுங்கள். அதனால் நீங்கள் சக்திசாலி ஆகுவீர்கள்.
சுலோகம்:
மற்றவர்களை மாற்றுவதற்கு முன்னர், எல்லாவற்றுக்கும் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இதுவே விவேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருத்தல் எனப்படுகிறது.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
மிக விரைவான சேவைக்கான கருவி, தூய மற்றும் மேன்மையான எண்ணங்களின் சக்தி. தந்தை பிரம்மா எப்போதும் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கும் வழிமுறையால் சேவையின் விரிவாக்கத்திற்கு ஒத்துழைத்தார். வழிமுறை தீவிரமாக இருக்கும்போது, விரிவாக்கமும் வேகமாக இருக்கும். அதேபோல், குழந்தைகளான நீங்களும் மேன்மையான, தூய எண்ணங்களால் நிரம்பியவர்கள் ஆகவேண்டும்.