08.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இவ்வுலகம் முழுவதும் இறை குடும்பமாக இருக்கிறது, இதனாலேயே பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களுடைய குழந்தைகள். இப்பொழுது நீங்கள் நடைமுறை ரீதியில் இறை குடும்பத்தினர் ஆகியுள்ளீர்கள்.

கேள்வி:
தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்குரிய ஆஸ்தியைக் கோருவதற்கான இலகுவான வழி என்ன?

பதில்:
சங்கமயுகத்தில் சிவபாபாவை உங்களது வாரிசாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் சரீரம், மனம், செல்வத்துடன் உங்களை அர்ப்பணியுங்கள், அப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கான முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வீர்கள். பாபா கூறுகிறார்: சங்கமயுகத்தில் தங்களிடமுள்ள பழையவை அனைத்தையும் காப்புறுதி செய்கின்ற குழந்தைகளுக்கு 21 பிறவிகளுக்கான பிரதிபலனை நான் கொடுக்கிறேன்.

பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களாகிய எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!

ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பக்தர்களே கடவுளை அழைக்கின்றனர். கடவுளை முழுமையாக அறியாததனால் மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்தும் அதிகளவில் பிரயத்தனம் செய்கின்றனர். இது இந்தப் பிறவிக்கான கேள்வி மாத்திரம் இல்லை. பக்தி மார்க்கம் ஆரம்பித்ததில் இருந்து அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தனர். பாரதத்தில் மாத்திரமே தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது சத்திய பூமியான, சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. பாரதம் இப்பொழுது பொய்மைப் பூமி ஆகும். பாரதத்தின் புகழ் மிகவும் மகத்தானது, ஏனெனில் அதுவே பரமாத்மாவாகிய பரம தந்தையின் பிறப்பிடம். அவரது உண்மையான பெயர் சிவன் ஆகும். மக்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அது உருத்திரரின் அல்லது சோமநாதரின் பிறந்தநாள் என்று அழைக்கப்படுவதில்லை. அது சிவனின் பிறந்தநாள் அல்லது சிவனின் இரவு என்றே அழைக்கப்படுகிறது. தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அங்கு நிச்சயமாகப் பக்தர்கள் அனைவரினதும் ஒரேயொரு கடவுள் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பார்வையற்று உள்ளனர், அதாவது, அவர்களிடம் இந்த ஞானக் கண்ணோ அல்லது தெய்வீகப் பார்வையோ இல்லை. கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். ஸ்ரீமத் பகவத்கீதையே பிரதான சமயநூல் ஆகும். ஸ்ரீ என்றால் அதிமேன்மையான வழிகாட்டல்கள் என்பதாகும். நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகமானவர்கள் ஆக்கப்படுகிறீர்கள். அவர்கள் தெய்வீகக் கண்ணை, அதாவது, ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் காட்டுகின்றனர். உண்மையில், பிராமணர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையைப் பற்றியும், தந்தையின் படைப்பினது ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்கின்ற, இந்த மூன்றாவது ஞானக் கண்ணைப் பெறுகின்றீர்கள். இந்நேரத்தில் அனைவரும் சரீர அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, ஐந்து விகாரங்களையும் கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தமாகும், இதனாலேயே அவர்கள் காரிருளில் உள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் ஒளியைக் கொண்டுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் வரலாற்றையும், புவியியலையும் அறிவீர்கள். முன்னர், நீங்கள் அனைவரும் அறியாமையில் இருந்தீர்கள். சற்குரு இந்த ஞானத் தைலத்தை உங்களுக்குக் கொடுத்த பொழுது, அறியாமை இருள் அகன்றது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். ஒளி இருக்கும்பொழுது, நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், பின்னர் இருள் இருக்கும்பொழுது பூஜிப்பவர்களாகவும் இருக்கின்றீர்கள். கடவுள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராகவும், பின்னர் பூஜிப்பவராகவும் ஆகுகின்றார் எனக் கூற முடியாது. அவரே பரம பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர். அவரே உங்கள் அனைவரையும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். அவர் பரம பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஒரேயொருவர் என்று அழைக்கப்படுகின்றார். “பரமாத்மா, பரமதந்தை” என்றால் கடவுள் என்று அர்த்தம். ஸ்ரீகிருஷ்ணரையிட்டு நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள். எவரும் அவரைத் தந்தையாகிய கடவுள் என்று அழைக்க மாட்டார்கள். அசரீரியான கடவுளையிட்டே அனைவரும் தந்தையாகிய கடவுள் என்று கூறுகின்றனர்: அவரும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவர் பரமனாக இருப்பதனால், அவரைக் கடவுள் என்று அழைக்கின்றனர். அந்தப் பரமாத்மா எப்பொழுதும் பரந்தாமத்திலேயே வசிக்கிறார். ஆங்கிலத்தில் அவர் சுப்ரீம் சோல் (பரமாத்மா) என்று அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தனர் என்று நீங்களும் பாடுகிறீர்கள். பரமாத்மா, பரமாத்மாக்களிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தார் என்பதல்ல. இல்லை, ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும், பரமாத்மாவே ஒவ்வோர் ஆத்மாவும் என்றும் கூறுவதே முதலாவது அறியாமை ஆகும். ஆத்மாக்கள் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருகின்றனர். கடவுள் மறுபிறவி எடுப்பதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: பாரத மக்களான நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். தேவர்களே மனித குலத்தில் பூஜிக்கத்; தகுதிவாய்ந்த ஆத்மாக்களாக இருந்தார்கள். நீங்கள் அனைவரும் இறை குடும்பத்தினர். கடவுளே படைப்பவர். பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களின் குழந்தைகள். ஆகவே, இது ஒரு குடும்பம். சரி, நீங்கள் “தாயும் தந்தையும்” எனக் கூறும்பொழுது, யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? யார் இதைக் கூறுகிறார்? ஆத்மா கூறுகிறார்: நீங்களே தாயும் தந்தையும்; உங்களது ஆசீர்வாதங்களுடன் நாங்கள் சுவர்க்கத்தில் பெருமளவு சுவர்க்க சந்தோஷத்தைப் பெற்றோம். எங்கள் தாயும் தந்தையுமான நீங்களே வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஆகவே நாங்கள் உங்கள் குழந்தைகள் ஆகுகின்றோம். தந்தை கூறுகிறார்: சங்கமயுகத்தில் மாத்திரமே நான் வந்து உங்களுக்குப் புதிய உலகிற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். மனிதர்களின் புத்திகள் முற்றிலும் சீரழிந்ததாகி விட்டன் அவர்கள் சுவர்க்கத்தை நரகமாகக் கருதுகின்றனர். அவர்கள் கம்சன், ஜரசந்தன், இரணியகசிபு (அசுரர்களின் பெயர்கள்) போன்றோரும் அங்கிருந்ததாகக் கூறுகின்றனர். தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அனைத்தையும் மறந்து விட்டீர்களா? நீங்கள் பாரதத்திலும் எனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள். “சிவனின் இரவும்” நினைவுகூரப்படுகிறது. இது எந்த இரவு? இது பிரம்மாவின் எல்லையற்ற இரவு ஆகும். தந்தை சங்கம யுகத்தில் வந்து இரவைப் பகலாக, அதாவது, நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். “சிவராத்திரி” என்பதன் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. கடவுள் அசரீரியானவர். மனிதர்களின் சரீரங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பெயர்கள் பிறவிபிறவியாக மாற்றம் அடைகின்றன. கடவுள் கூறுகிறார்: எனக்கு ஒரு சரீரப் பெயர் இல்லை. எனது பெயர் சிவன் என்பதே ஆகும். நான் ஒரு பழைய, ஓய்வுபெற்ற சரீரத்தின் ஆதாரத்தையே எடுக்கிறேன். அவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்து, இப்பொழுது பூஜிப்பவர் ஆகியுள்ளார். சிவபாபா வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் அவரது குழந்தைகள். ஆகவே நீங்களே சுவர்க்க அதிபதிகளாக இருக்க வேண்டும். சிவபாபாவே அதிமேலானவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தங்கள் சொந்தப் பாகங்களைக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் சந்தோஷமும், துன்பமும் என்ற தனது பாகத்தைக் கொண்டுள்ளார். நீங்கள் சிவபாபாவின் வாரிசுகள் ஆகினீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்கினார், இதனாலேயே அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! சாதுக்களும் ஆன்மீக முயற்சி செய்கின்றனர், ஏனெனில் இங்கு துன்பம் இருக்கிறது. இதனாலேயே நிர்வாணா தாமத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர் என நம்புவதோ அல்லது ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என நம்புவதோ தவறாகும். இப்பொழுது நீங்கள் கூறுகிறீர்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் பரந்தாமத்து வாசிகள். நாங்கள் தேவ குலத்தினுள் சென்று, பின்னர் 84 பிறவிகளை எடுப்போம். ஆத்மாக்களான நாங்கள் வெவ்வேறு குலங்களினூடாச் செல்கிறோம். சிவபாபா பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. அங்கு நாராயணனின் வம்சமே இருக்கிறது. கிறிஸ்தவர்களின் மத்தியில் எட்வேர்ட் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இருப்பது போல், அங்கும் இலக்ஷ்மி நாராயணன் முதலாவது, இலக்ஷ்மி நாராயணன் இரண்டாவது, மூன்றாவது போன்று உள்ளனர். இவ்வாறு அங்கு எட்டு வம்சங்கள் இருக்கும். பிராமணர்களாகிய உங்களது மூன்றாவது கண்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களுடன் பேசுகிறார். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிச் சென்று, பல பிறவிகள் எடுக்கிறீர்கள். பல்வேறு குலங்களையும் காட்டுகின்ற படம் உள்ளது. அது தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பிராமணர்களைச் சித்தரிக்கிறது. பிராமணர்களாகிய நீங்களே உச்சிக்குடுமிகள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இந்நேரத்தில் நடைமுறை ரீதியில் நாங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவோம். நாங்கள் இந்த இலகு இராஜயோகத்தினாலும் ஞானத்தினாலும் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம். சிலர் சூரிய வம்ச இராச்சிய ஆஸ்தியையும், ஏனையோர் சந்திர வம்ச ஆஸ்தியையும் கோரிக் கொள்கின்றனர். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் சொந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். கற்கும்பொழுது, தனது சரீரத்தை நீங்க நேர்ந்தால், தான் என்ன அந்தஸ்தைப் பெறுவார் என எவராவது கேட்டால், பாபாவினால் அவருக்குக் கூற முடியும். யோகத்தின் மூலம் உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்படுகின்றன. தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்கு வேறெந்த வழியும் இல்லை. அவர்கள் “தூய்மையாக்குபவர்” பற்றிப் பேசும்பொழுது, கடவுளையே நினைவு செய்கின்றனர், ஆனால் அவர்களுக்கு கடவுள் யார் என்பது தெரியாது. தந்தை கூறுகிறார்: நான் பாரதத்தில் மாத்திரமே வருகிறேன். இதுவே எனது பிறப்பிடம் ஆகும். சோமநாதர் ஆலயம் மிகவும் அழகானது. தந்தை இங்கே அமர்ந்திருந்து, இவை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பின்னர், பக்தி மார்க்கத்தில் இதன் ஞாபகார்த்தங்கள் உருவாக்கப்பட ஆரம்பித்தன. நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகும்பொழுது, முதலில் சோமநாதருக்கு ஆலயத்தைக் கட்டுகிறீர்கள். பாரதம் சத்திய, திரேதா யுகங்களில் மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது. ஆலயங்களிலும் அபரிமிதமான செல்வம் நிறைந்திருந்தது. பாரதம் வைரத்தைப் போல் பெறுமதி மிக்கதாக இருந்தது. இப்பொழுது பாரதம் சிப்பியைப் போல் மிகவும் ஏழ்மை அடைந்துள்ளது. பாரதத்தை வைரத்தைப் போல் பெறுமதி மிக்கதாக ஆக்குவதற்கே தந்தை வந்துள்ளார். “படைப்பவர் யார்?” என எவரையும் வினவுங்கள், அப்பொழுது அவர்கள் “கடவுள்” எனக் கூறுவார்கள்! அவர் எங்கிருக்கிறார்? “அவர் சர்வவியாபகர்” என அவர்கள் கூறுவார்கள்! தந்தை கூறுகிறார்: இந்த முழு விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. மம்மாவினதும், பாபாவினதும் சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகிவிட்டீர்களா என்பதைப் பார்ப்பதற்கு நீங்கள் உங்களையே பரிசோதிக்க வேண்டும். இவ்வுலகம் தூய்மையற்று உள்ளது. தூய்மையே பிரதான விடயம். தற்சமயத்தில் ஆரோக்கியமும் இல்லை, செல்வமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. இந்த இராச்சியம் கானல் நீரைப் போன்றது. இதன் அடிப்படையிலேயே அந்த இதிகாசத்தில் இருக்கின்ற துரியோதனைப் பற்றிய கதை உருவாக்கப்பட்டுள்ளது. விகாரமானவர்கள் துரியோதனன் என்று அழைக்கப்படுகின்றனர். திரௌபதி தனது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கதறி அழைத்தாள். நீங்கள் அனைவரும் திரௌபதிகள். இந்தப் புதல்விகளே சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான வாயில்கள். பாபா மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்! யாருடைய புத்திகள் யோகத்தில் மிக நன்றாக இணைந்துள்ளதோ, அவர்களாலேயே ஞானத்தைக் கிரகிக்கவும் இயலும். பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்கப்படும் பொழுதே ஞானம் கற்கப்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: வீட்டில் வாழும் பொழுதே, ஒரு தாமரை மலரைப் போல் இருங்கள். உங்கள் இரு பக்கப் பொறுப்புக்களையும் பூர்த்தி செய்யுங்கள். அனைவரும் நிச்சயமாக மரணிக்க வேண்டும். ஒருவர் மரணிக்கவுள்ள பொழுது, அவருக்கு ஒரு மந்திரம் கொடுக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் மரணிக்க உள்ளீர்கள். மரணங்களுக்கு எல்லாம் மரணமாகிய நான், அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளேன். ஆகவே பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். நன்றாகக் கற்பவர்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவார்கள். கற்காதவர்கள் பிரஜைகள் என்ற அந்தஸ்தையே பெற்றுக் கொள்வார்கள். ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது ஒரு கல்வி, ஆகவே இதில் மூட நம்பிக்கை என்ற கேள்விக்கு இடமில்லை. இந்தக் கல்வி ஓர் இராச்சியத்திற்கானது. உதாரணமாக, ஒரு சட்டநிபுணர் ஆகுவதே உங்கள் இலக்கும், குறிக்கோளுமாக இருந்தால், எவ்வாறு அப்படி ஆகலாம் எனக் கற்பிக்கின்ற ஆசிரியருடனேயே நீங்கள் நிச்சயமாக உங்கள் யோகத்தைக் கொண்டிருப்பீர்கள். இங்கு கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதால், அவருடனேயே உங்கள் யோகம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் மிகத் தொலைவில் இருந்து பரந்தாமத்தில் இருந்து வருகின்றேன். பரந்தாமம் மிகவும் மேலே உள்ளது! அது சூட்சும உலகை விடவும் அதிமேலே உள்ளது, ஆனால் அங்கிருந்து வருவதற்கு எனக்கு ஒரு விநாடியே எடுக்கிறது. இதை விடவும் விரைவானதாக வேறெதுவும் இருக்க முடியாது. நான் உங்களுக்கு ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அருள்கிறேன். ஜனகனின் உதாரணமும் உள்ளது. இது இப்பொழுது நரகமாகிய, பழைய உலகம் ஆகும். அந்தப் புதிய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை நரகத்தின் விநாசத்தைத் தூண்டுவதுடன், உங்களைச் சுவர்க்க அதிபதிகளாகவும் ஆக்குகின்றார். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்கின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் அமரத்துவமானவரும், ஓர் அமரத்துவ பாகத்தைப் பெற்றுள்ளவரும் ஆவார். ஆகவே, எவ்வாறு ஓர் ஆத்மா பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்க முடியும் அல்லது எவ்வாறு ஆத்மாவை எரிக்கவோ அல்லது மரணம் அடையச் செய்யவோ முடியும்? ஓர் ஆத்மா நட்சத்திரமே ஆவார். அது பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது இறை தந்தையின் மாணவர்கள். தந்தையாகிய கடவுளே ஞானம் நிறைந்தவரும், பேரானந்தமானவரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பாரதத்திற்குச் சேவை செய்கிறீர்கள். முதலில் நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்களாக வேண்டும். ஏனைய இடங்களில் அவர்கள் தங்கள் குருமார்களிடம் செல்வதால், அந்தக் குருமார்களுக்கு உரியவர்கள் ஆகுகின்றனர். அதாவது, அவர்கள் அவரைத் தங்கள் குருவாக்கிக் கொள்கின்றனர். இங்கு உங்களுக்குத் தந்தை இருக்கிறார். ஆகவே, முதலில் தந்தையின் குழந்தை ஆகுங்கள்! தந்தை குழந்தைகளான உங்களுக்குத் தனது சொத்துக்களைக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்களிடமுள்ள அனைத்தையும் பரிமாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய வைக்கோல் போன்ற பெறுமதியானவை அனைத்தும் என்னுடையது, என்னிடமுள்ள அனைத்தும் உங்களுடையது. உங்கள் சரீரங்கள் உட்பட, உங்களிடமுள்ள அனைத்தையும் எனக்குக் கொடுங்கள். நான் ஆத்மாக்களாகிய உங்களையும் உங்கள் சரீரங்களையும் தூய்மையாக்கி, பின்னர் உங்களுக்கு ஓர் இராஜ அந்தஸ்தையும் வழங்குகிறேன். உங்களிடமுள்ள அனைத்தையும் அர்ப்பணம் செய்யுங்கள், நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள். பாபா, இவை அனைத்தும் உங்களுடையது. தந்தை கூறுகிறார்: என்னை உங்கள் வாரிசு ஆக்குங்கள். நான் உங்களை 21 பிறவிகளுக்கு வாரிசுகள் ஆக்குகிறேன். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்தும் நடத்தி, வெளிநாடுகளுக்குப் பயணித்து, நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்! இல்லாவிடின் மாயை மீண்டும் மீண்டும் உங்களை விழச் செய்வாள். பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும் பொழுது, மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மா, சரீரம் ஆகிய இரண்டையும் தூய்மை ஆக்குவதற்கு, உங்கள் சரீரம் உட்பட, உங்களிடமுள்ள அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணித்து, அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

2. தாய், தந்தையின் சிம்மாசனத்தில் அமர்வதற்கு உங்களைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குங்கள். தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கு, பிரதான தெய்வீகக் குணமான தூய்மையைக் கிரகியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கமயுகத்தின் இரட்டைப் பேறுகளின் உரிமையைக் கொண்டிருந்து, அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்களாக.

சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்யும் குழந்தைகள் சதா அமைதி மற்றும் சந்தோஷம் என்ற இரட்டைப் பேறுகளின் போதையைக் கொண்டிருப்பார்கள். இந்தப் பேறுகள் இரண்டும் அதீந்திரிய சுகத்தில் அமிழ்ந்திருப்பதே இதற்கான காரணம் ஆகும். தற்சமயம் தந்தையிடம் இருந்து குழந்தைகளான நீங்கள் பெறுகின்ற பேறுகளும் போதையும் கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் அனுபவம் செய்ய முடியாது. இந்த நேரத்தின் பேறுகள், அதீந்திரிய சுகமும் இந்த ஞானமும் ஆகும். அவற்றை வேறெந்த வேளையிலும் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த இரட்டைப் பேறுகளுக்கான உரிமையைக் கோரிக் கொள்ளுங்கள்.

சுலோகம்:
ஒருவர் மற்றவரின் சம்ஸ்காரங்களை அறிந்த வண்ணம் தொடர்ந்து ஒத்திசையுடன் பழகுவதே, முன்னேற்றத்திற்கான வழிமுறை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

இலகுவான சுபாவத்தைக் கொண்டவர்கள், சதா மலர்ச்சிநிறைந்தர்களாக இருக்கிறார்கள். மலர்ச்சிநிறைந்த இதயத்தைக் கொண்டவர்கள் அனைவரையும் கவருகிறார்கள். மலர்ச்சி என்றால் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவதாகும். இந்த ஞானத்தைக் கடைந்து, அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்யும் வேளையில், அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவதே மலர்ச்சி நிறைந்தவராக இருத்தல் எனப்படுகிறது. இதற்கு, பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்து மாயையினதும் சடப்பொருளினதும் பொம்மலாட்டத்தை களிப்பூட்டும் வடிவில் அவதானியுங்கள்.

மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க வாசகங்கள்.

பரமாத்மாவான, உண்மையான பாட்சாவுடன் நேர்மையாக இருத்தல்.

இந்நேரத்தில் எங்கள் தந்தையான, கடவுளிடமிருந்து நாங்கள் கட்டளையைப் பெற்றுள்ளோம்: சதா எனது நினைவில் நிலைத்திருங்கள். கடவுளின் நினைவில் நிலைத்திருப்பதே யோகம் என்பதன் அர்த்தம் ஆகும். யோகம் என்றால் திரான்சில் செல்வது என்று அர்த்தமல்ல. இது நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும், எங்கள் வேலைகள் அனைத்தையும் செய்யும் பொழுதும், நாங்கள் நினைவில் நிலைத்து இருக்கின்ற, எங்கள் இலகுயோகம் ஆகும். இது துண்டிக்கப்படாத, நிலையான யோகம் என்று அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், சதா நினைவில் நிலைத்திருப்பதை நாங்கள் பயிற்சி செய்வது அவசியமாகும். அவரது கட்டளைகளை நாங்கள் பின்பற்றாது விட்டால், நாங்கள் கீழ்ப்படிவானவர்களாக இல்லாது விட்டால், நிச்சயமாகத் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். அவருடைய கட்டளைகள்: என்ன செயல்களை நான் செய்தாலும் அதற்கேற்ப, உங்கள் அடிச்சுவடுகளை எடுத்து வையுங்கள், இல்லாவிட்டால், நீங்கள் மாயையினால் தாக்கப்படுவீர்கள். உண்மையான பாட்சாவுடன் (சக்கரவர்த்தி) நேர்மையாக இருங்கள். மாயையின் தடைகள் எதுவும் உங்களைத் தொந்தரவு செய்தாலும், அவற்றை அவர் முன்னிலையில் வையுங்கள். அவருடைய உதவி மூலம் மாயை விலகி விடுவாள், உங்கள் பாதை தெளிவாகி விடும். பின்னர், அவர் உங்களை எங்கு அமரச் செய்தாலும், உங்களை எவ்வாறு அசைந்து திரியச் செய்தாலும், அவர் உங்களுக்கு எதனை ஊட்டினாலும், பாதை தெளிவாகி விடும். இவ்விதமாக உங்கள் சகவாசத்தைக் கொடுப்பதற்கு உங்களுக்குப் பெருமளவு தைரியம் தேவை. வெற்றி மாலையில் கோர்க்கப்படுகின்ற, அத்தகைய நூறு மடங்குகள் பாக்கியசாலிகள் மிகச்சிலர் மாத்திரமே உள்ளனர். சிறிதளவை மாத்திரம் பெற்று, பிரஜைகள் ஆகுபவர்கள் வெறுமனே பாக்கியசாலிகள் ஆவார்கள். எனவே, நீங்கள் சிறிதளவை மாத்திரம் பெறுவதனால், சந்தோஷம் அடையக்கூடாது. அனைத்தையும் முழுவதுமாகப் பெறுகின்ற விருப்பத்தைக் கொண்டிருங்கள். தைரியத்தைக் கொண்டிருந்து, முன்னேறிச் செல்லுங்கள். மாயை தடைகளை ஏற்படுத்துவாள், ஆனால் நீங்கள் அவளை வெற்றி கொள்ள வேண்டும். இதில் நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், அது ஏனெனில் உங்கள் நம்பிக்கை குறைவாக உள்ளது அல்லது உங்கள் தாரணையில் ஏதோ தவற விடப்பட்டுள்ளது என்பதால் ஆகும். இது உங்கள் குற்றமாகும். இங்கு, நீங்கள் மக்களின் அபிப்பிராயங்களில் இருந்தும், மக்களின் கோட்பாடுகளில் இருந்தும் உங்கள் பந்தனங்களைத் துண்டிக்க வேண்டும். அவற்றிலிருந்து நீங்கள் துண்டித்துக் கொள்ளும் பொழுது மாத்திரமே நீங்கள் உண்மையான பரலோக, தெய்வீக மரியாதைக் கோட்பாடுகளைப் பெறுவீர்கள். இந்த விகார உலகம் செல்லவுள்ளது. பாருங்கள், மீராவும் மக்களின் அபிப்பிராயங்களில் இருந்து துண்டித்துக் கொண்ட பொழுது, கிரிதரரைக் (கிருஷ்ணர்) கண்டடைந்தாள். மக்களின் அபிப்பிராயங்களை நீங்கள் பற்றிக் கொண்டிருந்தால், உங்களால் தெய்வீக உலகின் ஓர் அங்கத்தவராக ஆக முடியாதிருக்கும். உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களுக்கு இப்பொழுது கடவுளின் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எதனைச் செய்ய வேண்டும் எனவும், எது சரியானதும் பொருத்தமானதும் எனவும் நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தி மூலம் தீர்மானிக்க வேண்டும்.