10.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சிவபாபா, பிரம்மாபாபா இருவருடைய வழிகாட்டல்களும் மிகவும் பிரபல்யமானவை. இருவருடைய வழிகாட்டல்களையும் பின்பற்றி, உங்களுக்கு நன்மை செய்யுங்கள்.

கேள்வி:
முதலாம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பாளர் யார்? எவ்வாறு?

பதில்:
சிவபாபாவே, முதலாம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆவார். அவர் ஒருபோதும் எதனாலும் கவரப்படுவதில்லை. பக்தி மார்க்கத்தில், அவருடைய பெயரில் நீங்கள் எத்தகைய தான தர்மங்கள் செய்தாலும் அவை உங்களுக்குக் காப்புறுதி செய்யப்பட்டு, அதற்கான பலனை நீங்கள் மறு பிறவியில் பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளின் பெயரில் எவற்றை எல்லாம் காப்புறுதி செய்கிறீர்களோ, அவற்றிற்கான முழுப் பிரதிபலனையும் தந்தை உங்களுக்குக் கொடுக்கிறார். ஏனெனில் பாபா கூறுகிறார்: அத்தகைய சந்தோஷம் எதனையும் நான் அனுபவிப்பதில்லை. எனவே, உங்களிடமிருந்து பெறுவதை வைத்து நான் என்ன செய்வது?

பாடல்:
ஒரு சத்தியப் பிரமாணம் செய்தே நான் உங்கள் வாயிற்படிக்கு வந்துள்ளேன்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான அன்பிற்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளான நீங்கள் தந்தைக்கு உரியவர்கள். இது நீங்கள் மரணித்து வாழ்கின்ற, உங்களுடைய இறுதிப் பிறவி எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். உயிருடன் இருக்கும்போதே தந்தைக்கு உரியவர் ஆகுங்கள். ஸ்ரீமத் நினைவு கூரப்படுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கடவுளின் வாசகங்களே ஸ்ரீமத் எனப்படுகிறது. கீதையில் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர், ஆனால் அது உண்மையில் சிவபாபாவினுடையது. அவருக்குப் பின்னரே பிரம்மாவும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். ஸ்ரீமத் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து கிடைப்பதாகக் கூறப்படுவதில்லை. எங்களின் தந்தையே அனைவரிலும் அதி மேன்மையானவர். ராதையோ, ஸ்ரீகிருஷ்ணரோ தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியாது, அவர்கள் தெய்வீகக் குணங்களுடைய மனிதர்களாவர். மனிதர்களைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. சத்திய யுகத்தில், தூய்மையாக்குபவரே வாருங்கள்! என நீங்கள் கூறமாட்டீர்கள். ஒரேயொரு தந்தையே தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர். அவரது ஸ்ரீமத்தையே நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் வழிகாட்டல்களும் மிகவும் பிரபல்யமானவை. ஸ்ரீமத்தும் மிகவும் பிரபல்யமானது. சிவபாபா வந்து உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்குகின்றார். உங்களில் சிலர் கூறுகின்றீர்கள்: நான் இப்பொழுது தந்தைக்கு உரியவன் என சத்தியப்பிரமாணம் செய்கின்றேன். எனவே, அவருடைய வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும். நீங்கள் தந்தைக்கு உங்களுடைய சொந்த வழிகாட்டல்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை! அவரே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் அனைவரும் குழந்தைகள். சிவபாபா மிகவும் பிரபல்யமானவர். அவர் என்ன வழிகாட்டல்களைக் கொடுத்தாலும், என்ன செயல்களைச் செய்தாலும் அவை சரியானவையே ஆகும். அவர் பிரம்மாவிற்குக் கூட வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: இதைச் செய்யுங்கள்! உங்களுடைய தொடர்பு சிவபாபாவுடன் ஆகும். மற்றவர்களின் குறைபாடுகளைப் பார்க்காதீர்கள்! ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! சிவபாபா அசரீரியானவர். இது அவருடைய வீடல்ல. இங்கு, நீங்கள் ஒரு பழைய வீட்டில் வசிக்கின்றீர்கள். பின்னர் சுவர்க்கத்தில், உங்களுடைய சொந்த வீட்டில் வசிப்பீர்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் அங்கு வசிப்பதில்லை. நான் இந்நேரத்திலேயே, சிறிது காலத்திற்கு இங்கு வருகின்றேன். நீங்களே உண்மையான ஆன்மீக மீட்புப் படையினர். பரமாத்மா (தந்தை) நாடகத் திட்டத்திற்கேற்ப, முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் செய்தது போன்று, அதே வழிகாட்டல்களையே கொடுக்கின்றார். இரவு பகலாக அவர் தொடர்ந்தும் ஆழமான இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். புதியவர் ஒருவரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சிலர் 35 முதல் 40 வருடங்கள் வரை இங்கு வாழ்ந்தாலும், அவர்களில் பலர் இந்த ஆழமான, தீவிரமான கருத்துக்களைப் புரிந்து கொள்வதில்லை. பாபா தினமும் புதிய ஞானத்தைப் பேசுகின்றார். கராச்சியிலிருந்த காலத்தில் இருந்தே முரளி வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றது. ஆரம்பகாலத்தில், பாபா ஒருபோதும் முரளியைக் கூறுவதில்லை. அவர் அதிகாலை 2.00 மணிக்கு எழுந்திருந்து 10 முதல் 15 பக்கங்கள் வரை எழுதுவார். பாபா அவரைக் கொண்டு எழுதுவிப்பார். பின்னர் அவற்றின் பிரதிகள் எடுக்கப்படும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் சமய நூல்களின் பக்கங்களைக் கவனமாகப் பராமரிக்கிறார்கள். நாளுக்கு நாள், அவர்கள் உருவாக்கும் நூல்களின் அளவும் பெரிதாகின்றன. அவர்கள் தொடர்ந்தும் பல சுயசரிதைகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அவற்றைப் படித்த பின்னர் தங்களுடனேயே வைத்திருக்கின்றனர். நீங்களோ முரளியை வாசித்துவிட்டு வீசிவிடுகின்றீர்கள். உண்மையில், இவ்வாசகங்கள் எப்பொழுதும் வைத்திருக்கப்பட வேண்டியவை, ஆனால் அப்படியில்லை! அவையனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உருவாக்குகின்ற படங்கள் போன்றவை குறுகிய காலத்திற்கே எஞ்சியிருக்கும். அவை பின்னர் புதைக்கப்படும். சமய நூல்கள், உருவங்கள் போன்ற எதுவுமே எஞ்சியிருக்காது. இப்பொழுது நிகழ்பவை அனைத்தும் அடுத்த கல்பத்திலும் நிகழும். சமயநூல்கள் போன்றவை மீண்டும் துவாபர யுகத்தில் ஆரம்பிக்கும். கிராந்த் முதலில் கையால் எழுதப்பட்ட சிறிய நூலாக இருந்தது. இப்பொழுது அவர்கள் அதைப் பெரிதாக்கி விட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் நாளுக்கு நாள் அதை மென்மேலும் பெரிதாக ஆக்குகின்றார்கள். அதேசமயம், எந்தளவிற்கு சிவபாபாவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும் எனக் கற்பனை செய்து பாருங்கள்! பரமதந்தை, பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு உங்களுக்குத் தெரியும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை பக்தி மார்க்கத்தில் என்ன செய்கின்றார் என்பதை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில் நான் காப்புறுதி செய்கின்றேன். கடவுளின் பெயரால், மக்கள் தான தர்மங்களைச் செய்கின்றனர். அவர்கள் கூறுகிறார்கள்: இவர் கடவுளின் பெயரில் தான தர்மங்களைச் செய்துள்ளார். கடவுள், அவரைச் செல்வந்த வீட்டில் பிறப்பெடுக்கச் செய்தார். பக்தி மார்க்கத்தில் பல தர்மாத்மாக்கள் உள்ளனர். அவர்கள், கடவுளின் பெயரில் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரில் தான தர்மங்களைச் செய்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதனாலேயே நான் அக்குழந்தைகளுக்கு அடுத்த பிறவியில் தற்காலிகமான பலனைக் கொடுக்கின்றேன். நல்ல அல்லது தீய பலன் நிச்சயமாகப் பெறப்படுகிறது. எந்தளவு காப்புறுதி செய்யப்படுகிறது? ஒருவர் என்ன செயல்களைச் செய்கிறாரோ, அதற்கேற்ப அதன் பலனைப் பெறுவார். மாயை உங்களைத் தவறான செயல்களைச் செய்ய வைக்கிறாள். அவற்றின் மூலம் நீங்கள் துன்பத்தையே பெறுகிறீர்கள். இப்பொழுது நான் ஒருபோதும் நீங்கள் துன்பத்தை அனுபவிக்காத வகையிலான செயல்களை உங்களுக்குக் கற்பிக்கின்றேன். மாயை கூட அங்கு இருக்கமாட்டாள். நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்குக் காப்புறுதி செய்கின்றீர்கள் என்பதற்கேற்பவே அந்தஸ்திற்கான கேள்வி உள்ளது. சிவபாபாவும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளரே. அவரே முதலாம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆவார். ஏனைய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், பொருட்களினால் கவரப்படுவார்கள். சில நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஏனையோருக்காக அனைத்தையும் அழித்தும் விடுவார்கள். தந்தை எத்தகைய நம்பிக்கைப் பொறுப்பாளர் எனப் பாருங்கள்! அவர் கூறுகிறார்: இவை யாவும் குழந்தைகளாகிய உங்களுக்கே ஆகும். உங்கள் தொடர்பு முழுமையாகச் சிவபாபாவுடனேயே ஆகும். தந்தை கூறுகிறார்: நானே உண்மையான நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆவேன். அவர் கூறுகிறார்: நான் அச்சந்தோஷத்தை ஏற்பதில்லை. நான் முழு இராச்சியத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கே கொடுக்கிறேன். ஒரு லௌகீகத் தந்தையும் கூட அனைத்தையும் தனது குழந்தைகளுக்கே ஆஸ்தியாகக் கொடுக்கின்றார். நான் சுவர்க்கத்தில் உள்ள எதனையும் ஏற்பதில்லை. நான் உங்களுக்கே அனைத்தையும் கொடுக்கிறேன். உங்கள் தொடர்புகள் அனைத்தும் சிவபாபாவுடனேயே ஆகும். இந்த பாபாவும் கூறுகிறார்: நானும் என்னை முழுமையாகக் காப்புறுதி செய்துள்ளேன். சரீரம், மனம், செல்வம் அனைத்தும் பாபாவின் சேவைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. சிந்தியில் ஒரு பழமொழி உள்ளது: எவருடைய கைகள் இவ்வாறு அருளும் நிலையில் இருக்கின்றனவோ, அவர்களே முதலில் அறுவடை செய்வார்கள். அனைத்தையும் தந்தையுடன் காப்புறுதி செய்யுங்கள். சுதாமா இரண்டு கைப்பிடி அவலைக் கொடுத்து, அதற்கு ஈடாக ஒரு மாளிகையைப் பெற்றார். பாருங்கள், அண்மையில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, ஒருவர் ஒரு ரூபாவை அனுப்பி, தனது பெயரில் ஒரு செங்கட்டி வைக்குமாறு கூறினார். தந்தை பதில் எழுதினார்: நீங்கள் ஏழையாக இருப்பதால் அனைத்திலும் சிறந்த மாளிகையைப் பெறுவீர்கள். நான் ஏழைகளின் பிரபு. ஓர் ஏழையின் ஒரு ரூபாய், செல்வந்தர் ஒருவரின் 10,000 ரூபாவுக்கு நிகரானது. இருவரும் சம அந்தஸ்தையே பெறுவார்கள். அரிதாகவே செல்வந்தர்கள் எவராவது இங்கு வருவார்கள். குமாரிகளே ஏனையோரை விடவும் பந்தனம் அற்றவர்கள். எவ்வாறு மம்மா முதல் இலக்கத்தவர் ஆகினார் எனப் பாருங்கள். அவரிடம் எதுவுமே இருக்கவில்லை. அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், முதலாம் இலக்கத்தைக் கோரினார். இவர் அனைத்தையுமே கொடுத்தார் ஆயினும், எப்பொழுதும் இலக்ஷ்மியே முதலாவதாகவும், நாராயணன் பின்னராகவுமே இருக்கிறார்கள். இது அத்தகையதோர் அற்புதமான நாடகம்! எதைப்பற்றியும் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. பாப்தாதாவும் குறைந்தவரல்ல. நீங்கள் இவரில் சிறிதளவேனும் சந்தேகம் கொள்ளக்கூடாது. அத்துடன் மிக இனிமையானவராகவும் ஆகுங்கள். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பெறுங்கள். இல்லையெனில், மாயை உங்களை அதிக இழப்புக்கு ஆளாக்கிவிடுவாள். குழந்தைகளுக்குப் பல வழிகாட்டல்கள் கொடுக்கப்பட வேண்டியுள்ளன. பாபா கூறுகிறார்: உங்கள் செய்திகள் அனைத்தையும் எழுதுங்கள். பாபா உங்களை எல்லா வகையிலும் கவனித்துக் கொள்வார். இக்குழந்தை உயர்ந்து செல்லவேண்டும் என்பதில் பாபாவுக்கு அதிக அக்கறை உள்ளது. கல்வியில் முழுக்கவனம் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் தந்தையாகிய கடவுளின் அதியன்பிற்கினிய மாணவர்கள். 'கடவுளின் வாசகங்கள்" எனும் தொடர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணரே, மனிதர்கள் அனைவரிலும் அதிமேலானவர். அவரே முதலாவது இளவரசர் ஆவார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நாராயணனின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? ஸ்ரீகிருஷ்ணர் ஒரு குழந்தை. ஒருவர் தனது குழந்தைப் பருவத்தில் சதோபிரதானாக இருப்பார். பின்னர், வாலிபப் பருவத்தை அடைந்து, அதன் பின்னர் முதியவர் ஆகின்றார். குழந்தைகள் தூய்மையாக இருப்பதால் புகழப்படுகிறார்கள். குழந்தைகள் பிரம்ம தத்துவத்தின் ஞானத்தை உடையவர்களைப் போன்றவர்கள். குழந்தைகள் பாவம் செய்வதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சிறு குழந்தையாக இருப்பதால், அவருடைய பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இருந்தபோதிலும் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை, துவாபரயுகத்தில் காட்டியுள்ளனர். தந்தை இங்கிருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, உலகில் வேறு எவருமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். பிராமணர்களே அதி மேன்மையானவர்கள். பிராமணர்களாகிய நீங்களே, கடவுளின் குழந்தைகள். சத்திய யுகத்தில், நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் நிச்சயமாகக் கடவுளிடமிருந்தே சுவர்க்கத்தைப் பெறுவீர்கள். இப்பிறவியானது உங்களின் அதி பெறுமதிவாய்ந்த, கிடைத்தற்கரிய ஒன்றாகும். இது அனைவருக்கும் கிடைக்காது. இந்நாடகம் இவ்விதமாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்பத்தில் கற்றவர்களே இப்பொழுதும் கற்கிறார்கள். கடவுள் நிச்சயமாக தேவ தேவியரை உருவாக்கினார். எவ்வாறாயினும், அவர்களை இறைவன், இறைவி என்று அழைக்க முடியாது. கடவுள் ஒருவரே! அசரீரியானவரின் புகழும் உள்ளது. சரீரதாரிகளுக்கு அப்புகழ் இருக்க முடியாது. அசரீரியானவரே இலக்ஷ்மி, நாராயணனை அவ்வாறு ஆக்கினார். அவர்கள் இப்பொழுது இராஜ யோகம் கற்கிறார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அந்நேரத்திலேயே விநாசமும் நிகழ்ந்தது. தந்தை நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார். இப்பொழுது இது சங்கம யுகத்திற்கான விடயம் ஆகும். சிவபாபா வரும்போது, நாடகம் முடிவிற்கு வருவதுடன், பின்னர் ஸ்ரீகிருஷ்ணரும் பிறவி எடுக்கிறார். ஆதரவற்ற அப்பாவி மக்கள் குழப்பம் அடைந்து விட்டனர். இதனாலேயே தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார். பரம தந்தை, பரமாத்மா பிரம்மா மூலம் சமய நூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகிறார். இந்நேரத்தில் நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் போன்று ஆகுகின்றீர்கள். ஆத்மாவிற்குப் புகழ் உள்ளது. அவரே ஞானக் கடலும், பேரானந்தக் கடலும், பேரானந்த சொரூபமும் ஆவார். இது தந்தைக்குரிய புகழாகும். தந்தை கூறுகிறார்: இப் பாரதமே அனைத்திலும் அதி மகத்தான யாத்திரை ஸ்தலமாகும். எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டதால் அவர்கள் சிவனின் புகழ் அனைத்தையும் மறையச் செய்துவிட்டனர். இல்லையெனில் அனைவருமே சிவாலயத்தில் மலர்களைப் படைப்பார்கள். அவர் ஒருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். நீங்கள் அரைக்கல்பத்திற்கு வெகுமதியை அனுபவித்த பின்னர், கீழிறங்குகிறீர்கள். அனைவருமே தமோபிரதானாக வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்காகப் புதிய உலகை ஸ்தாபிக்கிறேன். அவர் சுவர்க்கத்திற்கு வருவதில்லை. அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கே ஆகும். இது மிகவும் தெளிவான விடயம். மக்கள் தங்களுக்காகவே அனைத்தையும் செய்துவிட்டுப் பின்னர் தாங்கள் அனைத்தையும் தன்னலம் கருதாமலேயே செய்வதாகக் கூறுகிறார்கள்! எவருமே, தன்னலம் கருதாமல் எதையும் செய்வதில்லை. நீங்கள் செய்யும் அனைத்தினதும் பலனை நிச்சயமாக நீங்கள் பெறுகிறீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு அழியாத இந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்றேன். நான் உங்களுக்காக வைகுந்தத்தையே கொண்டு வந்திருக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராச்சியம் எனும் நினைவுச் சின்னத்தைக் கொடுக்கிறேன். எனவே நீங்கள் அதைப் பெறத் தகுதியுடைவர்கள் ஆகவேண்டும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்களுடைய உள்ளங்கையிலே வைகுந்தம் தரப்படுகிறது. நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறுகிறீர்கள், அதாவது ஒரு விநாடியில் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். சிவபாபாவே தெய்வீகக் காட்சியை அருள்பவர் ஆவார். அவர் ஒரு விநாடியில் உங்களை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாபா தன்னுடைய கைகளிலே ஒரு திறவுகோலை வைத்திருப்பார் என்றில்லை, தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். அங்கே நான் ஆட்சி செய்வதில்லை. பின்னர் நீங்கள் பக்தி மார்க்கத்திற்குச் செல்லும்போது நான் உங்களை தெய்வீகக் காட்சியினால் களிப்பூட்ட வேண்டியுள்ளது. அவர் மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்! அத்தகைய பாபா ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் ஒரேயொரு தடவையே வருகிறார். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிச்சயிக்கப்பட்ட நியதிப்படியே அனைத்தும் நிகழ்கின்றன. இப்பொழுது எதையுமே மாற்றமுடியாது. நாடகத்தில் நடப்பவை எல்லாம் நிச்சயிக்கப் பட்டவை ஆகும். அவையனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள்! பாபா உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளே, நான் உங்களுடைய காப்புறுதிப் பிரமுகர் ஆவேன். நான் உங்களுடைய ஒரு சதத்தையேனும் வீணாக்குவதில்லை. நான் உங்களைச் சிப்பிகளில் இருந்து வைரங்களாக மாற்றுகின்றேன். சிவபாபா இவை அனைத்தையும் இவர் மூலமாகவே செய்விக்கின்றார். அவர் கரன்கரவன்ஹார். அவர் அசரீரியானவரும் அகங்காரமற்றவரும் ஆவார். தந்தையாகிய கடவுள் எவ்வாறு இங்கிருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! அவர் உங்களைத் தனது காலிலே விழுமாறு கூறுவதில்லை. தந்தை உங்களுடைய கீழ்ப்படிவான சேவகன் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் அதிபதிகளாக ஆக்கியவர்கள் சந்தோஷத்தை அனுபவித்து வந்தார்கள். அவர்கள் இப்பொழுது துன்பத்தையே அனுபவிக்கிறார்கள். நீங்கள் பெறுகின்ற சந்தோஷம் அளப்பரியது. இவ்வளவு சந்தோஷம் வேறு எந்தச் சமயத்திலும் இல்லை. 'ஏன் பாரத மக்களே அதைப் பெறுகிறார்கள்? ஏனையோர் என்ன குற்றம் செய்தார்கள்?" என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. ஓ! ஆனால் பல மனிதர்கள் உள்ளனர்! அவர்கள் அனைவருமே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பாரதத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. கடவுள் வந்து, இலகு இராஜயோகத்தைக் கற்பித்தார். தந்தை கூறுகிறார்: நான் மீண்டும் ஒரு முறை வந்துள்ளேன். நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் பாகத்தை நடித்துள்ளீர்கள் என்பதையும், இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த ஆடை மிகவும் பழையதாகி விட்டது. (பாம்பின் உதாரணம்) 'ஆத்மாவே பரமாத்மா என்றும், அதனால் அவர் பாரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றார்" என்றும் சந்நியாசிகள் கூறுகிறார்கள். அத்தகைய ஒரு ஸ்திதியில் இருந்தவாறே அவர்கள் தங்களுடைய சரீரத்தை விட்டு நீங்குகிறார்கள். எவ்வாறாயினும், எவருமே பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க முடியாது. அதிலும் சிலர் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தவாறே தங்களது சரீரத்தை விட்டு நீங்குகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது 2, 3 நாட்களுக்கு அச்சூழலில் மயான அமைதி நிலவுகிறது. நீங்கள் உங்களுடைய பழைய சரீரத்தை விட்டு நீங்கி பாபாவிடம் செல்லப் போகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். பிரம்ம தத்துவம் என்பது பாபா அல்ல. அது அந்த ஆதரவற்ற அப்பாவி மக்கள் கொண்டிருக்கின்ற பொய்த் தோற்றமே ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து பாருங்கள். ஏனெனில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே நிகழ்கின்றது. எதைப்பற்றியும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.

2. தந்தை காப்புறுதிப் பிரமுகர் ஆவார். எனவே உங்களுடைய சரீரம், மனம் செல்வம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் தந்தையின் சேவையில் பயன்படுத்தி உங்களுடைய எதிர்காலத்தை மேன்மை ஆக்குங்கள். முழுத்தொடர்பையும் தந்தையுடனேயே வைத்திருங்கள். உங்களின் செய்திகள் அனைத்தையும் அவருக்குக் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மரணித்து வாழும் ஸ்திதியைக் கொண்டிருப்பதன் மூலம் சகல பேறுகளாலும் நிரம்பியவராகி, தைரியம் மற்றும் உற்சாகம் என்ற அழியாத முத்திரையைப் பதித்துக் கொள்பவர் ஆகுவீர்களாக.

சகல பேறுகளாலும் நிரம்பி இருப்பவர்களின் கண்களிலும் முகச்சாயல்களிலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஊக்கமும் உற்சாகமும் புலப்படும். எவ்வாறாயினும், தைரியம் மற்றும் உற்சாகம் என்ற அழியாத முத்திரையைப் பதிப்பதற்கு, நீங்கள் உங்களின் பாகம், இறை ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு எதிரான உங்களின் பழைய சம்ஸ்காரங்கள், சுபாவம், எண்ணங்கள் மற்றும் செயல்களில் மரணித்து வாழ வேண்டும். உங்களின் சத்தியம் என்ற ஆளியைப் பொருத்தி, உங்களின் சத்தியத்திற்கு ஏற்ப தொடர்ந்து நடைமுறையில் முன்னேறுங்கள். தைரியத்துடன் கூடவே, உற்சாகத்தையும் கொண்டிருங்கள். அப்போது உங்களின் பேறுகளின் பிரகாசம் தொலைவில் இருந்தே புலப்படும்.

சுலோகம்:
மேலாவிலும் ஜமேலாவிலும் (குழப்பமான சூழ்நிலை) இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர்களே தாரணையின் சொரூபங்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

உங்களின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு வார்த்தையும் விசேடமானவை. சதா இலகுவான சுபாவத்தைக் கொண்டிருங்கள். எளிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். உங்களின் செயல்கள் இலகுவான சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். இலகுத்தன்மையின் சொரூபமாக ஆகுங்கள். எப்போதும் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருங்கள். ஒரேயொருவரிடம் இருந்தே அனைத்தையும் பெறுங்கள். சதா ஒரேயொருவருடன் ஸ்திரமாக இருக்கும் இலகுவான பயிற்சியைக் கொண்டிருங்கள். சதா சந்தோஷமாக இருந்து சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்து அளியுங்கள். அனைவரின் மீதும் சந்தோஷ அலைகளைப் பரப்புங்கள். இதுவே உண்மையான சேவை ஆகும்.