16.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அற்புதமான, வர்ணமயமான (சுவர்க்க) உலகின் அதிபதிகள் ஆகுவதே, உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஆகவே, அந்தச் சந்தோஷத்தில் சதா முகமலர்ச்சியுடன் இருங்கள். வாடிப் போகாதீர்கள்.
கேள்வி:
பாக்கியசாலிக் குழந்தைகள் சதா கொண்டுள்ள உற்சாகம் என்ன?பதில்:
எல்லையற்ற தந்தையே எங்களைப் புதிய உலகின் இளவரசர்கள், இளவரசிகள் ஆக்குவதற்கு, எங்களுக்குக் கற்பிக்கிறார். அதே உற்சாகத்துடன், இந்த யுத்தத்தில் சுவர்க்கம் அமிழ்ந்துள்ளது என்பதையும் நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த முடியும். இந்த யுத்தத்தின் பின்னரே, சுவர்க்க வாசல்கள் திறக்கும். இந்தச் சந்தோஷத்தில் நிலைத்திருந்து, ஏனையோருக்கும் பெருஞ் சந்தோஷத்துடன் விளங்கப்படுத்துங்கள்.பாடல்:
பாபா, உலகம் மிகவும் வர்ணமயமானது.ஓம் சாந்தி.
இது ஒரு வர்ணமயமான உலகம் என யார் பாபாவுக்குக் கூறியது? இதன் அர்த்தத்தை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாடகம் மிகவும் வர்ணமயமானது எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார். திரைப்படங்கள் போன்றவற்றில், மிகவும் வர்ணமயமான காட்சிகளும், பக்கக் காட்சிகளும் உள்ளன. இப்பொழுது, இந்த எல்லையற்ற உலகை எவரும் அறிய மாட்டார்கள். இந்த முழு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உங்கள் மத்தியிலும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. சுவர்க்கம் எவ்வளவு வர்ணமயமானதும், எவ்வளவு அழகானதும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதை வேறு எவரும் அறிய மாட்டார்கள். அவ்வுலகம் எவ்வளவு வர்ணமயமான, அற்புதமான உலகம் என்பது எவருடைய புத்தியிலும் இல்லை. உலக அதிசயங்களைப் பற்றிய புகழ் உள்ளது. நீங்கள் மாத்திரம் இதை அறிவீர்கள். உங்கள் சொந்தப் பாக்கியத்திற்கு ஏற்ப, நீங்களே அந்த அற்புதமான உலகிற்காக முயற்சி செய்பவர்கள். அதுவே உங்கள் இலக்கும், குறிக்கோளும் ஆகும். அதுவே உலக அதிசயம்; அது இரத்தினங்களும், வைரங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளை கொண்ட, மிகவும் வர்ணமயமான உலகமாகும். நீங்கள் அற்புதமான வைகுந்தத்துக்கு ஒரு விநாடியில் செல்கிறீர்கள். நீங்கள் அங்கே விளையாட்டு, நடனம் போன்றவற்றில் ஈடுபடுகிறீர்கள். அது நிச்சயமாக ஓர் அற்புதமான உலகமாகும். இங்கு, இது மாயையின் இராச்சியம். இதுவும் மிகவும் அற்புதமானதே. மனிதர்கள் பல்வேறு வகையான விடயங்களில் ஈடுபடுகின்றார்கள். நாங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கின்றோம் என்பதை உலகிலுள்ள எவரும் அறியார். இது ஒரு நாடகம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தால், அவர்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொண்டிருப்பார்கள். தந்தை மிகவும் எளிமையானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மாயை உங்களை முழுமையாக அனைத்தையும் மறக்கச் செய்கிறாள். அவள் உங்கள் மூக்கைப் பற்றிப் பிடித்து, உங்களை அனைத்தையும் மறக்கச் செய்கிறாள். ஒருகணம், நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, “ஓஹோ! நாங்கள் உலக அற்புதமான, சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறோம்” என முகமலர்ச்சியுடன் இருக்கின்றீர்கள். பின்னர் மறுகணமே, நீங்கள் இதை மறந்து வாடி விடுகிறீர்கள். சிலர் அதிகளவு வாடி விடுகிறார்கள். இராஜஸ்தானிலுள்ள பழங்குடி இனமக்களான பீல் மக்கள் கூட அந்தளவிற்கு வாடுவதில்லை. தாம் சுவர்க்கத்துக்குச் செல்கிறோம் என்பதையும், தமக்கு எல்லையற்ற தந்தையே கற்பிக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளாததைப் போன்றுள்ளார்கள். அது அவர்கள் முற்றாகச் சடலங்கள் ஆகுவதைப் போன்றதாகும். அந்தச் சந்தோஷமும், போதையும் நிலைத்திருப்பதில்லை. உலக அதிசயம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணரே உலக அதிசயத்தின் இளவரசராக இருந்தார். நீங்களும் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த ஞானத்தில் திறமைசாலிகளாக உள்ளவர்கள், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த தினத்தைப் (ஜன்மாஷ்டமி) பற்றி விளங்கப்படுத்துவார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அதிசய உலகின் இளவரசராக இருந்தார். அந்தச் சத்தியயுகம் எங்கு சென்றது? எவ்வாறு நீங்கள் சத்தியயுகத்தில் இருந்து ஏணியில் இறங்கினீர்கள்? எவ்வாறு சத்தியயுகம் பின்னர் கலியுகம் ஆகியது? எவ்வாறு கீழறங்கும் ஸ்திதி ஏற்பட்டது? இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் மாத்திரமே பிரவேசிக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணர் வருகிறார் என நீங்கள் சந்தோஷத்துடன் விளங்கப்படுத்த வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. இதைக் கேட்கும் பொழுது, பாரத மக்கள் சந்தோஷப்பட வேண்டும். எவ்வாறாயினும், பாக்கியசாலிகளுக்கு மாத்திரமே அந்த உற்சாகம் இருக்கும். இந்த இரத்தினங்களை உலக மக்கள் கற்கள் என எண்ணி, வீசியெறிந்தும் விடுகிறார்கள். இந்த இரத்தினங்களே இந்த ஞானத்தின் அழியாத இரத்தினங்களாகும். தந்தையே இந்த ஞான இரத்தினங்களின் கடலாவார். இந்த ஞான இரத்தினங்கள் மிகவும் பெறுமதியானவை. நீங்கள் இந்த ஞான இரத்தினங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது ஞானக்கடல் கூறுவதை நேரடியாகச் செவிமடுக்கிறீர்கள். ஆகவே, வேறெதையும் செவிமடுக்கத் தேவை இல்லை. இந்த இரத்தினங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கு சட்டநிபுணர்களாக, சத்திரசிகிச்சை நிபுணர் போன்றோர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இந்த ஞானம் இருப்பதில்லை. அங்கு, நீங்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் ஜன்மாஷ்டமி பற்றி மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். இதைப் பற்றிப் பேசப்பட்டுள்ள பல முரளிகள் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானக் கடலைக் கடைய வேண்டும்; அப்பொழுதே கருத்துக்கள் வெளிப்படும். நீங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டுமானால், அதிகாலையில் எழுந்து அதை எழுதிக் கொள்ளுங்கள், பின்னர் அதை வாசியுங்கள். நீங்கள் மறந்து விட்ட கருத்துக்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். உங்களால் அவற்றை நன்றாகக் கிரகிக்க இயலும். எவ்வாறாயினும், தாங்கள் எழுதிய அனைத்தையும் அனைவராலும் பேச முடியாது; ஏதேனும் சில கருத்துகள் மறந்து போகலாம். ஆகவே, யார் ஸ்ரீகிருஷ்ணர் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் அதிசய உலகின் அதிபதியாக இருந்தார். பாரதம் வைகுந்தமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் அந்த வைகுந்தத்தின் அதிபதியாக இருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வருகிறார் என்னும் செய்தியை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். கடவுளே இராஜயோகத்தைக் கற்பித்தார், அவர் இப்பொழுதும் எங்களுக்கு இதைக் கற்பிக்கிறார். நாங்கள் இரட்டைக் கிரீடம் அணிந்த தேவர்கள் ஆகும்பொருட்டு, நாங்கள் தூய்மை ஆகுவதற்கான முயற்சியை செய்ய அவர் எங்களுக்கு உதவுகின்றார். இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். இதைப் பயிற்சி செய்துள்ளவர்களால் இதை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த இயலும். ஸ்ரீகிருஷ்ணரின் படத்தில் எழுதப்பட்டுள்ளவை முதற்தரமானவை. இந்த யுத்தத்தின் பின்னர், சுவர்க்க வாசல்கள் திறக்கும். இந்த யுத்தத்தில் சுவர்க்கம் அமிழ்ந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் பெருஞ் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். ஜன்மாஷ்டமி நாளில், மக்கள் புத்தாடைகள் போன்றவற்றை அணிகிறார்கள். எவ்வாறாயினும், நாங்கள் இப்பழைய சரீரங்களை நீக்கிப் புதிய, தூய சரீரங்களைப் பெறுவோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். கூறப்பட்டுள்ளது: ஒரு முழுமையான தூய சரீரம், அதாவது, பொன்னான சரீரம். அங்குள்ள ஆத்மாக்களும் தூய்மையானவர்கள், சரீரங்களும் தூய்மையானவை ஆகும். தற்பொழுது அவை தூய்மையானவை அல்ல. அவை வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகுகின்றன. நினைவு யாத்திரையின் மூலம் மாத்திரமே அவை தூய்மையாகும். பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்னும் விவேகம் கூட இல்லாத பலரும் இருக்கிறார்கள் என பாபா அறிவார். நீங்கள் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யும்பொழுதே, உங்கள் வார்த்தைகள் சக்தி நிறைந்தவை ஆகுகின்றன. இப்பொழுது அந்தப் பலம் எங்கே? யோகம் இல்லாதுள்ளது. நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுகிறீர்கள் என்பதை உங்கள் முகங்கள் எடுத்துக்காட்ட வேண்டும். நீங்கள் கற்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி பற்றி விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. ஸ்ரீகிருஷ்ணரை குறித்தே கூறப்பட்டுள்ளது: “அவலட்சணமானவரும், அழகானவரும்”. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணர், நாராயணன், அத்துடன் இராமரையும் கருநீல நிறமாக்கி விட்டார்கள். தந்தையே கூறுகிறார்: முதலில் இந்த ஞானச்சிதையில் அமர்ந்து, சுவர்க்க அதிபதிகள் ஆகிய என்னுடைய குழந்தைகள் எங்கே சென்று விட்டார்கள்? அவர்கள் காமச்சிதையில் அமர்ந்து வரிசைக்கிரமமாக, தொடர்ந்தும் வீழ்கிறார்கள். உலகம் சதோபிரதானில் இருந்து சதோ, இரஜோ, தமோவாக மாறுகிறது. அதேபோன்று, மனிதர்களின் ஸ்திதியும் அவ்வாறே ஆகுகிறது. காமச்சிதையில் அமர்ந்ததனால், அவர்கள் அனைவரும் அவலட்சணமாகி விட்டார்கள். நான் இப்பொழுது அனைவரையும் அழகாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன். ஆத்மாக்கள் அழகானவர்கள் ஆக்கப்பட வேண்டும். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ன என்பதை பாபா உங்கள் ஒவ்வொருவருடைய நடத்தையில் இருந்தும் புரிந்து கொள்கிறார். நீங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கிறீர்கள் என்பதிலிருந்து அது புரிந்து கொள்ளப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களின் செயற்பாடு உண்மையில் முதற்தரமாக இருக்க வேண்டும். உங்கள் உதடுகளிலிருந்து சதா இரத்தினங்களே வெளிப்பட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்ததினத்தின் பொழுது விளங்கப்படுத்துவது சிறந்தது. “அவலட்சணமானவரும், அழகானவரும்” என்னும் தலைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஏன் ஸ்ரீகிருஷ்ணரைக் கருநீல நிறமாகவும், அத்துடன் நாராயணனையும், இராதையையும் கருநீல நிறமாகவும் ஆக்குகிறார்கள்? சிவலிங்கமும் ஒரு கருங்கல்லினால் ஆனது. எவ்வாறாயினும், அவர் கருமை நிறமானவர் அல்ல. சிவன் யார் என்பதையும், அவர் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றார் என்பதையும் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் ஏன் அவரைக் கருமையாக்கி விட்டார்கள் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் சேவை என்ன என்பதை பாபா இப்பொழுது பார்ப்பார். தந்தை கூறுகிறார்: இந்த ஞானம் அனைத்துச் சமயங்களுக்கும் உரியது. நீங்களும் அவர்களுக்குத் தந்தை கூறுவதாகக் கூற வேண்டும்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் எவருக்கும் ஒரு ராக்கியைக் கட்ட முடியும். நீங்கள் அதை ஐரோப்பியர்களுக்கும் கட்ட முடியும். அவர்கள் யாராக இருப்பினும், நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும்: இவை கடவுளின் வாசகங்கள். அவர் நிச்சயமாக ஒருவருடைய சரீரத்தினூடாக இதைக் கூறுவார். அவர் கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்து உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். பாபா அதிகளவு விளங்கப்படுத்துகிறார், இருப்பினும், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை எனத் தந்தை புரிந்துகொள்கிறார். சிவபாபா அவர்களுக்குக் கற்பிக்கிறார் என அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் இரதமின்றி அவரால் கற்பிக்க முடியாது. ஒரு சமிக்ஞை கொடுத்தாலே போதும். சில குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவதில் நல்ல பயிற்சி உள்ளது. பாபாவும், மம்மாவும் ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவார்கள் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மம்மாவும் சேவை செய்வதுண்டு. இவ்விடயங்களும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். மாயையின் பல ரூபங்கள் உள்ளன. தமக்குள் மம்மா பிரவேசிக்கிறார் அல்லது சிவபாபா தமக்குள் பிரவேசிக்கிறார் எனப் பலரும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட சரீரத்தினூடாக மாத்திரமே புதிய கருத்துக்கள் கொடுக்கப்படும். அல்லது, அவை வேறு யார் மூலமோ கொடுக்கப்படுமா? அது சாத்தியமல்ல. உண்மையில், தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பல புதல்விகளும் உள்ளார்கள். சஞ்சிகைகளில் பல்வேறு ஆக்கங்கள் உள்ளன. மம்மா அல்லது பாபா அவர்களில் பிரவேசித்து, அதைக் கூறுகின்றார்கள் என்பதல்ல. இல்லை, தந்தை இங்கே நேரடியாக வருகிறார்; இதனாலேயே அவர் கூறுவதைச் செவிமடுப்பதற்கு நீங்கள் இங்கே வருகிறீர்கள். மம்மா அல்லது பாபா எவரிலாவது பிரவேசித்திருப்பின், நீங்கள் அங்கே அமர்ந்திருந்து அவர்களுடன் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இல்லை; இங்கு வருவதற்கான ஈர்ப்பை அனைவரும் உணர்கிறார்கள். தொலைவில் வசிப்பவர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள். ஆகவே, ஜன்மாஷ்டமியில், குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவுக்குச் சேவை செய்ய முடியும். ஸ்ரீகிருஷ்ணர் எப்பொழுது பிறப்பெடுத்தார்? எவரும் இதை அறிய மாட்டார்கள். இப்பொழுது உங்கள் புத்திகள் நிரப்பப்படுகின்றன. ஆகவே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சிலருக்கு முற்றாகவே எந்தச் சந்தோஷமும் இருப்பதில்லை என்பதை பாபா பார்க்கிறார். அது அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டோம் என ஒரு சத்தியம் எடுத்தாற் போன்றுள்ளது. சேவை செய்யும் குழந்தைகள் சேவை, சேவையைப் பற்றி மாத்திரமே சிந்திப்பார்கள். தாங்கள் பாபாவின் சேவையைச் செய்யாது விட்டால், தாங்கள் ஏனையோருக்கு இப்பாதையைக் காட்டாது விட்டால், தாங்கள் குருடர்களைப் போன்றவர்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்கள் பட்ஜில் ஸ்ரீகிருஷ்ணரின் படம் உள்ளது. விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் அதனைப் பயன்படுத்தலாம். அவர் ஏன் கருநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளார் என எவரிடமாவது வினவுங்கள். எவராலும் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது. இராமரின் மனைவி கடத்தப்பட்டதாக இதிகாசங்களில் எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய விடயங்கள் அங்கு நடக்க மாட்டாது. பாரத மக்களாகிய நீங்கள் மாத்திரமே தேவதைகளின் பூமியில் வாழ்ந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மயான பூமியில் வாழ்பவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தேவதைகளின் தாமத்தில் வாழ்பவர்கள் ஆகுவதற்கு, இப்பொழுது இந்த ஞானச்சிதையில் அமர்ந்து, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும்; அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுங்கள். இதற்குப் பெருமளவு புரிந்துணர்வு தேவையாகும். கடவுளே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதில் எங்களுக்குப் பெருமளவு போதை இருக்க வேண்டும். நாங்கள் கடவுளுடன் வாழ்கிறோம். நாங்கள் கடவுளின் குழந்தைகள், அவருடன் கற்றுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு பாடசாலை விடுதியில் வசிக்கும் பொழுது, வெளியுலக விடயங்களினால் நிறமூட்டப்படுவதில்லை. இதுவும் ஒரு பாடசாலை. கிறிஸ்தவர்களிடம் குறைந்தபட்சம் நற்பண்புகள் உள்ளன. ஆனால் இப்பொழுது மக்கள் நற்பண்புகள் அற்றும், தூய்மையற்றும், தமோபிரதானாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தேவர்களின் முன்னிலையில் சென்று தலை வணங்குகிறார்கள். அவர்களின் புகழ் மிகவும் மகத்தானது. சத்தியயுகத்தில் அவர்கள் அனைவரும் தெய்வீகக் குணாதிசயங்களுடன் இருந்தார்கள். அவர்கள் இப்பொழுது அசுரக் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதமாகச் சொற்பொழிவுகளை ஆற்றுங்கள். நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். ஸ்ரீகிருஷ்ணரையிட்டு, அவர் சிறியவராக இருப்பினும், பெரிய விடயங்களைப் பேசுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது மிகவும் மகத்துவமானவர்கள் ஆகுவதற்கு, மிகவும் மகத்துவமான வாசகங்களைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் எவருக்கும் ஒரு ராக்கியைக் கட்ட முடியும். அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். இந்த யுத்தத்தின் மூலமே சுவர்க்க வாயில்கள் திறக்கும். நீங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். இது கலியுக உலகம். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, குழந்தைகளாகிய உங்களின் புத்திகள் இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றன. பாடசாலைகளில் ஒரு புலமைப்பரிசிலைக் கோருவதற்கு அவர்கள் பெருமளவு முயற்சி செய்கிறார்கள். இங்கும், மிகப் பெரிய புலமைப்பரிசில் பெறப்பட வேண்டும். பெருமளவு சேவை செய்யப்படவுள்ளது. தாய்மார்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். அனைத்துப் படங்களையும் பயன்படுத்துங்கள். ஸ்ரீகிருஷ்ணர், நாராயணன், இராமச்சந்திரன், சிவனின் கருநீல நிறப் படங்களைப் பயன்படுத்துங்கள், அவற்றை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துங்கள். அவர்கள் ஏன் தேவர்களைக் கருநீல நிறமாக ஆக்கியுள்ளார்கள்? அவலட்சணமானவரும், அழகானவரும் என்பதை விளங்கப்படுத்துங்கள். நீங்கள் ஸ்ரீநாத் ஆலயத்துக்குச் சென்றால், உங்களால் முற்றாகவே கருமையான படங்களைப் பார்க்க முடியும். ஆகவே, அத்தகைய படங்களைச் சேகரியுங்கள். உங்கள் சொந்த (பாபாவின்) படங்களையும் உங்களால் காட்ட முடியும். அவலட்சணமானவரும், அழகானவரும் என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்தி, அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் இப்பொழுது ஒரு ராக்கியைக் கட்டிக் கொள்ள வேண்டும். காமச்சிதையிலிருந்து வெளியேறுங்கள். இந்த ஞானச்சிதையில் அமர்வதனால், நீங்கள் அழகானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இங்கு சேவை செய்யவும் முடியும். ஏன் தேவர்கள் கருநீல நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பற்றி உங்களால் மிகச்சிறந்த சொற்பொழிவுகளை ஆற்ற முடியும். சிவலிங்கம் ஏன் கருமை நிறமாகக் காட்டப்பட்டுள்ளது? “அழகானவரும், அவலட்சணமானவரும்” என ஏன் கூறப்படுகின்றது என நாங்கள் விளங்கப்படுத்துவோம். இதனால் எவரும் குழப்பமடைய மாட்டார்கள். சேவை மிகவும் இலகுவானது. தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நற்குணங்களைக் கிரகியுங்கள். உங்கள் குலத்தின் பெயரைப் புகழடையச் செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது அதிமேன்மையான பிராமணக் குலத்துக்கு உரியவர்கள் என்பதை அறிவீர்கள். எனவே, உங்களால் எவருக்கும் ஒரு ராக்கியைக் கட்டுவதன் அர்த்தத்தை விளங்கப்படுத்த முடியும். உங்களால் விலைமாதர்களுக்கும் விளங்கப்படுத்தி, அவர்களுக்கும் ராக்கிகளைக் கட்ட முடியும். உங்களுடன் படங்களை வைத்திருங்கள். தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இக்கட்டளைக்குக் கீழ்ப்படிவதால், நீங்கள் அழகாகுவீர்கள். பல வழிமுறைகள் உள்ளன. எவரும் குழப்பம் அடைய மாட்டார்கள். ஒரேயொருவரைத் தவிர எவராலும் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. அது ராக்கிப் பண்டிகையாக இல்லாதுவிடினும், நீங்கள் எந்நேரமும் எவருக்கும் ஒரு ராக்கியைக் கட்ட முடியும். அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் ஒரு ராக்கியை கட்ட முடியும். இது உங்கள் வியாபாரமாகும். தந்தைக்கு ஒரு சத்தியத்தைச் செய்யுமாறு அவர்களிடம் கூறுங்கள். தந்தை கூறுகிறார் என அவர்களிடம் கூறுங்கள்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு ராக்கியைக் கட்ட வந்துள்ளீர்கள் எனவும், அவர்களுக்கும் இவ்விடயத்தைப் புரிந்துகொள்ள ஓர் உரிமை உள்ளது எனவும் மசூதிகளுக்கும் சென்று விளங்கப்படுத்துங்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தூய்மை ஆகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இப்பொழுது இவ்வுலகம் தூய்மை அற்றுள்ளது. நிச்சயமாகச் சத்தியயுகம் இருந்தது. இப்பொழுது இது கலியுகம். நீங்கள் சத்தியயுகத்தில் குதாவிடம் செல்ல வேண்டாமா? இவ்விதமாக அவர்களுக்குக் கூறுங்கள், அவர்கள் விரைவில் வந்து உங்கள் பாதங்களில் வீழ்வார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞான இரத்தினங்களின் கடலிடம் இருந்து நீங்கள் அடைகின்ற, அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களுக்கு மதிப்பளியுங்கள். இந்த ஞானக்கடலைக் கடைந்து, இந்த இரத்தினங்களைக் உங்களுக்குள் கிரகியுங்கள். உங்கள் உதடுகளிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்களே வெளிப்படட்டும்.2. நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து உங்கள் வார்த்தைகளைச் சக்தி மிக்கவையாக ஆக்குங்கள். நினைவினூடாக மாத்திரமே, ஆத்மா தூய்மை ஆகுவார். ஆகவே, நினைவு செய்வதற்கான விவேகத்தைக் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எனது என்ற உணர்வின் எந்தவொரு சூட்சுமமான ரூபத்தையும் துறந்து, அதனால் சதா பயமற்றவராகவும் கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் ஆகுவீர்களாக.இன்றைய உலகில், செல்வம் உள்ளது, அத்துடன் பயமும் உள்ளது. அவர்களிடம் எந்தளவிற்கு அதிக பணம் உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் பயத்துடனேயே உண்கிறார்கள், உறங்குகிறார்கள். எங்கே ‘எனது’ என்ற உணர்வு உள்ளதோ, அங்கே நிச்சயமாகப் பயம் இருக்கும். ஒரு தங்கமான் கூட ‘என்னுடையதாக’ இருந்தால், அங்கே பயம் இருக்கும். எவ்வாறாயினும், ‘என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே’ என நீங்கள் சொன்னால், பயம் அற்றவராக ஆகுவீர்கள். அதனால், ‘எனது, எனது’ என்ற சூட்சுமமான ரூபம் ஏதாவது இருந்தால் அதைச் சோதித்து, அதைத் துறவுங்கள். அப்போது, பயமற்றவராகவும் கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுவீர்கள்.
சுலோகம்:
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு அளியுங்கள், நீங்கள் தானாகவே மரியாதையைப் பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
ஒருபுறம், எல்லையற்ற விருப்பமின்மை இருக்க வேண்டும். மறுபுறம், தந்தை பிரம்மாவைப் போல் தந்தையின் அன்பில் திளைத்திருங்கள். ஒரு விநாடியேனும் அல்லது ஓர் எண்ணத்தால் ஏனும் இந்த ஸ்திதியில் இருந்து கீழே வராதீர்கள். அன்பிலே திளைத்திருக்கும் இத்தகைய குழந்தைகளின் ஒன்றுகூடல் மட்டுமே தந்தையை வெளிப்படுத்தும். கருவி ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் தூய அன்பினதும் பேறுகளினதும் பராமரிப்பை வழங்கி, அவர்களைத் தகுதியானவர்கள் ஆக்க வேண்டும். அதாவது, அவர்களை யோகிகள் ஆக்க வேண்டும்.