16.11.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2007     Om Shanti     Madhuban


இந்நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, ஆழமான கர்ம தத்துவத்தில் கவனம் செலுத்துங்கள்.
பற்றை வென்றவராகவும், என்றும் தயாராகவும் இருங்கள்.


இன்று, ஞானப் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம், நற்குணங்களின் பொக்கிஷம், மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷம் ஆகிய சகல பொக்கிஷங்களையும் அருள்பவரான பாப்தாதா, ஓர் உரிமையைக் கொண்ட, குழந்தைகளாகவும், அதிபதிகளாகவும் உள்ள, எங்குமுள்ள தனது குழந்தைகள் அனைவரையும் பார்க்கின்றார். முடிவற்ற பொக்கிஷங்களின் அதிபதியான தந்தை தனது குழந்தைகள் அனைவரையும் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவர்கள் ஆக்குகிறார். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் சகல பொக்கிஷங்களையும் வழங்குகிறார். அவர் சிலருக்குக் குறைவாகவும், ஏனையோருக்கு அதிகமாகவும் வழங்குவதில்லை, ஏனெனில் பொக்கிஷங்கள் முடிவற்றவை. எங்குமுள்ள குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கண்களில் அமிழ்ந்திருக்கிறீர்கள். சகல பொக்கிஷங்களாலும் நிறைந்துள்ள நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.

தற்காலத்திற்கேற்ப, அதி பெறுமதிவாய்ந்த, மேன்மையான பொக்கிஷம் இந்த அதி மங்களகரமான சங்கம யுகத்தின் நேரம் ஆகும். ஏனெனில், இந்நேரத்தில் மாத்திரமே உங்களால் முழுச் சக்கரத்திற்குமான வெகுமதியை உருவாக்க முடியும். இக்குறுகிய காலத்தில் கிடைக்கும் பேறுகளினதும், வெகுமதியினதும் பெறுமதியைப் பொறுத்தவரை, ஒரு விநாடியின் பெறுமதி ஒரு வருடத்திற்குச் சமனானது. இந்நேரம் மிகவும் பெறுமதியானது. இந்நேரத்தையிட்டே பாடப்படுகிறது: “இப்பொழுதில்லையேல், எப்பொழுதும் இல்லை.” ஏனெனில், இந்நேரத்திலேயே இறைவனின் பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இந்நேரம் வைரத்தைப் போன்று பெறுமதியானது எனக் கூறப்படுகிறது. சத்திய யுகமானது தங்க யுகம் என அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தற்சமயம், நேரம் வைரத்தைப் போன்று பெறுமதியானது, குழந்தைகளாகிய நீங்கள் வைரத்தைப் போன்ற வாழ்க்கையைக் கொண்ட அனுபவசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்நேரத்தில் மாத்திரமே நீண்ட காலமாகப் பிரிந்திருந்த ஆத்மாக்கள் இறைவனுடனான சந்திப்பு, இறையன்பு, இறை ஞானம், மற்றும் இறை பொக்கிஷங்களின் பேறுக்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். சக்கரம் முழுவதிலும், தேவ ஆத்மாக்களும், மகான் ஆத்மாக்களும் உள்ளனர். எவ்வாறாயினும், இந்நேரத்தில், நீங்கள் இறைவனின் தெய்வீகக் குடும்பத்தவர் ஆவீர்கள். எனவே, இந்த நிகழ்காலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ, இந்த முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருப்பதால், அதற்கேற்ப நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களை மேன்மையானவர்கள் ஆக்கிக்கொள்ள முடியும். நீங்கள் அனைவரும் இந்த மகத்தான யுகத்தின் இறை பாக்கியத்தை அடைந்துள்ள, பல்கோடி மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்கள், அல்லவா? உங்களுடைய மேன்மையான பாக்கியத்தை அறிந்திருப்பதால், நீங்கள் உங்களுடைய பாக்கியத்தின் ஆன்மீக போதையை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? உங்களுடைய இதயத்தில் என்ன பாடலைப் பாடுகிறீர்கள்? ஆஹா எனது பாக்கியமே, ஆஹா! இது ஏனென்றால், இந்நேரத்தின் மேன்மையான பாக்கியத்துடன் ஒப்பிடும்போது, வேறெந்த யுகத்திலும் அத்தகைய பாக்கியத்தை உங்களால் அடைய முடியாது.

எனவே, பேசுங்கள்! சதா உங்களுடைய பாக்கியத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? அப்படித்தானே? தாங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாக உணர்பவர்கள் - சிலவேளைகளில் சந்தோஷமாக இருப்பவர்களல்ல, சதா சந்தோஷமாக இருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்! சதா! சதா! கீழ்க்கோடிடுங்கள், ‘சதா!’ உங்களுடைய புகைப்படம் இப்பொழுது தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. சதா சந்தோஷமாக இருப்பவர்களின் புகைப்படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. பாராட்டுக்கள். தாய்மார்கள் கைகளை உயர்த்துங்கள்! சக்திகள் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்கள்… என்ன வார்த்தையை நீங்கள் நினைவு செய்வீர்கள்? சதா. இவ்வாறு சிலவேளைகளில் மாத்திரமே இருப்பவர்கள் தாமதமாகவே வருவார்கள்.

இந்நேரத்தின் வேகம் இப்பொழுது மிக விரைவாகக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது என பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். நேரத்தின் வேகத்தை அறிந்தவர்கள் தங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: மாஸ்டர் சர்வசக்திவான் என்ற வகையில், எனது வேகம் துரிதமானதாக உள்ளதா? அனைவரும் முயற்சி செய்கின்றனர், ஆனால் பாப்தாதா எதைப் பார்க்க விரும்புகிறார்? ஒவ்வொரு குழந்தையும் துரித (தீவிர) முயற்சியாளராக இருந்து, ஒவ்வொரு பாடத்திலும் திறமைச்சித்தி அடைகிறாரா, அல்லது சாதாரண சித்தியா? துரித முயற்சியாளர்கள் இரண்டு விஷேட தகைமைகளைக் கொண்டிருக்கின்றனர்: 1. பற்றை வென்றவர். 2. என்றும் தயாராக இருப்பவர்(எவர் ரெடி). அனைத்திற்கும் முதலில், நீங்கள் பற்றை வென்றவராக இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய சரீரம், மற்றும் சரீர உணர்வின் பற்றிலிருந்து விடுபட்டிருந்தால், ஏனைய விடயங்களிலுள்ள பற்றை வென்றவராகுவது சிரமமானதல்ல. சரீர உணர்வின் அடையாளம் வீணானவை ஆகும்: வீணான எண்ணங்கள், நேரத்தை வீணாக்குதல். இதில் நீங்கள் உங்களை மிக நன்றாகச் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் நேரத்தை சாதாரணமான முறையில் செலவிடுவதுகூட, உங்களைப் பற்றை வென்றவராகுவதற்கு அனுமதிக்காது. எனவே, உங்களுடைய ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் வெற்றிகரமானதாக இருந்ததா எனச் சோதியுங்கள். சங்கம யுகத்தில், தந்தையிடமிருந்து கிடைக்கும் விஷேட ஆசீர்வாதம்: வெற்றி உங்கள் பிறப்புரிமை. எனவே, ஓர் உரிமையானது, இலகுவாக இருப்பதன் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. எனவே, இப்பொழுது என்றும் தயாராக இருங்கள்! என்றும் தயாராக இருப்பதென்றால், காலம் உங்களுக்கு சடுதியாக ஒரு கட்டளையை வழங்கினால், உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் நீங்கள் என்றும் தயாராக இருப்பதாகும். அது சடுதியாக நிகழும். உதாரணமாக, உங்களுடைய தாதியைப் பார்த்தீர்கள். அவர் ‘சடுதியாக’ என்பதற்கு என்றும் தயாராக இருந்தார். அவர் எல்லா வகையிலும், ஒவ்வொரு பணியிலும் தனது சுபாவத்தில் இலகுவாக இருந்தார். அவர் தனது தொடர்புகளில் இலகுவாகவும், தனது சுபாவத்தில் இலகுவாகவும், சேவையில் இலகுவாகவும், அனைவரையும் திருப்திப்படுத்துவதில் இலகுவாகவும், திருப்தியாக இருப்பதில் இலகுவாகவும் இருந்தார். இதனாலேயே பாப்தாதா காலத்தின் நெருக்கத்தைப் பற்றிய சமிக்ஞையை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்களுக்காக முயற்சி செய்வதற்கான காலம் மிகக் குறுகியது. எனவே, உங்களுடைய சேமிப்புக் கணக்கைச் சோதியுங்கள். உங்களுடைய சேமிப்புக் கணக்கை அதிகரிப்பதற்கான மூன்று வழிகளைப் பற்றி பாபா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். பாபா மீண்டும் ஒரு தடவை அவற்றை உங்களுக்குக் கூறுகிறார். இம்மூன்று வழிமுறைகளையும் உங்களுக்காகச் சோதியுங்கள். 1. உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கான வெகுமதியின் பொக்கிஷத்தை அதிகரியுங்கள், உங்களுடைய பேறுகளின் பொக்கிஷத்தை அதிகரியுங்கள். 2. திருப்தியாக இருங்கள் - இதிலும்கூட ‘சதா’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் திருப்திப்படுத்துங்கள், ஏனெனில் இவ்வாறு செய்வதால், உங்களுடைய புண்ணியக் கணக்கில் நீங்கள் சேமித்துக் கொள்கிறீர்கள், இப்புண்ணியக் கணக்கே உங்களுடைய பல பிறவிகளுக்கான வெகுமதியின் அடிப்படையாகும். 3. சதா களைப்பற்றவராகவும், தன்னலமற்றவராகவும் இருந்து, பெரிய இதயத்துடன் சேவை செய்யுங்கள். இவ்வாறாக நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவரிடமிருந்து இயல்பாகவே ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். இவையே மூன்று வழிமுறைகளாகும்: ஒருவரின் சொந்த முயற்சி, புண்ணியம், ஆசீர்வாதங்கள். இம்மூன்று கணக்குகளிலும் சேமித்து விட்டீர்களா? எனவே, இதைச் சோதியுங்கள், உங்களுக்குச் சடுதியாக ஒரு பரீட்சைத்தாள் வரும்போது உங்களால் திறமைச்சித்தி அடையமுடியுமா? ஏனெனில், இன்றைய நாட்களில், காலத்திற்கேற்ப, இயற்கையின் குழப்பம் காரணமாக இயற்கையின் சிறிய விடயங்கள் எந்நேரத்திலும் வரலாம். எனவே, கர்ம தத்துவத்தின் ஞானத்தில் விஷேட கவனம் செலுத்துங்கள். கர்ம தத்துவம் மிக ஆழமானது. நீங்கள் நாடகத்தில் கவனம் செலுத்துவது போன்று, ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதில் கவனம் செலுத்துவது போன்று, உங்களுடைய தாரணையில் கவனம் செலுத்துவது போன்று, அதேவிதமாக, ஆழமான கர்ம தத்துவத்தில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். சாதாரண செயல்களும், சாதாரண நேரமும் சாதாரண எண்ணங்களும் உங்களுடைய வெகுமதியில் ஒரு வேறுபாட்டை உருவாக்குகின்றன. இந்நேரத்தில், முயற்சியாளர்களான நீங்கள் அனைவரும் மேன்மையான, விஷேட ஆத்மாக்கள், நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீங்கள் உலக மாற்றத்திற்கும், உலக நன்மைக்குமான கருவி ஆத்மாக்கள். நீங்கள் உங்களை மாத்திரம் மாற்றுபவர்களல்ல, நீங்கள் உலக மாற்றத்திற்குப் பொறுப்பானவர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக உங்களுடைய மேன்மையான சுயமரியாதையின் விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகவேண்டும்.

நீங்கள் அனைவரும் பாப்தாதாவிலும், சேவை செய்வதிலும் மிகச் சிறந்த அன்பு வைத்திருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். ஏதாவதொரு திட்டத்தின்படி எங்கும் சேவைக்கான சூழல் காணப்படுகிறது. அத்துடன்கூடவே, நிகழ்காலத்திற்கமைய, அமைதியற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் ஆகிக்கொண்டிருக்கும் உலகிலுள்ள ஆத்மாக்களை அவர்களின் அமைதியின்மையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுவிப்பதற்காக உங்களுடைய சக்திகளால் அவர்களுக்கு சகாஷ் (சக்தியின் கரண்ட்) வழங்குங்கள். பௌதீக சூரியனால் அதன் சகாஷ் மூலமாக இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொண்டுவர முடிவதுடன், அதன் கதிர்களின் சக்தியால் பலவற்றை மாற்ற முடிகிறது. அதேபோன்று, மாஸ்டர் ஞான சூரியன்களான நீங்கள் பெற்றுள்ள அமைதியினதும், சந்தோஷத்தினதும் கதிர்கள் மூலமாக, உங்களுடைய சகாஷினால் ஏனையோரை அவர்களின் துன்பத்திலிருந்தும், அமைதியின்மையிலிருந்தும் விடுவிக்க வேண்டும். உங்கள் மனதாலும், சக்திவாய்ந்த மனோநிலையாலும் சேவை செய்வதன் மூலம் நீங்கள் சூழலை மாற்றவேண்டும். எனவே, இப்பொழுது உங்கள் மனதால் சேவை செய்யுங்கள். நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்வதை விரிவாக்கம் செய்துள்ளது போன்றே, உங்கள் மனதால் சேவை செய்வதன் மூலம், நீங்கள் தெரிவு செய்துள்ள தலைப்பான ‘நம்பிக்கை மற்றும் சந்தோஷம்’ பரவுமாறு செய்யுங்கள். (நம்பிக்கை, சந்தோஷம், தெய்வீகத்தன்மை). தைரியத்தைக் கொடுங்கள், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுங்கள். தந்தையின் ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுங்கள், இவற்றால் அவர்களுக்கு விடுதலை கொடுங்கள். இப்பொழுது சகாஷ் வழங்குவதற்கான தேவை அதிகளவில் உள்ளது. இச்சேவையைச் செய்வதில் உங்கள் மனதை மும்முரமாக வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் இயல்பாகவே மாயையை வென்றவராகவும், வெற்றியாளர் ஆத்மாவாகவும் ஆகுவீர்கள். அற்ப விடயங்கள் யாவும் “பக்கக் காட்சிகள்” ஆகும். பக்கக் காட்சிகளில் சில நல்லவையாகவும், சில தீயவையாகவும் இருக்கும். எனவே, உங்களுடைய இலக்கை அடைவதற்கு, நீங்கள் சில பக்கக் காட்சிகளைக் கடந்துசெல்ல வேண்டும். பக்கக் காட்சிகளைப் பார்ப்பதற்கு, பற்றற்ற பார்வையாளர் என்ற உங்கள் ஆசனத்தில் அமர்ந்திருங்கள், அவ்வளவுதான். அப்பொழுது, பக்கக் காட்சிகள் களிப்பூட்டுபவையாக ஆகிவிடும். எனவே, நீங்கள் என்றும் தயாரானவர்கள், அல்லவா? நாளையே ஏதாவது நிகழ்ந்தால், நீங்கள் என்றும் தயாரா? முதல் வரிசையினர் என்றும் தயாரா? ஆசிரியர்கள் தயாரா? அச்சா. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தயாரா? எத்தனை துறைகள் வந்திருந்தாலும், என்றும் தயாராக இருங்கள். அதைப் பற்றிச் சிந்தியுங்கள். பாருங்கள், தாதிகளே! தாதிகளே, நீங்கள் இதைப் பார்க்கிறீர்களா? அனைவரும் தமது கைகளை அசைக்கின்றனர். நல்லது. பாராட்டுக்கள். நீங்கள் என்றும் தயாராக இல்லாவிட்டாலும்கூட, இன்றிரவுக்குள் என்றும் தயாராகி விடுங்கள், ஏனெனில் காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. பாப்தாதா முக்திக்கான வாயிலைத் திறப்பதற்காகக் காத்திருக்கிறார். முன்னோடிக் குழுவினர் உங்களை அழைக்கின்றனர். உங்களால் என்னதான் செய்ய முடியாது? நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவான்கள். திடசங்கல்பத்தைக் கொண்டிருங்கள்: “நான் இதைச் செய்யவேண்டும். நான் அதைச் செய்யக்கூடாது.” அவ்வளவுதான். நீங்கள் எதையாவது செய்யக் கூடாதென்றால், உங்களுடைய திடசங்கல்பத்தினால், நீங்கள் செய்யக் கூடாததைச் செய்யாமலிருப்பதன் மூலம் அதைச் செய்து காட்டுங்கள். நீங்களே அதிபதிகள், அல்லவா? அச்சா.

முதல் தடவையாக வந்திருப்பவர்கள் யார்? முதல் தடவையாக வந்திருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்! கைகளை உயரமாக உயர்த்துங்கள்! அவற்றை அசையுங்கள். பலர் வந்திருக்கின்றனர். நல்லது. முதல் தடவையாக வந்திருப்பவர்களுக்குப் பல்கோடி மடங்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். முன்னைய கல்பத்தின் குழந்தைகள் மீண்டும் ஒரு தடவை தமது குடும்பத்திடம் வந்துசேர்ந்ததையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எனவே, கடைசியாக வந்திருப்பவர்கள் இப்பொழுது அற்புதங்களைக் காண்பிக்க வேண்டும். பின்னாலேயே இருந்து விடாதீர்கள். நீங்கள் கடைசியாக வந்துள்ளீர்கள், ஆனால் பின்னாலேயே இருந்து விடாதீர்கள். அனைவருக்கும் முன்னால் இருங்கள். இதற்கு, நீங்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்த தைரியத்தைக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கிறீர்களா? நல்லது. தைரியத்தைக் கொண்ட குழந்தைகள் பாப்தாதாவிடமிருந்தும், குடும்பத்திடமிருந்தும் உதவியைப் பெறுகின்றனர். அது நல்லது, ஏனெனில் குழந்தைகளாகிய நீங்களே குடும்பத்தின் அலங்காரங்கள் ஆவீர்கள். எனவே, வந்திருக்கின்ற அனைவரும் மதுவனத்தின் அலங்காரங்கள் ஆவீர்கள். அச்சா.

இது போபாலின் சேவைக்கான முறையாகும்: பலர் வந்திருக்கின்றனர். (அவர்கள் தமது கொடிகளை அசைக்கின்றனர்.) நீங்கள் பொன்னான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது நல்லது. சேவை செய்வதற்காக வந்திருக்கின்ற கருவிகளான நீங்கள் அனைவரும், சேவைக்கான சக்தியாகவும், பலனாகவும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்தீர்களா? அனுபவம் செய்தீர்களா? “ஆம்” என்று பதில் கூறுவதற்கு உங்கள் கொடிகளை அசைக்கலாம். ஓ.கே, நீங்கள் இப்பொழுது அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கிறீர்கள், ஆனால் அது சதா காலமும் அப்படியே இருக்குமா? அல்லது, அது குறுகிய காலத்திற்கே இருக்குமா? இதயபூர்வமாக ஒரு சத்தியம் செய்பவர்கள் - ஒருவரையொருவர் பார்த்துக் கை உயர்த்தாதீர்கள் - நீங்கள் சதா இந்தப் பேறை உங்களுடன் வைத்துக் கொள்வீர்கள், நீங்கள் தடைகளை வென்றவர்கள் ஆகுவீர்கள் என இதயபூர்வமாக உணர்பவர்கள் உங்கள் கொடிகளை அசைக்கலாம். ஓ.கே. பாருங்கள், நீங்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறீர்கள். தொலைக் காட்சியிலுள்ள படம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அச்சா. உங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு மிகச் சிறந்தது. நீங்கள் சந்தோஷமாக இவ்வாய்ப்பை எடுத்துக் கொள்கிறீர்கள், அனைவரும் உங்களுடைய முறைகளுக்கு ஏற்ப இங்கு வருவதற்கு திறந்த இதயத்துடன் அனுமதியைப் பெறுகிறீர்கள். ஓ.கே, இப்பொழுது நீங்கள் என்ன அற்புதங்களை நிகழ்த்துவீர்கள்? (நாங்கள் உங்களை 2008ம் ஆண்டில் வெளிப்படுத்துவோம்.) நல்லது. ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி, இச்சத்தியத்தை நிறைவேற்றுங்கள். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள். ஒரு மாஸ்டர் சர்வசக்திவானுக்கு ஒரு சத்தியத்தை நிறைவேற்றுவதென்பது பெரிய விடயமே அல்ல. திடசங்கல்பத்தை உங்களுடைய சகபாடியாக வைத்துக் கொள்ளுங்கள். திடசங்கல்பத்தை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள், ஏனெனில் திடசங்கல்பமே வெற்றிக்கான திறவுகோலாகும். திடசங்கல்பம் இருக்கும் இடத்தில் நிச்சயமாக வெற்றி இருக்கும். அப்படித்தானே, இல்லையா? இதை நீங்கள் நடைமுறையில் செய்து காட்டுவீர்களா? பாப்தாதாவும் மகிழ்ச்சியடைகிறார். நல்லது. எத்தனைபேர் ஒரு வாய்ப்பைப் பெறுகிறீர்கள் எனப் பாருங்கள். வகுப்பில் அரைவாசியினர் இங்கு சேவைக்காக வந்திருப்பவர்கள். நல்லது. பாருங்கள், சகார் பாபாவின் காலத்தில் நீங்கள் மிகச்சிறந்த பாகத்தை நடித்தீர்கள். இவர் (மகேந்திர பாய்) முதலாவது மியூசியத்தைத் தயார் செய்தார். எனவே, முழுப் பிராந்தியமும் சகார் பாபாவின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது. இப்பொழுது, நீங்கள் ஏதாவது புதுமையைக் காண்பிப்பீர்கள். ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. பல்வேறு துறைகளின் சேவை முறைகளும் பழையனவாகி விட்டன. கண்காட்சிகள், மேலாக்கள், மாநாடுகள், சிநேக மிலன்கள்(சிறிய அன்பான ஒன்றுகூடல்கள்) அனைத்தும் இடம்பெற்றுவிட்டன. இப்பொழுது புதியதாக ஏதாவது கண்டறியுங்கள். குறுகியதாகவும், இனிமையானதாகவும். குறைந்த செலவில் பெரிய சேவை. நீங்கள் ஆலோசகர்கள், அல்லவா? எனவே, ஆலோசகர்களான நீங்கள் புதிய ஆலோசனை கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில், கண்காட்சிகள் இடம்பெற்றன, பின்னர் மேலாக்கள், அதன் பின்னர் பல துறைகள் மூலமாக சேவை செய்யப்பட்டது. எனவே, அவ்வாறு ஏதாவது புதிய கண்டுபிடிப்பைக் கண்டறியுங்கள். இதற்கு யார் கருவியாகின்றார் எனப் பார்ப்போம். நல்லது. நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கிறீர்கள், அதனாலேயே பாப்தாதா தைரியத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியின் வடிவில் முற்கூட்டியே வாழ்த்துக்களை வழங்குகிறார். அச்சா.

தமது திடசங்கல்ப எண்ணங்கள் மூலமாக சதா வெற்றியடைகின்ற, எங்குமுள்ள தீவிர முயற்சியாளர்கள் அனைவருக்கும், எப்பொழுதும் தமது வெற்றித் திலகத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்களுக்கும், இரட்டைக் கிரீடமுடைய உலக உபகாரிகளுக்கும், எப்பொழுதும் தமது இலக்கையும், அதற்கு வேண்டிய தகைமைகளையும் சமனாக வைத்திருப்பவர்களுக்கும், கடவுளின் அன்பால் பராமரிக்கப்படுபவர்களுக்கும், அதி மேன்மையான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், இதயத்திலிருந்தான ஆசீர்வாதங்களும், நமஸ்தேயும்.

தாதியருக்கு: குழந்தைகள் பிரசன்னமாக இருக்கும்போது, தந்தை எப்படியோ பிரசன்னமாகி விடுகிறார். தந்தையால் குழந்தைகளிடமிருந்து தொலைவில் இருக்கவும் முடியாது, குழந்தைகளாலும் தந்தையிடம் இருந்து தொலைவில் இருக்க முடியாது. நீங்கள் ஒன்றாகவே இருக்கிறீர்கள், ஒன்றாகவே திரும்பிச் செல்வீர்கள் எனச் சத்தியம் செய்துள்ளீர்கள். அரைக் கல்பமாக நீங்கள் தந்தை பிரம்மாவுடன் இருப்பீர்கள். (தாதி ஜான்கி கூறினார்: அவரும்(சிவபாபா) எங்களுடனேயே இருக்கிறார், எங்களுக்குள் அமிழ்ந்திருக்கிறார்.) உங்களுடைய இந்த அனுபவம் சரியானது. இப்பொழுது உங்களுக்கு உத்தரவாதம் உள்ளது, ஆனால் நீங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்யும்போது, பாபா அங்கே இருக்கமாட்டார். வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பதற்கும் உங்களுக்கு ஒருவர் தேவைதானே. (எவ்வாறு உங்களால் (சிவபாபாவால்) மேலேயே இருக்கமுடியும்?) அது நாடகத்தின் ஒரு பாகமாகும். தந்தை பிரம்மா உங்களுடனேயே இருக்கிறார், அல்லவா? நாடகத்தில் என்ன நிகழ்கிறது எனப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் இராஜரீகத்தை (றோயலிற்றி) வெளிப்படுத்தி, ஒவ்வொரு வார்த்தையையும் யதார்த்தமாகப் (றியலிற்றி) பேசி, முதல் பிரிவுக்குள் செல்வதற்கான உரிமையைக் கோருவீர்களாக.

யதார்த்தம் என்றால், உங்களுடைய நிஜமான ரூபத்தின் விழிப்புணர்வை சதா கொண்டிருப்பதாகும், அதன் மூலமாக இராஜரீகமும் உங்கள் முகத்தில் தென்படும். யதார்த்தம் என்றால், வேறு எவருக்குமன்றி, ஒரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதாகும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதால், உங்களுடைய ஒவ்வொரு செயலிலும், வார்த்தையிலும் இராஜரீகம் தென்படும். உங்களுடன் தொடர்பில் வருபவர்கள் உங்களுடைய செயற்பாடுகளைத் தந்தையினுடையவை போன்று அனுபவம் செய்வார்கள். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும், அவர்கள் பேறையும், தந்தையினுடையதைப் போன்ற அதிகாரத்தையும் அனுபவம் செய்வார்கள். அவருடைய சகவாசம் நிஜமானதாக இருப்பதால், அது இரசவாதக்கல் போன்று தொழிற்படும். அத்தகைய இராஜரீகமான, யதார்த்தமான ஆத்மாக்கள் மாத்திரமே முதல் பிரிவுக்கான உரிமையைக் கோரிக்கொள்வார்கள்.

சுலோகம்:
உங்களுடைய மேன்மையான செயல்களின் கணக்கை அதிகரியுங்கள், அப்பொழுது உங்களுடைய பாவச் செயல்களின் கணக்கு முடிவடையும்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியைப் பயிற்சி செய்வதை அதிகரியுங்கள்(அசரீரி, விதேகி).

எங்கும் குழப்பம் நிலவுகிறது. மக்களினதும், இயற்கையினதும் குழப்பம் அதிகரிக்கப் போகிறது. அத்தகைய நேரத்தில், பாதுகாப்பிற்கான வழி, ஒரு விநாடியில் சரீரமற்றவராகி, உங்கள் சரீரத்திற்கு அப்பால் செல்வதும், ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதும் ஆகும். எனவே, அவ்வப்போது இதை முயற்சி செய்யுங்கள், உங்களால் உங்கள் மனதையும், புத்தியையும் நீங்கள் விரும்பிய இடத்தில் ஸ்திரப்படுத்த முடியும். இதுவே ஆன்மீக முயற்சி செய்தல் எனப்படுகிறது.
ஓம் சாந்தி

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, அனைத்து இராஜ யோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 முதல் 7.30 வரை ஒன்றுசேர்ந்து விஷேட தபஸ்யா செய்வார்கள். யோக வேளையின்போது, உங்களுடைய நல்லாசிகள் கொண்ட மேன்மையான மனோநிலையுடன், மனதால் மகாதானியாகி, அனைவருக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் சேவையைச் செய்யுங்கள்.