19.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உள்ளும் புறமும் சுத்தமானவராகவும், நேர்மையானவராகவும் ஆகுங்கள். உங்களுக்குள் எந்தத் தீய பழக்கங்களும் இருக்கக்கூடாது.
கேள்வி:
தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவதற்குப் பிராமணக் குழந்தைகளான நீங்கள் எந்தத் தாரணையில் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
1. இந்தப்பிறவியில் நீங்கள் தந்தைக்கு உரியவராகிய பின்னர், நூறு மடங்கு தண்டனையைப் பெறும்வகையில், எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். 2. அதி இனிமையான தந்தை, உங்களையும் தன்னைப் போன்றே இனிமையானவர் ஆக்குகின்றார். ஆகையால் பிறருக்குத் துன்பம் தரும்வகையில், எந்தக் கசப்பான வார்த்தையையும் உங்கள் வாயால் பேச அனுமதிக்காதீர்கள். 3. துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகளாகி, அனைவரது துன்பத்தையும் அகற்றுங்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். 4. புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சமநிலையைப் பேணுங்கள்.ஓம் சாந்தி.
சற்குருவின் தினம் (வியாழக்கிழமை) விருட்சத்தின் பிரபுவுக்குரிய நாள் எனவும் அழைக்கப்படுகின்றது. விருட்சத்தின் பிரபுவுக்குரிய நாள் என்றால் தந்தையின் நாளாகும். மாதத்தின் (லூனார்) முதல் நாளில் (அமாவாசை) இரவின் இருள் முடிவடைந்து, பகல் ஆரம்பம் ஆகுகின்றது; சந்திரன் வளர ஆரம்பிக்கின்றது. அந்நாட்களில், அவர்கள் சரீரத்தை விட்டுச் சென்ற ஆத்மாக்களை வருமாறு அழைத்து, மேலும் எதனையும் கேட்கத் தேவையற்ற வகையில், உணவு படைப்பதன் மூலம் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுகின்றார்கள். அவர்கள் அனைவரும் திருப்தி செய்யப்படுகின்றார்கள். அவர்கள் பகலுக்குச் சென்ற பின்னர், இரவிற்குள் மீண்டும் வருவதற்கு அவர்களுக்கு என்ன தேவை உள்ளது? ஒருவர் பிரிந்து சென்று, பன்னிரண்டு மாதங்களின் பின்னர், அவரது உறவினர்கள் அவருக்குப் படைப்பதுடன், அனைத்தையும் முடித்து விடுவதே சம்பிரதாயமாக உள்ளது. எனவே, அவர்கள் ஏன் அந்த ஆத்மாவை மீண்டும் காரிருளுக்குள் அழைக்கின்றார்கள்? எவ்வாறாயினும், பிராமணப் புரோகிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சம்பிரதாயம் இப்பொழுதும் தொடர்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் தானம் போன்றவற்றைப் பெறுகின்றார்கள். அது எல்லைக்கு உட்பட்ட அமாவாசை (காரிருள்), ஆனால் தந்தையோ இப்பொழுது எல்லையற்ற இருளிற்குள் வந்திருக்கின்றார். இப்பொழுது, தந்தை வந்திருப்பதால், அரைக்கல்பத்தின் இருள் முடிவடைகின்றது. அதன்பின்னர், சத்தியயுகத்தில், ஒளியைத் தவிர வேறு எதுவுமே இருக்க மாட்டாது. அங்கே பிரிந்து சென்ற ஆத்மாக்களுக்கு மக்கள் உணவு படைக்க மாட்டார்கள். இப்பொழுது இது எல்லையற்ற இருளாகும். பிரம்மாவின் இரவும், பிராமணர்களின் இரவும் முடிவடைந்து, பின்னர் பகல் வருகின்றது. அதன்பின்னர் பிரிந்து சென்ற ஆத்மாக்களுக்கு எவரும் உணவு படைப்பதில்லை. உண்மையில் அங்கே பிராமணப் புரோகிதர்கள் இருப்பதில்லை. அங்கே எவரும் மரணிப்பதில்லை என்றில்லை, ஆனால், இந்தச் சம்பிரதாயம் அங்கில்லை. இங்கே பல வகையான பிராமணர்கள் (குலம்) இருக்கின்றார்கள். மக்கள் அனைவரும் ஒரே உலகமும், ஒரே தேசமும் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். அத்தனை மக்களுக்கான ஒரு தேசம் இருக்க முடியாது. ஆம், சத்தியயுகம் இருந்த பொழுது, ஓர் இராச்சியமும் ஒரு சம்பிரதாயமுமே இருந்தன. தந்தையே வந்து, அதனை ஸ்தாபிக்கின்றார். அங்கே அனைவரும் மிகவும் இனிமையானவர்கள், ஆகையால் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் என்றுமே கசப்பான வார்த்தைகளைப் பேசவோ அல்லது எந்தப் பாவத்தையும் செய்யவோ மாட்டார்கள். இப்பொழுது ஒருவர் எந்தளவிற்கு அதிக முயற்சி செய்கின்றாரோ, அதற்கேற்ப, வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றார். அங்கே எவரும் எதனையும் திருடுவார்கள் என்றில்லை. அவர்கள் உள்ளும் புறமும் சுத்தமாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். இங்கே, அவர்கள் உள்ளே ஒன்றாகவும் வெளியே வேறொன்றாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகளவு இழப்பை ஏற்படுத்துகின்றார்கள். இவை யாவும் இராவண இராச்சியத்தின் தீய விஷமத்தனம் ஆகும். பாபா இப்பொழுது அதனை முற்றாக முடித்து விடுகின்றார். எவ்வாறாயினும், அனைவரினதும் தீய செயல்கள் அனைத்தும் உடனடியாக முடிவடைவதில்லை; அதற்குக் காலம் எடுக்கின்றது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக யோகத்தில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கே ஒவ்வோர் அடியிலும் நீங்கள் யோகத்தில் இருக்கின்றீர்களா என்பதையும், எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லையே என்பதையும் சோதித்துப் பார்ப்பீர்கள். “நான் இனிமையானவர் ஆகியுள்ளேனா? பிறரையும் இனிமையானவர் ஆக்குகின்றேனா? நானே கசப்பானவனாக இருந்தால், நான் எவ்வாறு ஏனையோரை இனிமையானவர் ஆக்க முடியும்?” அத்தகையவர்கள் இங்கே மிக விரைவில் வெளிப்படுத்தப்படுகின்றார்கள்; அவர்களால் மறைந்திருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: எனது குழந்தையாகிய பின்னர், நீங்கள் எத்தவறான செயல்களைச் செய்தாலும், பெருமளவு தீவிர தண்டனையை அனுபவம் செய்வதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். உங்களைத் தேவர்கள் ஆக்குவதற்காக, கடவுளே இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் தேவர்களின் புகழைப் பாடுகின்றார்கள்: தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும், முற்றிலும் தெய்வீகக் குணங்கள் உடையவர்களும், அகிம்சை எனும் பரம தர்மத்தைப் பின்பற்றுபவர்களும். இரு வகையான வன்முறைகள் உள்ளன. முதலாவது, காம வாளின் மூலம், அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தை மனிதர்கள் அனுபவம் செய்தலாகும். இரண்டாவதாக, அவர்கள் கோபப்படும் பொழுது, ஒருவரையொருவர் அடித்து, துன்பத்தை விளைவித்து, தாங்களும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகின்றார்கள். இங்கே குழந்தைகளாகிய உங்களிடம், அத்தகைய எந்தச் செயலையும் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களால் செய்யாதீர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நாங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள். ஆகையால் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்வதற்கான வழியை அனைவரிடமும் கூறுங்கள். அப்பொழுது கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான கர்மக் கணக்கு தீர்க்கப்படும். இங்கே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்தப் பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்களைத் தந்தையிடம் நீங்கள் கூறும்பொழுது, அவை அரைவாசியாகக் குறைக்கப்படும். எவ்வாறாயினும் எண்ணற்ற பிறவிகளாக நீங்கள் செய்துள்ள செயல்களின் பாவங்கள் பல உங்கள் தலைமீது உள்ளன. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்தப் பிறவியிலும் கூட, நீங்கள் பாவத்தைச் சேர்க்கக்கூடிய அத்தகைய செயல்களைச் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, பல பிறவிகளின் பாவச் செயல்களை, யோக சக்தியினால் நீங்கள் எரிக்க வேண்டும். இந்தப் பிறவியில் தந்தைக்கு உரியவராக ஆகிய பின்னரும் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். ஒரு பிராமணர் ஆகாமல், உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் பாபாவும், தாதாவும் ஆவார்கள். அவரிடம் இருந்தே நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள், இவரிடம் இருந்தல்ல. இவர் தன்னை எவ்வாறும் அழைத்துக் கொள்வதில்லை. இவர் ஓர் இரதம் மாத்திரமே, இவரிடமிருந்து நீங்கள் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை. இரதமும் நினைவு கூரப்பட்டுள்ளது. அவர்கள் ஹுசைனின் இரதத்தை வைத்திருக்கின்றார்கள்; அவர்கள் அந்தக் குதிரையை அதிகளவு அலங்கரிக்கின்றார்கள். இது ஒரு தூய்மையற்ற சரீரமாகும். இவரும் இப்பொழுது அலங்கரிக்கப்படுகின்றார். இவர் தனது சொந்த முயற்சிகளினால் அலங்கரிக்கப்படுகின்றார். பாபா இவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுப்பதில்லை. தனக்கு வாடகை கொடுக்கப்பட வேண்டும் என சிலவேளைகளில் பாபா நகைச்சுவையாகக் கூறுகின்றார். எவ்வாறாயினும், இவரும் உங்களைப் போன்றே முயற்சி செய்ய வேண்டும். இவருக்கு வாடகை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராசை இல்லை; அந்நேரத்தில் பாபா நகைச்சுவையாகவே கூறுகின்றார். யோக சக்தியினால் ஆத்மா சதோபிரதானாக வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தூய்மை ஆகுவீர்கள், பின்னர் நீங்கள் பிறரையும் உங்களுக்குச் சமமானவர்களாக்க வேண்டும். நல்ல சேவை செய்கின்ற குழந்தைகள் மிகவும் பிரபல்யமானவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அந்தக் குழந்தைகளை பாபா சேவைக்காக அனுப்புகின்றார். நீங்கள் மிகவும் இனிமையாகப் பேச வேண்டும், எவருடனும் சண்டையிடக் கூடாது. பிராமணர்கள் கசப்புடன் பேசினால், அவர்கள் கோபம் என்ற தீய ஆவியைக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறப்படும். நீங்கள் புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சமநிலையைப் பேண வேண்டும். பலரும் கோபம் என்ற தீய ஆவியைக் கொண்டிருக்கின்றார்கள், பலரும் அவர்களையிட்டுக் குழப்பம் அடைகின்றார்கள். தங்களுடைய கோபத்தில் இருந்து அனைவரும் விடுதலை அடைந்துள்ளார்கள் என்றில்லை. நீங்கள் அனைவரும் சம்பூர்ணமானவர் ஆகுவதற்கான காலம் வரும்வரை, கலப்படம் தொடர்ந்தும் படிப்படியாகவே அகற்றப்படும். எவரும் தன்னிடம் கோபம் இல்லை எனக் கூற முடியாது; சிலர் அதிகளவு கோபத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சிலருக்குக் கோபம் குறைவாக உள்ளது. சிலரின் குரலே, சண்டை போடுவதைப் போன்றுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக வேண்டும். இங்கேயே நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாக வேண்டும். பல வகையான விகாரங்கள் உள்ளன. கோபப்படுவது, பொய் பேசுவது ஆகிய இரண்டும் விகாரங்களேயாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் எந்தப்பாவச் செயல்களைச் செய்தாலும், அதற்குக் கடுமையான தண்டனை இருக்கும். அங்கே என்னுடன் உங்களுக்குத் தண்டனையை வழங்குகின்ற தர்மராஜும் இருக்கின்றார். இங்கே உங்களுக்கான தண்டனை புலப்படும் விதத்தில் உள்ளது, ஆனால் அங்கே தர்மராஜின் தண்டனை மறைமுகமானது. ஆத்மா கருப்பை என்ற சிறையிலும் தண்டனையை அனுபவம் செய்கின்றார். ஒருவர் நோயினால் வேதனைப்படும் பொழுது, அதுவும் கர்ம வேதனையே. ஆத்மா தர்மராஜிடம் இருந்து தண்டனையைப் பெறுகின்றார். நீங்கள் இந்நேரத்தில் கடந்த காலத்திற்கும், தற்காலத்திற்குமான தண்டனையைப் பெறுகின்றீர்கள். அதன்பின்னர் கருப்பை என்ற சிறையிலும் தண்டனை உள்ளது. அது மறைமுகமானது. அங்கே தர்மராஜ் உங்களுக்கு தண்டனை வழங்குவதில்லை. இங்கே ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களின் மூலம் வேதனை அடைய வேண்டும். இப்பொழுது தந்தை எங்களை அதிலிருந்து விடுவிக்கின்றார். பரமாத்மாவாகிய பரமதந்தையும், தர்மராஜ் பாபா ஆகிய இருவரும் பிரசன்னமாக உள்ளார்கள். இது இப்பொழுது அனைவரினதும் தீர்வுக்கான காலமாகும். ஒவ்வொருவருக்குமான நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சம்பூர்ணமடைய வேண்டும் என்பதனைப் புரிந்து கொண்டிருப்பதால், எந்தப் பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. உங்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், இயலுமானவரை முழு முயற்சி செய்யுங்கள். இது ஒவ்வொரு கல்பத்திற்குமான விடயமாகும். அந்தக் கல்விகள் ஒரு பிறவிக்கானவை. பின்னர் உங்களின் அடுத்த பிறவியில் நீங்கள் வேறொன்றைக் கற்க வேண்டும். எவ்வாறாயினும், இந்தக் கல்வி 21 பிறவிகளுக்கானது. அநாதியான தந்தை அழிவற்ற இந்தக் கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்றார், இதன்மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு அழியாததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இது பழைய உலகம் என்பதும், புதிய உலகில் பாரதம் மாத்திரமே இருந்தது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சக்கரம் இப்பொழுது மீண்டும் சுழல வேண்டும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிய உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து, பிரம்மாவின் மூலம் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார் என்பது நினைவு கூரப்படுகின்றது. பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். ஆகவே, அவர்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகுவதுடன், இராஜயோகத்தையும் கற்கின்றார்கள். பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகளான நாங்கள் தூய்மை ஆகுகின்றோம். உங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து விடும்படி தந்தை உங்களிடம் கூறுவதில்லை. இல்லை, வீட்டில், உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதே, ஒரு தாமரையைப் போன்றிருங்கள். ‘பாப்தாதா| என்ற பெயர் மிகவும் சிறந்தது. நீங்கள் தாதாவிடம் இருந்து (பாட்டனார்) ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அவரே அதிமேலானவர். பிரம்மா இப்பொழுது தூய்மையற்றவர், ஆனால் இவர் முதலில் மேன்மையான, பூஜிக்கத்தக்க சக்கரவர்த்தியாக இருந்தார். இப்பொழுது, இறுதியில், அவர் தூய்மை அற்றவர் ஆகியுள்ளார். இதுவே இவரது இறுதிப் பிறவி. இவ்வுலகில் தூய்மையானவர் ஒருவரேனும் இல்லை. தூய உலகில் கடவுளை எவருமே நினைவு செய்வதில்லை. ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இந்தக் கணக்கைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களே முதலில் தங்கள் ஆஸ்தியை பெற்றுக் கொள்வதற்கு வருவார்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீங்கிச் செல்லும் பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். எனவே, அந்த ஆத்மாவை நரகத்திற்கு அழைக்க வேண்டிய தேவை என்ன உள்ளது? அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. சாதுக்கள் அல்லது புனிதர்களில் யாராவது மரணிக்கும் பொழுது, போக் படைப்பதன் மூலம், அவர்கள் அவரது இறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடுகின்றார்கள். அந்த ஆத்மா ஒளியுடன் கலந்து விட்டார் என்று அவர்கள் கூறும்போது, ஏன் இறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி, போக் போன்றவற்றைப் படைக்கின்றார்கள்? சரீரம் அழிக்கப்பட்டு, ஆத்மா பிரிந்து சென்று விட்டார், எனவே அந்த ஆத்மாவை மீண்டும் திரும்பவும் அழைப்பதற்கான அவசியம் என்ன? ஒளியில் கலந்து விட்ட ஓர் ஆத்மாவால் எவ்வாறு திரும்பவும் வர முடியும்? பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் உள்ளன! ஒருவர் அநாதியான முக்தியை அடையும் பொழுது, அவர் மீண்டும் கீழிறங்கி வருவதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். உண்மையில், ஒருவர் அநாதியான முக்தியை அடைந்திருந்தால், அவர் ஒரு பாகத்தில் நடிப்பதில் இருந்து விடுதலை அடைந்துள்ளார் என்பதால், அவர்கள் அதனை மிகவும் சந்தோஷத்துடனேயே கொண்டாட வேண்டும். அவ்வாறாயின். அந்த ஆத்மாவை நீங்கள் நினைவு செய்யவும் கூடாது. இதனை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். மனிதர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரேயொரு தந்தையை நினைவு செய்கின்றார்கள். அனைவரும் சகோதரர்கள் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். ஆகையால், நிச்சயமாகத் தந்தையிடம் இருந்தே சகோதரர்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். மனிதர்களால் எவ்வாறு மனிதர்களுக்குச் சற்கதி அளிக்க முடியும்? இதனாலேயே சற்கதி அருள்கின்ற ஒரேயொருவரின் பெயர் மிகவும் பிரபல்யமாக உள்ளது. அவரே ஞானக் கடலும், தூய்மையாக்குகின்றவரும் ஆவார். தந்தையே வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அனைவரையும் இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலை செய்கின்றார். இதுவே அமாவாசை என்ற எல்லையற்ற இரவு என அழைக்கப்படுகின்றது. அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற இரவும், அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற பகலும் உள்ளன. இது ஒரு நாடகம். மக்கள் சமய மாநாடொன்றைக் கூட்டி, ‘அமைதி எவ்வாறு நிலவ முடியும்’ என உங்களைப் பேச அழைக்கும் பொழுது, ‘சத்தியயுகத்தில் மாத்திரமே, ஒரே தர்மமும் ஒரே வழிகாட்டலும் உள்ளன’ என நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும். அது 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. அங்கே அமைதியும் சந்தோஷமும் நிலவின. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் மௌன தாமத்தில் இருந்தார்கள். புதிய உலகில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. பழைய உலகில் விருட்சம் மிகவும் பெரிதாக வளர்கின்றது; அங்கு எண்ணற்ற சமயங்கள் உள்ளன. சமயங்கள் அனைத்தையும் அழித்து, ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டியது தந்தையின் பணியாகும். சிவபாபா கூறுகின்றார்: இது என்னுடைய தொழில். நான் வந்து இந்தத் தொழிலை ஒவ்வொரு கல்பத்திலும் செய்கின்றேன். சத்தியயுக இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்காக, அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் மாத்திரமே இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர் தூய்மையற்ற அனைவரையும் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே நான் வருகின்றேன். 84 பிறவிகள் முழுவதையும் எடுத்தவரின் இரதத்தின் மூலமே நான் வந்து விளங்கப்படுத்துகின்றேன். புதிய உலகம் என எதுவும் இல்லை. நான் பழைய உலகத்திற்கு வந்து, அதனைப் புதியதாக ஆக்குகின்றேன். நான் தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குகின்றேன். துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்கின்றவரும் என்பதே எனது பெயராகும். சந்தோஷ வேளையில் எவரும் என்னை நினைவு செய்வதில்லை; அவர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுதே, என்னை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாகச் சந்தோஷத்தைப் பெற்றிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பிக்கவே வந்துள்ளேன். இப்பொழுது, கற்பதே உங்கள் கடமை. மக்கள் காரிருளில் இருக்கின்றார்கள். உங்களுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது, முழு உலகம் எனும் படகு மூழ்குகின்றது என்பதால், அவர்கள் அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்லும் வகையில், அனைவரது படகையும் நீங்கள் அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றீர்கள். இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் வரிசைக்கிரமமாக உள்ளன. கலங்கரை விளக்கங்களாகி உள்ளவர்கள் தொடர்ந்தும் இந்தப் பாதையைப் பிறருக்குக் காட்டுவார்கள். பிறருக்குப் பாதையைக் காட்டுவதே அவர்களின் கடமை. எவ்வாறு தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நிலையான சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் இங்கே வரும்பொழுது, மிகவும் புத்துணர்ச்சி அடைகின்றீர்கள். ஆனால் நீங்கள் வெளியில் சென்றவுடன், உங்கள் போதை முழுவதும்; மறைந்து விடுகின்றது. தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வதற்கான ஆழமான ஆசையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்தும் தந்தையிடம் இருந்து ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். முற்காலத்தில், மக்கள் பாத யாத்திரை செய்யும்பொழுது, மிகவும் அவதானமாக இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அங்கே பேரூந்திலும், புகைவண்டியிலும் செல்கின்றார்கள். இக்காலத்தில் மாயையின் ஆடம்பரம் பெருமளவில் உள்ளது. சத்தியயுகத்தில், பெருமளவு கோலாகலம் இருந்தது; அது துவாபர யுகத்திலிருந்து தொடர்ந்தும் குறைய ஆரம்பித்தது. இப்பொழுது இறுதி நேரத்தில் மீண்டும் அது வளர ஆரம்பித்துள்ளது. இதுவே மாயையின் பகட்டு எனப்படுகின்றது. “சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்புகின்றீர்களா?” என நீங்கள் பிறரிடம் வினவினால், இங்கேயே தங்களுக்குச் சகல வகையான சந்தோஷமும் உள்ளன என அவர்கள் கூறுகின்றார்கள்: மோட்டார் வண்டிகள், விமானங்கள் என அனைத்தும் உள்ளது என்றும், இதுவே தங்களுக்குச் சுவர்க்கம் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள், “எங்களிடம் செல்வம், உடைமைகள், நகைகள் போன்ற அனைத்தும் உள்ளன, இலக்ஷ்மியும் நாராயணனும் நகை அணிந்திருந்திருக்கின்றார்கள் என்பதால் நாங்களும் அணிவோம்” எனக் கூறுகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் அந்த நஞ்சையே நினைவு செய்கின்றார்கள். விகாரம் என்ற நஞ்சை எடுப்பதை அவர்களால் நிறுத்த முடியாதுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கூறுவதை நீங்கள் கேட்பதில்லை! நீங்கள் தூய்மை அடையப் போவதில்லை என்றால், ஏன் “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்” என என்னை அழைக்கின்றீர்கள்? நான் கூறுவதை நீங்கள் செவிமடுக்காது விட்டால், தர்மராஜால் கொடுக்கப்படுகின்ற தண்டனை இருக்கும் என்பதை நினைவு செய்யுங்கள். அவரும் உங்களைப் பயப்படுத்துகின்றார். பல குழந்தைகள் தொடர்ந்தும் விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; அவர்களுக்கு எவ்விதப் பயமுமே இல்லை. அவர்களுக்கு எவ்வளவு தண்டனை உள்ளது என்பதனைக் கற்பனை செய்து பாருங்கள்; கேட்கவும் வேண்டாம்! அவர்களின் அந்தஸ்தும் அழிக்கப்படும். நீங்கள் முயற்சி செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும். தீய சகவாசத்தின் செல்வாக்கினால், தங்கள் அந்தஸ்தை முற்றாக இழக்கும் வகையில், அவர்கள் விழுந்து விடுகின்றார்கள். வைரச் சுரங்கங்கள் போன்றவை வெறுமை ஆகுகின்றன என்பதும், பின்னர் அவை மீண்டும் நிரம்பும் என்பதும் உங்களுக்குத் தெரியும். தங்கமும், வைரமும் மலையளவு இருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் வைரத்தைத் தோண்டும் பொழுது, அவை ஆரம்பத்தில் வெறும் கற்களைப் போன்றே இருக்கின்றன, ஆனால் அதன்பின்னர் அவர்கள் அவற்றை மெருகூட்டி, அவற்றை வைரங்கள் ஆக்குகின்றார்கள். நீங்களும் மெருகூட்டப்படுவதற்காக இந்த ஞானம் என்ற அரைக்கும் கல்லில் இடப்படுவதால், மிகவும் நல்லவர்கள் ஆகுகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இது இப்பொழுது கணக்குத் தீர்க்கும் காலமாகும். ஆகவே எந்தப்பாவச் செயலையும் செய்யாதீர்கள். உங்களுக்கு நன்மை அளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மிகவும் இனிமையானவர் ஆகுங்கள். கோபத்தைத் துறந்திடுங்கள்.2. தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெறும் ஆழமான ஆசையைக் கொண்டிருங்கள். ஒவ்வோர் அடியிலும் தந்தையிடம் இருந்து ஆலோசனையைப் பெறுங்கள். தந்தைக்குச் சமமாக, துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பாக்கியத்தையும் மற்றும் பாக்கியத்தை அருள்பவரையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டுள்ள மாஸ்ரர் படைப்பவர் ஆகுவீர்களாக.உங்களின் மனதில் சதா சூட்சுமமான ஒலியைத் தொடர்ந்து கேளுங்கள்: ‘ஆஹா எனது பாக்கியமே, ஆஹா பாக்கியத்தை அருள்பவரே’. அத்துடன் தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுங்கள். இப்போது நீங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ, அதை அறிந்து கொண்டுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்துள்ளீர்கள். இந்த அனுபவத்தைப் பேணுங்கள், நீங்கள் சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு இருப்பீர்கள். பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஆத்மாக்களைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் இதுவேயாகும். ஆகவே, மாஸ்ரர் சர்வசக்திவானாகவும் மாஸ்ரர் படைப்பாளராகவும் இருப்பதை உணர்ந்து, உங்களின் நேரத்தை அற்பமான, சிறுபிள்ளைத்தனமான விடயங்களில் வீணாக்காதீர்கள்.
சுலோகம்:
தாமரை மலர் ஆசனத்தில் அமர்ந்திருப்பவரால் மட்டுமே, மாயையின் எந்தவிதமான கவர்ச்சிக்கும் அப்பால் இருக்க முடியும். அத்துடன் தந்தையின் அன்புடன் அன்பானவராகவும் ஒரு மேன்மையான கர்மயோகியாகவும் இருக்க முடியும்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமான, முழுமை ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
முழுமை ஸ்திதியின் அடையாளமும் அதன் தகைமைகளும் என்னவென்றால், உங்களின் முயற்சிகள் எளிமையாக இருக்கும், உங்களின் சம்ஸ்காரங்கள் தந்தை பிரம்மாவைப் போன்றதாக இருக்கும்: அப்பால் இருப்பதும் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பதும். இதுவே சம்பூரணமான, முழுமையான ஸ்திதியின் அடையாளமும் தகைமையும் ஆகும். எனவே, இந்த சம்ஸ்காரங்களில் சமமானவர் ஆகுங்கள். இந்தத் தகைமைகள் உங்களிடம் இருக்கும்போது, நீங்கள் அனைவரின் இதயத்தையும் வெற்றி கொள்வீர்கள். சங்கமயுகத்தில் அனைவரின் இதயத்தையும் வெற்றி கொள்பவர், எதிர்காலத்தில் உலகச் சக்கரவர்த்திகள் ஆகுவார்கள்.