21.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மற்றவர்களிடம் இருந்து செவிமடுத்த விடயங்களின் அடிப்படையிலேயே இதுவரைக்கும் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு நேரடியாக இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் தன்னைப் போன்று ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார்.

கேள்வி:
சிறந்த முயற்சியாளர்களின் ஸ்திதியின் அடையாளங்களும், புகழும் யாவை?

பதில்:
சிறந்த முயற்சி செய்யும் குழந்தைகள் தாயையும், தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைமீது கருணை கொண்டு, முழுக் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் பாபாவின் நினைவில் இருப்பதற்கு நிச்சயமாக சிறிதளவு நேரத்தையேனும் ஒதுக்குவார்கள். அவர்களின் ஸ்திதி ஆட்ட, அசைக்க முடியாததும், ஸ்திரமானதும் என்று நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் மகாவீர்கள் என அழைக்கப் படுகின்றனர்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை…

ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில், உலகம் வெறுமனே பாடல்களைப் பாடுகின்றது. குழந்தைகளாகிய நீங்களும்கூட பக்தி மார்க்கத்தில் கள்ளங்கபடமற்ற பிரபுவின் புகழைப் பாடினீர்கள் என்பதையும், இப்பொழுது அதே கள்ளங்கபடமற்ற பிரபு உங்களுக்கு நேர் முன்னிலையில் இருக்கின்றார் என்பதையும் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். “கள்ளங்கபடமற்ற பிரபு” என்ற வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை, ஆனால் “சிவ பாபா” என்ற வார்த்தைகள் இந்த ஞான மார்க்கத்திற்கு உரியவை. அநாதியாக நிச்சயிக்கப்பட்ட நாடக நியதிக்கேற்ப, எங்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்காகத் தந்தை சங்கம யுகத்தில் வந்தாக வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களை முயற்சி செய்யத் தூண்டி வருகின்றார். எவ்வளவு காலமாக நீங்கள் பக்தி செய்கின்றீர்கள் என்பதையும் அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். முதலில் பக்தியை ஆரம்பித்தவர்களே வந்து, இந்த ஞானத்தைப் பெற்று, சூரிய வம்சத்தவர்கள் ஆகுவார்கள். சத்திய யுகத்தில் ஒரு இலக்ஷ்மி நாராயணன் மாத்திரம் இருப்பதில்லை, அவர்களின் வம்சத்தவர்களும் அங்கே இருப்பார்கள். அது தேவர் குலம் எனப்படுகின்றது. பாரதத்தில் தேவர் குலம் இருந்தது, இப்பொழுது அசுர குலமே உள்ளது. இது சங்கம யுகம் ஆகும். நீங்கள் இப்பொழுது இந்த அசுர குலத்திலிருந்து அந்த தேவர் குலத்திற்குச் செல்லவேண்டும். நினைவுகூரப்படுகின்ற மகாபாரத யுத்தம் உண்மையில் இதுவே ஆகும். இதிலேயே அவர்கள் சிவனின் பெயருக்குப் பதிலாக ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். ஒரு கீதையைப் பொய்யாக்கியதன் மூலம் அனைத்துச் சமய நூல்களும் பொய்யாக்கப்பட்டு விட்டன. கீதையே பிரதானமானது. கீதை படிக்கும் இடங்களும் (பாடசாலைகள்), கீதை இல்லங்களும் (பவன்கள்) பல உள்ளன. கீதை பாடசாலை என்பது, கீதை ஞானத்தை எடுத்துரைக்கும் இடமாகும். கீதையை உபதேசித்தவர்கள் இப்பொழுது இல்லை, ஆனால் அவர்களின் புகழ் தொடர்கின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகின்றார். அவர் மிகுந்த அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். பாபா அன்புக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் அனைவருக்கும் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். பாபா ஒருபோதும் கோபப்படுவதில்லை. அவர் எப்பொழுதும் அனைவருக்கும் அன்புடனேயே விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்து, பின்னர் தொடர்ந்தும் மறுபிறவி எடுத்தீர்கள். நீங்கள் ஆதியில் தேவ தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும் அவர் பாரத மக்களாகிய உங்களுக்குக் கூறுகின்றார். ஆஸ்தியைக் கோருவதற்கு யார் முதலில் வருவார்கள்? முன்னைய கல்பத்தில் கோரியவர்களே கூறுவார்கள்: பாபா, உங்களைத் தவிர எங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. சங்கம யுகத்தில் மாத்திரமே தந்தை உங்களை மன்னிக்கின்றார். இராவண இராச்சியமும், இராம இராச்சியமும் இங்கேயே உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இது இராவண இராச்சியம் ஆகும். இதனாலேயே மக்கள் இராம இராச்சியத்தை வேண்டுகின்றனர். நீங்கள் சிவபாபாவைப் பற்றிப் பேசும்போது, உங்கள் புத்தி அசரீரியானவரை நோக்கியே செல்கின்றது. அசரீரியானவரையே நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். ஆத்மாக்களே தந்தையை அழைக்கின்றனர். கடவுள் ஆத்மாக்களின் கூக்குரல்களைக் கேட்பதற்காகக் காத்திருக்கின்றார் என்றில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடக நியதிப்படி, தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்காக நான் ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். உங்கள் அழைப்பைக் கேட்டு நான் வருவதில்லை. பக்தி முடிவுக்கு வரும்போதே நான் வரவேண்டியுள்ளது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அழைக்க ஆரம்பிக்கும்போதே அந்நேரம் வருகின்றது. எப்பொழுது அவர் வருவார் என்பது எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்கள் சக்கரத்தின் காலப்பகுதியைத் தவறாக எழுதிவிட்டார்கள். ஒவ்வொரு வீடும் இப்படத்தை வைத்திருந்தால், தினமும் அவர்கள் அப்படத்தைப் பார்த்து, இவர் பாபா, இவர் தாதா, இது ஆஸ்தி என்று நினைவு செய்யலாம். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதோபிரதான் ஆகுவதற்கு என்னை நினைவு செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். தந்தை மாத்திரமே இவ்வழிமுறையை விளங்கப் படுத்துகின்றார். இந்தத் தந்தையும் கூறுகின்றார்: நானும் முயற்சியாளரே. குழந்தைகளே, ஒருவரையொருவர் எச்சரித்து, முன்னேறிச் செல்லுங்கள். இப்படங்களிலுள்ள விளக்கம் மிகச் சிறந்தது. சிவபாபா, பிரம்மா மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். மகாபாரத யுத்தம் உங்களுக்குச் சற்று முன்னாலேயே உள்ளது. எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே, நிச்சயமாக அதற்கான யுத்தம் இடம்பெற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களை மறக்கக்கூடாது. உண்மையில், கலியுகம் இப்பொழுது ஆழ்நரகமாக உள்ளது. பல மனிதர்கள் உள்ளனர், எனவே விநாசம் நிச்சயமாக இடம்பெற்றாக வேண்டும். சத்திய யுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருக்கும். அவர்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தவர்களாக இருப்பார்கள். இது மிகவும் இலகுவானது, ஆனால் அச்சமயங்கள் அனைத்தும் நிச்சயமாக அழிக்கப்படும். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை இப்பொழுது உண்மையாகவே இடம்பெறுகின்றது. அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் தந்தையே ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் கற்கின்ற கல்வி, உங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்கானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பித்து, 21 பிறவிகளுக்கு உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றேன். சூரிய வம்ச, சந்திர வம்ச குலங்கள் உண்மையிலேயே ஸ்தாபிக்கப்படுகின்றன. நீங்கள் ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். சிவபாபா கூறுகின்றார்: இந்தத் தாயையும், தந்தையையும் பின்பற்றுங்கள்! நீங்கள் அவர்களையும், வைகுந்தத்தையும் சூட்சுமலோகத்தில் பார்க்கலாம். நீங்கள் உங்களையும்கூட பார்க்கமுடியும். நீங்கள் சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் வைகுந்தத்தின் காட்சிகளையும் பெறுகின்றீர்கள். பாரதம் உண்மையிலேயே வைகுந்தமாக இருந்தது என அவர்கள் நம்புகின்றனர். அந்நேரத்தில் அது ஸ்ரீகிருஷ்ணரின் பூமியாக இருந்தது. இன்றோ, அது அசுரனாகிய கம்சனின் பூமியாக உள்ளது. நாளை அது ஸ்ரீகிருஷ்ணரின் பூமியாகும். இரவு பகலாக வேண்டும். அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற பகலும், அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற இரவும் உள்ளது. மக்கள் தொடர்ந்தும் இருளில் தடுமாறித் திரிகின்றனர். பிரம்மாவின் இரவு என்பது பிராமணர்களாகிய உங்களின் இரவாகும். பின்னர் பிராமணர்களாகிய நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். சத்திய யுகத்தில், பிராமணர்கள் எவரும் இல்லை, தேவர்கள் மாத்திரமே உள்ளனர். பாரதம் தூய அரசர்களின் பூமியாக இருந்தது (ராஜஸ்தான்). பின்னர் அது தூய்மையற்ற அரசர்களின் பூமியாகியது. பாரதம் எப்பொழுதும் அரசர்களின் பூமியாகவே இருந்து வருகின்றது. இராச்சியம் இங்கே எல்லா நேரமும் தொடர்கின்றது. ஏனைய சமயத்தவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஓர் இராச்சியத்தைக் கொண்டிருக்கவில்லை. கடவுள் மாத்திரமே இந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். கடவுள் மாத்திரமே வந்து உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார். அவர் அசரீரியான ஞானக் கடலும், சந்தோஷக் கடலும் ஆவார். நீங்கள் பாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நிச்சயமாக உங்களின் முயற்சிக்குக் காலம் எடுக்கின்றது. நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களால் மற்றவர்களுக்குப் பாதையைக் காண்பிக்க முடியும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது! லௌகீகப் பெற்றோர் இந்த ஞானத்தில் இருந்தால், அவர்கள் தமது குழந்தைகளைத் தமக்குச் சமனாக்க வேண்டும். பெற்றோர் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்தால், அவர்கள் தமது குழந்தைகளையும் அவ்வாறே செய்யத் தூண்ட வேண்டும். மிக நல்ல குழந்தைகள் சிலர் கூறுகின்றனர்: நான் இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்று, தொடர்ந்தும் ஒவ்வொரு வீட்டிற்கும் இச்செய்தியைக் கொடுப்பேன். தந்தை கூறுகின்றார்: நான் செய்தியாளர். நான் உங்களுக்குச் செய்தியைக் கொடுக்கின்றேன்: வீடு திரும்புங்கள்! ஏனைய மத ஸ்தாபகர்கள் வெறுமனே வந்து தமது சமயங்களை ஸ்தாபிக்கின்றனர். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்ற செய்தியை நான் அனைவருக்கும் கொடுக்கின்றேன். இவ்வுலகம் இனி வாழத் தகுதிவாய்ந்ததல்ல. என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், பின்னர் இராவணன் உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்கிவிட்டான். நான் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை உங்களைத் தூய்மையாக்க வந்திருக்கின்றேன். அக்குண்டுகள் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் போடப்படும். அது அதே மகாபாரத யுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். கடவுளும் நிச்சயமாக பிரசன்னமாகவே இருப்பார். எவ்வாறாயினும், கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் என்றே அவர்கள் நம்புகின்றனர். இதில் பெருமளவு குழப்பம் உள்ளது! இந்தக் குழப்பம் இல்லாதிருந்தால், கடவுள் வருவதற்கான அவசியம் என்ன? பக்தி மார்க்கம் சிக்கல் நிறைந்தது எனப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதால், நீங்கள் தவறுகள் செய்வதை நிறுத்தி விடுவீர்கள். முன்னர், நீங்கள் உங்களை ஒரு சரீரமாகவே கருதினீர்கள். இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். தந்தை மாத்திரமே உங்களை எச்சரிக்கின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! இங்கு, நீங்கள் தந்தைக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். அங்கு, நிலையங்களில் சிவபாபா கூறுவதைச் சகோதரிகள் விளங்கப்படுத்துகின்றனர்: இங்கு, தந்தை உங்களுக்கு நேரடியாகக் கூறுகின்றார்: நான் அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றேன். பாபா இவர் மூலமாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது ஒரு நன்மை பயக்கும் சந்திப்பாகும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நாங்கள் பாபாவிடமிருந்து எங்களின் சுவர்க்க ஆஸ்தியைக் கோரவேண்டும். தந்தையையும், சுவர்க்கத்தையும் நினைவு செய்யுங்கள்! பாவச் செயல்கள் எதையும் செய்யாதீர்கள்! நீங்கள் பாவச் செயல்கள் எதையாவது செய்வீர்களாயின், நூறு மடங்கு பாவம் சேர்க்கப்படும். மாயையே உங்களைப் பாவச் செயல்களைச் செய்ய வைக்கின்றாள். நீங்கள் அவளை வெற்றிகொள்ள வேண்டும். இதனாலேயே மகாவீரர் அனுமானின்(துணிச்சலான வீரர்) கதை உள்ளது. நீங்கள் மகாவீரரான அனுமான் ஆவீர்கள். நாங்கள் இப்பொழுது பாபாவிற்குச் சொந்தமானவர்கள். நாங்கள் மாயையால் தோற்கடிக்கப்பட மாட்டோம். பாபாவை நினைவு செய்வதால் நீங்கள் சதோபிரதான், பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகாவிட்டால், உங்கள் அந்தஸ்தை அழித்துவிடுகின்றீர்கள். சிறந்த முயற்சி செய்யும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கைமீது கருணை கொண்டிருக்கின்றார்கள். என்னதான் நிகழ்ந்தாலும், அவர்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கின்றனர். அவர்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக உள்ளனர். விநாசம் நிகழ்ந்தாக வேண்டும். ஒவ்வொருவரதும் தாய்வழி, தந்தைவழி மாமன்மார், குருமார் போன்றோர் அனைவரும் அழிக்கப்படுவார்கள். சற்குரு கூறுகின்றார்: நான் உங்களை மீண்டும் என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். மக்கள் காரிருளில் உள்ளனர். சிவபாபா எங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் கூறுகின்றனர்: மரணம் அவரை உண்டு விட்டது. எவ்வாறாயினும், நான் உங்களைச் சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டுப் பிரிந்து செல்கின்றார். மரணம் அவ்வாத்மாவைக் கொண்டு செல்கின்றது என்றில்லை. ஆத்மா பிரிந்து சென்றாக வேண்டும். உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல நானே வந்துவிட்டேன். பாபா உங்களைக் கொலை செய்யவா வந்தார்? இல்லை! நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். பஞ்சதத்துவங்கள்கூட இப்பொழுது தமோபிரதானாக உள்ளன. இதனாலேயே சரீரங்களும் அவ்வாறே ஆக்கப்பட்டுள்ளன. அங்கு, உங்களின் சரீரங்கள் சதோபிரதான் தத்துவங்களால் உருவாக்கப்படுவதால், அழகாக இருக்கும். தந்தை கூறுகின்றார்: நான் மீண்டும் ஒரு தடவை சத்திய யுக தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். நீங்கள் 84 பிறவிகளை எடுத்தவர்கள். உங்கள் தர்மத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். வேறு எவருமே தங்கள் சமயத்தை மறப்பதில்லை. ஆதியில் தேவ தர்மத்திற்கு உரியவர்களாக, மிக மேன்மையானவர்களாக இருந்த நீங்கள், எவ்வாறு இப்பொழுது மிகவும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர் நீங்கள் தொடர்ந்தும் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது, விநாசம் சற்று முன்னாலேயே உள்ளது. சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு உங்களைத் தகுதியானவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் நினைவின் மூலமே அவ்வாறு ஆகவேண்டும். அதிகாலையில் விழித்தெழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள். பாபா, நீங்கள் எவ்வாறு வருகின்றீர்கள் என்பதும் தனிப்பட்ட முறையில் பேசுகிறீர்கள் என்பதும் அற்புதமே! மற்றவர்களால் உபதேசிக்கப்படும் விடயங்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது எங்களின் தந்தையாகிய உங்களைக் கண்டுகொண்டோம். ஆத்மாக்கள் தந்தையைக் கண்டுகொண்டதும், அவர்கள் அன்புடன் அவரைச் சந்திக்க வருகின்றனர். குழந்தைகள் பெருமளவு அன்புடன் தங்கள் தந்தையைச் சந்திக்கின்றனர். இங்கு, அசரீரியான தந்தை மறைமுகமானவர். இதனாலேயே பாபா எப்பொழுதும் கூறுகின்றார்: நீங்கள் இவரைச் சந்திக்கும்போது, சிவபாபாவை நினைவு செய்தவாறு சந்தியுங்கள். மக்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. உங்கள் மத்தியிலும்கூட, சிலர் என்னை அறிந்து, எனக்குச் சொந்தமாகி, பின்னர் என்னை மறந்து விடுகின்றனர், அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றனர். அவர்கள் சத்தியம்கூடச் செய்கின்றனர்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்குச் சொந்தமானவன். ஆணோ, பெண்ணோ, இரு பகுதி ஆத்மாக்களுமே இவ்வாறு கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் சரீரங்களில் உள்ளபோது, ஆண், பெண் பதங்களை உபயோகித்து, கூறுகின்றனர்: நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன். பாபா, நான் எனது முழு ஆஸ்தியையும் உங்களிடமிருந்து கோரிக்கொள்வேன். நான் உங்களை முழுமையாக நினைவு செய்வேன். நினைவு இல்லாவிட்டால், துரு அகற்றப்பட முடியாது, அத்துடன் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகமுடியாது. சத்திய யுகத்தில், நீங்கள் சந்தோஷமும் அமைதியும் செழிப்பும் நிறைந்த, அசைக்க முடியாத, உறுதியான இராச்சியத்தை 21 பிறவிகளுக்குப் பெறுகின்றீர்கள். சுவர்க்கத்தைப் படைப்பவரான தந்தை, நிச்சயமாக உங்களுக்குத் தனது ஆஸ்தியை வழங்குவார். பாடப்படுகின்றது: நாங்கள் அப்பாலுள்ள பிரம்ம தத்துவத்தில் வசிக்கின்ற பரம தந்தை, பரமாத்மாவைக் கண்டறிவதில் அக்கறை கொண்டிருந்தோம். அவர் இங்கு ஒரு தடவை மாத்திரமே வருகின்றார். இவையும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். சிலர் எதையும் புரிந்து கொள்வதே இல்லை. பின்னர், மகாயுத்தம் இடம்பெறும்போதே அவர்களின் கண்கள் திறக்கும். உண்மையில், இதுவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஞானயாகம் ஆகும். இது ஒரு யுத்தமும் ஆகும். எவருமே இந்த யாகத்தைப் பற்றி அறியமாட்டார்கள். உருத்திரனின் இந்த ஞானயாகம் விநாசத்திற்காகவே உருவாக்கப்பட்டது. விநாசம் இடம்பெறாமல், அமைதி நிலவுவதற்காகவே அவர்கள் யாகங்களை வளர்க்கின்றார்கள். இந்த (ஞான) யாகம் மீண்டும் உருவாக்கப்படும். விநாசம் நிகழ்ந்த பின்னர் என்ன நிகழும் என்பதை அவர்கள் அறியாதுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். அனைவரதும் எல்லையற்ற வாழ்க்கை வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். பரமதந்தை, பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூற எங்களால் முடியும் என்று வேறு எவராலுமே கூறமுடியாது. அனைவரும் கடவுளை அழைக்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவு செய்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: கடவுளே இக்குழந்தையைக் கொடுத்தார், இதைச் செய்தார், அதைச் செய்தார். தனக்குச் சொந்தமானதை மாத்திரமே அவர் திரும்ப எடுத்துக் கொண்டார் எனச் சிலர் புரிந்து கொள்கின்றனர். அத்தகைய புரிந்துணர்வைக் கொண்ட சிலர் உள்ளனர். பல வகையான மனிதர்கள் உள்ளனர். நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டு கொண்டீர்கள். எனவே, அவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நினைவின் மூலமே நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். நீங்கள் பின்னர் விஷ்ணு பூமியின் அதிபதிகள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் சத்திய யுகத்தில் இருந்து கலியுகத்தின் இறுதி வரையான முழுச் சக்கரத்தையும் அறிவீர்கள். அனைத்தும் தந்தையின் புத்தியில் உள்ளதைப் போன்றே உங்கள் புத்திகளிலும் உள்ளது. இதனாலேயே அவர் ஞானக்கடல் என்றும், ஞானம் நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அசைக்க முடியாதவர்களாகவும், ஸ்திரமானவர்களாகவும் ஆகவேண்டும். மாயை வந்து மீண்டும் மீண்டும் உங்களை ஆட்டங்காணச் செய்யக்கூடாது. நீங்கள் தொட்டாற்சுருங்கி செடியைப் போன்று ஆகக்கூடாது. தந்தையை நினைவு செய்யாததால் நீங்கள் வாடிவிடுகின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நேரம் அண்மித்து வரும்போது, உங்கள் முயற்சிகள் முடிவிற்கு வந்துவிட்டதை, அதாவது முடிவு வந்துவிட்டதைக் காண்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்று, ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்து, மற்றவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டுங்கள். வீடு திரும்ப வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். இப்பொழுது மேலும் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

2. அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். அற்ப விடயங்களுக்கு எல்லாம் “தொட்டாற் சுருங்கி” செடி போன்று ஆகாதீர்கள். உங்களின் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் ஒளியாலும் சக்தியாலும் உங்களின் அதிர்ஷ்டத்தை விழித்தெழச் செய்து, சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

இந்த ஞானத்தின் ஒளியாலும் சக்தியாலும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்த வண்ணம் முயற்சி செய்யும் குழந்தைகள், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். வெற்றி பெறுவதும் அதிர்ஷ்டத்தின் அடையாளமே. ஞானம் நிறைந்தவர் ஆகுவதே உங்களின் அதிர்ஷ்டத்தை விழித்தெழச் செய்வதற்கான வழிமுறை ஆகும். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை மட்டும் கொண்டிருப்பது அல்ல. ஏனென்றால் ஞானம் நிறைந்தவர் என்றால் உங்களின் ஒவ்வோர் எண்ணம், வார்த்தை மற்றும் செயலிலும் இந்த ஞானத்தின் சொரூபமாக இருப்பதாகும். சரியான முயற்சியைச் செய்தபோதும் உங்களால் வெற்றியைப் பார்க்க முடியாவிட்டால், அது நீங்கள் தோல்வி அடைவதல்ல, ஆனால் நீங்கள் மேலும் முதிர்ச்சியாகவும் பலமானவராகவும் ஆகுவதற்கான வழிமுறையே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சுலோகம்:
உங்களின் பௌதீகப் புலன்கள் செயல்படும்போது பற்றற்றவராக இருங்கள். உங்களால் இலகுவாக உங்களின் கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்யக்கூடியதாக இருக்கும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கின்ற போது, ஒரு விநாடியில் அனைத்தையும் அமிழ்த்திவிடும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். சேவைக்கான எண்ணங்கள் அனைத்தும் அமிழ்ந்திட வேண்டும். நீங்கள் 'நிறுத்து' எனக் கூறியவுடனேயே உங்களால் ஒரு முற்றுப்புள்ளியை இடக்கூடியளவிற்கு மிக அதிகளவு சக்தி இருக்க வேண்டும். ஒரு சக்திமிக்க தடுப்பு இடப்பட வேண்டும், பலவீனமான தடுப்பல்ல. இதனைச் செய்வதற்கு ஒரு விநாடிக்கு மேல் எடுக்குமாயின், உங்கள் அமிழ்த்தும் சக்தி பலவீனமாக உள்ளதென்பதே அதன் அர்த்தமாகும்.