22.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தேவ வம்சம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்ற நற்செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். உலகம் விகாரமற்றது ஆகும்போது, ஏனைய அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

கேள்வி:
எப்பொழுது இராவணன் உங்களைச் சபிக்கின்றான்? சபிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறி என்ன?

பதில்:
நீங்கள் சரீர உணர்வு உடையவர் ஆகும்போதே இராவணனின் சாபத்தைப் பெறுகின்றீர்கள். சாபத்தைப் பெறுகின்ற ஆத்மாக்கள் மிகவும் ஏழ்மையானவர்களும், விகாரம் நிறைந்தவர்களும் ஆகுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றனர். இப்பொழுது, தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். உங்கள் பார்வையையும், மனோபாவத்தையும் தூயதாக ஆக்குங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றார். அனைவரும் 84 பிறவிகளையும் எடுப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுக ஆரம்பத்தில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள். முதலில், பாரதத்தில், பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களின் தர்மத்தைக் கொண்ட இராச்சியம் இருந்தது. அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. எனவே, அங்கு நிச்சயமாக ஒரு வம்சம் இருந்திருக்க வேண்டும். அத்துடன், அரச குலத்தைச் சார்ந்த நண்பர்களும், உறவினர்களும் இருந்திருக்க வேண்டும். பிரஜைகளும் அங்கு இருந்திருக்க வேண்டும். இது ஒரு கதை போன்றதாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் அவர்களின் இராச்சியம் இருந்ததை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். பாரதத்தில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைக் கொண்ட தேவர்களின் இராச்சியம் இருந்தது. ஞானம் நிறைந்தவரான எல்லையற்ற தந்தை இங்கிருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த ஞானத்தின் எந்த விடயம்? அவர் ஒவ்வொருவருக்கு உள்ளே இருப்பதையும் அறிவார் என்றும், அவர் ஒவ்வொருவரினதும் செயல்களையும், பாவச் செயல்களையும் பற்றி அறிவார் என்றும் மக்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கெனச் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார். சகல ஆத்மாக்களும் பரந்தாமத்திலேயே வசிக்கின்றனர். அவர்களின் பாகங்கள் முழுவதும் அவர்களினுள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்கள் பின்னர் கர்மஷேத்திரத்திற்குச் சென்று தங்களின் பாகங்களை நடிப்பதற்குத் தயாரான நிலையில் அங்கு இருக்கின்றனர். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது புளிப்பாக இருக்கின்றது, இது உவர்ப்பாக இருக்கின்றது என ஆத்மாவே கூறுகின்றார். தாங்கள் இப்பொழுது விகாரம் நிறைந்த பாவிகள் என்பதையும், தங்களிடம் அசுர சுபாவங்கள் இருப்பதையும் ஆத்மாக்களே புரிந்து கொள்கின்றனர். ஆத்மாக்களே இங்கு சரீரங்களை ஏற்று, செயல் களத்தில் தங்களின் முழுப் பாகங்களையும் நடிக்கின்றனர். எனவே, இந்த ஆத்மாவாகிய நானே அனைத்தையும் செய்கின்றேன் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது தந்தையைச் சந்தித்துள்ளோம், 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் அவரைச் சந்திப்போம். ஆத்மாக்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றனர் என்பதை, அதாவது, அவர்கள் தூய்மையாக இருந்து, பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளபோது, அங்கு தூய்மையற்றவர்கள் எவரும் இருக்க முடியாது. அவர்கள் பூஜிப்பவர்களாக உள்ளபோது, தூய்மையான எவரும் இருக்க முடியாது. சத்தியயுகத்தில் அவர்கள் தூய்மையானவர்களும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களும் ஆவர். துவாபர யுகத்தில், இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகும்போது, அனைவரும் தூய்மை அற்றவர்களும், பூஜிப்பவர்களும் ஆகுகின்றனர். சிவபாபா கூறுகின்றார்: பாருங்கள், சங்கராச்சாரியார்கூட எனது பக்தர்; அவர் என்னை வழிபடுகின்றார். சிவனின் உருவத்தைச் சிலர் வைரங்களாலும், சிலர் தங்கத்தாலும், சிலர் வெள்ளியாலும் செய்து வைத்திருக்கின்றனர். இப்பொழுது வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள பூஜிப்பவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் என அழைக்க முடியாது. இப்பொழுது முழு உலகிலும் பூஜிக்கத் தகுதிவாய்ந்த மனிதர் ஒருவரேனும் இருக்க முடியாது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் தூய்மையானவர்கள், பின்னர் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். தூய்மையானவர்கள் புதிய உலகிலேயே உள்ளனர். தூய்மையானவர்கள் மாத்திரமே பூஜிக்கப்படுகின்றனர். ஒரு பெண் தூய்மையாக உள்ளபோது அவள் பூஜிக்கப்படுகின்றாள், ஆனால் அவள் தூய்மை அற்றவள் ஆகியதும் அனைவருக்கும் அவள் தலைவணங்க வேண்டியுள்ளதைப் போன்றே இது உள்ளது. வழிபாட்டில் பெருமளவு சம்பிரதாயங்கள் உள்ளன! நீங்கள் ஓர் அருங்காட்சியகத்தை அல்லது கண்காட்சியைத் திறந்து வைக்கும் பொழுதெல்லாம் “திரிமூர்த்தி சிவன்” என நிச்சயமாக எழுத வேண்டும். அதற்குக் கீழே எங்கள் இலக்கும், குறிக்கோளுமான இலக்ஷ்மியும், நாராயணனும் உள்ளனர். நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றோம். அங்கு வேறெந்தச் சமயங்களும் கிடையாது. நீங்கள் இதனை விளங்கப்படுத்தலாம். கண்காட்சிகளில் உங்களால் சொற்பொழிவுகள் ஆற்றமுடியாது. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு வேறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். நாங்கள் பாரத மக்களுக்கு நற்செய்தியைக் கூறுகின்றோம் என்பதே பிரதான விடயமாகும். நாங்கள் இந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். இந்தத் தேவ வம்சம் முன்னர் இருந்தது. அது இப்பொழுது இல்லை. எவ்வாறாயினும், அது இப்பொழுது மீண்டும் ஸ்தாபிக்கப்படுகின்றது, பின்னர் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் இருந்தபோது, எண்ணற்ற சமயங்கள் எதுவுமே இருக்கவில்லை. பல்வேறு சமயங்கள் அனைத்தும் சேர்ந்து, ஒன்றாகுவது சாத்தியமல்ல. அவை ஒன்றன்பின் ஒன்றாக வந்து, தொடர்ந்தும் வளர்கின்றன. முதலாவது ஆதி சனாதன தேவ தர்மம் மறைந்துவிட்டது. எவருமே, தான் ஆதிசனாதன தேவ தர்மத்தைச் சார்ந்தவர் எனக் கூறமுடியாது. இவ்வுலகம் விகார உலகம் எனப்படுகின்றது. சிவபாபா விகாரமற்ற உலகை ஸ்தாபிக்கின்றார் என்ற நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என நீங்கள் அவர்களிடம் கூற முடியும். நாங்களே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான, பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆவோம். முதலில், நாங்கள் சகோதரர்கள். பின்னர், படைப்பு இடம்பெறும்போது, நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றோம். நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் உங்களின் குழந்தைகள் ஆகிவிட்டோம். எனவே, சகோதர, சகோதரிகள் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள், அப்பொழுது மாத்திரமே நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே முக்தியையும், சற்கதியையும் அருள்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பழைய உலகம் நிச்சயமாக மாறும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும். கடவுளால் மாத்திரமே அதனைச் செய்யமுடியும். அவர் எவ்வாறு புதிய உலகைப் படைக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பழைய உலகமும் இருக்கின்றது. அது இன்னமும் அழியவில்லை. பிரம்மா மூலம் ஸ்தாபனையும் படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவே இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். பிரம்மாவிற்குத் துணைவி இல்லை, பிரம்மாவினால் தத்தெடுக்கப்பட்டவர்களே உள்ளனர். இதனை நீங்கள் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். சிவபாபா பிரம்மாவினுள் பிரவேசித்து, எங்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்குகின்றார். அவர் ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும்போதே ‘ஓ ஆத்மாவே, நீங்கள் எனது குழந்தை’ என அவரால் கூறமுடியும். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் இருக்கிறார்கள். பின்னர் பிரம்மா மூலம் உலகம் படைக்கப்படும்போது நிச்சயமாக பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் உள்ளனர். எனவே, அவர்கள் சகோதர, சகோதரிகள் ஆவர். வேறு எந்த வகையான பார்வையும் முடிவடைகின்றது. நாங்கள் சிவபாபாவிடம் இருந்து எங்கள் ஆஸ்தியான தூய்மையைப் பெறுகின்றோம். நாங்கள் இராவணனின் சாபத்திற்கு உள்ளாகின்றோம். நாங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும்போது தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்போதே இராவணனின் சாபத்திற்கு உள்ளாகின்றோம். சபிக்கப்பட்டதால், நாங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றோம். இப்பொழுது பாரதம் சபிக்கப்பட்டுள்ளது. பாரதத்தை ஏழ்மையும், விகாரமும் நிறைந்ததாக ஆக்கியது யார்? அது எவராலோ சபிக்கப்பட்டிருக்க வேண்டும். இது இராவணனாகிய மாயையின் சாபம் ஆகும். மக்கள் வருடாவருடம் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். எனவே, அவன் நிச்சயமாக ஓர் எதிரியாகவே இருக்க வேண்டும். “தர்மமே சக்தி”. நாங்கள் இப்பொழுது தேவ தர்மத்திற்கு உரியவர்கள் ஆகுகின்றோம். பாபாவே புதிய தர்மத்தை ஸ்தாபிப்பதற்கான கருவி ஆவார். அவர் அத்தகைய சக்திவாய்ந்த தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் பாபாவிடம் இருந்து பலத்தைப் பெற்று, முழு உலகையும் வெற்றி கொள்கின்றோம். நாங்கள் நினைவு யாத்திரை மூலம் பலத்தைப் பெறுகின்றோம், எங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு தூண்டும் வகையில் எழுதுங்கள்: நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொடுக்கின்றோம். இந்தத் தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இதனைப் பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள். பாபா உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார்: அனைத்துச் சமயங்களிலும் பிரதானமானது இதுவேயாகும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரஜாபிதா பிரம்மாவும் இங்கு அமர்ந்திருக்கின்றார். பிரஜாபிதா பிரம்மா குமாரர்களும், குமாரிகளுமாகிய நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இப் பணியை மேற்கொள்கின்றோம். இவை பிரம்மாவின் வழிகாட்டல்கள் அல்ல. ஸ்ரீமத் என்பது, அனைவரதும் தந்தையான பரமாத்மா பரமதந்தை சிவனிற்கு உரியதாகும். தந்தை மாத்திரமே ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய சமயங்கள் அனைத்தையும் அழிக்கின்றார். இராஜயோகத்தைக் கற்பதன் மூலம் நீங்கள் இவ்வாறு ஆகுகின்றீர்கள். நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். இப்பழைய உலகம் எரிக்கப்படவுள்ளது என்பதை அறிந்துள்ளதால், நாங்கள் எல்லையற்ற துறவறத்தை மேற்கொண்டுள்ளோம். ஒரு லௌகீகத் தந்தை புதிய வீட்டைக் கட்டும் போது, பழையதன் மீது அவர் கொண்டுள்ள பற்று முடிவடைகின்றது. தந்தை கூறுகின்றார்: இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. அவர் இப்பொழுது உங்களுக்காகப் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் புதிய உலகிற்காகவே கற்கின்றீர்கள். சங்கம யுகத்தில் மாத்திரமே எண்ணற்ற சமயங்களின் விநாசமும், ஒரேயொரு தர்ம ஸ்தாபனையும் இடம்பெறுகின்றன. யுத்தமும், இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். சத்திய யுகத்தில் அவர்களின் இராச்சியம் இருந்தபோது, வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. ஏனைய அனைவரும் எங்கே இருந்தனர்? நீங்கள் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நான் இந்த ஞானத்தை எனது புத்தியில் வைத்திருக்கையில் வேறெந்த வேலையும் செய்வதில்லை என்றில்லை. எனக்கு வேறு பல எண்ணங்களும் உள்ளன: நான் கடிதங்களை வாசிக்கவும், எழுதவும் வேண்டும், கட்டடங்களைப் பராமரிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இருந்தும், நான் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கின்றேன். நான் தந்தையை நினைவு செய்யாவிட்டால், எவ்வாறு எனது பாவங்கள் அழிக்கப்படும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்கு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். அரைச் சக்கரத்திற்கு நீங்கள் தமோபிரதான் பூஜிப்பவர்களாகவும், அரைச் சக்கரத்திற்கு சதோபிரதான் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். பரமாத்மா பரமதந்தையுடன் யோகம் செய்வதனால், ஆத்மாக்கள் தெய்வீகமானவர்கள் ஆகுகின்றனர். நினைவின் மூலம் ஆத்மாக்கள் கலியுகத்திலிருந்து சத்திய யுகத்திற்குச் செல்கின்றனர். ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனப்படுகின்றார். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, உங்களின் ஓசை பரவும். இந்த ஞானம் அனைத்துச் சமயத்தவருக்கும் உரியதாகும். தந்தை கூறுகிறார் என அவர்களிடம் கூறுங்கள்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் கணக்குகள் அனைத்தையும் தீர்த்து, வீடு திரும்புவீர்கள். நீங்கள் குழப்பம் அடைந்தால், நீங்கள் வினவ முடியும். சத்தியயுகத்தில் வெகு சிலரே இருக்கின்றார்கள். இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. அவர்கள் நிச்சயமாகத் தங்களின் கணக்குகளை முடித்து, தாங்கள் முன்பு இருந்தது போன்று ஆகுவார்கள். நீங்கள் ஏன் விபரங்களுக்குள் செல்ல வேண்டும்? ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தை நடிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஏனெனில், அவர்கள் எவரும் சத்தியயுகத்தில் இருக்கவில்லை. தந்தை ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற சமயங்களை அழிக்கவே வருகின்றார். புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. பின்னர், நிச்சயமாகச் சத்தியயுகம் வரும், சக்கரம் நிச்சயமாகச் சுழலும். இதனைப் பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது. நீங்கள் சதோபிரதானாகி, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டும் என்பதே பிரதான விடயமாகும். குமாரிகள் இதில் மும்முரமாக இருக்க வேண்டும். பெற்றோர் தமது புத்திரியின் வருமானத்தில் உண்பதில்லை. எவ்வாறாயினும், தற்காலத்தில் அவர்கள் அனைத்திலும் பேராசைப்படுவதால், புத்திரிகளும் பணம் சம்பாதிக்கச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் தூய்மையானவர்களும், தூய உலகின் அதிபதிகளும் ஆகவேண்டும் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இராஜயோகிகள், நாங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோரவேண்டும். நீங்கள் இப்பொழுது பாண்டவ சேனைக்கு உரியவர்கள். நீங்கள் உங்களுக்குச் சேவை செய்வதுடன், அனைவருக்கும் பாதையைக் காட்டச் செல்வது பற்றியும் சிந்திக்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகச் சேவை செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு மேன்மையான அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் இந்த நிலையில் மரணிக்க நேர்ந்தால், என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என பாபாவிடம் வினவினால், பாபாவால் உடனடியாகவே உங்களுக்குக் கூறிவிட முடியும். நீங்கள் சேவை செய்யாததால், ஒரு சாதாரண வீட்டிலேயே பிறப்பீர்கள். பின்னர், இந்த ஞானத்தைப் பெறுவது உங்களுக்குச் சிரமமாக இருக்கும். ஏனெனில், சிறு குழந்தையால் அதிகளவு ஞானத்தைப் பெற முடியாது. உதாரணமாக, இன்னமும் இரண்டு அல்லது மூன்று வருடங்களே எஞ்சி இருக்குமாயின், எந்தளவை உங்களால் கற்க முடியும்? நீங்கள் சத்திரியர் குலத்திலேயே பிறப்பெடுப்பீர்கள் என பாபா உங்களுக்குக் கூறுவார். ஒருவேளை இறுதியில் நீங்கள் இரட்டைக் கிரீடத்தைப் பெறக்கூடும். உங்களால் சுவர்க்கத்தின் முழுமையான சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது போய்விடும். முழுமையாகச் சேவை செய்பவர்களும், கற்பவர்களும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சுவர்க்கத்தின் முழுமையான சந்தோஷத்தை அடைவார்கள். நீங்கள் இப்பொழுது இவ்வாறு ஆகாவிட்டால், ஒவ்வொரு சக்கரத்திலும் இவ்வாறு ஆகமாட்டீர்கள் என்பதில் அக்கறை கொள்ளவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை புள்ளிகளுடன் சித்தி எய்துவீர்கள் என்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியும். அனைவருக்கும் அது தெரியவரும். பின்னர் அதை விதி என்றே கூறப்படும்! நீங்கள் உள்ளே துன்பத்தை உணர்வீர்கள். இங்கு அமர்ந்திருக்கும்போது எனக்கு என்ன நடந்தது? மக்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போது கூட மரணம் சம்பவிக்கின்றது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: சோம்பேறி ஆகிவிடாதீர்கள்! முயற்சி செய்து, தொடர்ந்தும் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுங்கள். தொடர்ந்தும் ஏனையோருக்கும் பாதையைக் காண்பியுங்கள். உங்களின் நண்பர்கள்மீதும், உறவினர்கள் மீதும் கருணை கொண்டிருங்கள். ஒருவரால் விகாரமின்றி இருக்க முடியாதிருப்பதையும், அவர் தொடர்ந்தும் தூய்மையற்ற உணவை உண்பதையும் நீங்கள் பார்த்தாலும்கூட தொடர்ந்தும் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் உங்கள் குலத்திற்கு உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் நன்மை செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் தங்களுடன் பேசுவதில்லை என்றோ, அல்லது அவர்களை விட்டு விலகி இருப்பதாகவோ மற்றவர்கள் கூறும்வகையில் நடந்து கொள்ளாதீர்கள். இல்லை, நீங்கள் அனைவருடனும் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மைசெய்ய வேண்டும். நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நாங்கள் சந்தோஷத்தை நோக்கிச் செல்கின்றோம். எனவே, நாங்கள் மற்றவர்களுக்கு இப்பாதையைக் காண்பிக்க வேண்டும். நீங்கள் குருடர்களுக்குக் கைத்தடி ஆவீர்கள். மக்கள் பாடுகின்றனர்: நீங்களே குருடர்களுக்கான கைத்தடிகள்! அனைவருக்கும் கண்கள் உள்ள போதிலும், அவர்கள் அழைக்கின்றனர். ஏனெனில், அவர்களிடம் மூன்றாவது ஞானக்கண் இல்லை. தந்தையொருவர் மாத்திரமே உங்களுக்கு அமைதிக்கும், சந்தோஷத்திற்குமான பாதையைக் காண்பிக்கின்றார். இது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. முன்னர், நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தில் மக்கள் பல மந்திரங்களை உச்சாடனம் செய்கின்றனர். அவர்கள் இராமநாமத்தை உச்சாடனம் செய்தவாறே மீன், எறும்புகள் போன்றவற்றிற்கு உணவு கொடுக்கின்றனர். இப்பொழுது, இந்த ஞானப் பாதையில், நீங்கள் அதுபோன்ற எதையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. பல பறவைகள் இறக்கின்றன. ஒரு புயலால் பல இறக்கின்றன. இயற்கை அனர்த்தங்கள் முழு விசையுடன் வரும். ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறும். அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல உள்ளீர்கள் என்ற விழிப்புணர்வு அகத்தே உள்ளது. அங்கு, முன்னைய சக்கரத்தில் கட்டப்பட்டிருந்தது போன்ற முதற்தரமான மாளிகைகளை நீங்கள் கொண்டிருப்பீர்கள். முன்னைய சக்கரத்தில் கட்டப்பட்ட அதே மாளிகைகளே மீண்டும் கட்டப்படும். அந்நேரத்தில் அது உங்களின் புத்தியில் புகும். நீங்கள் அதைப் பற்றி ஏன் இப்பொழுது சிந்திக்க வேண்டும்? அதற்குப் பதிலாக, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். இந்த நினைவு யாத்திரையை மறந்துவிடாதீர்கள். முன்னைய சக்கரத்தில் கட்டப்பட்டது போன்றே மாளிகைகள் கட்டப்படும். நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் தந்தையையும், ஆசிரியரையும், சற்குருவையும் கண்டுகொண்டோம் என நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சந்தோஷத்தில் மெய்சிலிர்க்க வேண்டும்! அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆகுவதற்காகவே நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் முழு நேரமும் இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இங்கே முழு நேரமும் அதைக் கொண்டிருந்தாலே, அங்கு 21 பிறவிகளுக்கு அது உங்களுடனே இருக்கும். நீங்கள் தொடர்ந்தும் பலருக்கு நினைவுபடுத்தும்போது, உங்களின் நினைவும் அதிகரிக்கும். பின்னர், நீங்கள் அந்தப் பழக்கத்தை விருத்தி செய்துகொள்வீர்கள். இத்தூய்மையற்ற உலகம் தீப்பற்றப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே முழு உலகமும் அழிக்கப்படப் போகின்றது என்பதில் அக்கறை கொண்டிருக்கின்றீர்கள். சத்தியயுகத்தில், நீங்கள் இவை எதனையும் அறியமாட்டீர்கள். இப்பொழுது இது இறுதியாகும். நீங்களோ நினைவைக் கொண்டிருப்பதற்கான முயற்சியை செய்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான முயற்சி செய்வதில் சோம்பேறியாக இருக்காதீர்கள். உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மீது கருணை கொண்டிருந்து, அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்களை ஒருபுறம் விட்டுவிடாதீர்கள்.

2. நீங்கள் தமக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு இருந்ததாகப் பிறர் கூறும்வகையில் நடந்து கொள்ளாதீர்கள். கருணைகொண்டவராகி, அனைவருக்கும் நன்மை செய்யுங்கள். ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
களிப்பூட்டும், நடமாடும் யோகியாக இருந்து (ரம்தா யோகி), சத்தியம், சுத்தம் மற்றும் பயமின்மையின் அடிப்படையில் வெளிப்பாட்டை ஏற்படுத்துவீர்களாக.

சத்தியமே இறை வெளிப்பாட்டிற்கு அடிப்படையாகும். சத்தியத்திற்கு அடிப்படையாக இருப்பது சுத்தமும் பயமின்மையும் ஆகும். எவ் வகையான அசுத்தமும் இருக்குமாயின், அதாவது உங்கள் நேர்மையிலோ அல்லது சுத்தத்திலோ குறைபாடு இருந்தால் அல்லது உங்கள் தமோகுணி சம்ஸ்காரங்களை வெற்றி கொள்வதில், உங்கள் சம்ஸ்காரங்களை இசைவாக்குவதில், உலக சேவைக் களத்தில் உங்கள் கோட்பாடுகளை நிரூபிப்பதில் உங்களுக்கு பயம் இருக்குமாயின், வெளிப்பாடு இடம்பெற மாட்டாது. எனவே, சத்தியத்தையும் பயமின்மையையும் கிரகித்து, ஒரேயொரு அக்கறையை மாத்திரம் கொண்டிருக்கின்ற களிப்பூட்டும், நடமாடும் யோகி ஆகுங்கள். இலகு இராஜயோகி ஆகினால் இறுதி வெளிப்பாடு இலகுவாக இடம்பெறும்.

சுலோகம்:
உங்களுடைய எல்லையற்ற பார்வையும் மனோபாவமும் ஒற்றுமைக்கு அடிப்படையாகும். ஆகையால் எல்லைக்கு உட்பட்டவராக இருக்காதீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

சரீரமற்றவர் ஆகுதல் என்றால் கம்பியில்லா இணைப்பை போன்றிருப்பதாகும். விகாரமற்றவர் ஆகுவது கம்பியில்லா இணைப்பிற்கான பொறிமுறையாகும். எந்தவொரு விகாரத்தின் சுவடையும் கொண்டிருப்பது என்றால், கம்பியில்லா இணைப்பைப் பயனற்றது ஆக்குவதாகும். ஆகையால், கர்ம பந்தனம் ஏதேனும் உள்ளவரில் இருந்து, ஒரு கர்மயோகி ஆகுங்கள். சகல பந்தனங்களில் இருந்தும் விடுதலை அடைந்தவர் என உங்களைக் கருதி, ஒரேயொரு தந்தையோடு மாத்திரம் உறவுமுறை கொண்டிருங்கள். அப்பொழுது நீங்கள் சதா ஆயத்தமாக இருப்பீர்கள். உங்களையே சோதியுங்கள்: எந்தவொரு விகாரமும் உள்ளே மறைந்துள்ளதா?