26.04.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.12.2009     Om Shanti     Madhuban


புது வருடத்தில், ஆத்மாக்கள் அனைவருக்கும் செய்தியை வழங்கி, பொன்னுலகம் என்ற பரிசை அவர்களுக்குக் கொடுங்கள். தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு, ஆத்ம உணர்வில் இருக்கும் உங்களின் சுபாவத்தை இயல்பானது ஆக்குங்கள்.


இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் அவர்களின் அன்பு ரூபத்திலும் பாப்தாதாவின் அன்பிலே அமிழ்ந்திருக்கும் அவர்களின் ரூபத்திலும் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் இறையன்புடன் பிரகாசிக்கிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் இங்கே அன்பெனும் விமானத்தில் ஏறி வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே புது வருடத்தைக் கொண்டாட வந்துள்ளீர்கள், ஆனால் உங்கள் அனைவரிலும் என்ன புலப்படுகின்றது? புது வருடம் என்பது பெயரளவிலேயே உள்ளது. ஆனால், உங்களின் கண்களில் உங்கள் அனைவருக்கும் உள்ள உற்சாகம் என்ன? நீங்கள் மூன்று விடயங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்கள். 1. உங்களின் புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 2. புதிய யுகத்திற்கு வாழ்த்துக்கள். 3. உங்களின் குடும்பத்தையும் தந்தையையும் சந்திப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களின் பார்வையில் என்ன சுழல்கிறது? உங்களின் புதிய யுகம் உங்களின் முன்னால் தோன்றுகிறது, அல்லவா? புதிய யுகம் வரவுள்ளது என்ற உற்சாகம் உங்களின் இதயத்தில் உள்ளது. புதிய யுகத்தின் ஜொலிக்கும் ஆடை, உங்களின் முன்னால் தெளிவாகத் தெரிகிறது. அது சங்கமயுகத்தில் இன்றே நீங்கள் விரைவாக அந்த ஜொலிக்கும் ஆடையை அணியப் போவதைப் போன்று உள்ளது. அதை உங்களின் முன்னால் பார்த்து நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். நீங்கள் விடை கொடுக்கிறீர்கள், அத்துடன் வாழ்த்துக்களையும் பெறுகிறீர்கள். நீங்கள் இந்தப் பழைய வருடத்திற்கு விடை கொடுக்கிறீர்கள், பின்னர் இந்த வருடத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள். அதன்பின்னர், புது வருடம் உங்களின் முன்னால் வரும். உங்களுக்கு முன்னால் உள்ள பழைய வருடத்திற்கு நீங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை, ஆனால், புதிய உலகிற்காகவே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பழைய உலகிற்கு விடை கொடுக்கிறீர்கள். இன்று, அனைவரும் அந்தப் புதிய யுகத்திற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கிறார்கள். மக்கள் புதிய வருடத்திற்காக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் பரிசையும் வழங்குவார்கள். பாப்தாதாவும் குழந்தைகளான உங்களுக்கு, பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களுக்கு விடை கொடுப்பதற்காகவும், வேறு எதுவும் அன்றிப் பேறுகளால் நிறைந்த, அந்தப் புதிய உலகிற்குச் செல்வதற்காகவும் ஒரு பரிசை வழங்குகிறார். சுருக்கமாகச் சொன்னால், அந்தப் புதிய உலகில் எந்தவிதக் குறைவும் இல்லை. பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னுலகம் என்ற பரிசை வழங்கி உள்ளார். நீங்கள் அந்தப் பொன்னுலகிற்கு உரிமை உடையவர் ஆகுகிறீர்கள் என்ற போதை உங்களுக்கும் இருக்கிறதல்லவா? வேறு எவராலும் உங்களுக்கு இத்தகைய பரிசை வழங்க முடியாது. தந்தை குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டல் கொடுத்துள்ளார்: ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையின் ஆஸ்தி, பொன்னுலகின் செய்தி என்ற பரிசை வழங்குங்கள். உங்களிடம் என்ன பரிசு உள்ளது? முதலில், அவர்களுக்குப் புதிய உலகின் பரிசைக் கொடுங்கள். இரண்டாவதாக, உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன - நற்குணங்களின் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம், சுய மரியாதையின் பொக்கிஷம் - உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன. எனவே, அனைவருக்கும் ஏதாவதொரு நற்குணம் அல்லது சக்தி என்ற பரிசைக் கொடுங்கள். அந்தப் பரிசின் மூலம் அவர்களின் வாழ்க்கைகள் மாற்றப்பட்டு, பொன்னுலகின் உரிமையை அவர்கள் கோர வேண்டும். ஏனென்றால், தற்காலத்தில் துன்பமும் அமைதி இன்மையும் எங்கும் அதிகளவில் அதிகரிப்பதை நீங்கள் காணலாம். எங்கும், அனைவரும் பயத்துடனும் கவலையுடனுமே இருக்கிறார்கள். குறைந்தபட்சம், அந்த சோகத்துடனும் அமைதியற்றும் இருக்கும் ஆத்மாக்களுக்கு, தந்தை இப்போது வந்துள்ளார் என்ற செய்தியைக் கொடுங்கள். இப்பொழுதில் இருந்தே அவர்கள் அழியாத ஆஸ்தியின் உரிமை உடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இந்தச் செய்தியை வழங்குகிறீர்கள். ஆயினும், இப்போதும், தந்தையின் சில குழந்தைகளுக்கு இந்தச் செய்தி இன்னமும் கிடைக்காமல் உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். அதனால், நிச்சயமாக உங்களின் சகோதர, சகோதரிகளுக்கு இந்தச் செய்தி என்ற பரிசை வழங்குங்கள். எவருமே விடுபடக்கூடாது. நீங்கள் சேவை செய்கிறீர்கள், குழந்தைகளான நீங்கள் செய்யும் சேவையைப் பார்த்து பாப்தாதா மகிழ்கிறார். ஆனால், தந்தையின் எதிர்பார்ப்பு என்னவென்றால், தனது குழந்தைகளின் எவரேனும் இந்தச் செய்தியைப் பெறுவது என்று வரும்போது, விடுபட்டுவிடக் கூடாது என்பதே ஆகும். நீங்கள் பொன்னுலகின் பரிசைப் பெற்றீர்கள், தமக்கு அதைப் பற்றியே தெரியாது என்று அவர்கள் முறைப்பாடு செய்யக்கூடாது. எமது தந்தை வந்தார், எங்களுக்கு அந்தச் செய்தியே தெரியாது. இதனாலேயே, இந்தப் புதிய வருடத்தில் இந்த முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். எந்தவொரு மூலைமுடுக்கும் விடுபடாமல் இருப்பதற்காக உங்களுக்கு இடையே திட்டத்தைச் செய்யுங்கள். நீங்கள் எந்தவிதமான முறைப்பாடுகளையும் பெறக்கூடாது. ஏனென்றால், அவர்கள் சந்தோஷம் அடைய வேண்டும். குறைந்தபட்சம், எமது தந்தை வந்துவிட்டார்! என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதைப் பெறாமல் விடுபடக்கூடாது. எனவே, இந்தப் புதிய வருடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்றுசேர்ந்து, ஒரு திட்டத்தைச் செய்யுங்கள்: பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் கருணை கொள்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும், உங்களின் சகோதர, சகோதரிகளுக்காகக் குறிப்பாக ஒரு கருணைநிறைந்த, உபகாரியான ரூபத்தை எடுத்து, அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் இத்தகைய முறைப்பாட்டைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

எனவே, இன்று, குழந்தைகளான நீங்கள் அனைவரும் இங்கே புதுவருடத்தைக் கொண்டாடுவதற்கு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வந்துள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது பாப்தாதா என்ன பாடலைப் பாடுகிறார்? உங்களுக்கு அது தெரியும்தானே? ஆஹா குழந்தையே! ஆஹா! இங்கே முதல் தடவையாக வந்திருப்பவர்களுக்கும், பாப்தாதா கூறுகிறார்: காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகி இருப்பதனால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். புதிய குழந்தைகளுக்கு அதிர்ஷ்டசாலிகள் ஆகியிருப்பதற்காக பாப்தாதா கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். தற்காலத்தில், குழந்தைகளான உங்கள் அனைவரிலும் ஒரு விடயத்தைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகப் போகின்றீர்கள் என்ற இலட்சியத்திற்கான உற்சாகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தில் கொண்டிருக்கிறீர்கள். ஏதாவது ஒரு வேளையில் நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் நிச்சயமாகவே அப்படி ஆகப் போகின்றீர்கள். எப்படி உங்களுக்கு அந்த இலட்சியம் உள்ளதோ, உங்களின் இலட்சியத்திற்கேற்ப, இப்போது உங்களின் தகுதிகளும் அந்த இலட்சியத்திற்கு ஏற்ப இருப்பதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். சமமானவர் ஆகுகின்ற இலட்சியம் உங்களுக்கு இருப்பதைப் போல், சமமானவர் ஆகுவதற்கான தகைமைகளையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இப்போது, உங்களின் இலட்சியம் மிகவும் உயர்வாக உள்ளது. ஆனால், நீங்கள் அதன் தகைமைகளுக்கும் விசேடமான கவனம் செலுத்த வேண்டும். சமம்: எந்தளவிற்கு இலட்சியம் உயர்வானதாக உள்ளதோ, அவ்வாறே, அதற்கான தகைமைகளும் உயர்வாக இருக்க வேண்டும். இப்போது, குழந்தைகளான நீங்கள் அந்தத் தகைமைகளைக் கிரகிக்க விரும்புகிறீர்கள். அப்படி இருந்தபோதும், உங்களில் சிலர் கூறுகிறீர்கள்: எனக்கு இந்தளவு வேண்டும், ஆனால்...... எனவே, இப்போது இந்த ‘ஆனால்’ என்பது நீக்கப்பட வேண்டும். எப்படி உங்களின் முகத்திலும் செயல்களிலும் அந்த இலட்சியம் எவ்வளவு உயர்வானது என்பது தொலைவில் இருந்தே புலப்படுகிறதோ, அவ்வாறே, அதற்கான தகைமைகளும் உங்களின் முகத்திலும் உங்களின் செயல்களிலும் புலப்பட வேண்டும். உதாரணமாக, முன்னர், நீங்கள் சரீர உணர்வு உடையவராக இருந்தபோது, உங்களின் இயல்பான சுபாவம், சரீர உணர்வு உடையதாகவே இருந்தது. நீங்கள் சரீர உணர்வு உடையவர் ஆகுவதற்கு எப்போதாவது முயற்சி செய்தீர்களா? சரீர உணர்வே உங்களின் இயல்பான சுபாவமாக இருந்தது. அரைக்கல்பமாக நீங்கள் அதற்காக முயற்சியே செய்யவில்லை. அதேபோல், இப்போதும் ஆத்ம உணர்வு உங்களின் இயல்பான சுபாவம் ஆகவேண்டும். சரீர உணர்வெனும் சுபாவம் இயல்பானதாக இருக்கும் போது, சரீர உணர்வு உடையவர் ஆகுவதற்கு நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? நீங்கள் எப்போதாவது அதற்காக முயற்சி செய்துள்ளீர்களா? இப்போதும், சரீர உணர்வும் ஆத்ம உணர்வும் உள்ளன. அப்படி இருக்கும்போது, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்? நீங்கள் சிலவேளைகளில் சரீர உணர்வை முடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியிருப்பதாக பாப்தாதா செய்திகளைப் பெறுகிறார். சரீர உணர்வு உடையவர் ஆகுவது இயல்பாக இருக்கும்போது, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு ஏன் முயற்சி தேவைப்படுகிறது? குழந்தைகள் சிரமப்படுவதைக் காண பாப்தாதா விரும்புவதில்லை. சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள், இந்த இயல்பான சுபாவத்தைக் கொண்டிருங்கள். இதுவே, இலட்சியத்திற்குச் சமமான தகைமைகளைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. அதன்பின்னர், தந்தைக்குச் சமமானவர் ஆகுவது, எவ்வளவு மிகவும் இலகுவானதும் இயல்பானதும் என்பதைப் பாருங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: பெரியதொரு குடும்பத்தின் பொறுப்பைக் கொண்டிருந்த போதிலும், அவரிடம் ஆத்ம உணர்வு இயல்பான சுபாவமாக இருந்தது. குழந்தைகளுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், தந்தை பிரம்மாவின் பொறுப்பின் முன்னால் அந்தப் பொறுப்பு எம்மாத்திரம்? அது என்ன பொறுப்பாக இருந்தாலும்: உதாரணமாக, அது ஒரு பிராந்தியத்தின் அல்லது யக்யத்தின் அலுவலகப் பணியின் பொறுப்பாக இருந்தாலும் - அது பிரம்மாபாபாவின் பொறுப்பிற்கு முன்னால் எம்மாத்திரம்? சிவபாபாவின் உதவியுடன், எப்படிக் கரவன்ஹார் (மற்றவர்களைச் செய்யத் தூண்டுபவர்) அனைத்தையும் தன்னைக் கொண்டு செய்விக்கிறார் என்றும் அன்பாகவும் பற்றற்றும் தந்தைக்குச் சமமாக இருந்தவண்ணம் அவர் எப்படி கரன்ஹார் (செய்பவர்) ஆகவும் இருந்தார் என்பதை பிரம்மாபாபா நடைமுறையில் செய்து காட்டினார். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆக விரும்பினால், இதைச் சோதித்துப் பாருங்கள். உங்களின் எண்ணங்கள், உங்களின் வார்த்தைகள் அல்லது உங்களின் செயல்களைப் பொறுத்தவரை உங்களின் கடமைகள் எதுவாக இருந்தாலும், ‘நான் கரன்ஹார் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்’ ஆவேன். சிவபாபாவே கரவன்ஹார் அதிபதி ஆவார். நீங்கள் முன்னேறும்போது, கரவன்ஹார் என்ற இந்தப் பாடத்தை மறந்து விடுகிறீர்கள். அதனால், நீங்கள் இலட்சியத்தையும் அதற்கான உங்களின் தகைமைகளையும் சமமாக்க வேண்டும். இப்போது, பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, நீங்கள் உங்களின் இலட்சியத்திற்கான தகைமைகளையும் ஏற்படுத்த வேண்டும். புது வருடத்தில் புதிய விடயங்கள் இருக்க வேண்டும். ‘நான் என்ன செய்வது? மாயை வந்தாள். அவள் வருவதை நான் விரும்பாவிட்டாலும் அவள் வருகிறாள்’. பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, இத்தகைய வார்த்தைகள் மற்றும் எண்ணங்களுக்கும் விடை கொடுங்கள். வருடத்திற்கு மட்டும் விடை கொடுக்காதீர்கள். மாயை பாப்தாதாவிடமும் வருவதாக பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார், அவள் வந்து என்ன சொல்கிறாள்? இது இப்போது நான் செல்வதற்கான நேரம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், சில குழந்தைகள் என்னை அழைக்கும்போது, நான் என்ன செய்வது? எனவே, இன்று, விடை கொடுப்பதுடன் கூடவே, நீங்கள் மாயையின் பல்வேறு ரூபங்களுக்கும் விடை கொடுங்கள். உங்களுக்கு அந்தத் தைரியம் உள்ளதா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அவளுக்கு விடை கொடுப்பதற்கான தைரியம் இருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களே, உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இந்தத் தைரியத்திற்காகத் தந்தை உங்களுக்கு கோடானு கோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஏன்? பாப்தாதா ஏன் இதை வலியுறுத்துகிறார்? ஏனென்றால், இந்த உலக நிலைமைகள் சிறிது காலமாக முழு விசையுடன் மோசம் அடைய ஆரம்பித்துள்ளது என்பதை உங்களால் காண முடிகிறது. இந்த மேன்மையான வாசகங்களில், இது சடுதியாக இடம்பெறும் என பாப்தாதா உங்களுக்குக் கூறுகிறார். அது சடுதியாக நடைபெற வேண்டி உள்ளது. இதை நீங்கள் நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்யாவிட்டால், என்னிடம் கூறுங்கள், ‘சடுதியாக’ என்ற நேரம் வரும்போது, உங்களுக்கு இந்தப் பயிற்சி தேவை, அப்படித்தானே? அண்மையில், பத்து நிமிடங்களுக்கான வீட்டுவேலையை 24 தடவைகள் செய்யும்படி பாப்தாதா உங்களுக்கு வழங்கி உள்ளார். இந்த வீட்டு வேலையை ஒவ்வொரு தடவையும் பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும். ஆனால் சில குழந்தைகள் இதைச் சிரமமாக உணர்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்: உங்களுக்கு இந்தப் பயிற்சியைப் பத்து நிமிடங்களுக்குச் செய்ய முடியவில்லை. அது சடுதியாக நடக்கும்போது என்ன நிகழும்? நீங்கள் இதை 24 தடவைகள் செய்ய வேண்டி இருக்கும்போது, உங்களில் சிலருக்கு அந்தளவு நேரம் இல்லை என்பதை பாப்தாதா அறிவார். ஆனால், பாப்தாதா அதை சோதித்துப் பார்க்கிறார். நீங்கள் விரும்பும்போது, விரும்பிய முறையில் பத்து நிமிடங்களுக்கு ஒரு விழிப்புணர்வில் நிலைத்திருக்க முடியுமா? இப்போதே பத்து நிமிடங்களுக்கு அந்த ஸ்திதியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று பாப்தாதா கூறவில்லை. ஓகே, உங்களால் அதைச் செய்ய முடியாதிருக்கும். அதைச் செய்யக் கூடியவர்கள், அதைச் செய்ய வேண்டும். உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், நீங்கள் அதை ஐந்து நிமிடங்களுக்கு, ஆறு அல்லது ஏழு நிமிடங்களுக்குச் செய்ய முடியும். உங்களால் முடிந்த அளவு நேரத்திற்கு அதை முயற்சி செய்து பாருங்கள். அது நிச்சயிக்கப்படவில்லை என்று பாப்தாதாவே கூறுகிறார். பத்து நிமிடங்கள் மிகவும் அதிகம் என்று நீங்கள் நினைத்தால், உங்களால் அதை எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்குச் செய்ய முடியும். உங்களால் முடிந்தளவிற்கு இந்தப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், ‘நீண்ட காலப்பகுதி’ என்ற ஆசீர்வாதத்தை இப்போதுதான் நடைமுறை வடிவில் போட வேண்டும். உங்களால் இதை நீண்ட காலப்பகுதிக்குப் பயிற்சி செய்ய முடியாவிட்டால், தற்சமயம் நீண்ட காலத்திற்குச் செய்யும் முயற்சியின் பேறு என்பதைப் பொறுத்தவரை, அரைக்கல்பத்திற்கு காலப்பகுதியில் வேறுபாடு காணப்படும். உங்களால் ஐந்து நிமிடங்களை விட அதிக காலத்திற்குச் செய்ய முடியும் என்றால், உங்களால் அதைப் பத்து நிமிடங்களுக்கு செய்ய முடியாவிட்டால், அதை ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்குச் செய்யுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு ஆயினும் அதைச் செய்வதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால், ஏதாவதொரு கட்டத்தில் உங்களால் பத்து நிமிடங்கள் செய்ய முடியுமாக இருந்தால், அது நல்லது. உங்களுக்கும் உலகிற்கும் கதிர்களை வழங்க வேண்டிய அந்த நேரம் வரும். இதனாலேயே, இதை உங்களால் முடிந்தளவிற்கு அதிக காலத்திற்குப் பயிற்சி செய்வதற்கான அனுமதியை பாப்தாதா உங்களுக்கு வழங்குகிறார். ஏனென்றால், தற்சமயத்திற்குரிய நீண்டகாலமே, எதிர்காலத்திற்கான அடிப்படை ஆகும். இது சரிதானே? உங்களுக்கு அது கஷ்டமாக உள்ளது, அது பரவாயில்லை. இப்போது அது பரவாயில்லை, ஏனென்றால் நீங்கள் தந்தையிடம் அதைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அது நல்லது, ஏனென்றால், உங்களால் பத்து நிமிடங்களுக்கு அமர்ந்திருக்க முடியாமல் இருந்து, அதைப் பற்றிச் சிந்திப்பதிலேயே அந்த நேரம் கழிந்தால், அந்த ஐந்து நிமிடங்களும் போய்விடும். இதனாலேயே பாப்தாதா கூறுகிறார்: அதை ஐந்து நிமிடங்களை விடக் குறைய அனுமதிக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அதை அதிகரியுங்கள். அது இப்போது தெளிவாக உள்ளதா? பாப்தாதா ஒவ்வொருவரையும் மிகவும் மேன்மையான ரூபத்தில் பார்க்கிறார். இதை வலியுறுத்துவதற்காக, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகளவு சுயமரியாதையை வழங்கி உள்ளார். சுயமரியாதைக் கருத்துக்களின் பட்டியலை நீங்கள் செய்வதாக இருந்தால், அது நீண்டதாகவே இருக்கும்!

இன்று, அமிர்தவேளையில் பாப்தாதா ஒரு சுற்றுலா சென்றார். அவர் எதைக் காணச் சென்றார்? பாப்தாதா உங்களுக்கு மிக நீண்டதொரு சுய மரியாதை மாலையை வழங்கி உள்ளார். நீங்கள் சுயமரியாதைக் கருத்துக்கள் ஒவ்வொன்றிலும் உங்களை ஸ்திரப்படுத்தினால், நீங்கள் ஒவ்வொரு சுயமரியாதைக் கருத்தின்படி நடப்பதுடன், பேசினால், தொடர்ந்து அந்த மாலையைச் சுழற்றினால், நீங்கள் அதை மிகவும் இரசிப்பீர்கள். உங்களிடம் சுயமரியாதைப் பட்டியல் ஒன்று உள்ளது. ஆனால், அந்தச் சுய மரியாதைப் பட்டியலின் ஒவ்வொரு விடயமும் எத்தனை மகத்தானது? யார் அதை உங்களுக்கு வழங்கியது? உலக சர்வசக்திவான் ஒவ்வொரு குழந்தைக்கும் சுயமரியாதைக்கான பல கருத்துக்களின் பட்டியலை வழங்கி உள்ளார். அதைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால், உங்களின் இந்த சுயமரியாதையைக் குறைப்பதற்கு வேறெந்த அதிகாரமும் இருக்காது. வேறு எவரும் அதிகளவு சுயமரியாதை என்ற மாலையைப் பெறவில்லை. நீங்கள் சத்திய யுகத்தில் உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். ஆனால் இந்த சுயமரியாதையின் மாலை, சங்கமயுகத்தின் பரிசு ஆகும். பாப்தாதா குழந்தைகளான உங்களைப் பார்க்கும்போது, உங்களின் சுயமரியாதை ஸ்திதியிலேயே அவர் உங்களைப் பார்க்கிறார்: ஆஹா குழந்தையே! ஆஹா! எனவே, நீங்கள் யார் என்ற சுயமரியாதையின் அதிகாரத்தில் இருங்கள். சிலவேளைகளில், ஒரு சுயமரியாதைக் கருத்தை வைத்திருங்கள். வேறொரு வேளையில், இன்னொரு சுயமரியாதைக் கருத்தை வைத்திருந்து, சோதியுங்கள்: இன்று, நான் அமிர்த வேளையில் எனது புத்தியில் ஒரு விசேடமான சுயமரியாதைக் கருத்தை வைத்திருந்தேன், அது ஒரு பொக்கிஷம், எனவே நான் அதைப் பயன்படுத்தினேனா? பொக்கிஷங்களை அதிகரிப்பதற்கான வழிமுறை, அவற்றைப் பயன்படுத்துவதே ஆகும். நான் எந்தளவிற்கு அதிகமாகப் பொக்கிஷங்களைப் பயன்படுத்துகிறேனோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். இன்று, எந்தக் குழந்தைகள் சுயமரியாதையின் விழிப்புணர்வின் நீண்ட மாலையை வைத்திருக்கிறார்கள் என்றும் எந்தக் குழந்தைகள் குறுகிய மாலையை வைத்திருக்கிறார்கள் என்றும் பாப்தாதா பார்த்தார். எங்கு சுயமரியாதை உள்ளதோ, அங்கே சரீர அகங்காரம் முடிவடைந்து விடும். எனவே, இன்று, பாப்தாதா ஒரு சுற்றுலா சென்று, சுயமரியாதையின் பொக்கிஷத்தைப் பார்த்தார். ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு நற்குணத்தையும் பயன்படுத்துங்கள். அப்போது மாயை வருகின்ற உங்களின் பிரச்சனை - மாயை வெறுமனே வரவில்லை, ஆனால் பாபா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார்: மாயை கூறுகிறாள்: குழந்தைகள் என்னை அழைக்கிறார்கள், அதனாலேயே நான் வருகிறேன், இல்லாவிட்டால் நான் வரமாட்டேன்! ஏதாவது பலவீனமான அல்லது அர்த்தமற்ற எண்ணத்தைக் கொண்டிருப்பது மாயையை வரவழைப்பதாகும். நீங்கள் சக்திகளை மறப்பது என்றால், நீங்கள் மாயையை அழைக்கின்றீர்கள் என்று அர்த்தம். ‘அவள் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் அவள் வருகிறாள்’. எனவே, யார் சக்திசாலி? ‘அவள் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் அவள் வருகிறாள்’. எனவே, மாயை சக்திசாலியா அல்லது நீங்கள் சக்திசாலியா? எனவே, இன்று, பழைய வருடம் முடிகிறது. புது வருடத்தில் புதிய ஊக்கமும் உற்சாகமும் காணப்படும். ஏனென்றால், சங்கமயுகத்தின் புகழ் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் உற்சாகத்தால் நிரம்பி இருக்கும், அதாவது, ஒவ்வொரு நாளும் திருவிழா என்பதே ஆகும். ஊக்கமும் உற்சாகமும் இருப்பதனாலேயே ஒவ்வொரு நாளும் திருவிழாவாக உள்ளது. ஆகவே, இதை உறுதிப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் உங்களின் அட்டவணையைப் பாருங்கள். நடக்கும்போதும் அசையும்போதும் அதைச் சோதியுங்கள். நீங்கள் அதைச் சோதித்தால், நீங்கள் மாறுவீர்கள், அப்படித்தானே? நீங்கள் சோதிக்கா விட்டால், எப்படி உங்களால் மாற முடியும்? எனவே, இன்று, புது வருடத்திற்காக, பாப்தாதா குறிப்பாக பழைய வருடத்திற்கு நீங்கள் எப்படி விடை கொடுக்கிறீர்களோ, அதேபோல், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் மாயைக்கும் விடை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். வீணான எண்ணங்களுக்கு விடை கொடுங்கள். ஏனென்றால், பெரும்பாலானோரில் அதிகளவில் வீணான எண்ணங்கள் இருப்பதைக் காண முடிகிறது. ஒருசிலரே விகாரமான எண்ணங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. ஆனால் வீணான எண்ணங்களையும் அத்துடன் அவற்றின் பெயர், சுவடுகள் அனைத்தையும் முடிப்பதற்கு, ஒவ்வோர் எண்ணமும் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். வீணான எண்ணங்கள் எவையும் இருக்கக்கூடாது. ஏனென்றால், உங்களுக்குள் வீணான எண்ணங்கள் ஏற்படும்போது, உங்களின் எண்ணங்கள் வீணாகுவது மட்டுமல்ல, உங்களின் நேரமும் வீணாக்கப்படுகிறது. இது உங்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதில் இருந்து தொலைவிற்குக் கொண்டு செல்கிறது. சமமானவர் ஆகுவதே உங்களின் ஆசை, நீங்கள் அதற்கு உங்களின் கைகளையும் உயர்த்தினீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா எப்போதும் கூறுவார்: உங்களின் மனதின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் பௌதீகக் கையை உயர்த்துவது இலகுவானது. எனவே, அவளுக்கு விடை கொடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, நீங்கள் தைரியசாலிகள். இந்தத் தைரியத்தை உங்களுடன் எல்லா வேளையும் வைத்திருங்கள். நீங்கள் தைரியமாக இருந்தால், நீங்கள் வைத்திருந்த இலட்சியத்தையும் நிறைவேற்றுவீர்கள். ஏனென்றால், பாப்தாதாவும் உங்களுடனேயே இருக்கிறார். பாப்தாதா, தனது குழந்தைகள் எவரும் பின்தங்கி விடுவதை விரும்பவில்லை. நீங்கள் பாபாவுடன் கையோடு கைகோர்த்து திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை சிவன் அசரீரியானவர். அவருக்குக் கை இல்லை, ஆனால் ஸ்ரீமத்தே அவரின் கை ஆகும். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுதல் என்றால் கையோடு கைகோர்த்து நடத்தல் என்று அர்த்தம். புதிய வருடம், புதிய வாழ்க்கை, புதிய யுகம் என்ற மூன்றுக்காகவும் அனைவருக்கும் கோடானு கோடி மடங்கு வாழ்த்துக்கள். அச்சா.

இப்போது, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள தந்தையால் நேசிக்கப்படும் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், தந்தையின் அதியன்பிற்குரிய குழந்தைகளுக்கு, தந்தையின் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு எடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, பிரியாவிடையும் வாழ்த்துக்களும். பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, நீங்கள் பழைய சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுக்கப் போகின்றீர்கள் என்று பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். பழைய சுபாவத்திற்கும் விடை கொடுக்கும் மகாவீர் குழந்தைகளுக்கும், ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிப்பவர்களுக்கும் பாப்தாதா சதா வழங்கும் சுயமரியாதையில் சதா ஸ்திரமாக இருப்பதுடன் அதை அனுபவம் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு குழந்தையும் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியின் உரிமையைக் கொண்டுள்ள குழந்தை என்ற ரூபத்திலேயே பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கிறார். கல்பம் முழுவதிலும் குழந்தைகளான உங்களுக்கு மட்டுமே 21 பிறவிகளுக்கான உங்களின் ஆஸ்தியின் உரிமை உள்ளது. தந்தை, ஆசிரியர், சற்குரு என்ற மூன்று ரூபங்களிலும் பாப்தாதா, அன்பின் உரிமையைக் கொண்டுள்ள அத்தகைய மேன்மையான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் வழங்குவதுடன் நமஸ்தேயும் சொல்கிறார்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இரட்டைக் கிரீடாதாரியாகி, நீங்கள் செய்யும் சேவையிலும் உங்களின் முயற்சிகளிலும் வெற்றியை அடைவீர்களாக.

சங்கம யுகத்தில், உங்களை இரட்டைக் கிரீடாதாரி எனக் கருதிய வண்ணம் எப்போதும் செயல்படுங்கள். ஒன்று, ஒளிக்கிரீடம், அதாவது, தூய்மைக்கிரீடம். மற்றையது, பொறுப்புக் கிரீடம். தூய்மை மற்றும் சக்திக் கிரீடங்களை அணிபவர்கள், அதாவது, ஒளி மற்றும் சக்திக் கிரீடங்களை அணிபவர்கள், சதா இரட்டை வலிமையைக் கொண்டிருப்பார்கள். இரட்டை வலிமையுள்ள ஆத்மாக்கள் சதா சக்திசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தாம் செய்யும் சேவையிலும் தமது முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

சுலோகம்:
தெய்வீகக் குணங்களின் அடிப்படையில் சிந்திப்பதும் பேசுவதும் செயல்படுவதும் தெய்வீகத்தன்மை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: மேன்மை ஆகுவதற்கு இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

சில பொருட்கள் சூடாக்கும்போது மென்மை அடைகின்றன, அதன்பின்னர் அவற்றை வளைக்க முடியும். இங்கும், வெப்பம் என்பது சக்தி ரூபம். மென்மை என்பது பணிவு, அதாவது, அன்பு ஆகும். ஒவ்வோர் ஆத்மாவின் மீதும் அன்பு வைத்திருப்பவர்களால் பணிவைக் கொண்டிருக்க முடியும். அன்பு இல்லாவிட்டால், உங்களால் கருணைநிறைந்தவராகவோ அல்லது பணிவானவராகவோ இருக்க முடியாது. சக்தி சொரூபமாக இருப்பதில், நீங்கள் அதிபதிகள். பணிவில், சேவை செய்யும் பண்பு உள்ளது. சூடும் மென்மையும் இருக்கும்போது, உங்களால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை வளைத்துக் கொள்ள முடியும்.