26.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே தற்போது நீங்கள் உலக சேவையாளர்கள். நீங்கள் எவ்விதமான சரீர உணர்வும் உடையவர்கள் ஆகக்கூடாது.

கேள்வி:
எந்தப் பழக்கம் ஆன்மீக நியதிகளுக்கு எதிரானதாகவும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது?

பதில்:
சினிமாக்கதைகளைச் செவிமடுப்பதோ நாவல்கள் வாசிப்பதோ முற்றிலும் நியதிகளுக்கு எதிரானவை. இதைச் செய்வது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய புத்தகங்கள் வாசிப்பதையிட்டு பாபா தடை விதித்துள்ளார். யாராவது பிரம்மாகுமார், குமாரிகள் அத்தகைய புத்தகங்களை வாசித்தால் நீங்கள் அவர்களை எச்சரிக்கை செய்ய முடியும்.

பாடல்:
ஓ மனமே! உன் இதயக் கண்ணாடியில் உன் முகத்தைப்பார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளிடம் கூறுகின்றார்: நீங்கள் நினைவு யாத்திரையில் எந்தளவிற்கு முன்னேறி உள்ளீர்கள் என்பதையும் எந்தளவிற்குத் தமோபிரதானிலிருந்து சதோபிரதானிற்கு மாறியுள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொள்வதற்கு உங்களையே சோதித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் எந்தளவிற்கு நினைவில் இருக்கிறீர்களோ அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த வாசகங்கள் எந்தச் சமயநூல்களிலேனும் குறிப்பிடப்பட்டுள்ளனவா? சமய ஸ்தாபகர்கள் விளங்கப்படுத்தியவற்றின் அடிப்படையிலேயே சமயநூல்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் மக்கள் அவற்றைக் கற்கின்றார்கள். அப்புத்தகங்களை அவர்கள் வணங்குகின்றனர். “உங்கள் சரீரத்தையும் சகல சரீர உறவுகளையும் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்” என எழுதப்பட்டுள்ளது. எனவே இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். முதலில் நீங்கள் சரீரமற்றவர்களாகவே இங்கு வந்தீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார். அங்கோ நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் முக்தியையோ ஜீவன்முக்தியையோ அடைய முடியாது. அதுவோ அசரீரியான விகாரமற்ற உலகம். இது பௌதீக விகார உலகம் எனப்படுகிறது. பின்னர் சத்திய யுகத்தில் இந்த உலகம் விகாரமற்றது ஆகுகின்றது. சத்தியயுகத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு பெரும் புகழ் உள்ளது. இவை அனைத்தையும் நீங்கள் மிக நன்றாகக் கிரகித்து ஏனையோருக்கு விளங்கப்படுத்துங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். நீங்கள் இங்கு வந்ததும் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்கள் ஆகவேண்டி உள்ளது. சத்தியயுகம் விகாரமற்ற உலகமெனவும் கலியுகம் விகார உலகமெனவும் கூறப்படுகிறது. நீங்கள் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களைத் தூய்மையானவர்களும் விகாரமற்றவர்களும் ஆக்குவதற்கு ஒரு விகாரமான சரீரத்தில் இந்த விகார உலகினுள் வாருங்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: மக்கள் பிரம்மாவின் படத்தையிட்டுக் குழப்பம் அடைந்து “ஏன் தாதாவின் படத்தை இங்கு வைத்திருக்கின்றீர்கள்?” என வினவுகிறார்கள். இவரே ‘பாக்கியரதம்’ என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் சிவன் பேசுகிறார்: சடப்பொருளின் ஆதாரத்தை நான் பெற வேண்டியுள்ளதால் இந்த இரதத்தை ஏற்றுக்கொண்டேன். வேறு எவ்வாறு நான் உங்களைத் தூய்மை அற்றவர்களிருந்து தூய்மையானவர்கள் ஆக்கமுடியும்? நிச்சயமாக நான் தினமும் உங்களுக்குக் கற்பிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை எனக் கூறப்படமுடியாது. அவர் தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கிறார். தந்தை இதை உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும் போது அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் சரீரமற்றவர்களாக வந்தீர்கள். நீங்கள் சரீரமற்றவர்களாகவே திரும்பிச் செல்லவும் வேண்டும். தூய ஆத்மாக்களே அங்கிருந்து வருகின்றனர். யராவது ஒருவர் நாளை கீழிறங்கி வந்தாலும் அவர் தூய்மையாகவே இருப்பார். அவர் நிச்சயமாக போற்றப்படுவார். பெருமையுடன் போற்றப்படுகின்ற சந்நியாசிகளும் இல்லறத்தவர்களும் நிச்சயமாகத் தமது முதற்பிறப்பிலேயே இருக்கவேண்டும். தமது சமயத்தை ஸ்தாபிப்பதற்காகவே அவர்கள் வருகிறார்கள். பாபா குருநானக்கைப் பற்றி விளங்கப்படுத்துகிறார். இங்கு பலரும் நானக் என்ற பெயரைக் கொண்டிருப்பதால் நீங்கள் ‘குரு’ என்ற வார்த்தையை நிச்சயமாக எழுத வேண்டும். ஒருவர் புகழப்படும் போது அந்தப் புகழுக்கு அர்த்தம் இருக்கவேண்டும். சரியான புகழைப் பயன்படுத்தாது போனால் அது சரியானதாகத் தோன்றாது. உண்மையில் அந்த ஒரேயொருவரைத் தவிர வேறு ஒரு குருவும் இல்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றியே நீங்கள் கூறுகிறீர்கள்: சற்குருவே அமரத்துவமானர். அவரே அமரத்துவமான ரூபத்தைக் கொண்டவர். அதாவது ஒருபோதும் மரணத்தை அனுபவம் செய்யாதவர். அவர் ஓர் ஆத்மா. அதனாலேயே அவர்கள் அமர்ந்திருந்து அந்தக் கதைகளை உருவாக்கி உள்ளனர். உங்களில் பலர் இப்போதும் சினிமாக் கதைகளையும் நாவல்களையும் வாசிக்கிறீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார்: நீங்கள் நாவல்கள் போன்றவற்றை வாசிக்கக் கூடாது. சிலரிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இங்கு நீங்கள் நூறுமடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். பிரம்மாகுமார், குமாரிகளிலும் சிலர் இன்னமும் நாவல்கள் வாசிக்கிறார்கள். இதனாலேயே பாபா குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகின்றார்: யாராவது நாவல் வாசிப்பதைக் கண்டால் அதைப் பறித்துக் கிழித்தெறியுங்கள். சிலவேளை உங்களை யாராவது சபிப்பாரோ அல்லது கோபப்படுவாரோ என நீங்கள் அஞ்சவேண்டும் என்றில்லை. அவ்வாறு எதுவுமே இல்லை. ஒருவரையொருவர் எச்சரிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. சினிமாக் கதைகளை கேட்பதோ, வாசிப்பதோ நியதிக்கு எதிரானது. எவரது நடத்தையேனும் நியதிக்கு புறம்பானதாக இருந்தால் உடனே நீங்கள் அதை பாபாவிற்குத் தெரியப்படுத்த வேண்டும். வேறு எவ்வாறு அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்வார்கள்? தொடர்ந்தும் அவர்கள் தமக்குத் தீமையை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். நீங்களுமே யோக சக்தியைக் கொண்டிருக்கா விட்டால் நீங்கள் அமர்ந்திருந்து எதனை மற்றவர்களுக்குக் கற்பிப்பீர்கள்? பாபா உங்களுக்குத் தடைவிதிக்கின்றார். இம்மாதிரியான காரியத்தை ஒருவர் செய்தால் நிச்சயமாக அவரது மனச்சாட்சி அவரை உறுத்தும். அவருக்கு இழப்பும் ஏற்படும். எனவே நீங்கள் இப்பலவீனத்தை மற்றவர்களில் பார்க்கும் பொழுது பாபாவிற்கு எழுதியே ஆகவேண்டும். அவர்களின் செயற்பாடுகள் நியதிற்கு எதிரானவையா? இவ்வேளையில் பிராமணர்களாகிய நீங்கள் சேவகர்கள். பாபாவும் கூறுகிறார்: குழந்தைகளே நமஸ்தே! அவர் அர்த்தமுள்ள வகையில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மற்றவர்களுக்குக் கற்பிக்கும் குழந்தைகள் சரீர உணர்வு எதனையும் கொண்டிருக்கக் கூடாது. ஓர் ஆசிரியர் மாணவர்களின் சேவகன் ஆவார். ஆளுநர் போன்றவர்கள் கடிதங்களில் ‘உங்கள் கீழ்ப்படிவான சேவகன்’ என்ற வார்த்தைகளுடன் கையொப்பம் இடுவார்கள். அவர்கள் அதன் கீழ் தங்கள் பெயரை எழுதி கையொப்பம் இடுவார்கள். லிகிதர் ஒருவர் தனது கையாலேயே கடிதம் எழுதுவார். அவர் தனது புகழை எழுத மாட்டார். இந்நாட்களில் குருமார் தமக்குத் தாமே ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டத்தை எழுதுகிறார்கள். இங்கும் சிலர் ஸ்ரீ இன்னார் என்று எழுதுகிறார்கள். உண்மையில் நீங்கள் இதை எழுதக் கூடாது. ஒரு பெண்ணும் தன்னை ஸ்ரீமதி என்று எழுதக் கூடாது. ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவே வந்து உங்களுக்கு வழிகாட்டல்களைத் தரும்போதே நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறமுடியும். யாரோ ஒருவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமே அவர்கள் நிச்சயமாகத் தேவர்களாக முடியுமென அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். தாங்கள் எவ்வாறு இத்தகைய மேன்மையான உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதைப் பாரதத்திலுள்ள எவரும் அறியாதுள்ளனர். இப்போதை உங்களுள் பொங்கி எழ வேண்டும். உங்கள் இலக்கும் குறிக்கோளும் கொண்ட படத்தை சதா உங்கள் இதயத்தின் மேல் வைத்திருக்க வேண்டும். உங்களுக்குள் இப்போதை மேலே உயர்ந்து செல்ல வேண்டும். நீங்கள் இதை எவருக்கும் காண்பித்து அவர்களிடம் இவ்வாறு கூற முடியும்: கடவுள் எங்களுக்குக் கற்பித்து எங்களை உலகச் சக்கரவர்த்திகள் ஆக்குகிறார். இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு தந்தை வந்துள்ளார். பழைய உலக விநாசம் முன்னிலையில் உள்ளது. இளம் புத்திரிகளான நீங்கள் உங்கள் மழலை மொழியில் ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும். தாம் நடாத்துகின்ற மகாநாடுகளுக்கு அவர்கள் உங்களை அழைக்கும் போது நீங்கள் இப்படத்தை எடுத்துச் சென்று அவர்களுடைய இராச்சியம் மீண்டும் பாரதத்தில் ஸ்தாபிக்கப்படுகின்றது என அமர்ந்திருந்து விளங்கப்படுத்தலாம். எந்தப் பெரிய கூட்டத்தினருக்கும் நீங்கள் இதை விளங்கப்படுத்த முடியும். நாள் முழுவதும் நீங்கள் சேவை செய்வதன் போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாரதத்தில் அவர்களது இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. பாபா எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். கடவுள் சிவன் பேசுகிறார். குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது 21 சந்ததிகளுக்கு இவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களை கிரகிக்கவும் வேண்டும். இப்போது அனைவரும் அசுரகுணங்களையே கொண்டுள்ளனர். ஒரேயொரு ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவே உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகிறார். அந்த அதிமேலான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் சிவன் பேசுகிறார்: மன்மனாபவ! ‘பாக்கியரதம்’ மிகப் பிரபல்யமானது. பிரம்மாவே பாக்கியரதம் என்று அழைக்கப்படுகிறார். அவர் மகாவீரர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் அங்கே தில்வாலா ஆலயத்தில் அமர்ந்திருக்கிறார். அவ்வாலயத்தைக் கட்டிய சமண சமயத்தினருக்கும் எதுவுமே புரிவதில்லை. இளம் புத்திரிகள் அங்கு சென்று பார்வையிட முடியும். இப்போது நீங்கள் மிகவும் மேன்மையானவர் ஆகுகிறீர்கள். பாரதத்தின் இலக்கும் குறிக்கோளும் இதுவே. உங்களுக்கு அந்தளவு போதை இருக்கவேண்டும். இங்கு பாபா உங்கள் போதையை அதிகரிக்கச் செய்கிறார். நீங்கள் எல்லோரும் இலக்ஷ்மியோ நாராயணனோ ஆகுவீர்களெனக் கூறுகிறீர்கள். இராமரோ சீதையோ ஆகுவதற்கு நீங்கள் ஒருவரும் கை உயர்த்துவது இல்லை. நீங்கள் இப்போது அஹிம்சை போர்வீரர்கள். அஹிம்சை போர் வீரரான உங்களை எவரும் அறியார். நீங்கள் இப்போது இதைப் புரிந்து கொண்டீர்கள். கீதையில் மன்மனாபவ என்ற வாசகம் உண்டு. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமே. வேறெவரும் இதனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். உங்கள் இந்தப் பழக்கமானது பின்னர் 21 பிறவிகளுக்குத் தொடரும். உங்களுக்குக் கிடைக்கும் கற்பித்தல்கள் 21 பிறவிகளுக்கானவை. பாபா பிரதானமான விடயத்தை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு இங்கே அமர்ந்திருங்கள். தந்தை பரமாத்மா இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வு உடையவர்களாகி உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் நினைவு செய்கிறீர்கள். இது எல்லா வேளைகளிலும் நடைபெறுகிறது. பக்தி மார்க்கத்திலும் பக்தி செய்யும்போதும் புத்தி வேறு திசைகளுக்கு அலைபாய்கிறது. தீவிர பக்தி செய்பவர்களாலேயே அந்தளவு ஒருமுகப்படுத்துதலுடன் அமர முடிகிறது. அதுவும் ஆழமான பக்தி எனப்படுகின்றது. அவர்கள் அன்பில் முற்றாக மூழ்கியிருப்பர். சில வேளைகளில் நீங்கள் நினைவில் இருக்கும்போது முற்றாக சரீரமற்றவர்கள் ஆகிவிடுகின்றீர்கள். நல்ல குழந்தைகளே அத்தகைய ஸ்திதியில் இருப்பார்கள். சரீரத்தைப் பற்றிய விழிப்புணர்வு நீக்கப்பட்டுவிடும். சரீரமற்றவர்களாகி அந்தப் போதையுடன் அமர்ந்திருங்கள். இந்தப் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சந்நியாசிகள் தத்துவங்களைப் பற்றியும் ஒளியாகிய பிரம்ம தத்துவத்தை பற்றியுமான அறிவைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அதனுடன் இரண்டறக் கலந்து விடுவோம். நாங்கள் இந்தப் பழைய சரீரத்தைக் களைந்துவிட்டு பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்து விடுவோம். ஒவ்வொருவருக்கும் தத்தமது சமயம் உள்ளது. எவரும் மற்றவரின் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு உரியவர்களும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். கீதையின் கடவுள் எப்போது வந்தார்? கீதையுகம் எப்போது இருந்தது? எவருக்கும் இது தெரியாது. சங்கமயுகத்திலேயே தந்தை வந்து எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குகிறார். இது பாரதத்தைக் குறிப்பிடுகிறது. உண்மையில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. ஒரு சமயம் ஸ்தாபிக்கப்படுவதும் எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்படுவதும் நினைவு கூரப்படுகின்றது. சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது. ஆனால் இப்போது கலியுகத்தில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பின்னர் ஒரேயொரு தர்மமே ஸ்தாபிக்கப்படும். ஒரு தர்மமே இருந்தது. ஆனால் அது இப்பொழுது இல்லை. ஏனையவை எல்லாம் இன்னமும் இங்கு உள்ளன. ஆலமரத்தின் உதாரணம் மிகச் சரியானதே. அதன் அத்திவாரம் இப்போது இல்லை. ஆனால் முழுமரமும் இன்னமும் நிலைத்திருக்கிறது. உண்மையில் தேவதர்மம் இப்பொழுது இல்லை. அடிமரமாக விளங்கிய ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இப்போது மறைந்தே போய்விட்டது. தந்தை மீண்டும் ஒருமுறை அதன் ஸ்தாபனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஏனைய சமயங்கள் எல்லாம் பின்னரே வந்தன. ஏனெனில் சக்கரம் மீண்டும் சுழலவே வேண்டும். அதாவது பழைய உலகம் மீண்டும் புதியதாகும். புதிய உலகில் அது அவர்களின் இராச்சியமாக இருந்தது. உங்களிடம் பெரிய படங்களும் சிறிய படங்களும் உள்ளன. நீங்கள் பெரியது ஒன்றைச் சுமந்து செல்வதைக் கண்டதும் “நீங்கள் எதனைச் சுமந்து செல்கின்றீர்கள்” என்று அவர்கள் வினவுவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: மனிதர்களை யாசிப்பவர்களில் இருந்து இளவரசர்களாக மாற்றுவதற்குக் கற்பிக்கும் ஒன்றையே நாங்கள் சுமந்து செல்கின்றோம். உங்கள் இதயத்தில் பெருமளவு உற்சாகமும் சந்தோஷமும் இருக்கவேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுள் ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார்! பாபா எங்களைத் தனது கண்களில் இருத்தி திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இந்த அழுக்கான உலகில் நாங்கள் இனிமேலும் இருக்கத் தேவையில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது விரக்திக் கதறல்கள் இருக்கும். கேட்கவே வேண்டாம்! மில்லியன் கணக்கானவர்கள் இறப்பார்கள். இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் கண்களால் காணும் எதுவுமே எஞ்சியிருக்கப் போவதில்லை. இங்குள்ள மனிதர்கள் முட்களைப் போன்றவர்கள். சத்தியயுகம் ஒரு பூந்தோட்டமாக இருக்கும். அங்கே உங்கள் கண்கள் சாந்தமாகும். ஒரு தோட்டத்திற்குச் செல்லும்போது உங்கள் கண்கள் மிகவும் குளிர்ச்சி ஆகுகின்றன. நீங்கள் இப்போது பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். பிராமணர்கள் ஆகுபவர்களின் காலடியில் மில்லியன்கள் கொட்டிக்கிடக்கும். நீங்களே இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதாகக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதற்காகவே பாபா இந்தச் சின்னங்களைச் செய்வித்துள்ளார். சேவையானது நீங்கள் வெள்ளைச் சேலை அணிந்து உங்கள் சின்னத்தையும் கொண்டிருக்கும் போது இயல்பாகவே தொடரும். மக்கள் பாடுகிறார்கள்: ஆத்மாக்கள் நீண்ட காலமாக பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தனர். எனினும் “ஒரு நீண்டகாலம்” என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீண்ட காலத்தின் பின்னர் 5000 வருடங்களுக்குப் பின்னர் நீங்கள் தந்தையைச் சந்திக்கின்றீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். மேலும் இராதையும் கிருஷ்ணரும் உலகில் மிகவும் பிரபல்யமானவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். சத்திய யுகத்தின் முதலாவது இளவரசனும் இளவரசியும் அவர்களே. அவர்கள் எவ்வாறு இங்கு வந்தார்கள் என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. நிச்சயமாகச் சத்திய யுகத்திற்கு முன்னதாகக் கலியுகம் இருக்கவே வேண்டும். உலகின் அதிபதிகளாகும் அளவிற்கு அவர்கள் என்ன செயல் செய்தார்கள்? பாரத மக்கள் தங்களை உலக அதிபதிகளாகக் கருதுவதில்லை. பாரதத்தில் அவர்களின் இராச்சியம் இருந்தபோது வேறு சமயங்கள் இருக்கவில்லை. தந்தை இப்போது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஆலயங்களில் அவர்களது படங்கள் இருந்தபோதும் இப்பொழுது ஸ்தாபனை இடம்பெறுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்களும் வரிசைக்கிரமமாகவே இதைப் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் இவை அனைத்தையும் முற்றாகவே மறந்து விடுகின்றனர். உங்கள் நடத்தை முன்னர் இருந்ததைப் போலவே இருக்கும். இங்கு எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் வெளியே சென்றதும் அனைத்துமே முடிந்து விடுகிறது. சேவை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். இந்த செய்தியை அனைவருக்கும் கொடுப்பதற்கு வழிமுறைகளை ஏற்படுத்துங்கள். நீங்கள் முயற்சி செய்யவே வேண்டும். நீங்கள் போதையுடன் அனைவருக்கும் கூறவேண்டியது: “என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்” என சிவபாபா கூறுகிறார். வேறெவரையும் அன்றி நாங்கள் ஒரேயொரு சிவபாபாவையே நினைவு செய்கிறோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கினதும் குறிக்கோளினதும் படத்தை உங்களுடன் வைத்திருங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்ற போதையைக் கொண்டிருங்கள். எங்கள் கண்கள் குளிர்மை அடையக் கூடியதான ஒரு பூந்தோட்டத்திற்கு நாங்கள் செல்கின்றோம்.

2. சேவை செய்வதில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருங்கள். பெரிய படங்களைப் பயன்படுத்தி பரந்த இதயத்துடனும் அதிகளவு உற்சாகத்துடனும் சேவை செய்யுங்கள். யாசிப்போரை இளவரசர்கள் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்டர் துன்பத்தை அகற்றுபராகவும் சந்தோஷத்தை அருள்பவராகவும் ஆகி கர்மதத்துவத்தை புரிந்து கொள்வதன் மூலம் முக்தி மற்றும் சற்கதியில் எதை அவர்களுக்கு கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பீர்களாக.

இன்றுவரையில் இடம்பெற்ற உங்கள் வாழ்க்கையை பற்றிய கதையைப் பார்ப்பதிலும் பேசுவதிலும் மும்முரமாக இருக்காதீர்கள். ஆனால் ஒவ்வொருவரின் கர்மாவின் நிலையையும் புரிந்து அவர்களுக்கு முக்தியா அல்லது சற்கதியா கொடுப்பது எனத் தீர்மானியுங்கள். மாஸ்டர் துன்பத்தை அகற்றுபவரும் சந்தோஷத்தை அருள்பவரும் என்ற உங்கள் பாகத்தை நடியுங்கள். உங்களுடைய படைப்பினது துன்பத்தையும் அமைதியின்மையையும் முடித்து அவர்களுக்கு மகாதானத்தையும் ஆசீர்வாதங்களையும் வழங்குங்கள். எந்த வசதிகளையும் உங்களுக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் இப்பொழுது அருள்பவர்களாகக் கொடுங்கள். நீங்கள் பெற்றுள்ள ஏதாவது ஒரு பாதுகாப்பின் (உதவி) அடிப்படையில் சுயமுன்னேற்றத்தை அனுபவம் செய்தாலோ அல்லது ஒரு தற்காலிக காலத்திற்கு உங்கள் சேவையில் வெற்றியை ஈட்டினாலோ இன்று ஒரு மகாத்மாவாக இருக்க முடியும், நாளை அந்த மகத்துவத்திற்கான தாகத்துடன் இருப்பீர்கள்.

சுலோகம்:
எந்தவொரு அனுபவமும் இல்லாதிருப்பது என்றால் போராடுகின்ற ஸ்திதியாகும். எனவே ஒரு யோகி ஆகுங்கள், ஒரு போராளி ஆகாதீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

தந்தை பிரம்மா சரீரமற்ற ஸ்திதியினால் அவ்யக்தாகவும் கர்மாதீத் ஆகவும் ஆகினார். நீங்கள் அவ்யக்த பிரம்மாவிடமிருந்து விசேட பராமரிப்பைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். ஆகையால் சரீரமற்றவர் ஆகுவதன் மூலம் அந்த அவ்யக்த பராமரிப்பிற்கான பிரதியுபகாரத்தை செலுத்துங்கள். உங்கள் சேவைக்கும் உங்கள் ஸ்திதிக்கும் இடையில் சமநிலையைப் பேணுங்கள். சரீரமற்றிருத்தல் என்றால் உங்கள் சரீரத்திலிருந்து விடுபட்டிருத்தல். சுபாவம், சம்ஸ்காரங்கள், பலவீனங்கள் என்பன ஒருவரின் சரீரத்துடன் தொடர்புள்ளவை. ஆகையால் உங்கள் சரீரத்திலிருந்து நீங்கள் விடுபட்டிருந்தால் நீங்கள் அவை அனைத்திற்கும் அப்பால் இருக்கிறீர்கள். ஆகையால் இந்த அப்பியாசம் உங்களுக்கு அதிகளவு உதவும். ஆனால் இதற்கு உங்களுக்கு கட்டுப்படுத்தும் சக்தி தேவையாகும்.