29.03.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 25.10.2009 Om Shanti Madhuban
சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவராகி, உங்களின் முகத்தாலும் செயல்பாடுகளாலும் ஆன்மீகத்தின் காட்சியை வழங்குங்கள்.
இன்று, சகல பொக்கிஷங்களை அருள்பவர், தனது பொக்கிஷங்களின் அதிபதிகளான தனது குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி உள்ளார். ஏனென்றால், தந்தை குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் ஒரே வேளையில், ஒரே பொக்கிஷங்களை வழங்கி உள்ளார். எனவே, குழந்தைகளாகவும் அதிபதிகளாகவும் உள்ள தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக பாப்தாதா வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் அழைத்தீர்கள். உங்களின் அன்பினால் தந்தை இங்கே வந்துள்ளார். பல பொக்கிஷங்கள் உள்ளன. அனைத்திலும் முதல் பொக்கிஷம், இந்த ஞானம் என்ற பொக்கிஷம் ஆகும். நீங்கள் இந்த ஞானச் செல்வத்தால் மிகுந்த செழிப்பானவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மகாதானிகள் ஆகித் தொடர்ந்தும் மற்றவர்களுக்கும் தானம் செய்கிறீர்கள். பல்வேறு பந்தனங்களால் கட்டப்பட்டுள்ள ஆத்மாக்கள், இந்த ஞானம் என்ற பொக்கிஷங்களால் அந்த பந்தனங்களில் இருந்து விடுபட்டுள்ளார்கள். பந்தனத்தில் கட்டுப்படுவதற்குப் பதிலாக, ஆத்மாக்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளார்கள். அத்துடன் யோகம் என்ற பொக்கிஷமும் உள்ளது. அதாவது, நீங்கள் சக்திகள் பலவற்றைப் பெற்ற நினைவு. அதேபோல், நற்குணங்களைக் கிரகிப்பதன் மூலம், நீங்கள் சகல நற்குணங்களையும் அனுபவம் செய்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். அவற்றுடன் கூடவே, தாரணை சக்தியால், அனைவரின் அன்பு என்ற சக்தியும் உள்ளது. அனைவரிடமும் அன்பாக இருப்பதுடன், அனைவரிடம் இருந்து பற்றற்று இருக்கும் சக்தி என்ற பொக்கிஷத்தையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். அனைவரின் அன்பு என்ற பொக்கிஷத்தையும் நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்கள். இத்துடன்கூடவே, சகல பிராமண உறவுமுறைகளிலும் எல்லையற்ற சந்தோஷம் என்ற பொக்கிஷத்தையும் நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்கள். எவ்வாறாயினும், இந்தப் பொக்கிஷங்கள் அனைத்திலும் விசேடமான பொக்கிஷம், சங்கமயுகத்தின் நேரம் என்ற பொக்கிஷம் ஆகும். இந்த நேரம் என்ற பொக்கிஷத்தின் முக்கியத்துவத்தை சதா உணர்ந்தவர்களாக இருக்கும் ஆத்மாக்கள், பல பேறுகளின் அதிபதிகள் ஆகுகிறார்கள். ஏனென்றால், சங்கமயுகக் காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும், இந்த வேளையில் அதிகளவு பேறுகள் பெறப்படுகின்றன. சங்கமயுகத்தின் மகத்தான, அதி மேன்மையான பேறு என்னவென்றால், நீங்கள் தந்தையை தந்தை, ஆசிரியர், சற்குரு என்ற வடிவத்தில் அடைந்துள்ளீர்கள். சங்கமயுகத்தின் இந்தக் குறுகிய பிறவியில், நீங்கள் 21 பிறவிகளுக்கான பெறுபேறுகளைப் பெறுகிறீர்கள். உங்களிடம் தன் (சரீரம்), மான் (மனம்), தண் (செல்வம்), ஜான் (உறவுமுறைகள்) என்ற சகல பேறுகளும் உள்ளன. உங்களின் முழுமையான 21 பிறவிகளுக்கும் உங்களுக்கு உத்தரவாதம் உள்ளது. அரை அல்லது முக்கால் பங்கிற்கு அன்றி, முழுமையான 21 பிறவிகளுக்கும் உள்ளது. சங்கமயுகத்தின் ஒவ்வொரு வினாடியும் பல வருடங்களுக்குச் சமமானவை என்பதே பெரும் முக்கியம் வாய்ந்தது. எனவே, கூறுங்கள்! நீங்கள் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிரம்பி இருக்கிறீர்கள்தானே? நீங்கள் நிரம்பி இருக்கிறீர்கள், அல்லவா? இதனாலேயே, பாப்தாதா சதா உங்களுக்கு இந்த வேளையில் நினைவூட்டுகிறார். சில குழந்தைகள் தாம் எதையாவது வெறுமனே ஓரிரு நிமிடங்கள் நினைத்தால், அது வெறும் இரண்டு நிமிடங்கள்தானே என்று நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த நேரத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப, அது இரண்டு நிமிடங்கள் கிடையாது. அது இரண்டு மாதங்களுக்கும் சமமானது அல்ல, ஆனால், அது இரண்டு வருடங்களுக்குச் சமமானது. சங்கமத்தின் காலம், இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களிடம் சகல சக்திகள், சகல நற்குணங்கள், இறையன்பு, பிராமணக் குடும்பத்தின் அன்பு, சென்ற கல்பத்தின் இறை இராச்சியத்திற்கான உரிமை என்ற சகல பேறுகளும் உள்ளன. இந்தக் குறுகிய யுகத்தில் உங்களிடம் இந்தச் சகல பேறுகளும் உள்ளன. வேறெந்த யுகத்திலும் உங்களிடம் இந்தப் பேறுகள் இருப்பதில்லை. உங்களிடம் இராச்சிய பாக்கியம் இருக்கும், உங்கள் அனைவருக்கும் இராச்சியம் இருக்கும். அங்கே சந்தோஷம், அமைதி, அனைத்தும் இருக்கும். ஆனால், இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே உங்களிடம் இறைவனுடனான சந்திப்புக்கள், அதீந்திரிய சுகம், பிராமணக் குடும்பம், அத்துடன் ஆரம்பம், மத்தி, முடிவு பற்றிய இந்த ஞானம் அனைத்தும் இருக்கும். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ந்து இதைப் பெறுவீர்கள்.
பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகத்தில் இருந்தும், நீங்கள் எத்தனை பொக்கிஷங்களைச் சேகரித்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கிறார். நீங்கள் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சேமிப்புக் கணக்கை எந்தளவிற்கு அதிகரித்துள்ளீர்கள் என்பது உங்களின் முகத்திலும் உங்களின் செயல்பாடுகளிலும் தென்படுகின்றது. நீங்கள் உங்களுக்காக எவ்வளவற்றைச் சேகரித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். நீங்கள் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள், ஆனால் இப்போது அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் உரிய நேரம் இல்லை என்பதே பாப்தாதாவின் இதய விருப்பம் ஆகும். உங்களின் முகங்களும் செயல்பாடுகளும் ஆத்மாக்களான நீங்கள் விசேடமானவர்கள், தனித்துவமானவர்கள், இறைவனால் நேசிக்கப்படுபவர்கள் என்ற நடைமுறை அனுபவத்தை வழங்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, காலமும் மாறும். உங்களின் சேவை வெறுமனே வார்த்தைகளால் மட்டும் இடம்பெறாது. காலங்கள் இக்கட்டானவையாக ஆகுவதனால், மக்கள் வருவதற்கு அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தொலைவில் இருந்தே உங்களின் முகங்களிலும் சகல பொக்கிஷங்களும் நிறைந்த செயல்களிலும் உங்களின் ஆன்மீகத்தை அவர்கள் காண்பார்கள். எனவே, இப்போது, உங்களின் இத்தகைய முயற்சியை வெளிப்படுத்துங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். அவர் ஒன்றுகூடலில் ஒருவராக இருந்தாலும், அவரின் ஆளுமை பிரகாசிப்பதைத் தொலைவில் இருந்தே அனுபவம் செய்ய முடிந்தது. அதேபோல், இரட்டை வெளிநாட்டவர்களான உங்களை பாப்தாதா, இரட்டை முயற்சியாளர்கள் என்றே அழைக்கிறார். ஆகவே, இன்று, பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் கருவிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் விரிவாக்கத்திற்காக நல்ல முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் கருவி ஆத்மாக்களிடம் இருந்து மிக நல்ல பராமரிப்பைப் பெறுகிறீர்கள். உங்கள் அனைவரினதும் ஒரு விடயத்தை இட்டு பாப்தாதா மிகவும் விரும்புகிறார். ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் குறிப்பாக மதுவனத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காக ஓர் ஒன்றுகூடலைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், மதுவனத்தின் சூழல் புத்துணர்ச்சி அளிப்பதில் அதிகளவில் உதவி செய்கிறது. அத்துடன் இங்கே சுய மாற்றத்திற்கும் மனதினால் சேவை செய்வதற்குமான ஒரேயொரு பொறுப்பே உள்ளது. ஒருவரோடு ஒருவர் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்கின்ற நல்லதொரு வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. இதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார்.
இப்போது, உங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்ற பின்னர், சில அற்புதங்களைச் செய்யுங்கள். தந்தை விரும்புகின்ற தனித்துவத்தின் நடைமுறை அனுபவங்களை வழங்குங்கள். அதன் மூலம், அங்கேயும் நீங்கள் தொடர்ந்து புத்துணர்ச்சியின் அனுபவத்தைப் பெறுவீர்கள். எனவே, இன்று, விசேடமான இரட்டை முயற்சியாளர்களின் குழுவின் சந்திப்பு. அதைப் பாருங்கள்! இந்தியாவில் உள்ளவர்கள் உங்களிடம் அதிக அன்பு வைத்திருப்பதனால், இந்த முதல் வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். எனவே, முதல் வாய்ப்பின் பெறுபேறு, முதல் இலக்கத்தைக் கோருவதே ஆகும். இது நன்றாக உள்ளது. இரட்டை வெளிநாட்டவர்களும் இரட்டை முயற்சியாளர் குழந்தைகள், தந்தையின் விசேடமான பட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்று பாப்தாதா உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். வெளிநாட்டில் பெரும்பாலான இடங்களில், அவர்கள் தந்தையின் குழந்தைகளை வெளிப்படச் செய்து, அவர்களின் பாக்கியப் படத்தை உருவாக்கி உள்ளார்கள். இதனாலேயே, அவர்கள் எங்கும் அதிகளவு அன்புடன் முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம், உலக உபகாரியான தந்தையின் பணி வெளிப்படுத்தப்படுகிறது. இதனாலேயே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் பாராட்டுக்களை வழங்குகிறார். ஆஹா குழந்தையே! ஆஹா! இப்போதும், பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும் பாபாவின் செய்தியை வழங்கும் சேவை தொடர்கிறது. அதேபோல், இன்னமும் எஞ்சியுள்ள நாடுகளிலும் செய்தியை வழங்குவதற்கான உற்சாகத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், காலத்திற்கான உத்தரவாதம் இல்லை. எதுவும் சடுதியாக நடக்கலாம் என்று பாப்தாதா முன்கூட்டியே உங்களுக்குக் கூறியுள்ளார். இதனாலேயே, செய்தியைக் கொடுப்பதையும் உங்களின் சொந்த முன்னேற்றத்தைப் பற்றியும் இப்போதே நீங்கள் நினைக்க வேண்டும். வேறொரு நேரத்தில் அல்ல. உண்மையில், பிராமணர்களின் அகராதியில் ‘சிலவேளையில்’ என்ற வார்த்தைகள் சரியானதாக இல்லை என்றே பாப்தாதா கூறியுள்ளார். இப்போதே எண்ணத்தைக் கொண்டிருந்து, இதை அங்கேயே அப்போதே செய்யுங்கள்! ‘நான் அதைப் பார்ப்பேன். நான் அதைச் செய்வேன்’ எனக் கூறாதீர்கள். எதையும் எதிர்காலத்திற்காக விட்டுவிடும் மொழியைப் பயன்படுத்தாதீர்கள். இதனாலேயே, உங்களின் மம்மாவும் இந்த இலக்கைக் கொண்டிருந்தார். அவர் அனைவருக்கும் நினைவூட்டுவதுண்டு: இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை.
எனவே, இரட்டை முயற்சி செய்யும் குழந்தைகளே, நீங்கள் இப்போதே சரியான எதையும் செய்பவர்களா அல்லது ஏதாவதொரு வேளையில் செய்பவர்களா? இப்போதே சரியான எதையும் செய்வதன் மூலம், இதைச் செய்து காட்டுவீர்கள் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ‘நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும். நான் இதைச் செய்யவே வேண்டும்’. ‘ஏதாவதொரு வேளையில் நான் அதைச் செய்வேன்’ என்பதாக இருக்கக்கூடாது. ‘நான் அதைச் செய்யவே வேண்டும்.’ நினைவில் வைத்திருங்கள்: உங்களின் சொந்த அட்டவணையைப் பேணுங்கள். பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார்: நாள் முழுவதற்குமான உங்களின் அட்டவணையை இரவில் பாப்தாதாவிடம் விவரித்த பின்னர், உங்களின் தலையைத் தெளிவாக்கி விட்டு தூங்கச் செல்லுங்கள். அப்போது உங்களால் நன்றாகத் தூங்க முடியும். இது ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை பாபாவிற்குக் கூறுவதன் மூலம், நீங்கள் அதை முன்னைய தினம் பாபாவிற்குக் கூறிவிட்டீர்கள் என்பதை அடுத்த நாள் நீங்கள் நினைவு செய்வீர்கள். அந்த விழிப்புணர்வு உங்களுக்கு உதவி செய்யும். அப்போது நீங்கள் தர்மராஜ்புரிக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அதை ஏற்கனவே பாபாவிற்குக் கொடுத்து அதை மாற்றிவிட்டீர்கள். எனவே, நீங்கள் தர்மராஜ்புரியில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். இப்போது, அடுத்த வருடம் - யாரும் அதைக் கண்டதில்லை - ஆனால், இந்த இலட்சியத்தை வைத்திருங்கள். ஒரு வருடம் மட்டுமல்ல, எந்தவொரு குறுகிய காலப்பகுதிக்கும் உங்களின் முகம் மற்றும் செயல்பாடுகளின் ஊடாகத் தந்தையை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் எவ்வளவிற்கு விரைவாக முடியுமோ, அதை நடைமுறையில் வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா? அப்படி என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்குத் தைரியம் உள்ளதா? உள்ளதா? ஓகே. பாராட்டுக்கள்! பாப்தாதா இப்போது ஒவ்வொரு குழந்தையிலும் நம்பிக்கையையும் தைரியத்தின் ஊக்கம், உற்சாகத்தையும் பார்க்கிறார். எவ்வாறாயினும், விமானங்களில் திரும்பிச் சென்ற பின்னர் அதைக் குறைக்காதீர்கள். அதைத் தொடர்ந்து அதிகரியுங்கள். பாப்தாதா உங்களுக்குக் கொடுத்த திடசங்கற்பமான எண்ணம் என்ற சாவியை சதா வைத்திருங்கள். ‘நான் அதைச் செய்ய வேண்டும், இப்போதே செய்ய வேண்டும்’. எதிர்காலத்தில் ஏதொவொரு நேரத்தில் அல்ல. அந்தக் காலம் இப்போது கடந்து விட்டது. அது நடக்கும், அது நடக்கவே வேண்டும்.... அது நடக்கும் என்பதல்ல, அது நடக்கவே வேண்டும். பாப்தாதா உங்களுக்குக் கொடுத்த இரட்டை முயற்சியாளராக இருக்கும் உங்களின் பட்டத்தை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
பாப்தாதா பெறுபேற்றைக் கேட்டார். பாப்தாதா வழங்கிய சேவைத் திட்டத்தில் பாரதமும் வெளிநாடுகளும் எந்தவிதக் குறைவும் இல்லாமல் செய்துள்ளார்கள். பெரும்பாலான இடங்கள் இந்த ஆசீர்வாதத்தை, ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பயன்படுத்தி உள்ளார்கள். பாபா தொடர்ந்தும் வெவ்வேறு இடங்களில் இருந்து பெறுபேறுகளைப் பெறுகிறார். பாரதத்தில் உள்ள குழந்தைகளோ அல்லது வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளோ, யாராக இருந்தாலும் அனைத்தையும் நடைமுறை வடிவத்தில் கொண்டு வந்ததற்காக பாப்தாதா கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
நீங்கள் குறிப்பாக இந்த வருடம் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்று பாப்தாதா இப்போது கூறியுள்ளார்: உங்களின் முகத்தில் பிரகாசம் தென்பட வேண்டும். யார் உங்களைப் பார்த்தாலும், நீங்கள் வெளிப்படுத்தலுக்குக் கருவிகள் ஆகவேண்டும். நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களின் முகங்கள் எப்போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும். எந்தவிதமான எண்ணங்களோ அல்லது குழப்பமோ இருக்கக்கூடாது. இப்போது இரண்டு கூற்றுக்களை நினைவு செய்யும்படி பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார்: மாயையை வெளியே போகும்படி சமிக்கை செய்யுங்கள், உங்களை விருந்தாளி இல்லத்தில் இருப்பதாக அனுபவம் செய்யுங்கள். இந்த உலகம் உங்களுக்குச் சொந்தமானது அல்ல, இது ஒரு விருந்தாளி இல்லம். நீங்கள் நிச்சயமாக இப்போது வீடு திரும்ப வேண்டும். உங்களின் மனங்களிலும் புத்திகளிலும் வீட்டின் காட்சிகள் புலப்பட வேண்டும். அப்போது, அந்த வீடு இங்கே இருக்கிறது என்பதை இயல்பாகவே நீங்கள் உணர்வீர்கள். உங்களிடம் ஒரு பாடல் உள்ளது: நாங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் பாரதத்தை அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இப்போது நடைமுறையில் இந்த அனுபவத்தை வழங்க வேண்டும். எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். ஒருவரின் இதயத்தால் ஒரு விருந்தாளி இல்லத்தின் மீது பற்று வைக்க முடியாது. சதா நினைவு செய்யுங்கள்: நான் திரும்ப வேண்டும். நான் திரும்பிச் செல்ல வேண்டும். எல்லையற்ற விருப்பமின்மையானது, உங்களின் மனதிலுள்ள எந்த வகையான எண்ணங்களை அல்லது ஒன்றுகூடல்களில் உங்களுக்கு இடையே உள்ள மாயையின் தடைகளை முற்றிலும் முடித்துவிடும். மாயையின் புயல்கள் உங்களுக்கு ஒரு பரிசாகிவிடும். பின்னர், உங்களிடம் வருகின்ற சிறிய பரீட்சைத்தாள்கள், பரீட்சைத்தாள்களைப் போல் தோன்றாது. ஆனால், உங்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கான ஓர் உயர்த்தி போன்றே தென்படும். பரிசும் உயர்த்தியும். உங்களுக்குப் புரிகிறதா?
இப்போது, எல்லையற்ற விருப்பமின்மைக்கான இலட்சியத்தை வைத்திருங்கள், உங்களின் தைரியம், ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளால் நீங்களும் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். இது இப்போது பறப்பதற்கான நேரம் ஆகும். உங்களின் இறக்கைகள் பலவீனம் அடையவில்லையே என்று எப்போதும் சோதித்துப் பாருங்கள். இரட்டை வெளிநாட்டவர்களான உங்களின் வளர்ச்சியைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இப்போது அவர் எதைப் பார்க்க விரும்புகிறார்? ஒவ்வொரு குழந்தையும் தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகவேண்டும். பொக்கிஷங்களால் நிறைந்திருந்து, நீங்கள் பெறுகின்ற ஒவ்வொரு ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதிலும் முழுமையாக வேண்டும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருந்தால், நீங்கள் கைதட்டலாம். அச்சா. ஒவ்வொரு நாளும் இந்தக் கைதட்டலை நினையுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களின் மனதில் கைதட்டுங்கள். புறத்தே கைதட்ட வேண்டாம், ஆனால் உங்களின் மனதில் கைதட்டுங்கள். இதுவே உங்களின் வீட்டுவேலை ஆகும். அச்சா.
90 நாடுகளில் இருந்து 2300 சகோதர, சகோதரிகள் வந்துள்ளனர். (ஐந்து கண்டங்களையும் சேர்ந்த சகோதர, சகோதரிகள் தாம் வந்திருந்த கண்டங்களுக்கு ஏற்ப எழுந்து நின்றார்கள்) 1. அமெரிக்கா, கனடா, கரிபியன். 2. அவுஸ்திரேலியா, ஆசியா, நியூசிலாந்து, ஃபிஜி. 3. ஐரோப்பா, யுகே, மத்திய கிழக்கு. 4. ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, மொரிஸியஸ் 5. ரஷ்யா, சிஐஎஸ், பால்ரிக் பிராந்தியம்.
சகல இடங்களும் முன்னேறுகின்ற எண்ணத்தைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்களுக்கு இடையேயும் ஆன்மீக கலந்துரையாடல்களைச் செய்தீர்கள். பாப்தாதா தொடர்ந்து செய்திகளைப் பெறுகிறார். இப்போது, என்றும் தயாராக உள்ளவர்களின் குழு ஒன்றைத் தயார் செய்யுங்கள். குழந்தைகள் எத்தனை நாடுகளில் இருந்து வந்திருந்தாலும், பாப்தாதா அந்த நாடுகளுக்கு ஒரு பரிசை வழங்குவார். வழங்கப்படும் பரிசு அந்த வேளையில் தெரிய வரும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள இரட்டை முயற்சியாளர்களின் குழுவிற்கு பாப்தாதா கூறுகிறார்: ஒரு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை நிலையங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இது முதலாம் இலக்கத்தில் வரும் எந்தவொரு குழுவிற்கும் வழங்கப்படும். உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள், அமெரிக்காவுடன் எத்தனை நகரங்களும் நாடுகளும் தொடர்பாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் இதைத் தங்களுக்குள் கலந்துரையாடி, அவர்கள் அனைவரும் தடைகளில் இருந்து விடுபட்டும், என்றும் தயாராகவும், மாயையை வென்றவர்களாகவும் அன்பாகவும் சேவையில் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பதற்காக ஒரு நிகழ்ச்சியை உருவாக்குங்கள். முதல் இலக்கத்தில் வருபவர்களுக்கு பாப்தாதா ஒரு பரிசை வழங்குவார். ஓகே, ஒன்று மட்டுமல்ல, பாபா மூன்று பரிசுகளை வழங்குவார். ஒன்று, இரண்டு, மூன்று - மூன்று இலக்கங்கள். பொதுவாக, அது ஒருவருக்கே வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் இரட்டை முயற்சியாளர்கள். எனவே, வாய்ப்பு மூவருக்கு வழங்கப்படுகிறது. உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? ஆம், நீங்கள் உங்களின் கைகளை அசைக்கலாம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? ஆசிரியர்களான நீங்கள் இந்தப் பரிசைக் கோருவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை எனக் கூறுங்கள். கூறுங்கள்! (பெப்ரவரி அளவில்) சகல நாடுகளையும் சேர்ந்த ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது சரிதானே? அப்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள், அல்லவா? அதன்பின்னர், பாப்தாதா ஒரு பரிசை வழங்குவார். மிகவும் நல்லது. இதற்காக நீங்கள் கைதட்டலாம். அச்சா.
பாரதத்திற்கான முறையும் வரும். இப்போது, இது உங்களின் முறை. பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார்: ஆஹா, தீவிர முயற்சி செய்யும் குழந்தைகளே! ஆஹா! அச்சா. நாங்கள் இப்போது என்ன செய்யப் போகிறோம்? அச்சா.
தைரியம், ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறக்கின்ற எங்கும் உள்ள தீவிர முயற்சியாளர்கள் அனைவருக்கும், நடப்பவர்கள் அன்றிப் பறப்பவர்களுக்கும், தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகி பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகளுக்கும் தந்தையுடன் சதா ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்வதுடன் அந்த ரூபத்தில் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் தந்தையின் ஒவ்வொரு நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட அன்பான குழந்தைக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
தாதிகளுடன் பேசுதல்: நீங்கள் அனைவரும் தந்தைக்கு உதவி செய்தீர்கள், அப்படித்தானே? இந்த யக்யம் தொடரும், அது குழந்தைகள் மற்றும் தந்தை இருவரின் உதவியாலும் தொடரும். நீங்களும் இதற்குக் கருவிகள், அப்படித்தானே? பௌதீக ரூபத்தில், ஒருவர் ஒன்றைச் சொன்னார், மற்றவர் அதைச் செய்தார். நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பதுடன் பறக்கிறீர்கள். நீங்கள் பறப்பதைப் பார்த்து, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். (இது தாதி குல்ஸாரின் அற்புதம் என்று தாதி ஜான்கி கூறினார்) அவர் உங்களுடனேயே இருக்கிறார். கருவிகளான நீங்கள் அனைவரும் ஒன்றாகப் புலப்பட வேண்டும் என்பதே பாப்தாதாவின் தூய விருப்பம் ஆகும். நீங்கள் வெவ்வேறானவர்களாகத் தென்படக் கூடாது, ஆனால் அனைவரும் ஒன்றாகத் தென்பட வேண்டும். ஒருவர் ஒன்றைக் கூறினார், இன்னொருவர் தனது அபிப்பிராயத்தைக் கூறினார், நீங்கள் ஒற்றுமையாக இருந்தீர்கள். இதனாலேயே இந்த யக்யம் இன்னமும் தொடர்கிறது. உங்கள் அனைவரின் ஒற்றுமையால் அது தொடர்கிறது. புறத்தே, அது புலப்படாது. ஆனால், உங்களின் எண்ணங்களிலும் அபிப்பிராயங்களிலும் ஒன்றாக இருந்து முன்னேறுங்கள். ஏனென்றால், அனைவரின் பார்வையும் இப்போது உங்கள் அனைவர் மீதும் உள்ளது. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்திசாலி ஆத்மாவாகி, உங்களின் மேன்மையான மனோபாவத்தால் சூழலைத் தூய்மை ஆக்குவீர்களாக.சதா ஸ்திரமாக இருக்கும் மேன்மையான மனோபாவத்தைக் கொண்டிருப்பவர்களால் எந்தவொரு சூழல் அல்லது அதிர்வலையாலும் அசைக்கப்பட முடியாது. உங்களின் மனோபாவத்தால் ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது: உங்களின் மனோபாவம் மேன்மையாக இருந்தால், அந்தச் சூழல் தூய்மை அடையும். சிலர் கூறுகிறார்கள்: நான் என்ன செய்யட்டும்? அந்தச் சூழல் அப்படி இருந்தது. அந்தச் சூழலால் எனது மனோநிலை குழப்பம் அடைந்தது. அந்த வேளையில், ஒரு சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு பலவீனமான ஆத்மா ஆகினீர்கள். ஆகவே, உங்களின் சத்தியத்தை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் உங்களின் மனோபாவத்தை சக்திவாய்ந்தது ஆக்குங்கள். நீங்கள் சக்திசாலியாக இருப்பீர்கள்.
சுலோகம்:
நற்குணங்களின் சொரூபமாக இருந்து, அனைவரையும் நற்குணங்களின் சொரூபமாக ஆக்குவதே ஒரு மகாதானி ஆகுவதாகும்.அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கை என்ற அத்திவாரத்தைப் பலமானதாக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பு வைத்திருங்கள். அன்பான ஆத்மாவைப் பற்றி நீங்கள் ஒருபோதும் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டீர்கள். அன்பான வார்த்தைகள், சாதாரணமானதாக இருந்தாலும், அவ்வாறு உணரப்பட மாட்டாது. இலேசாகப் பேசப்படும் வார்த்தைகளும் ஏதாவதொரு நோக்கத்துடன் பேசப்பட்டதாகவே உணரப்படும். அவை அர்த்தமற்றவையோ அல்லது வீணான வார்த்தைகளோ கிடையாது. எங்கே அன்பு உள்ளதோ, அங்கே நிச்சயமாக நம்பிக்கை காணப்படும். எனவே, பிராமணக் குடும்பத்தில், ஒருவருக்கொருவர் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருங்கள். அத்துடன் முற்றிலும் நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருங்கள். அப்போது மட்டுமே உங்களால் தந்தை பிரம்மாவின் நம்பிக்கைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.