30.04.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தவறாகிப் போனவற்றைச் சரியாக்குகின்ற கள்ளங்கபடமற்ற பிரபுவான, தந்தையே ஆசிரியராக எங்களுக்குக் கற்பிக்க வருகின்ற, உங்கள் அற்புதமான பல்கலைக்கழகம் இதுவாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இந்தத் தீர்க்கும் காலத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டிய இலக்கு என்ன?

பதில்:
ஓ ஆத்மாக்களே, இப்பொழுது தூய்மை ஆகுங்கள்! தூய்மை ஆகாமல் எவருமே வீடு திரும்ப முடியாது. அரைக்கல்பமாக அனைவரும் அனுபவம் செய்துள்ள நோயிலிருந்து விடுபடுவதற்கு, நீங்கள் ஏழு நாட்களுக்கு அவர்களைச் சூளையில் அமர்த்த வேண்டும். அவர்கள் தூய்மையற்ற சகவாசத்தில் இருந்து தூர விலகியிருந்து, வேறு எவரையும் நினைவு செய்யாத பொழுதே, அவர்களது புத்தியினால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியும்.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும், பகலை உண்பதிலும் வீணாக்குகின்றீர்கள்

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு இதைக் கூறியது யார்? நீங்கள் ஒரு பாடசாலையில் அமர்ந்திருப்பதால், ஆசிரியரே உங்களுக்கு நிச்சயமாக இதைக் கூறியிருப்பார். இதை ஆசிரியர் கூறினாரா, தந்தை கூறினாரா அல்லது சற்குரு கூறினாரா என்ற கேள்வி எழுகின்றது. யார் இந்த வாசகங்களைப் பேசினார்? அவர் எங்களுடைய எல்லையற்ற தந்தை என்பதும், அவரே பரமாத்மா பரமதந்தை என அழைக்கப்படுகின்றார் என்பதும் குழந்தைகளின் புத்திகளில் முதலில் பிரவேசிக்க வேண்டும். எனவே தந்தை இதைக் கூறினார், ஆசிரியரும் இதைக் கூறினார், சற்குருவும் இதைக் கூறினார். மாணவர்களாகிய உங்களது புத்தியிலே இது இருக்கின்றது. ஏனைய கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கின்ற ஆசிரியரைத் தந்தை அல்லது குரு என அழைப்பதில்லை. இதுவும் கற்பதற்கான இடமாகும், இதனை ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி என்று அழைக்கலாம். இதுவும் ஒரு கல்வியாகும். முதலில் யார் இந்தப் பாடசாலையில் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அசரீரியானவரும், ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையும், அனைவருக்கும் சற்கதி அருள்பவருமே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த முழுப் படைப்புமே அந்த ஒரேயொரு படைப்பவரின் சொத்தாகும். எனவே அவரே இங்கிருந்து படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குப் பிறந்துள்ளீர்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை எனவும், அவர் ஞானக்கடல் எனவும், ஞானம் நிறைந்தவர் எனவும் அழைக்கப்படுகின்றார் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்கின்றது. ஞானக்கடலே, தூய்மையாக்குபவர். இந்த ஞானத்தின் மூலமே சற்கதி இருக்க முடியும். மனிதர்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மையானவர்கள் ஆகுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். வேறு எந்தப் பாடசாலையிலும் ஞானக்கடலும், அசரீரியானவரும் தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது அவர்கள் புத்தியில் பிரவேசிப்பதில்லை; இங்கேயே நீங்கள் இதை அறிவீர்கள். இது உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக முழு உலகிலும், குறிப்பாகப் பாரதத்திலும் அசரீரியான பரமாத்மாவே தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை எவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். மனித ஆசிரியர்களே அவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். தாங்கள் ஆத்மாக்கள் என்ற ஞானம் கூட அவர்களிடம் இல்லை. ஆத்மாக்களே கற்கின்றார்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றார்கள். ஆத்மாக்கள் தங்களது அங்கங்களின் மூலம் இன்ன இன்ன வேலைகளைச் செய்கின்றார்கள். தாங்கள் இன்ன இன்னார் என அவர்கள் அறிந்துள்ளார்கள். அவர்கள் மிக விரைவாக தங்களுடைய பெயர்களையும், ரூபங்களையும் நினைவு செய்கிறார்கள். “நான் இதைச் செய்கின்றேன்”, அல்லது “நான் அதைச் செய்கின்றேன்”. அவர்கள் சரீரங்களின் பெயர்களையே நினைவு செய்கின்றார்கள், ஆனால் அது தவறானது! முதலில் நாங்கள் ஆத்மாக்கள், பின்னரே நாங்கள் சரீரங்களை எடுக்கின்றோம். எங்கள் சரீரங்களின் பெயர் தொடர்ந்தும் மாறிக் கொண்டிருக்கின்றது, ஆனால் “ஆத்மா” எனும் பெயர் மாறுவதில்லை. ஒவ்வோர் ஆத்மாவினதும் பெயர் ஒன்றேயாகும். தந்தை கூறியுள்ளார்: ஆத்மாவாகிய நான், சிவன் என்ற ஒரு பெயரை மாத்திரம் கொண்டிருக்கின்றேன். முழு உலகமுமே இதை அறியும். ஏனைய அனைத்துப் பெயர்களும் சரீரங்களுக்கே கொடுக்கப்பட்டன. சிவபாபா, சிவன் என்றே அழைக்கப்படுகின்றார், அவ்வளவுதான்! அவருக்குத் தென்படக்கூடிய ஒரு சரீரம் இல்லை. மனிதர்களுக்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன: நான் இன்ன இன்னார். எனக்கு இன்ன இன்ன ஆசிரியர் கற்பிக்கின்றார்; நீங்கள் பெயரைக் குறிப்பிடுவீர்கள். உண்மையில் ஆத்மாவே சரீரத்தின் மூலம் ஓர் ஆசிரியரின் பணியைச் செய்து, ஏனைய ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் உள்ளன. ஓர் ஆத்மா அங்கங்கள் மூலம் கற்பித்து, தனது சம்ஸ்காரங்களுக்கேற்ப தனது பாகத்தை நடிக்கின்றார். எவ்வாறாயினும் சரீரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையிலேயே அனைத்தும் நடைபெறுகின்றது. இங்கே, அசரீரியான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய புத்தி எங்கே சென்றது? ஆத்மாவாகிய நான் இப்பொழுது அந்தத் தந்தைக்குச் சொந்தமானவர். அசரீரியான தந்தையே வந்து, இந்தப் பௌதீக ரூபத்தின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை ஆத்மா புரிந்து கொள்கின்றார். அவருடைய பெயர் சிவனாகும். மக்கள் சிவனின் பிறந்ததினத்தையும் கொண்டாடுகின்றார்கள் சிவன் எல்லையற்ற தந்தை ஆவார். எனவே, அவர் மாத்திரமே பரமாத்மா பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார்; அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அவர்கள் எவ்வாறு அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்? ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றாரா அல்லது கருப்பையில் பிரவேசிக்கின்றாரா? ஆத்மா மேலிருந்து வருகின்றார் என்பதை எவரும் அறியார். கிறிஸ்து ஒரு மதஸ்தாபகர் என்று அழைக்கப்படுகின்றார். அந்த ஆத்மா முதலில் மேலிருந்து வரவேண்டும். ஒரு சதோபிரதான் ஆத்மாவே கீழே வருகின்றார்; அவர் எந்தப் பாவச்செயல்களையும் செய்திருக்கவில்லை. ஓர் ஆத்மா முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர், சதோ, ரஜோ, தமோ, ஸ்திதிகளுக்கூடாகச் செல்கையில், பாவச்செயல்களைச் செய்கின்றார். ஏனெனில் ஓர் ஆத்மா மேலிருந்து கீழே வருகின்ற பொழுது, முதலில் சதோபிரதானாக இருப்பதால், அவரால் எந்தத் துன்பத்தையும் அனுபவஞ் செய்ய முடியாது. அந்த ஆத்மா தனது அரைவாசிக் காலத்திற்குக் கீழே இருக்கும் பொழுதே, பாவச் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றார். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் சூரிய வம்ச இராச்சியம் இருந்தது. ஏனைய மதங்கள் அனைத்தும் தாமதமாகவே வந்தன. பாரத மக்களே உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். பாரதமே அழியாத தேசம் என அழைக்கப்படுகின்றது. அங்கே வேறு எந்தத் தேசங்களும் இருக்கவில்லை. சிவபாபாவே தவறாகிப் போனவற்றைச் சரியாக்குபவர். சங்கரர் அல்லாது, சிவனே கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகின்றார். கள்ளங்கபடமற்ற பிரபுவான சிவனே, பிழைத்துப் போன அனைத்தையும் சரியாக்குபவர். சிவனும், சங்கரரும் ஒருவர் அல்லர், அவர்கள் வேறுபட்டவர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு எந்தப் புகழும் இல்லை. தவறாகிப் போன அனைத்தையும் சரியாக்குவதால், சிவனுக்கு மாத்திரமே புகழ் உள்ளது. அவர் கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண, வயதான சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இவர் தனது 84 பிறவிகளைப் பூர்த்தி செய்கின்றார், நாடகமும் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. இந்தப் பழைய ஆடையும், இந்தப் பழைய உறவுமுறைகள் அனைத்துமே அழிக்கப்பட உள்ளன. இப்பொழுது, நீங்கள் யாரை நினைவுசெய்ய வேண்டும்? அழியப் போகின்ற விடயங்களை நீங்கள் நினைவுசெய்ய மாட்டீர்கள். ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது, பழைய வீட்டிலிருந்து இதயம் அகற்றப்படுகின்றது. இது ஓர் எல்லையற்ற விடயம். அனைவரும் சற்கதி பெறுகிறார்கள், அதாவது, அனைவரும் இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றார்கள். இராவணனே அனைவரையும் சீரழித்து விட்டான். பாரதம் முற்றிலும்; ஏழ்மையாகவும், சீரழிந்ததாகவும் உள்ளது. மக்கள் சீரழிவதையும், கலப்படம் செய்வதையும், களவெடுப்பதையும், ஏமாற்றுதலையுமே சீரழிவு என குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் தந்தை கூறுகின்றார்: சீரழிவின் முதல் ரூபம் தூய்மை அற்றவர் ஆகுவதாகும். ஏனெனில் சரீரங்கள் விகாரத்தின் மூலமே உருவாக்கப்படுவதால், இது விகார உலகம் என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. நாங்கள் சத்தியயுகத்தில் இல்லறப் பாதைக்குரிய தேவர்களாக இருந்தோம். மக்கள் தூய்மையாக இருந்து, விகாரத்தில் ஈடுபடாது விட்டால், எவ்வாறு குழந்தைகள் பிறக்க முடியும் என அவர்கள் வினவும் பொழுது, நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பௌதீகச் சக்தி மூலம் அல்லாது, யோகசக்தி மூலமே ஸ்தாபிக்கின்றீர்கள் என அவர்களிடம் கூறுங்கள். எனவே அது தூய இல்லறப் பாதைக்குரிய, விகாரமற்ற உலகாக இருப்பதால், யோகசக்தி மூலம் குழந்தைகள் பிறக்க முடியாதா? அங்கு அரசரும், அரசியும் முற்றிலும் விகாரம் அற்றவர்கள், ஆகையால், பிரஜைகளும் அவ்வாறே உள்ளனர். இங்கே அனைவரும் முற்றிலும் விகாரமானவர்கள். சத்தியயுகத்தில் எந்தவொரு விகாரங்களும் இல்லை. அது இறை இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அது தந்தையாகிய கடவுளினால் ஸ்தாபிக்கப்படுகின்றது. இது இப்பொழுது இராவண இராச்சியம். சுவர்க்கத்தை ஸ்தாபித்த சிவபாபா பூஜிக்கப்படுகின்றார். நரகத்தை உருவாக்கிய இராவணனை அவர்கள் எரித்து வருகின்றனர். துவாபரயுகம் எப்பொழுது ஆரம்பமாகியது என எவருக்குமே தெரியாது. இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது தமோபிரதான் அசுர உலகமாகும். அது தெய்வீக உலகம்; அது தூய, தெய்வீக உலகமான, சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இது தூய்மையற்ற உலகமாகிய நரகமாகும். ஒவ்வொரு நாளும் கற்பவர்களே இந்த விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். பலர் இந்த இடத்தில் (மதுபன்) ஒரு பாடசாலை இல்லை எனக் கூறுகிறார்கள். ஓ! ஆனால் இதுவே தலைமையகம் ஆகும்! நீங்கள் இங்கே வந்து வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அது ஒரு பெரிய விடயமல்ல. உலகச் சக்கரம் ஒரு விநாடியில் விளங்கப்படுத்தப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்கள் கடந்து விட்டன, துவாபர, கலியுகங்களும் இப்பொழுது கடந்து விட்டன. இப்பொழுது இது சங்கமயுகம். நீங்கள் அந்தப் புதிய உலகிற்குச் செல்வதற்குக் கற்கவேண்டும். அனைவருக்கும் கற்பதற்கு ஓர் உரிமை உள்ளது. “பாபா, நான் இந்த வேலை செய்கிறேன்”. அச்சா, வந்து இந்த ஞானத்தை ஒரு கிழமைக்கு எடுத்து விட்டு, பின்னர் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் தொடர்ந்தும் முரளிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நிச்சயமாக முதலில் ஏழு நாட்களுக்கு ஒரு சூளையில் இருக்க வேண்டும். அவர்கள் ஏழு நாட்கள் வந்தாலும், அனைவரது புத்தியும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஏழு நாட்கள் சூளையில் இருப்பது என்றால் அந்த நேரத்தில் நீங்கள் எவரையுமே நினைவு செய்யக்கூடாது என்று அர்த்தம். எவருடனும் எந்தக் கடிதப் போக்குவரத்தும் இருக்கக்கூடாது. அனைவராலும் ஒரேயளவுக்குப் புரிந்து கொள்ள முடியாது. இங்கே, தூய்மை அற்றவர்கள், தூய்மையாக வேண்டும். இதுவும் ஒரு நோயாகும்; மனிதர்கள் அரைக் கல்பமாக நோயுற்று இருக்கின்றனர். அவர்கள் வேறாக அமர வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தச் சகவாசமும் இருக்கக்கூடாது. அவர்கள் வெளியில் சென்றால், தூய்மையற்ற பொருட்களையும், தூய்மையற்ற மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவையும் உண்பார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் தூய தேவர்களாக இருந்தார்கள். எவ்வாறு மக்கள் அவர்களுக்கு விசேடமாக ஆலயங்களைக் கட்டுகின்றார்கள் என்று பாருங்கள்! தூய்மை அற்றவர்களால் தேவர்களின் விக்கிரகங்களைத் தொட முடியாது. இந்நேரத்தில் மனிதர்கள் முற்றிலும் தூய்மை அற்றவர்களும், சீரழிந்தவர்களும் ஆவர். அவர்களுடைய சரீரங்கள் நஞ்சின் மூலம் உருவாக்கப்படுகின்றன, இதனாலேயே அவர்கள் சீரழிந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். சந்நியாசிகளின் சரீரங்களும் நஞ்சின் மூலமே உருவாக்கப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: முதலில், ஆத்மாக்கள் தூய்மையாக வேண்டும். பின்னர் சரீரங்களும் தூய்மையாக வேண்டும். இதனாலேயே பழைய தூய்மையற்ற சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்படும்; அனைவரும் வீடு திரும்ப வேண்டும். இது கணக்குத் தீர்ப்பதற்கான காலம்; அனைவரும் தூய்மையாகி, வீடு திரும்ப வேண்டும். பாரதத்தில் மாத்திரமே மக்கள் ஹோலிகா பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இங்கே, ஐந்து தத்துவங்களாலான, சரீரங்களும் தமோபிரதானானவை. சத்தியயுகத்தில் சரீரங்கள் சதோபிரதானானவை. ஸ்ரீ கிருஷ்ணரின் படம் இருக்கின்றது. நரகம் உதைத்துத் தள்ளப்பட வேண்டும், ஏனெனில் நீங்கள் சத்தியயுகத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு பிணம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் பொழுது, முகம் முதலில் நகரத்தை நோக்கியும், பாதங்கள் சுடுகாட்டை நோக்கியும் இருக்கின்றன. ஆயினும் அவர்கள் சுடுகாட்டை அடைந்தவுடன், அவர்கள் பிணத்தைச் சுற்றித் திருப்பி விடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள், எனவே உங்களின் முகங்கள் அதை நோக்கி இருக்க வேண்டும். உங்கள் முகங்கள் அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நோக்கியும், உங்களுடைய பாதங்கள் துன்ப தாமத்தை நோக்கியும் இருக்க வேண்டும். அது பிணத்தைப் பற்றிய விடயம், ஆனால் இங்கே நீங்கள் முயற்சி செய்யவேண்டும். இனிய வீட்டை நினைவு செய்கின்ற பொழுது, ஆத்மாக்களான நீங்கள் இனிய வீட்டிற்குச் செல்வீர்கள்; இது உங்கள் புத்தியானது பயிற்சி செய்ய வேண்டியதொன்று. தந்தை இங்கேயிருந்து உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் கூறுகின்றார். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். இவை இந்தப் பழைய உலகில் உள்ள பழைய ஆடைகள் ஆகும். நாடகம் முடிவுக்கு வருகின்றது என்று கூறுவதன் அர்த்தம், நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் பாகங்களை நடித்துள்ளீர்கள் என்பதாகும். அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மதங்களில் தாமதமாக வருபவர்கள் நிச்சயமாக வெகுசில பிறவிகளே எடுக்கின்றார்கள். இஸ்லாமியரிலும் பார்க்க, பௌத்தர்கள் குறைந்த பிறவிகளையே எடுக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதனிலும் குறைந்த பிறவிகளை எடுக்கின்றார்கள். சீக்கியர்கள் குருநானக்கில் நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்கள் இப்பொழுதே வருகின்றார்கள். குருநானக் வந்து 500 ஆண்டுகளே ஆகுகின்றன. எனவே அவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை; இதனைக் கணக்கிட முடியும். 5000 வருடங்களில் அதிகளவு பிறவிகள் இருக்கின்றமையால், 500 வருடங்களில் இந்தளவு பிறவிகளே இருக்க வேண்டும்: ஒருவேளை 12 முதல் 13 பிறவிகளாக இருக்கலாம். கிறிஸ்து வந்து 2000 ஆண்டுகள் ஆகுகின்றன. எனவே, ஆத்மாக்கள் எந்தனை பிறவிகளை அந்த நேரத்தில் எடுத்திருப்பார்கள்? அது அரைவாசி எண்ணிக்கைக்கும் குறைவான பிறவிகளாகவே இருக்கும். இதுவே கணக்கீடு ஆகும். சிலர் பல பிறவிகளையும், ஏனையோர் வேறுபட்ட எண்ணிக்கையான பிறவிகளையும் எடுக்கலாம். ஆனால் உங்களால் எத்தனை பிறவிகள் என மிகச்சரியாகக் கூறமுடியாது. நீங்கள் இந்த விடயங்களைப் பற்றி வாதிடுவதில் அதிக நேரத்தை வீணாக்கக்கூடாது. தந்தையை நினைவு செய்வதே உங்கள் கடமை. வீணான விடயங்களுக்காக உங்கள் புத்தியைப் பயன்படுத்தாதீர்கள். தந்தையுடன் யோகம் செய்து, சக்கரத்தைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதற்கு முயற்சி தேவை. இதனாலேயே மக்கள் பாரதத்தின் புராதன யோகம் பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை மட்டுமே இதைக் கற்பிக்கின்றார். சத்திய, திரேதா யுகங்களில் யோகம் பற்றிய கேள்வி இல்லை. பின்னர் பக்தி மார்க்கத்தில் ஹத்தயோகம் ஆரம்பிக்கின்றது. இது இலகு இராஜயோகம். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நினைவே பிரதான விடயம். எந்தப் பாவமும் செய்யாதீர்கள். தேவர்களுக்கே ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன, ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள். ஆலயங்களைப் பராமரிக்கும் புரோகிதர்கள் தூய்மை அற்றவர்கள். அவர்கள் தூய தேவர்களின் விக்கிரகங்களை நீராட்டுகின்றார்கள். உண்மையில் தூய்மை அற்றவர்களின் கைகள் அவர்களைத் தொடக்கூடாது. அந்த விடயங்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தின் சம்பிரதாயங்கள். நாங்கள் இப்பொழுது தூய்மை ஆகுகின்றோம். நாங்கள் தூய்மை ஆகியதும் தேவர்கள் ஆகுவோம். அங்கே பூஜித்தல் போன்றவற்றுக்கான தேவையில்லை. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவரே கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகின்றார். நான் பழைய இராவண இராச்சியத்தில் தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். ஆம், அவரால் எவரது சரீரத்திலும் பிரவேசித்து, முரளியைப் பேசமுடியும். அவர் சர்வவியாபி என்பது அதன் அர்த்தமில்லை. ஒவ்வொருவரும் அவரது சொந்த ஆத்மாவைக் கொண்டுள்ளார். அவர்கள் நிரப்புகின்ற படிவத்தில், ஒரு கேள்வியுள்ளது: உங்களுடைய ஆத்மாவின் தந்தை யார்? ஆயினும், அவர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. சகல ஆத்மாக்களுக்கும் ஒரேயொரு தந்தை மாத்திரமே இருக்கின்றார். நாங்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரேயொரு தந்தையே இருக்கின்றார். நாங்கள் அவரிடம் இருந்து எங்களது ஆஸ்தியாகிய ஜீவன்முக்தியைப் பெறுகின்றோம். அவரே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் இனிய வீட்டுக்கு அழைத்துச் செல்வார், இதனாலேயே இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. மக்கள் ஹோலிகா பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். பின்னர் சத்தியயுகத்தில், வெகுசிலரே இருப்பார்கள். யார் அந்தச் சத்தியயுக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார் எனவும், யார் இந்தக் கலியுக விநாசத்தை மேற்கொள்கின்றார் எனவும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது: நீங்கள் அன்பைக் கொடுக்கின்ற பொழுது, அன்பைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: எனக்காக மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குப் பெருமளவு சேவை செய்பவர்களே அதிகம் நேசிக்கப்படுகின்றார்கள். முயற்சி செய்பவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். ஆத்மாக்களான நீங்கள் பரமாத்மாவாகிய தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற இருக்கின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். சிலர் பல தவறுகள் செய்வதால், அவர்களின் பழைய பழக்கங்கள் மிகவும் உறுதியானவை ஆகுகின்றன. நீங்கள் எவ்வளவு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் அந்தப் பழக்கங்களைக் கைவிடுவதில்லை. அதன் மூலம் அவர்கள் தங்கள் அந்தஸ்தைக் குறைக்கின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எதைப் பற்றியும் விவாதம் செய்வதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் புத்தியானது வீணான விடயங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது. இயன்றளவுக்கு நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, உங்கள் பாவங்களை அழியுங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருக்கும் பழக்கத்தைப் பதித்துக் கொள்ளுங்கள்.

2. இந்தப் பழைய உலகிலிருந்து உங்கள் முகத்தை அப்பால் திருப்புங்கள். அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். ஒரு புதிய வீடு கட்டப்படுகின்றது. எனவே, பழையதிலிருந்து உங்கள் இதயத்தை அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்தி சொரூபமாகி, இந்த இறை குலத்தின் விழிப்புணர்வுடன் மாயைக்கு முகங்கொடுக்கக் கூடியவர் ஆகுவீர்களாக.

எந்தவொரு பணியிலும் வெற்றிநிறைந்தவர் ஆகுவதற்கு, அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஒரு சக்தி சொரூபம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் சக்தி இருக்கும்போது, மாயைக்கு முகங்கொடுப்பது உங்களுக்கு இலகுவாக இருக்கும். உங்களின் விழிப்புணர்விற்கேற்ப, உங்களின் ரூபமும் இருக்கும். ஆகவே, சதா இந்தச் சக்திவாய்ந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் இந்த ஆன்மீகப் பிறவியில் இருக்கும்போது, ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு பணியிலும் நான் இறை சேவையில் இருக்கிறேன். இது எனது இறை குலம். இந்த விழிப்புணர்வின் ஆசனம் சகல பலவீனங்களையும் முடித்துவிடும்.

சுலோகம்:
சத்தியம் சரியான வேளையில் இயல்பாகவே நிரூபிக்கப்படும்: அதை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை.

அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.

சேவையில் பெரும்பாலும் ஏற்படுகின்ற பிரதானமான தடை என்னவென்றால், ‘நான் இதைச் செய்தேன், என்னால் மட்டுமே இதைச் செய்ய முடியும்’ என்பதாகும். ‘நான்’ என்ற உணர்வு வரும்போது, அது ஞானத்தின் அகங்காரம், புத்தியின் அகங்காரம் அல்லது சேவையின் அகங்காரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவங்களில் தடைகள் வரும். இந்த வகையான தடையை வெற்றி கொள்வதற்கு, எப்போதும் ஒரு கூற்றை நினைவு செய்யுங்கள்: நான் ஒரு கருவி. ஒரு கருவியாக ஆகுவதனால் மட்டுமே உங்களால் அசரீரியாகவும் அகங்காரம் அற்றவராகவும் பணிவாகவும் இருக்க முடியும். அத்துடன் வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்ட ஸ்திதியிலும் இருக்க முடியும். நீங்கள் இவற்றைக் கிரகிக்கும்போது, அந்தச் சூழல் தடைகளில் இருந்து விடுபடும்.